ஒபாமாவுக்கு எம்மி விருது

ஒபாமாவுக்கு எம்மி விருது
Published on

ந்த ஆண்டு ஏப்ரல் 13 அன்று வெளியானது ஐந்து பகுதிகள் அடங்கிய ‘நமது மாபெரும் தேசியப் பூங்காக்கள்’ (Our great national parks) என்ற ஆவணத் தொடர். இதற்காக அமெரிக்க முன்னாள் குடியரசுத் தலைவர் பாரக் ஒபாமாவுக்கு எம்மி விருது வழங்கப்பட்டது.

       அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு துறையில் மனமகிழ்ச்சியும் முக்கியத்துவமும் கொண்ட நிகழ்ச்சிகளுக்கானது எம்மி விருது.  இதை எம்மி என்று சுருக்கி அழைக்கிறார்கள்.   திரைப்படங்களுக்கு ஆஸ்கார் போல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு எம்மி விருது.  இது எதற்காக ஒபாமாவுக்கு வழங்கப்படவேண்டும்?

       2017 குடியரசுத் தலைவருக்கான காலகட்டம் முடிவடைந்த பிறகு ஒபாமாவும் அவரது மனைவியும் சும்மா இல்லை.  கையோடு தங்கள் சுயசரிதையை எழுதினார்கள்.  இவை வேகமாக விற்றுத் தீர்த்தன.   

       லாப நோக்கமற்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை இவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.   2018ல் உருவாக்கப் பட்ட நிறுவனம்  இதன் பெயர் ஹையர் கிரவுண்ட் புரோடக்‌ஷன்ஸ்.  இதை ஒபாமாவும் அவரது மனைவி மிஷெல் ஒபாமாவும் இணைந்து நிறுவினர்.  நெட்ஃபிளிக்ஸோடு ஓர்  ஒப்பந்தம் போட்டுக் கொண்டு ஆவணப் படங்களைத் தயாரிக்கிறார்கள். கதை போன்ற வடிவத்தில் ஆவணப் படங்கள் தயாரிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது இந்த தயாரிப்பு நிறுவனம்.   ‘எப்போதுமே கதைகள் மூலம் ஒன்றைக் கூறும் போது அல்லது கதை வடிவத்தில் கூறும்போது அது உற்சாகம் அளிப்பதாக இருக்கும்.  இப்படித் தயாரிக்கப்படும் ஆவணப்படங்கள் நம்மைச் சுற்றிய உலகைப் பற்றி வேறுவிதமாக, ஆக்கபூர்வமாக சிந்திக்கத் தூண்டும்’ என்கிறார் ஒபாமா.

அது சரி, எந்தக் கோணத்தில் ஒபாமாவுக்கு எம்மி விருது வழங்கப்பட்டிருக்கிறது?  தயாரிப்பாளர் என்ற கோணத்தில் அல்ல,  அந்த ஆவணப் படத்தின் ஐந்து பகுதிகளையும் சிறப்பாக விவரித்ததற்காக இந்த விருது.

       இவர்கள் முன்பு தயாரித்த அமெரிக்கன் ஃபேக்டரி என்பதை சிறந்த ஆவணப்படமாக முன்பு ஆஸ்கார் குழு தேர்வு செய்ததுண்டு.  ஒரு சீன கோடீஸ்வரர் அமெரிக்கா விலுள்ள மூடப்பட்ட ஜெனரல் மோட்டார்ஸ் தொழிற் சாலையை மீண்டும் தொடங்குகிறார்.  அதில் 2000 (வேலை இழந்து முடங்கிக்கிடந்த) அமெரிக்கர்களை பணியில் அமர்த்துகிறார்.  மிகவும் நம்பிக்கையுடன் தொடங்கப் பட்ட இந்த நிறுவனம் போகப்போக பலவித தடங்கல்களை சந்திக்கிறது.  சீனாவிலும் அமெரிக்காவிலும் பணியாளர்கள் நடத்தப்படும் விதங்கள் குறித்த ஒப்பீடு இதில் செய்யப்படுகிறது.

       இப்போது எம்மி விருது பெற்றுள்ள ‘அவர் கிரேட் நேஷனல் பார்க்'கின்  முதல் பகுதியில் பெரும் தடுப்புப் பவளத்திட்டு (The great barrier reef) குறித்து விவரிக்கிறது.   2700 கிலோ மீட்டர் தூரம் நீளம் கொண்டு 900 தீவுகளையும் கொண்டது ஆஸ்திரேலிய பகுதியிலுள்ள இந்த பவளத்திட்டு.  இத்துடன்  ஆப்பிரிக்க கடற்கரைகள் தீவுகளின் ஆகியவற்றின் ஆக்ரோஷமான அழகுகள் காட்டப்பட்டன.

இரண்டாவது பகுதியில் தனித்தன்மை கொண்ட இருபத்தி நான்கு தேசிய பூங்காக்கள் விவரிக்கப்பட்டன.

       மூன்றாவது பகுதியில் கென்யாவில் உள்ள சாவோ சரணாலயப் பகுதி நம் பார்வைக்கு வைக்கப்பட்டது.  இதில் ஆயிரக்கணக்கான யானைகள் உடல் அசைய நடந்து வரும் காட்சி மிக அற்புதம்.  நீர்யானைகள், காண்டாமிருகங்கள் போன்ற பல விலங்குகளும் இதில் அணிவகுக்கின்றன.

       விலங்குகளுக்கும் மனிதனுக்கும் உள்ள மிக நுட்பமான சமன்பாடு நான்காவது பகுதியில் விவரிக்கப்படுகிறது.  முக்கியமாக கலிபோர்னியாவில் உள்ள கடற்கரைப் பகுதி மிக நெருக்கத்தில் காட்டப்படுகிறது.

       இந்தோனேஷியாவில் உள்ள குனுங் ​லூசர் தேசியப் பூங்கா ஐந்தாவது பகுதியின் முக்கிய கருப்பொருள்.  சுமார் 8000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்தது இது.  உலக பாரம்பரியக் களமாக தேர்வு செய்யப்பட்டது.

       ஆக (அமைதிக்கான) நோபல், ஆஸ்கார், எம்மி என்று ​மூன்று கெளரவங்களை ஒபாமா பெற்றுவிட்டார்.  ‘நான்காவது உலக உச்ச விருதான கிராமி விருதையும் இவர் பெறலாமே! அதற்காக ஒபாமா செயல்பட வேண்டும்’ என்று கிண்டலான விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன.

       விருதுக்காக போட்டியிட்ட வேறொரு நிகழ்ச்சி 'தி அபரென்டி​ஸ்' என்பதாகும்.  இந்த ரியாலிட்டி போட்டி நிகழ்ச்சியில் இடம் பெற்றவர் டொனால்ட் ட்ரம்ப், மற்றொரு முன்னாள் அமெரிக்க குடியரசுத் தலைவர்.  ஆனால் இது இறுதிச் சுற்றில் தேர்வாகவில்லை.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com