
* காய்ந்த வேப்பிலை, வசம்புத்துண்டு இவைகளை பீரோவின் ஓரத்தில் வைத்துவிட்டால், புடைவை துணிகளில் ஈரத்தன்மையால் வரும் பூச்சிகள் நெருங்காது.
* ஜன்னல் கதவுகள், வாசற்கதவுகள் டைட் ஆகாமலிருக்க, டேபிள் சால்ட், கோலமாவு தூவி வைத்தால், சுலபமாகத் திறந்து மூடலாம்.
* காலில் சேற்றுப்புண் வந்துவிட்டால் படுக்கும்போது வெதுவெதுப்பான நீரில் கழுவி விளக்கெண்ணெயுடன் மஞ்சள் கலந்து தடவி, படுக்க சேற்றுப்புண் ஆறிவிடும்.
* ஷூ மழையில் நனைந்துவிட்டால் நிறைய நியூஸ்பேப்பரை உள்ளே திணித்து வைத்தால் பேப்பர் நீரை உறிஞ்சிவிடும்.
* மெல்லிய மிதியடி அடியில் பேப்பர் போட்டு வைத்தால் ஈரம் உறிஞ்சி மண்கள் அதில் உதிரும்.
- வசந்தா மாரிமுத்து, சிட்லபாக்கம்.
****************************************************
மழையின் காரணமாக தரையில் ஓதம் ஏறி ஈரமாக இருக்கும். சிறு பிள்ளைகளுக்கு, வயதானவர்களுக்கு குளிர் தாங்காது. இதிலிருந்து தப்பிக்க, பாயை தரையில் விரிப்பதற்கு முன்னர், நான்கைந்து செய்தித்தாளை விரித்து அதன் மீது பாயை விரித்துப் படுத்தால் குளிர் எடுக்காது, சுகமான தூக்கம் வரும்.
மழை காலத்தில், ஒன்றுவிட்ட ஒருநாள் ஏதேனும் ஒரு சுண்டல் செய்து சாப்பிட நமக்கு தேவையான புரதம் கிடைப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியினை தரும் ஹார்மோனை புரதம் மட்டுமே தகுந்த முறையில் செயலாற்றும். ஆகவே, நவராத்திரிக்கு மட்டுமே சுண்டல் என்பது பாரம்பரியம். மழைக்காலத்தில் வேண்டிய புரதம் அவசியம்.
மழைக்காலத்தில் ஒரு சிறிய பெட்டியில் மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, சுண்ணாம்பு, சிறிய மடக்கு டார்ச் போன்றவற்றை எடுத்து வைத்துக்கொண்டால், நம் இரவில் படுத்துக் கொள்ளும்போது பக்கத்தில் வைத்துக்கொள்ளுங்கள்,
பூச்சி கடிக்குச் சுண்ணாம்பு, அவசர ஒளிக்கு டார்ச் மற்றும் மெழுகுவர்த்தி உதவும்.
தீப்பெட்டி குச்சிகள் நமத்துப் போகாமல் இருக்க, அதில் சிறிது பச்சரிசி போட்டு வைத்தால் போதும்.
- வி. ஸ்ரீவித்யா பிரசாத், சென்னை
****************************************************
மழை, குளிர் காலங்களில் தேவைப்படும் உல்லன் துணிகளை, வெது வெதுப்பான வெந்நீரில் 4, 5 நிமிடங்கள் ஊறவைத்து, தேய்க்காமல், கசக்காமல், பிழியாமல் அப்படியே கொடியில் தொங்கவிட்டு, தானாகவே காய விட வேண்டும். அப்போதுதான் சுருங்காமல் இருக்கும்.
மழைக்காலத்தில் ரயில் பயணம் செய்யும்போது, இருக்கையின் மேல் செய்தித்தாளை விரித்துவிட்டு, அதன்மேல் படுத்து போர்த்திக்கொண்டால், குளிர் தெரியாது.
உப்பு ஜாடியில் ஈரம் கசியாமல் இருக்க, இரண்டு மூன்று பச்சை மிளகாய் போட்டு வைக்க வேண்டும்.
மழைக்காலத்தில், வாசல் மிதியடி ஈரத்தால் சுருங்கிவிடும். எனவே, ஈரத்தால் பாதிக்கப்படாத ரப்பர் மிதியடி வாசலிலும், உள்ளே நுழையும்போது பருத்தி மிதியடியையும் போட்டு வைக்கலாம்.
மழை நேரத்தில் துணிகள் காய வெயில் வராது. கடைசியாக துணிகளை அலசும் போது கொதிக்கும் நீரை முக்கி எடுத்துவிட்டு மின்விசிறியின் அடியில் காய வைத்தால் உடனே காய்ந்து விடும். ஃபங்கஸ் கிருமிகளும் அழிந்து விடும்.
- எஸ். ராஜம், திருச்சி.
****************************************************
மழை நீரை ஒரு பாத்திரத்தில் பிடித்து, அதை நன்றாக காய்ச்சி, ஆற வைத்து முகம் கழுவினால், பட்டு போல, மிருதுவாக மாறும்.
ஜில்லென்று இருக்கும் துணிகளை மடித்து, கம்பளியில் சுருட்டி, நான்கு மணி நேரம் கழித்து எடுத்தால், வெயிலில் காய வைத்தது போன்று மொட மொடப்பாக இருக்கும்.
- ஆர். பத்மப்ரியா , ஸ்ரீரங்கம்.
****************************************************
வருமுன் காப்போம் டிப்ஸ்
மழைக்காலம் தொடங்குவதற்கு முன், புரட்டாசியில் வெயில் அடிக்கும்போதே, மணத்தக்காளி, சுண்டைக்காய், மோர் மிளகாய் முதலிய வற்றல்கள் போட்டு வைத்திருந்தால் அவற்றை, மீண்டும் ஒருமுறை நன்றாகக் காய வைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
இதே போல கூழ்வற்றல், வடகம் முதலியவற்றையும் மறுக்காய்ச்சல் போட்டு எடுத்து வைத்தால் பூச்சி வண்டுகள் வராமல் இருக்கும்.
அதேபோல ஹேண்ட் பேக், ரெக்சின் பைகளை நாம் ஹேங்கரில் தொங்கவிட்டு வைத்திருந்தால், மழைக்காலத்தில் பூஞ்சக் காளான் பிடித்து விடும். உடனடியாக அவை உபயோகத்திற்குத் தேவை இல்லை என்றால் நன்றாக துடைத்து ஒரு பாலிதீன் கவரை சுற்றி பத்திரப்படுத்தி வைக்கவும்.
குழந்தைகளின் புத்தகப்பை கூட பூஞ்சாணம் பிடிக்க வாய்ப்பு உண்டு. அவ்வப்போது வெயிலில் காயவைத்து வைத்துக்கொள்வது நல்லது.
மழைக்காலம் ஆரம்பிக்கும் முன் குடை, ரெயின் கோட்டு முதலியவற்றை எடுத்து சரிபார்த்து அவசரத்திற்கு எடுக்கும்படி வைக்க வேண்டும்.
வயதானவர்கள் வீட்டில் இருந்தால், மழை காலம் வரும் முன், பொதுவாக வரும் ஜலதோஷம், வயிற்றுப்போக்கு, காய்ச்சல் முதலியவற்றுக்கான மாத்திரைகளை வாங்கி வைத்துக்கொள்ளவும்.
காய்ச்சி ஆற வைத்த நீரைக் குடிக்கவும் அவ்வப்பொழுது பிளாஸ்கில் சூடாக தண்ணீர் போட்டு வைக்கவும்.
கூடியவரை வயதானவர்களை வெளியில் செல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.
பிரிட்ஜில் இருந்து எடுத்த பழங்கள், மோர், தயிர் முதலியவற்றை ஜில்லென்று பயன்படுத்த வேண்டாம். அறை வெப்ப நிலைக்கு மாறிய பிறகு உபயோகப்படுத்தவும்.
- பி. லலிதா, திருச்சி
****************************************************
பயத்தமாவு முறுக்கு
தேவையான பொருட்கள்: பயத்தமாவு - 1 கப், அரிசி மாவு - ½ கப், வறுத்த உளுந்தம்பருப்பு மாவு – 1 ஸ்பூன், நெய் 2 ஸ்பூன், காயம் பொடி - ¼ ஸ்பூன் ஓமம் பொடி - ¼ ஸ்பூன், உப்பு + எண்ணெய் - தேவைக்கு.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தவிர மேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாகக் கலந்து, நீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து,
10 நிமிடங்கள் ஊற வைத்து, பின் முறுக்கு அச்சில் மாவைப் பிழிந்து முறுக்குகளாக எண்ணெயில் பொரித்து ஆற விட்டு, காற்று புகாத டப்பாவில் அடைத்துவைத்தால் மழைக்காலத்தில் சூடான டீயுடன் முறுக்கும் சாப்பிட மிகவும் இதமாக இருக்கும்
- வி. கலைமதி சிவகுரு, நாகர்கோவில்
மொபைல் போன்கள், டேப்லட்கள், லேப்டாப் போன்றவற்றை மழைக்காலத்தில் சார்ஜ் செய்யும்போது கவனம் தேவை. ஈரமான சுவர்கள், நீர் கசியும் இடங்களுக்கு அருகில் எலக்ட்ரானிக் பொருட்களை சார்ஜ் போடாமல் இருப்பது மிகவும் நல்லது.
ப்ளூடூத் இயர் போன்கள் வாட்டர் ப்ரூப் தன்மையுடன் இருப்பதால் மழைக்காலத்தில் மொபைல் போனில் அட்டென்ட் பண்ணாமல் ப்ளூடூத் இயர் போன்கள் மூலம் பதில் அளிப்பது நல்லது. அதேபோல் லேப்டாப், டேப்லெட் வைக்கும் பைகளில் சிலிக்கா ஜெல் பாக்கெட்டுகளை போட்டு வைக்க ஈரப்பதத்தை நன்கு உறிஞ்சி விடும் . இதனால் இதன் ஆயுட்காலம் நீடிக்கும்.
மற்றொரு பெரிய பிரச்னை... மழை பெய்தால் கொசுக்கள் தொல்லை அதிகரிக்கும். இதற்கு நம் வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். அப்படி நீர் தேங்கி இருந்தால் அதில் கொஞ்சம் மண்ணெண்ணையை விட்டு வைக்க கொசுக்கள் உற்பத்தியாகாது. ஜன்னல், கதவுகளை மூடுவதும், கொசுவலை கட்டிக்கொண்டு தூங்குவதும் நல்லது.
- கே.எஸ். கிருஷ்ணவேணி, சென்னை.