பயத்துக்கு மருந்து

மாந்தருக்குள் ஒரு தெய்வம் நூலிலிருந்து…
பயத்துக்கு மருந்து
Published on

அக்டோபர் 02 – காந்தி ஜெயந்தி

புகைப்படங்கள் நன்றி; கல்கி கேலரி

அமரர் கல்கி

மோகன்தாஸ் காந்தி இளம் பிள்ளையாயிருந்தபோது கோயிலுக்குப் போவதுண்டு. ஆனால், கோயிலில் குடிகொண்டிருந்த ஆடம்பரங்கள் அவருக்குப் பிடிக்கவில்லை. உண்மையான தெய்வ பக்தியோ, சமயப் பற்றோ ஆலயங்களில் அவருக்கு ஏற்படவில்லை.

வீட்டு வேலை செய்த ஒரு பெண்மணியிடம் தெய்வம், சமயம் – இவைகளைப் பற்றிய உண்மைகளை மோகன்தாஸ் அறிந்தார். அந்த வேலைக்காரியின் பெயர் அரம்பை.  காந்திஜி குழந்தையாயிருந்தபோது அவரை எடுத்து வளர்த்த செவிலித் தாயும் இந்த அரம்பை என்னும் பெண் தெய்வந்தான்.

காந்திஜி குழந்தையாயிருந்த காலத்தில் அவருக்குப் பேய், பிசாசுகளிடம் பயம் அதிகமாம். இதோடு பாம்பு பயமும் திருடர் பயமும் சேர்ந்துகொள்ளுமாம். இருட்டைக் கண்டே பயப்படுவாராம். இருட்டில் அவரால் தூங்க முடியாதாம். கண்ணை மூடினால் ஒரு பக்கத்திலிருந்து பிசாசுகளும் இன்னொரு திசையிலிருந்து பாம்புகளும் மற்றொரு திக்கிலிருந்து திருடர்களும் வருவதாகத் தோன்றுமாம்!

இப்படிப்பட்ட பயத்தைப் போக்குவதற்கு மருந்தாக வேலைக்காரி அரம்பை ஸ்ரீராம நாமத்தின் மகிமையைக் குழந்தை மோகன்தாஸுக்குக் கூறினாள். அதன்படி ஸ்ரீராம ஜபம் செய்து காந்திஜி பேய், பிசாசு பயத்தை ஒரு மாதிரி போக்கிக்கொண்டார். ஆனால், அத்துடன் ராம நாமத்தின் மகிமை தீர்ந்துபோய்விடவில்லை.

‘இளம் பிராயத்தில் அந்த உத்தமி அரம்பை விதைத்த விதை வீண் போகவில்லை. இன்றைக்கும் ஸ்ரீ ராம நாமம் எனது அருமருந்தாக இருந்து வருகிறது!’ – இவ்விதம் மகாத்மா காந்தி 1928ஆம் ஆண்டில் எழுதினார். நாளது 1948ஆம் ஆண்டில் காந்தி மகானுடைய அந்திம யாத்திரை தொடங்கிய ஜனவரி 30-ம் தேதியன்று ஸ்ரீ ராம நாமம் அவருக்கு அருமருந்தாக உதவியது.

பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வந்திருந்த அந்தப் பாதகன் துப்பாக்கியால் சுட்ட உடனே ‘ராம் ராம்’ என்று சொல்லிக்கொண்டு மகாத்மா காந்தி தரையில் சாய்ந்தார். அடுத்த கணமே அந்த மகா பக்தருடைய உயிர் ஸ்ரீராமனுடைய பாதாரவிந்தங்களை அடைந்தது.

கஸ்தூரிபாய்த் தெய்வம்

தென்னாப்பிரிக்காவில் காந்திஜி குடித்தனம் நடத்திய காலத்தில் கணவருக்கும் மனைவிக்கும் போராட்டம் ஒன்று நடைபெற்றது. மிகப் புனிதமான அந்தச் சம்பவத்தைப் பற்றி காந்திஜியின் வாய்மொழியிலேயே நாம் தெரிந்துகொள்வதுதான் உசிதம். அவர் எழுதியுள்ளதை அப்படியே கீழே தந்திருக்கிறேன். அதைப் படிக்கும்போது காந்திஜி உயர்ந்தவரா, கஸ்தூரிபாய் உயர்ந்தவரா என்ற கேள்வி நம் மனதில் உதயமாகும். அதைப்பற்றி முடிவு செய்வது அவ்வளவு சுலபமாயிராது.

மேற்படி சம்பவத்தைப் பற்றி, ‘ஒரு புனித ஞாபகம்’ என்ற தலைப்பின்கீழ் காந்திஜி எழுதியிருக்கிறார்:

“டர்பனில் வக்கீல் தொழில் நடத்திக்கொண்டிருந்தபோது என்னுடைய காரியாலய குமாஸ்தாக்கள் பெரும்பாலும் என்னுடன் தங்கியிருப்பது வழக்கம். அவர்களில் ஹிந்துக்களும், கிறிஸ்துவர்களும், குஜராத்திகளும், தமிழர்களும் இருந்தனர். அவர்களை என் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக நடத்தி வந்தேன். இதற்கு என் மனைவி எப்போதேனும் குறுக்கே நின்றால், அப்போது எங்களுக்குள் மனஸ்தாபம் ஏற்படும்.

“என்னுடைய வீடு மேனாட்டு முறையில் கட்டப் பட்டிருந்தது. ஆதலின், அதன் அறைகளிலிருந்து அழுக்குத் தண்ணீர் வெளியே போவதற்குச் சாக்கடைகள் அமைக்கப்படவில்லை. அறைகளில் இவ்வாறு சாக்கடை வைத்தல் கூடாதுதான். எனவே, ஒவ்வோர் அறையிலும் அழுக்கு நீர்ப்பாண்டம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இப்பாண்டங்களைச் சுத்தம் செய்வதற்கு வேலைக்காரன் வைப்பதற்குப் பதிலாக நானும், என் மனைவியுமே அவற்றைச் சுத்தம் செய்துவந்தோம். வீட்டில் கொஞ்ச காலம் இருந்து பழகிவிட்ட குமாஸ்தாக்கள், அவரவர்கள் உபயோகித்த பாண்டங்களை அவரவர்களே சுத்தம் செய்து வந்தார்கள். இங்ஙனமிருக்கையில் புதிதாக ஒரு கிறிஸ்துவ குமாஸ்தா வந்து சேர்ந்தார். அவருடைய பெற்றோர்கள் தீண்டா வகுப்பினர். புதிதாக வந்தவராதலின் அவருடைய படுக்கையறையைச் சுத்தம் செய்தல் எங்களுடைய கடமையாயிருந்தது. என் மனைவி, மற்றவர்களுடைய பாண்டங்களைச் சுத்தம் செய்வதில் எவ்வித ஆட்சேபமும் கூறியது கிடையாது. ஆனால், தீண்டாதார் ஒருவரின் பாண்டத்தைச் சுத்தம் செய்யவேண்டி வந்தபோது அவளால் பொறுக்க முடியாமல் போயிற்று. இதன் பயனாக எங்களுக்குள் மனஸ்தாபம் விளைந்தது. நான் பாண்டங்களைச் சுத்தம் செய்வதும் அவளால் சகிக்க முடியவில்லை. அவளுக்கும் செய்யப் பிரியமில்லை. கோபத்தினால் சிவந்த கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாகப் பெருக, அந்தக் கோபப் பார்வையினாலேயே என்னைக் கடிந்தவளாய்க் கையில் பாண்டத்துடன் அவள் ஏணியின் வழியே இறங்கிவந்த காட்சி இப்போதும் என் மனக்கண்முன் நிற்கிறது.

“என் மனைவியிடம் நான் வைத்திருந்த அன்பு மிகக் குரூரமான வகையைச் சேர்ந்தது. என்னை அவளுடைய உபாத்தியாயனாகக் கருதியிருந்தேன். எனவே, அவளிடம் எனக்கிருந்த குருட்டுத்தனமான அன்பின் காரணமாக அவளைப் பெரிதும் உபத்திரவப்படுத்தி வந்தேன்.

“அவள் பாண்டத்தைத் தூக்கிச் சென்றதனாலேயே நான் திருப்தி அடையவில்லை. அதை அவள் சந்தோஷத்துடனே செய்ய வேண்டும் என்று விரும்பினேன். எனவே, உரத்த சத்தம் போட்டு, ‘என்னுடைய வீட்டில் இம்மாதிரி மூடத்தனத்தைப் பொறுக்க முடியாது’ என்றேன்.

“அம்மொழிகள் கூரிய அம்புகளைப்போல் அவளுடைய இதயத்தில் தைத்தன.

“உங்கள் வீட்டை நீங்களே வைத்துக்கொண்டு என்னைத் தொலைத்து விடுங்கள்’ என்று அவள் கூச்சலிட்டாள். அப்போது என்னை நானே மறந்துவிட்டேன். என் இதயத்திலிருந்த இரக்க ஊற்று வற்றிப் போயிற்று. அவளுடைய கையைப் பிடித்து ஏணிக்கு எதிரேயிருந்த வாயிற்படிக்கு இழுத்துக்கொண்டு போனேன். வெளியே தள்ளுவதற்காகக் கதவைத் திறந்தேன்.

“அவள் கன்னங்களின் வழியாய்க் கண்ணீர் தாரை தாரையாய் வழிந்துகொண்டிருந்தது. அவள் கூறியதாவது: ‘உங்களுக்கு வெட்கமில்லையா? இப்படிச் சுய உணர்வு போய் விட வேண்டுமா? எனக்குப் போக்கிடமெங்கே? தஞ்சமளிப்பதற்கு இங்கு என் பெற்றோர்களாவது, உறவினர்களாவது இருக்கிறார்களா? நீங்கள் என்னை உதைத்தாலும், நான் பொறுத்துக்கொள்ள வேண்டியதுதான். ஆண்டவன் ஆணை! கதவைச் சாத்துங்கள். யாராவது சிரிக்கப் போகிறார்கள்!’ என்றாள்.

“வெளிக்குக் காட்டிக்கொள்ளவில்லையாயினும் உள்ளுக்குள் மிகவும் வெட்கப்பட்டேன். கதவைச் சாத்தினேன். என் மனைவி என்னைவிட்டு எங்கும் போவதற்கில்லை என்றால், நானும் அவளை விட்டுப் பிரிய முடியாது. நாங்கள் எத்தனையோ சண்டை போட்டிருக்கிறோமாயினும், முடிவில் சமாதானம் அடைந்துவிடுவோம். அளவற்ற பொறுமையுடைய வளாதலால் என் மனைவியே வெற்றியடைவாள்.

“இன்றைய தினம் பாரபட்சமின்றி மேற்படி நிகழ்ச்சியை நான் கூறக் கூடியவனாயிருக்கிறேன். இந்தப் புனித நிகழ்ச்சியை நான் கூறியதிலிருந்து தற்போது நானும் என் மனைவியும் தம்பதிகளுக்கு இலக்கியமாயிருப்பதாக யாரும் முடிவு செய்ய வேண்டாம். எங்களுக்குள் பூரண லட்சிய ஒற்றுமை இப்போதும் இல்லை. ஸ்ரீமதி கஸ்தூரிபாய்க்குத் தனியே ஏதேனும் இலட்சியங்கள் உண்டாவென்று ஒருகால் அவளுக்கே தெரியாமலிருக்கலாம்.

“ஆனால், கஸ்தூரிபாயிடம் ஓர் அருங்குணம் இருக்கிறது. ஹிந்து மனைவிமார் பெரும்பாலோரிடம் இக்குணம் உண்டென்று சொல்லலாம். அது யாதெனில், விருப்பத்துடனோ விருப்பமின்றியோ, அறிந்தோ, அறியாமலோ, என் அடிச்சுவட்டைப் பின்பற்றி நடப்பதால் அவள் மேன்மையுறலாம் என்று கருதி வந்திருக்கிறாள். புலனடக்கத்துடன் வாழ்க்கை நடத்த நான் செய்த முயற்சிகளுக்கு அவள் எப்போதும் குறுக்கே நின்றது கிடையாது. ஆதலில் எங்களுடைய அபிப்பிராயங்களில் மிக்க வேற்றுமை இருந்தபோதிலும் எங்களுடைய வாழ்க்கை  எப்போதும் திருப்தியும் மகிழ்ச்சியும் வளர்ச்சியும் உடையதாய் இருந்து வந்திருக்கிறது.”

முழுத் துண்டு விரதம்

மதுரையில் அன்றிரவு மகாத்மாவின்  ஜாகையில் அவரைப் பல பிரமுகர்கள் வந்து சந்தித்தார்கள். அவர்களுடன் மகாத்மா பொதுப்படையாக வார்த்தையாடிக் கொண்டிருந்த போதிலும் அவருடைய உள்ளம் யோசனையில் ஆழ்ந்திருந்தது. கதர் இயக்கத்தைப் பிரசாரம் செய்வதற்குத் தகுந்த சாதனம் ஒன்றை அவர் மனம் தேடிக் கொண்டிருந்தது; அத்தகைய சாதனம் வேறு எந்த விதமாயிருக்க முடியும்? பிறருடைய தவறுகளுக்காகத் தாம் உண்ணாவிரதம் இருந்து பிராயச்சித்தம் செய்துகொள்கிறவர் அல்லவா மகாத்மா? எனவே, மக்களுக்குக் கதரின் முக்கியத்துவத்தை உணர்த்தும்படியாகத் தாம் என்ன தியாகத்தைச் செய்வது, என்ன விரதத்தை மேற்கொள்வது என்றுதான் அவர் உள்ளம் சிந்தனை செய்தது.

மகாத்மாவைச் சந்தித்துப் பேச வந்த பிரமுகர்களில் ஒருவர் கதர் உடுத்தாமல் அந்நியத் துணி உடுத்திக் கொண்டு வந்தார். அவரைப் பார்த்து மகாத்மா, “நீங்கள் என்னைப் பார்க்க வருகிறீர்களே? என்னைப் பார்த்து என்ன பயன்? நான் இவ்வளவு சொன்ன பிறகும் விதேசித் துணி உடுத்தியிருக்கிறீர்களே? ஏன் கதர் அணியவில்லை?” என்று கேட்டார்.

“கதர் உடுத்த எனக்கு இஷ்டந்தான். ஆனால், கதர் கிடைக்கவில்லை” என்றார் அந்தப் பிரமுகர்.

அதே நிமிஷத்தில் மகாத்மாவின் மனத்தில் அவர் தேடிக்கொண்டிருந்த சாதனம் உதயமாகிவிட்டது.

“ஆஹா! இவர் தமக்குக் கதர் கிடைக்கவில்லை என்கிறார். நாமோ இடுப்பில் பத்து முழ வேஷ்டி, மேலே இரண்டு சட்டை, குல்லா இவையெல்லாம் அணிந்திருக்கிறோம். எதற்காக இவ்வளவு கதர்த் துணியை நாம் அணிய வேண்டும்?” என்று தோன்றியது.

அதே சமயத்தில் தமிழ்நாட்டில் மகாத்மா கண்ட வேறொரு காட்சி நினைவுக்கு வந்தது. வடக்கேயெல்லாம் ஏழைத் தொழிலாளிகள், உழவர்கள்கூட மேலே சட்டை அணிவது வழக்கம். தமிழ்நாட்டில் வயற்புரங்களில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் அரையில் முழத்துணியோடு வேலை செய்வது வழக்கம். “இது ஏன்?” என்று காந்திஜி தமிழ்நாட்டு தலைவர்களைக் கேட்டார். “ஒரு துணிக்கு மேலே இரண்டாவது துணி வாங்கவும் சட்டை தைக்கவும் அவர்களிடம் பணம் இல்லை” என்று பதில் வந்தது. அந்தப் பதில் மகாத்மாவின் மனதில் பதிந்துப் போயிருந்தது.

இவையெல்லாவற்றையும் எண்ணிப் பார்த்த, மகாத்மா காந்தி, அன்றிரவே ஒரு முடிவுக்கு வந்தார்!

மறுநாள் காலையில் மகாத்மா எழுந்ததும் தம்முடன் பிரயாணம் செய்த சகாக்களை அழைத்தார்.

“இன்று முதல் நான் இடுப்பில் ஒரு முழ அகலமுள்ள துண்டு மட்டும் அணிவேன். குளிர் அதிகமான காலங்களில் போர்த்திக்கொள்ள ஒரு துப்பட்டி உபயோகிப்பேன். மற்றபடி சட்டை, குல்லா எதுவும் தரிக்க மாட்டேன். இப்போதைக்கு இந்த விரதத்தை ஒரு மாதத்துக்கு எடுத்துக் கொள்ளப் போகிறேன். பிறகு உசிதம்போல் யோசித்து முடிவு செய்வேன்!” என்றார்.

இவ்விதம் சொல்லிவிட்டு, பத்து முழ வேஷ்டி – சட்டை – குல்லா எல்லாவற்றையும் களைந்து வீசி எறிந்தார். ஒரு முழ அகலமுள்ள துண்டை எடுத்து இடுப்பில் சுற்றிக்கொண்டார்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com