
சுமங்கலி பூஜை, திருமணமான பெண்கள் தங்கள் கணவன் நீண்ட ஆயுளைப் பெறவும், திருமணம் ஆகாத பெண்கள் திருமணத் தடைக்கான தோஷம் போக்கவும் நடத்தப்படுகிறது. 'சுமங்கலி' என்றால் மங்கலம் நிறைந்தவள் என்று பொருள்.
பராசக்தி உலகைக் காத்தருள்வதைப் போல, குடும்பத்தைச் சீரும், சிறப்போடும் திறம்பட வழி நடத்தும் பெண்கள் சக்தியின் வடிவமாகவே போற்றப்படுகின்றனர். சுமங்கலிப் பெண்கள் ஒன்று சேர்ந்து நடத்துவதால் இது சக்தி வழிபாடாக பார்க்படுகிறது.
ஞாயிறு, திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் இந்த தினங்களில் யோகம், திதி போன்றவற்றையும் கவனத்தில் கொண்டு ராகுகாலம் இல்லாமல் நடத்தலாம்.
நவராத்திரி நாட்களில் சுமங்கலி பூஜை நடத்துவது மேலும் சிறப்பாக அமையும்.
சுமங்கலி பூஜை முறைகள்:
பூஜை செய்வோர் இல்லங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டின் உள்ளேயும், வாசலிலும் அழகாக மாக்கோலம் இட வேண்டும்.மாவிலைத் தோரணங்களால் வீட்டை அழகுபடுத்த வேண்டும்.
பூஜை செய்வோர் இருக்கும் சுமங்கலிப் பெண்கள் மட்டும் அல்லாமல், உற்றார் உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் மற்றும் நண்பர்களையும் அழைத்து நடத்துவது அந்தச் சூழலையே இனிமையானதாக மாற்றும்.
பூஜைக்கு அழைக்கப்படும் பெண்களை சக்தியின் வடிவமாகக் கருதி சிறப்பான வரவேற்பு கொடுக்க வேண்டும்.
பின்பு, அவர்களை அழகாக கோலமிடப்பட்ட பலகையில் அமரவைக்க வேண்டும். அவர்களது பாதங்களைத் தாம்பூலத் தட்டில் வைத்து, பூஜை நடத்தும் இல்லத்தின் தலைவி அவர்களுக்கு, பாதபூஜை செய்ய வேண்டும். அடுத்ததாக குங்குமம், சந்தனம் பூசி, அவர்கள் தலையில் சூடிக் கொள்ள மலர்களும் கொடுக்க வேண்டும்.
தங்கள் வசதிக்குத் தகுந்தவாறு புடவை அல்லது ஜாக்கெட் துணியுடன் , மஞ்சள், குங்குமம், மருதாணி மற்றும் வெற்றிலை பாக்கு ஆகியவற்றைத் தாம்பூலத்தில் வைத்துக் கொடுக்க வேண்டும்.
விழாவுக்கு வந்த பெண்களுக்கு குடிப்பதற்குப் பாலும், பழமும் கொடுக்க வேண்டும்.
அடுத்ததாக, பூஜைக்கு வந்த சுமங்கலிப் பெண்களுக்கு அறுசுவை உணவளித்து, விழாவுக்கு வந்தவர்களின் மனம் குளிரச் செய்ய வேண்டும்.
நிகழ்ச்சி முடிந்ததும் அவர்களை மரியாதையோடு வழி அனுப்ப வேண்டும். அதன் பிறகுதான் வீட்டில் உள்ளவர்கள் உணவருந்த வேண்டும்.
சுமங்கலி பூஜை செய்வதால் நன்மைகள்:
இல்லத்தில் செல்வம் பெருகும். துன்பம் நீங்கி இன்பம் உண்டாகும்.
தோஷங்கள் நீங்கும். குலவிருத்தி உண்டாகும்.
களத்திர தோஷம் நீங்கி, திருமணம் விரைவில் நடைபெறும்.
சுமங்கலி பூஜையை மிகவும் பிரமாண்டமாகத்தான் நடத்த வேண்டும் என்கிற அவசியம் இல்லை. தங்கள் வசதிக்குத் தகுந்தவாறு செய்யலாம். முழுமையான இறைபக்தியோடு செய்தால், போதுமானது. பூஜை நடத்துபவர்களின் இல்லங்கள் மட்டுமின்றி, பங்கேற் பவர்களின் இல்லங்களிலும் சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.
-சுந்தரி காந்தி. பூந்தமல்லி
----------------------------------------------------------------------
நவராத்திரி துளிகள்
* திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கிளியநல்லூரில் சரஸ்வதி தேவிக்கு கோயில் உள்ளது. இவ்வூர் சுகபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.
* கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் கருங்கல் நாதஸ்வரம் உள்ளது. நவராத்திரி விஜயதசமி அன்று கோயில் வித்வான் அந்த நாதஸ்வரத்தை வாசிப்பார்.
* கேரள மாநிலம் பாலக்காடு கொடுந்திரப்பள்ளி ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் சரஸ்வதி பூஜை அன்று நவமி விளக்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று கோவில் முழுவதும் விளக்குகள் ஏற்றி வழிபாடுகள் நடத்தப்படும். நகரம் முழுவதும் விளக்குகள் ஏற்றி, யானைகள் ஊர்வலம் நடைபெறும்.
* சரஸ்வதிதான் முதல் பெண் தெய்வம் என்று கூறுகின்றன வேதங்கள். இதனால் சரஸ்வதிக்கு ஆதி காரணி என்று பெயர் வந்தது.
* புராண காலத்திலேயே நவராத்திரி பூஜை செய்தவர்கள் ஸ்ரீராமன், சாவித்திரி, பஞ்சபாண்டவர்களில் தர்மர் முக்கியமானவர்கள்.
* சரஸ்வதி தேவி சமண மதத்தில் மகா சரஸ்வதி, ஆரிய சரஸ்வதி, வஜ்ர வீணா சரஸ்வதி என போற்றப்படுகிறாள்.
* கேரள மாநிலம் கோட்டையம் அருகே உள்ள பனிக்காடு என்ற இடத்தில் மூகாம்பிகை அம்மன் கோவில் உள்ளது. நவராத்திரி விழாவின் போது இங்கு சரஸ்வதி பூஜை சிறப்பாக நடைபெறுகிறது. இங்கு குழந்தைகளுக்கு வித்யாப்யாசம் நடைபெறுவது சிறப்பு.
* நவராத்திரி விரத பூஜை முறைகளும் அப்போது பாராயணம் செய்ய வேண்டிய தேவி மகாத்மியமும் குறித்து சுக முனிவர் பரீட்சித்து மகாராஜாவுக்கு கூறினார். இதுதான் முதன்முறையாக கூறப்பட்டதாகும். பிறகு வியாச பகவான் ஜனமே ஜெயனுக்கு கூறினார்.
* கும்பகோணம் மகாமக திருக்குளத்தின் அருகே ஜெகந்நாதப் பிள்ளையார் கோயில் உள்ளது. இங்கு நவராத்திரியின் போது கொலு வைத்து, ஒவ்வொரு நாளும் விநாயகருக்கு ஒவ்வொரு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன.
* திருநெல்வேலி டவுன் கீழரத வீதியில் சரஸ்வதி தேவிக்கு தனி கோவில் உள்ளது. இங்கு விஜயதசமி அன்று குழந்தைகளுக்கு வித்யாப்யாசம் செய்தும், பேனாக்கள் பென்சில்கள் போன்ற எழுது பொருட்களை அன்னையின் திருவடியில் வைத்து பூஜிக்கிறார்கள்.
-எஸ். ராஜம் ஸ்ரீரங்கம்.