
-வெங்கடராமன் ராமசுப்ரமணியன்.
தமிழ் இலக்கணத்தை எளிமையாக மக்களிடம் கொண்டு செல்ல, பவணந்தி முனிவர் 13ம் நூற்றாண்டில், நன்னூல் என்ற இலக்கண நூலை வெளியிட்டார். அவரது நூல் எழுத்தில் ஆர்வமுடைய அனைவரும் படிக்க வேண்டிய அருமையான நூல்.
நன்னூலில் பவணந்தி முனிவர், ஒரு நூலில் கடைப்பிடிக்க வேண்டிய பத்து அழகான விஷயங்களைக் குறிப்பிடு கிறார். இந்த அழகான விஷயங்கள், ஒருவர் எழுதும் எந்த ஒரு சிறிய கடிதத்திலிருந்து, பெரிய புனைவு புத்தகம் வரை, எங்கும் இருக்க வேண்டிய அம்சங்கள். நம்முடைய படைப்பில் இந்த 10 விஷயங்கள் இருந்தால், நமது படைப்பு அழகாகி விடும். இதனை பத்தழகு என்று குறிப்பிடுகிறார்.
சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்
நவி்ன்றோர்க் கினிமை நன்மொழி புணர்த்தல்
ஓசை யுடைமை யாழமுடைத் தாதல்
முறையின் வைப்பே யுலக மலையாமை
விழுமியது பயத்தல் விளங்குதா ரணத்த
தாகுத னூலிற் கழகெனும் பத்தே. - நன்னூல் 13
எழுத்து நடையில் கைக்கொள்ள வேண்டிய பத்து விஷயங்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
1. சுருங்கச் சொல்லல்; சொல்ல வேண்டிய விஷயத்தைச் சுருக்கமாக சொல்ல வேண்டும். சுற்றி வளைத்து, இழுத்து, வளைத்து, வழ வழ, கொழ கொழ நடை கூடாது. இவ்வாறு சுருங்கச் சொல்லி, விளங்க வைக்கும் போது, வாசகர்களுக்குப் படிப்பது சுவாரசியமாக இருக்கிறது. நடையின் அழகு கூடுகிறது.
அவனது வருகை காலம் தாழ்ந்து அமைந்தது. = சுற்றி வளைத்து எழுதுவது அவன் தாமதமாக வந்தான் = சுருங்கச் சொல்லுவது
2. விளங்க வைத்தல்; விளக்க வேண்டிய விஷயங்களைத் தெளிவாக விளக்க வேண்டும். சுருக்கமாக எழுதுகிறேன் பேர்விழி என்று விளக்க வேண்டிய விஷயங்களை விளக்காமல் இருக்கக் கூடாது. சுருங்கச் சொல்லவும் செய்ய வேண்டும். அதே சமயத்தில், விளக்கத்திலும் தெளிவு வேண்டும்.
3. நவின்றோர்க்கினிமை; எழுத்து நடை படிப்பவருக்கு இனிமையாக இருக்க வேண்டும். எழுத்து நடை சுவாரசியமாக இருக்க வேண்டும். எளிமையான வார்த்தைகள், நகைச்சுவை நடை, அடுக்கு மொழி, தெள்ளிய நீரோடை போல நடை இருக்க வேண்டும். கல்கி, தேவன், சாண்டில்யன், பாலகுமாரன் போன்ற ஜாம்பவான் எழுத்தாளர்களின் புத்தகங்களைப் படிக்கும்போது, அவர்களது நடை சரளமாக இருந்து, வாசகனை அடுத்தடுத்து அழகாக அழைத்துச் செல்லும். நீண்ட தொடர்களை மற்றும் மற்றும் என்று தொடர்ந்து வடிவமைப்பது போன்றவை வாசகனுக்கு அலுப்பூட்டும்.
4. நன்மொழி புணர்த்தல்; நல்ல சொற்களைப் பயன்படுத்த வேண்டும். பிறமொழி கலப்பின்றி, அந்த இடத்திற்குத் தக்க சரியான சொல்லைப் பயன்படுத்த வேண்டும். தரம் குறைந்த சொற்களைப் பயன்படுத்தக் கூடாது. ஆங்கிலத்தின் பிரபல எழுத்தாளர் ஸ்டீபன் கிங் அவர்களின் அம்மா, அவரிடம், கெட்ட வார்த்தைகள் அறிவிலிகளின் பயன்பாடு என்று குறிப்பிட்டார். இதற்கு நாம் நமது மொழித்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். நிறைய வித்தியாசமான தலைப்புகளில் புத்தகங்கள் படிக்கப் படிக்க, பல வார்த்தைகள் நமக்கு அறிமுகமாகும். நல்ல வார்த்தைகளாக மட்டுமல்லாமல், சரியான வார்த்தைப் பிரயோகத்திற்கும் இது உதவும்.
ஆங்கிலத்தில் love என்ற வார்த்தைக்கு தமிழில் நேசம், பாசம், காதல், அன்பு என்று பல்வேறு அர்த்தங்கள் உண்டு. நடையில் சரியான வார்த்தையைப் பயன்படுத்தும்போது, வாசகனுக்கு நாம் சொல்ல வந்த விஷயம் சரியாகக் கடத்தப்படுகிறது.
5. ஓசையுடைமை; எழுத்து நடையில் ஓசை குறையாமல், படிப்பதற்கு இனிமையாக வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும். உரைநடையை விட, இது கவிதைகளுக்கு இன்னும் சாலப் பொருந்தும். அருணகிரிநாதர் போன்ற சந்தக் கவிகள் ஓசை நயம் குறையாமல் கவிதைகளை வடித்தனர். அத்தகைய கவிதைகளைப் படிக்கும்போது, நமக்கு சந்தத்தின் ஓசை இன்பத்தை அளிக்கும். உரைநடையில் எழுதும்போது கூட, வார்த்தை ஜாலங்களைப் படிக்க அது இன்னும் எழுத்துக்குச் சுவை கூட்டும். உதாரணமாக, காலில் முள் இருந்தால், பத்துரத புத்திரனின் மித்திரனின் சத்துருவின் பத்தினியின் கால் வாங்கித் தேய் என்று காளமேகப் புலவர் எழுதியுள்ளார். இது கவிதைக்கு சுவையூட்டுகிறது.
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும் - திருப்புகழ்
6. ஆழமுடைத் தாதல் ; எழுதும் விஷயத்தை ஆழமாக சொல்ல வேண்டும். மேலோட்டமாகச் சொல்வது, வாசகர் களுக்கு அலுப்பு தட்டும். ஒரு விஷயத்தை அலசி ஆராய்ந்து, ஆழமாகக் கையாள வேண்டும். அகல உழுவதை விட, ஆழ உழுவது நல்லது என்று ஒரு பழமொழி உண்டு. ஆழ உழுவதன் மூலம், அந்த விதை நன்கு விதைக்கப்பட்டு, நன்கு வளர ஏதுவாகும்.
இரு காதலர்கள் கடற்கரையில் சந்தித்துவிட்டு கிளம்பினர் என்று மேலோட்டமாக எழுதுவதை விட, காதலர்கள் கடற்கரையில் எந்தப் பொழுதில் சந்தித்தனர், எங்கு அமர்ந்தனர், எப்படி அமர்ந்தனர், எதை உண்டனர், அவர்களது பார்வைக் கோணங்கள் எப்படி இருந்தன, அவர்களது உடை எப்படி இருந்தது, அவர்கள் எந்த விஷயங்களைப் பற்றி பரிமாறிக் கொண்டனர் என்று காட்சிப்படுத்துவதன் மூலம், காதலர்களின் காதல் வாசகர்களுக்கு நன்கு புரிகிறது. மேலும், கதாபாத்திரங்களுடான நெருக்கம் கூடுகிறது.
7. முறையின் வைப்பே; சொல்ல வந்த விஷயத்தைக் கோர்வையாக சொல்ல வேண்டும். முன்னுக்குப் பின், மாற்றி மாற்றிச் சொல்லும்போது, வாசகனுக்கு குழப்பம் ஏற்படும். அடிப்படை விஷயங்களை முதலில் விளக்கி விட்டு, கடினமான விஷயங்களுக்குப் பின்னர் செல்ல வேண்டும். சொல்ல வந்த விஷயத்திற்குச் சம்பந்த மில்லாத விஷயங்களில் நடை தாவக்கூடாது. இவ்வாறு சொல்லும்போது, வாசகனுக்கு, சொல்ல வந்த விஷயத்தில் ஒரு பிடிப்பு ஏற்படுகிறது.
8. உலகமலையாமை ; உலக மரபிற்கு மாறாமல் எழுத வேண்டும். எழுத்து நடை இயல்பாக இருக்க வேண்டும். இயல்பாக பலரும் பயன்படுத்தும் சொற்களைப் பயன்படுத்தாமல், வேண்டுமென்றே கடினமாக சொற் களைப் பயன்படுத்துவது, வாசகர்களுக்குப் படிப்பதனைக் கடினமாக்கும். உதாரணமாக, தற்போது கங்குல் என்ற சொல் வழக்கொழிந்து போய்விட்டது. அதற்கு பதிலாக இரவு, ராத்திரி போன்ற சொற்கள் வழக்கத்தில் உள்ளன. வழக்கொழிந்து போன சொல்லைப் பயன்படுத்துவது, இயல்பான நடையினைக் கடினமாக்கும்.
9. விழுமியது பயத்தல்; நல்ல விஷயங்களைக் கூற வேண்டும். ஆக்கப்பூர்வமான விஷயங்களைக் கூற வேண்டும். பிரபல மலையாள எழுத்தாளர் காதர், தனது தந்தை மற்றும் சிற்றன்னை மீதிருந்த கோபம் சார்ந்து , சிறிய வயதில் ஒரு கதை எழுதி, அதனை பிரசுரிக்க அனுப்ப, எழுத்தாளர் முகமது கோயா காதரிடம், கதை தனிப்பிட்ட சோகங்களை எழுதுவற்கான இடமல்ல. சமூகத்தை முன்னேற்ற ஏதாவது அதில் இருக்க வேண்டுமென்று கூறினார். எனவே, நல்ல விஷயங்களை, சமூகத்தை முன்னெடுக்கும் விஷயங்களைப் பகிர வேண்டும்.
10. விளங்குதா ரணத்தது; சொல்ல வந்த விஷயத்தை அங்கங்கு எடுத்துக் காட்டுக்களோடு விளக்க எளிதாக விளங்கும். உதாரணத்திற்கு, குகையைப் போல, இருட்டாக இருந்தது. இவ்வாறு எடுத்துக்காட்டுடன் எழுத, சொல்ல வந்த விஷயம் எளிதில் வாசகனுக்கு புரியும். எடுத்துக் காட்டுகள் மனதில் சட்டென்று தோன்றுபவையாக, நேரடியாக இருக்க வேண்டும். எடுத்துக் காட்டு கூற வேண்டுமென்று, மிகவும் யோசித்து, கடினமான, எளிதில் விளங்காத எடுத்துக் காட்டுகளைக் கூறக் கூடாது.
முடிந்தால் நன்னூல் படியுங்கள். அருமையான இலக்கணப் புத்தகம்.