பாரதத்தின் ரத்தினம்

பாரதத்தின் ரத்தினம்
Published on

எம். எஸ். பிறந்த நாள் – செப்டெம்பர் -16

- B.அனுராதா  

1916 ஆம் வருடம் செப்டம்பர் மாதம்,  இதே நாள், மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி ஆகப் பிறந்தவர், பார் போற்றும் இசை அரசியாக அறியப்பட்டது, இந்தியர்களாகப் பிறந்த நாம் ஒவ்வொருவரும் உரிமையாகக் கொண்டாடி மகிழும் ஒரு நிகழ்வு.

இந்திய அரசாங்கத்தின் மிக உயரிய விருதான 'பாரத ரத்னா' பெற்ற முதல் இசைக் கலைஞர் என்ற பெருமை, 1966 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் முதன் முதலில் இன்னிசைக்கச்சேரி செய்த முதல் இந்தியர் என்ற பெருமை, பிலிப்பைன்ஸ் நாடு வழங்கும் 'ரமோன் மகசேசே' விருது பெற்ற முதல் இந்திய இசைக் கலைஞர் என்ற பெருமை…இத்தனைப் பெருமைகளுக்கும்  சொந்தக்காரர் நம் எம். எஸ். அம்மா என்பது நமக்கு எவ்வளவு பெருமை.

மகுடிக்கு மயங்கும் பாம்பு போல,  அவருடைய இசைக்கு மட்டுமல்ல,   இயல்பான குணங்களுக்கும் மயங்காதவர் யார்?

எம். எஸ்..... இந்தப் பெயரைக் கேட்டவுடன் உங்கள் மனதில் தோன்றும் நினைவுகள் என்ன என்று இசைக்கலைஞர்கள் சிலரைக் கேட்டபோது ….

சங்கீத கலாநிதி  டி. கே. மூர்த்தி

1935 ஆம் வருடம் தஞ்சாவூரில் எங்கள் குரு,  தஞ்சாவூர் வைத்தியநாதன் வீட்டில் தான் முதன் முதலில் எம் எஸ் அம்மாவைச் சந்தித்தேன். மதிய உணவின்போது எங்கள் இருவரையும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தினார் என் குரு. என் வாசிப்பைக் கேட்டு, அன்று மாலையே, என் குருவின் வீட்டில் நடந்த கச்சேரி ஒன்றிற்கு என்னை மிருதங்கம் இசைக்கக் கேட்டுக் கொண்டார் சதாசிவம் அவர்கள்.

அன்று ஆரம்பித்த பயணம், 60 வருடங்கள் வரை தொடர்ந்தது.  வயலின் இசைக் கலைஞர் மாறியதுண்டு. ஆனால் நான் மட்டும் மாறியதே இல்லை. அவருடன் ஐக்கிய நாடுகள் சபையில் இசைத்த கச்சேரி, எடின்பரோ ஃபெஸ்டிவலில் நிகழ்த்திய இன்னிசைக் கச்சேரிகள்,  பண்டித ஜவஹர்லால் நேரு, டாட்டா,  பிர்லா போன்ற நம் நாட்டின் புகழ்பெற்ற தொழில் அதிபர்கள் ஆகியோர் வீடுகளில் தங்கி நிகழ்த்திய கச்சேரிகள், மைசூர் தசரா விழாவில் நிகழ்த்திய கச்சேரி என்று 'பூவோடு சேர்ந்து நாரும் மணப்பது போல' பலப்பலச் சிறப்பான அனுபவங்கள் இவரால் எனக்குக் கிட்டியிருக்கிறது. 

எத்தனையோ மொழிகளில் பாடல்களைப் பாடியிருக்கும் இவர்,  அந்த மொழி தெரிந்தவரிடமிருந்து அர்த்தம் தெரிந்து கொண்டு,  நிறைய பயிற்சி பெற்ற பிறகே அந்தப் பாடலை மேடை ஏற்றுவார்.  அவர்  'ஸட்ஜம்' பிடித்தால்,  அதை வைத்துக்கொண்டு நான் என் மிருதங்கத்திற்கு சுருதி சேர்த்துக் கொள்வேன். அத்தனை சுருதி சுத்தம்! காலப்பிரமாணம் பரம சுத்தம்!

பிறரைப் பற்றித் தவறாக ஒரு வார்த்தை பேசியதில்லை. காஞ்சி மஹா பெரியவரிடம் அளவு கடந்த பக்தி! எத்தனையோ நல்ல செயல்களுக்காக நிதி உதவி திரட்டி கொடுத்த நல்ல மனம் படைத்தவர்.

மிருதங்கம்  கலைஞர் கே வி பிரசாத்

1984 ஆம் ஆண்டு நான் கேரளத்தில் இருந்து சென்னைக்கு வந்தேன்.  சென்னை வானொலியில் என் வாசிப்பைக்  கேட்ட எம் எஸ் அம்மா மற்றும் சதாசிவம் அவர்கள் என்னை அழைத்து, அவருடைய கச்சேரிகளுக்கு வாசிக்கும் படி கேட்டுக் கொண்டனர். அது தொடங்கி, எத்தனையோ கச்சேரிகள் அவருக்காக நான் வாசிக்கும் பாக்கியம் பெற்றிருக்கிறேன். 'ஓ ரங்க ஸாயி' பாடலுக்கு இன்றைய கலைஞர் ஒருவருக்காக நான் மிருதங்கம் இசைக்கும்போதும் அன்று எம். எஸ். அம்மாவிற்கு வாசித்ததை நினைவில் கொள்ளும் ரசிகர்கள் உண்டு.

எங்கள் குடும்ப விழாக்கள் பலவற்றில் கலந்து கொண்டு எங்களைப் பெருமைப்படுத்தியிருக்கிறார்.  கச்சேரி மேடையில் ஏறுவதற்கு முன்னால், ஒப்பனை அறையில் இருந்து கொண்டு, ஒரு அரை மணி நேரம் குரல் பயிற்சி மேற்கொள்வார்கள். எத்தனை கச்சேரிகள் செய்தாலும்,  எத்தனை மேடைகள் ஏறி இருந்தாலும் இதை அவர் செய்யத் தவறியதே இல்லை. 'படே குலாம் அலிகான் சாஹிப் இதை எனக்குச் செய்யுமாறு கூறி இருக்கிறார்.  அதனால் செய்கிறேன்' என்று ஒரு குழந்தை போலச் சொல்வார். 

வெள்ளை மனம் படைத்தவர். அவர் வீட்டில், அவருடைய பிள்ளைகள் போல, எல்லா அறைகளிலும் வலம் வரும் உரிமை எங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. எம். எஸ். அம்மா எவ்வளவு பெரிய ஆளுமை என்பது, பலரும் அவர்களைப் பற்றி,  அவர்களைப் பார்ப்பது பற்றி,  அவர்களுடன் அமர்ந்து கச்சேரி வாசிப்பது பற்றி மிகவும் சிலாகித்துப் பேசும் போதுதான் எனக்குப்  புரிய வந்தது.

எந்தப் பாகுபாடுமின்றி அவர் எல்லோருடனும் பழகுவார். எந்த வேளையில் படப்பிடிப்பை மேற்கொண்டாலும், எம். எஸ்.  அம்மாவின் சுப்ரபாதத்தைப்  பின்னணியில் ஒலிக்கவிட்டு,  ஒளியைக் குறைத்து, அதிகாலை  உணர்வைத் தந்துவிட முடியும் என்பார் என் நண்பரும், திரைப்பட இயக்குனருமான ஃபாசில் அவர்கள்.  அதிகாலை என்றாலே எம். எஸ்.  அம்மாவின் வெங்கடேச சுப்ரபாதம் தானே!

வயலின் இசைக்கலைஞர் ஆர் கே ஸ்ரீராம் குமார்

என் தாயின் கர்ப்பத்தில் இருக்கும் நாள் தொடங்கி நான் எம் எஸ் அம்மாவின் இசையை ரசித்திருக்கிறேன். சிறிய வயதிலேயே அவருக்கு பக்கவாத்தியமாக வயலின் இசைக்கும் பாக்கியம் பெற்ற நான்,  சங்கீதத்தை மட்டுமல்ல,  எத்தனையோ நல்ல விஷயங்களை அவரிடமிருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன். 

அவருக்கு அமைந்த இனிய சாரீரத்தைப் பற்றி நாம் இன்று வரை பேசிக் கொண்டிருக்கிறோம்.  ஆனால்,  அதை மெருகேற்றி,  தக்கவைத்துக் கொள்ள அவர் மேற்கொண்ட சாதகங்கள் அளப்பரியா. எந்த மொழியாக இருந்தாலும்,  ஜப்பானிய,  அரபிக் போன்ற மொழிகளில் பாடிய போதும் கூட, அந்த வார்த்தைச்  சுத்தம் கச்சிதமாக இருக்கும்.

கல்கத்தாவில் ஒரு கச்சேரி.   'பாரத ரத்னா' விருது பெறுவதற்கு முன்னால்   எத்தனையோ விருதுகள்  பெற்ற போதும் மேடையில் அவர் நடந்து கொண்ட விதம், எனக்கு இன்று நினைத்தாலும் சிலிர்ப்பைத் தருகிறது. என்றுமே நடக்காத வகையில், ஒரு பாடல் ஒன்றின் ஒரு வரி அவருக்கு மறந்து விட்டது.  ஒரு ஐந்து நிமிடம் அந்தச் சிந்தனையிலேயே இருந்து கொண்டு அந்த வரியைச்  சரியாகப் பாடிய பிறகு தான், மேற்கொண்டு கச்சேரியைத் தொடர்ந்தார். அவர் மாற்றிப் பாடியிருந்தாலும்,  யாராலும் எந்தக்  கேள்வியும் கேட்டிருக்க முடியாது; கேட்டிருக்க மாட்டார்கள். ஆனாலும், அதைச் சரியாகப் பாட வேண்டும் என்று மேடையிலேயே அவர் மெனக்கெட்ட விதம் இன்றும் எனக்குச் சிலிர்ப்பைத்  தரும்.

இசைக் கலைஞர் அமிர்தா முரளி

என் குருநாதர் கேதார்நாதன் அவர்களுடன் எம். எஸ். அம்மாவின் வீட்டுக்கு நிறைய சந்தர்ப்பங்களில் சென்றிருக்கிறேன். அவர்களுக்கு முன்னால்,  என் குருவுடன் சேர்ந்து பாடும் வாய்ப்பு எனக்கு கிட்டியிருக்கிறது. அவ்வாறு எனக்குக்  கிடைத்த  பல சந்தர்ப்பங்களில்,  ஒரு முறை,  என்னை அருகில் அமர வைத்து, பாடச் சொல்லிக்  கேட்டு,  உன்னிப்பாக கவனித்து,  என்னுடைய சங்கீதத்தை மெருகேற்றிக் கொள்ள நான் செய்ய வேண்டிய விஷயங்களை அவர் எடுத்துக் கூறியது இன்றும் என்னால் மறக்க முடியாது.

ஓர் இசைக் கலைஞர் தன்னுடைய புத்திசாலித்தனத்தைக்  காட்டும் வகையில் எவ்வளவு சாகசங்கள் வேண்டுமானாலும் செய்யலாம்.  ஆனால், சங்கீதம் என்பது பாடுபவருக்கும் கேட்பவருக்கும் ஒரு உன்னத அனுபவத்தைப்  தர வேண்டும். இசை அறிவுக்கும். பாவத்திற்கும் (bhavam) இடையே ஒரு சமநிலை திகழ வேண்டும்.

ஒவ்வொரு முறை கச்சேரி செய்யும்போதும் இந்த நிலையை அவர் எட்டிப்பிடித்திருக்கிறார். அந்த அனுபவத்தை, கேட்கும் ஒவ்வொரு ரசிகருக்கும் தந்திருக்கிறார். அவர் பாடும் ஒவ்வொரு சங்கதியிலும் பர்ஃபெக்ஷன்! எத்தனை முறை பாடினாலும் அது தவறாது. அம்மாவின் சங்கீதத்தில் எல்லாமே 'மதுரம்' தான்.

சங்கீதக் கலைஞர் நிஷா ராஜகோபாலன்

பாடுவது, சுருதி சுத்தம், உச்சரிப்பு, கச்சேரியை அமைத்துக் கொள்ளும் விதம் இவை எல்லாமே ஒரு சங்கீதக் கலைஞராக, நான் எட்டிப்பிடிக்க வேண்டிய உயரமாக, இன்று வரை முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். 

1990களில் டெல்லியில் 'சிரி போர்ட் அரங்கில்', நான் கேட்ட அவருடைய 'சங்கராபரணம்',  இன்று வரை என் காதுகளில் ரீங்காரம் செய்து கொண்டிருக்கிறது. அன்று ஒரு சிறுமியாகக் கேட்டபோது,  இந்த மாதிரி என்றாவது நம்மால் பாட முடியுமா என்று நான் வியந்ததுண்டு! அந்த வியப்பு இன்று வரை தொடர்கிறது.

ஒரு கொடை வள்ளலாக அவர் வாரி வழங்கி இருக்கும் நிதி உதவிகளைப்  பற்றிக் கேள்விப்படும் போது,  நம்மை விட வசதி இல்லாதவர்களுக்கு அதே மாதிரி நாமும் உதவவேண்டும் என்ற நல்ல உணர்வு  நம்மிடமும் மேலோங்குகிறது.

என்னுடைய இரண்டு குழந்தைகளையும் சுமந்த கர்ப்ப காலத்தில், ஏதோ கவலையினால், குறிப்பாக, டிசம்பர் மாதம்  கச்சேரி காலங்களில் என் பதட்டம் அதிகரித்து, தூக்கம் வராமல் தவித்த நாட்கள்  பல உண்டு.  அப்போதெல்லாம்,  மங்கிய ஒளியில், அவருடைய ஸ்லோகங்கள் அனைத்தையும் வரிசையாக ஒலிக்க விட்டு மனம் சாந்தப்பட்டிருக்கிறது.

இன்று வரை என்னுடைய காலை, சுப்ரபாதம்,  விஷ்ணு சஹஸ்ரநாமம்,  நாம இராமாயணம், பஜ கோவிந்தம் என்று அவருடைய ஸ்லோகங்களுடன்தான் தொடங்கும்.  இது என் காதில் ஒலித்தால் தான் அன்றைய என் வேலையே எனக்கு ஓடும். என் குழந்தைகளும் கூட இதைக் கேட்டு, பாதிக்கு மேல் கற்றுத்தராமலேயே பாடுகிறார்கள்.  பக்திபூர்வமான அவருடைய இந்த சங்கீதம் என் தினசரி வாழ்வின் ஒர் அங்கம்.

இசைக்கலைஞர் கே காயத்ரி

என் தாய்வழிப் பாட்டி சரோஜா அவர்களும், எம் எஸ் அம்மாவும் சிறந்த நண்பர்கள். ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு அன்று எங்கள் வீட்டிற்கு பகல் உணவு அருந்த அவர்கள் வருவது என்பது எழுதப்படாத விதியாக இருந்தது. 

நிறைய பண்டிகைகளை நாங்கள் சேர்ந்து கொண்டாடியிருக்கிறோம்.  எம். எஸ். பாட்டி…. ஆம்.  அவர் எனக்கு நிஜமாகவே ஒரு பாட்டியாக இருந்து, இசையில் எனக்கு வித்யாரம்பம் தந்திருக்கிறார். கையால் இயக்கப்படும் சுருதி பெட்டியைப் போட்டுக்கொண்டு, சங்கீதத்தின் ஆரம்பப் பாடத்தைக் கற்றுத் தந்திருக்கிறார்.

என்னுடைய எட்டு வயதில் பாட்டியுடன் சேர்ந்து 'சத்ய சாயி நிறுவனத்திற்காக'  'சாய் ஆர்த்தி'  பாடும் பெரிய பாக்கியம் எனக்கு கிட்டியிருக்கிறது. அதனுடைய தீவிரம் அப்போது எனக்குப்  புரியவில்லை. பின்னாளில்,  சென்னை மியூசிக் அகாடமியில்,  எம்எஸ் பாட்டி,  விஜயா மாமி,  கௌரி ராம் நாராயணன் மற்றும் நான் சேர்ந்து 'மைத்ரீம் பஜத'  இறைவணக்கமாக பாடியதையும் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாக்கியமாக நான் இன்றும் போற்றி மகிழ்கிறேன்.

இசைக்கலைஞர்  S. ஐஸ்வர்யா

( எம் எஸ் அவர்களின் கொள்ளுப்பேத்தி)

எம். எஸ்.ஸின் பேரன் பேத்திகள் மற்றும் கொள்ளுப் பேரன் பேத்திகள் அம்மு பாட்டி என்றுதான் அன்போடு அவரை அழைப்போம்..  நான் சென்னையில் 'ராஜலட்சுமி நர்சிங் ஹோமில்' தான் பிறந்தேன்.  நான் பிறந்த போது பின்னிரவு நேரம் ஆகிவிட்டது. ஆனால், அதிகாலையிலேயே,  என் கொள்ளுத்தாத்தா சதாசிவம் அவர்களும், அம்மு பாட்டியும் கொள்ளுப்பேத்தியான என்னைப் பார்க்க மருத்துவமனைக்கே வந்திருக்கிறார்கள். அப்போதுதான் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் நாங்கள் எம்எஸ் பாட்டியின் உறவு என்பது தெரியவந்து, மிகவும் வியப்பில் ஆழ்ந்தார்கள். அவர் மருத்துவமனைக்கு வந்ததைப் பற்றி மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.  ராதா பாட்டியின் முதல் பேத்தி நான் என்பதும் கூடுதல் சிறப்பு.

எங்கள் வீட்டில் எப்போதும் சங்கீதம் ஒலித்துக் கொண்டிருந்ததால்,  நானும் மிகச் சிறிய வயதிலிருந்தே பாடத் தொடங்கி விட்டேன்.  யாராவது விருந்தினர்கள் வந்தால் என்னை அவர்கள் முன்னால் 'ஓம் ப்ரணவார்த்தாய' பாடச் சொல்லி கேட்பார்கள். ஆனால், எனக்கு முறையான சங்கீதப்பயிற்சி,  என்னுடைய நான்காவது வயதில்,  ஒரு விஜயதசமி அன்று,  அம்மு பாட்டி மற்றும் ராதா பாட்டி இருவராலும் வழங்கப்பட்டது.

நான் என் தோழிகளுடன் வெளியே விளையாடிக் கொண்டிருந்தேன்.  என் அம்மா என்னை உள்ளே அழைத்து, ஒரு தாம்பாளத்தில் புஷ்பம் பழம் ஆகிவற்றை வைத்து பாட்டிகளுக்குக் கொடுத்து நமஸ்காரம் செய்து, முதலில் அவர்கள் எனக்குக் கற்றுத் தந்தது,  'செஞ்சுருட்டி' ராகத்தில்,  அருணகிரிநாதரின் 'நாத விந்து கலாதி நமோ நம' என்ற திருப்புகழ் தான். அன்று அவர்கள் இருவரும் எனக்குத் தந்த ஆரம்பம், நானும் என் சகோதரி சௌந்தர்யாவும் இன்று நல்லமுறையில் பாடிக் கொண்டிருக்கிறோம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com