நொடிகளில் பொடியாகும்

நொடிகளில் பொடியாகும்

Published on

-ஜி.எஸ்.எஸ்.

செய்தி: விதிகளை மீறி, கட்டப்பட்ட நொய்டா இரட்டைக் கோபுர கட்டடம் சமீபத்தில் தரைமட்டமாக்கப்பட்டது.

நில நடுக்கமோ, சுனாமியோ கண்ணிமைக்கும் நேரத்தில் கட்டடங்களை இடித்துத் தள்ளி​ விடும்தான்.  ஆனால், ஒரு ராட்சதக்  கட்டடத்தை மனித முயற்சியில் இடிப்பது என்பது பெரும்பாடு.  உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லையென்றால் இது போன்ற இடிப்புகள் பெரும் ஆபத்தில் முடிய வாய்ப்பு உண்டு.  எனவே, பொறியாளர்கள் மிக உயரமானக் கட்டடங்களை இடிப்பதில் மேலும் மேலும் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.

இதுபோன்ற ராட்சதக் கட்டடங்கள் எப்படி  மிகக்  குறைந்த நொடிகளிலேயே பொலபொலவென விழுகின்றன? -  அதுவும் தன் பரப்புக்குள்ளாகவே?  

இந்த சில நொடிகளுக்காக  வாரக்கணக்கில் திட்டமிட்டு, பலவித முன்னேற்பாடுகளைச் செய்தாக வேண்டும்.  சில சமயம் சில மாதங்கள்கூட இதற்குத் தேவைப்படும்.    இதற்காக திட்டமிடும்  பொறியாளர்களை ‘எக்ஸ்ப்ளோஸிவ்ஸ் என்ஜினீர்ஸ்’  என்பார்கள்.

என்ன மாதிரி கட்டுமானம்,  எந்தப் பொருட்கள் கட்டுவதற்கு பயன்பட்டுள்ளது, அருகில் என்ன மாதிரி கட்டடங்கள் உள்ளன போன்றவற்றை ஆய்வார்கள்.  அந்தக் கட்டடத்தில் எளிதில் தீப்பற்றிக் கொள்ளக்கூடிய மற்றும் கதிரியக்கத் தன்மை கொண்ட பொருட்கள் இருந்தால் முதலில் அவற்றை நீக்கி விடுவார்கள்.  அந்தக் கட்டிடத்துக்கு அருகில் உள்ள பகுதிகள் தனிமைப் படுத்தப்படும். அருகில் வசிப்பவர்களுக்கு முன்னதாகவே எச்சரிக்கை கொடுக்க வேண்டும்.

 (அபுதாபியில் இருந்த 144 மாடி கட்டடமான மினா பிளாசா 2020ல் இடிக்கப்பட்டபோது அதை ‘வெடிகுண்டுகளை வைத்து தகர்க்கப்பட்ட மிக உயரமான கட்டடம்’ என்று கின்னஸ் அறிவித்தது. 540 அடி உயரக் கட்டடம் இது.)

நொய்டாவில் வீழ்த்தப்பட்ட கட்டடத்தைச் சுற்றி ஒன்றரை கிலோமீட்டர் தொலைவுக்குள் வசித்த ஆயிரக்கணக் கானவர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.  அங்கு திரிந்து கொண்டிருந்த 35 தெரு நாய்கள் கூடப் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. அந்த பகுதியில் உள்ள வாகனங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன.  ஒருவேளை இந்த இடிப்பின்போது உயிர் சேதம் ஏற்பட்டால்?  அருகில் உள்ள மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.  தேசிய பேரிடர் பாதுகாப்பு படையைச் சேர்ந்த வீரர்கள் குவிக்கப்பட்டனர்.

வெடிகுண்டு வைத்துதான் இந்த இடிப்பும் நடைபெற்றது. வெடிபொருட்களுக்காக மட்டுமே 18 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.

இப்படிப்பட்ட செயல்பாடுகளில் வெடிமருந்துகளை வைக்க கட்டடத்தின் சரியான பகுதிகளைத் தேர்ந் தெடுப்பது மிக முக்கியம்.  கட்டிடத்தின் மிக முக்கியப் பகுதிகளைத் அவை தாக்க வேண்டும். இது மிகத் துல்லியமாகச் செயல்படுத்தப்பட வேண்டிய பணி.  

       முதலில் கட்டடத்தின் உட்புறமுள்ள தடுப்புச் சுவர்கள் பெயர்க்கப்படும்.  அடுத்ததாக கட்டடம் எளிதாக உட்புறமாக விழுவதற்கு எந்​தெந்தப் பகுதிகள் தடையாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு அவை நீக்கப்படும். 

அவ்வளவு உயரமான கட்டடத்தை இடிந்துவிழச் செய்யும்போது ​தூசிகளும், சிறு துகள்களும் (என்னதான் கவனமான நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டாலும்) வெளிப்புறமாகச் சிதறும்.  எனவே, மொத்தக் கட்டடத் திற்கும் ​மேற்புறமாக ஒரு பாதுகாப்பு உறையைப் போர்த்தி வைப்பார்கள்.   (நொய்டா கட்டட இடிப்பின்போது அருகிலுள்ள உயரமான கட்டடங்களின் மேலும் துணி போர்த்தப்பட்டது). 

 கட்டடத்தில் பல முக்கியமான பகுதிகளில் துளையி டுவார்கள்.  கட்டத்தைப் பலவீனப்படுத்தவும் இது உதவும்.  வெடிமருந்துகளை இணைக்கும் மின் இணைப்பு களுக்கும் இந்தத் துளைகள் பயன்படும். 

       சற்றுத் தொலைவிலிருந்து அதைக் கண்காணித்தபடி தலைமைப் பொறியாளர் ஒரு ரிமோட்டை அழுத்த மொத்தக் கட்டடமும் உள்வாங்கிக் கொள்ளும்.  

ரியாகத் திட்டமிடவில்லை என்றால் விபரீதங்கள் நேரலாம். 1997ல் ராயல் கான்பெர்ரா மருத்துவமனையின் கட்டடத்தை முழுவதுமாக இடித்துவிட்டுப் புதிதாகக் கட்டலாம் என்று தீர்மானித்தார்கள்.  ஆனால், சரியான விதத்தில் முன்னேற்பாடுகள் செய்யப்படாததால் அந்தக் கட்டடம் உட்புறமாக இடிந்து விழுந்தபோது அதன் சில பகுதிகள் விசையுடன் தெரித்து வெளியேற ஒன்பது பேருக்குக் காயங்கள் ஏற்பட்டன.  12 வயது சிறுமி ஒருத்தி இதனால் இறந்தாள்.

 அரை நிமிடத்துக்குள் இது போன்ற கட்டடங்கள் உட்புறமாக இடிந்து விழுந்தாலும் அந்த இடிபாடுகளை அங்கிருந்து அகற்றுவதற்கு சில  மாதங்கள்கூட ஆகலாம்.

 சீனாவில் (கோவிட் புகழ்) ஊஹன் நகரில் முன்பு 19 அடுக்கு மாடிக் கட்டடங்கள் 2017ல் இப்படி பத்தே நொடிகளில் இடிக்கப்பட்டன.   12 அடுக்குகள் கொண்ட கட்டடங்கள் இவை.  அங்கு 707 மீட்டர் உயரம் கொண்ட வணிகக் கட்டடம் ஒன்று நிறுவப்படுவதற்காக இவை இடிக்கப்பட்டன.

 அந்தக் கட்டடங்களில் மிகப் பல இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டன.  ஒரு வெடிகு​​ண்டு வெடித்த எவ்வளவு நொடிகளில் அடுத்தடுத்த வெடிகுண்டுகள் வெடிக்க வேண்டுமென்று மிகத் துல்லியமாகக் கணக்கிடப்பட்டு செயல்படுத்தப்பட்டன.

ஜெர்மனியிலுள்ள ஃபிராங்ஃபர்ட் நகரில் ஒரு பிரபலக் கட்ட​டம் இடிக்கப்பட்டது.  ஒரு பல்கலைக்கழகத்தின் பகுதியாக இது இருந்தது.  இதில் 1500 இடங்களில் துளையிடப்பட்டு வெடிகுண்டுகள் வைக்கப்பட்டன.  381 அடி உயரம் கொண்ட கட்டடம் இது.  ஐரோப்பாவிலேயே வெடிகுண்டுகள் மூலமே இடிக்கப்பட்ட மிக உயரமான கட்ட​டம் இதுதான். இந்தக் கட்டடத்தைச் சுற்றி ஆறு மீட்டர் உயரத்துக்குத் தடுப்புகள் அமைக்கப்பட்டன.  50,000 டன் எடை கொண்ட கட்டுமானப் பகுதிகள் இடிந்துவிழ வேண்டும் என்பதால்தான்.  இடியும் கட்டடத்தின்மீது ஆயிரம் லிட்டர் என்ற அளவிலான பல ராட்சத தண்ணீர்க் குடுவைகளிலிருந்து நீர் கொட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டது. மிக அதிக அளவில் ​தூசி அந்தப் பகுதியில் பரவிவிடக் கூடாது என்பதுதான் நோக்கம்.

ஜெட் டெமாலிஷன் என்ற நிறுவனத்திடம் நொய்டா கட்டட இடிப்பு வேலை ஒப்படைக்கப்பட்டது.  இவர்கள் 2019ல் தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரிலுள்ள 108 மீட்டர் உயரக் கட்டடத்தை அரை நிமிடத்திற்குள் இடித்துக் காட்டியவர்கள். அந்த இருபது மாடிக் கட்டடம் சில நொடிகளில் வீழ்த்தப்பட்ட காட்சியை உலகம் முழுவதுமே பார்த்து அதிச​யப்பட்டது.   அப்போது அந்தக் கட்டடத்துக்குப் பக்கத்திலிருந்த  ஒரு ஷோ ​ரூமின் கண்ணாடித் தடுப்புகள் கூட சிறிதும் பாதிக்கப் படவில்லை!  இதற்காக மைக் பெர்க்கின் என்ற தலைமைப் பொறியாளர் பெரிதும் பாராட்டப்பட்டார்.

       இந்த நிறுவனத்தின் தற்போதைய நிர்வாக இயக்குனர் ஜோ ப்ரிங்க்மென் ‘நொய்டா கட்டடங்கள் திட்டமிட்டபடி இடிந்துவிழுந்தது கடவுளுக்கு மிகவும் நன்றி சொன்னேன்’ என்று தொண்டை கரகரக்கக் கண்ணீருடன் கூறியிருக்கிறார்.

ஆக வானுயர் கட்டடத்தை கட்டி முடிப்பதுதான் பெரும்பாடு என்பதில்லை.   சமயம் அதை இடிப்பது அதைவிடச் சவாலானதாக இருக்கக்கூடும். 

***************

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com