தற்கொலை எண்ணம் தன்னம்பிக்கை தருமா?

தற்கொலை எண்ணம் தன்னம்பிக்கை தருமா?
Published on

- சேலம் சுபா 

ன்னது? தற்கொலை தவறாச்சே... அது எப்படி தன்னம்பிக்கை தரும்? “எனக்குத் தந்ததுங்க. நொடியில் வந்த அந்தத் தற்கொலை எண்ணம் மாறி ஒவ்வொரு நொடியும் வாழ வேண்டும் என்ற தன்னம்பிக்கை தந்தது...” என்கிறார்  ஆத்தூரைச் சேர்ந்த 35 வயதுப்பெண் வானதி.

        சோஷியல் மீடியாவினால் தனக்கென ஒரு முகவரியைத் தேடிகொண்ட இவரின் அனுபவங்கள் வாழ்வில் ஏதோவொரு கட்டத்தில் சோர்ந்துபோய் தன்னம்பிக்கை இழக்கும் பெண்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அப்படி என்ன அனுபவங்கள்? வானதியிடமே கேட்போமே...

        “பெயர் வானதி. சொந்த ஊர் ஆத்தூர். அப்பா குமரேசன். அம்மா அமுதா. அப்பா மசாலாத்தூள் அரைத்துத் தரும் அரவை மில் வைத்திருந்தார். வீட்டுல செல்லமாக வளர்ந்தவள். படிப்புல சுமார்தான். பத்தாவதில் கணக்கில் மட்டும் பெயிலானேன். வெறுத்துப் போனேன். மறுதேர்வு எழுதி பாஸாகி பிளஸ் ஒன்னில் தமிழ் மீடியத்தில் சேர்ந்தேன்.

      பத்தாவது வரை ஆங்கில மீடியத்தில் படித்ததால், தமிழில் எழுத பழக வெகுவாக சிரமப்பட்டேன். பின் திருச்சி இந்திராகாந்தி கல்லூரியில் பி காம் சேர்ந்தேன். ஆனால், இடையில் காதலில் விழுந்து அவரையே  கைப்பிடித்ததில் படிப்பைப் பாதியில் விடும்படி ஆயிற்று. கணவர் பெயர் ஜெயவேல். புகுந்த வீடும் ஆத்தூர்தான். குடும்பத்தினரின் ஆதரவுடன்தான் எங்கள் திருமணம் நடந்தது..

      திருமணம் முடிந்ததும் ஒரு ஐந்து வருடம் நான் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. காரணம் கணவரின் பெற்றோர். அவர் சம்பாதித்தால் போதும் என்ற மனப்பான்மை அவர்களுக்கு. திருமணமாகிய இரண்டு வருடத்தில் ஒரு குழந்தை பிறந்து இறந்ததால் மிகவும் வேதனை அடைந்தேன். அதன்பின்தான் என் பெரிய மகன் பிறந்தான்.

       என் திறமைகளைப் புரிந்துகொண்ட கணவர், நீ உனக்கு என்ன விருப்பமோ அதைச் செய் என்று ஆதரவு தந்ததால், முதன்முறையாக மெஹந்தி போட கணவருடன்  வெளியே சென்றேன். அதற்காக நான் பெற்ற தொகை 300 ரூபாய். அதுதான் என் முதல் சுய சம்பாத்தியம். அதன் பின் பிரபல அழகுக்கலை நிறுவனங்களில் என் திறமையைப் பார்த்து அழைக்க கணவர் அவர் பெற்றோரிடம் சொல்லி சம்மதம் பெற்றார். அவர்கள் சொன்னது ஒன்றே ஒன்றுதான். எங்கு சென்றாலும் கணவருடன் சென்று திரும்ப வேண்டும் என்பதே. அது என் பாதுகாப்பு கருதியே என்பதால் அதற்கு சம்மதித்து மெஹந்தி போட சென்றேன். அதில் வந்த வருமானமும் அப்போது தேவையாக இருந்ததும் நான் வீட்டைவிட்டு வெளியே வர ஒரு காரணம்.

        அதன் பின் சொந்தமாக அழகு நிலையம் ஆரம்பித்தோம். ஒரே வருடத்தில் அதிலிருந்து வெளியே வர  வேண்டிய சூழல்... நன்றாகச் சம்பாதிக்கலாம் என்னும் எண்ணத்தில் தோல்வி... அது தந்த ஏமாற்றத்தை  ஏற்றுக்கொள்ள முடியாமல் நான் மன உளைச்சலுக்கு ஆளானேன். என்னை நம்பிய குடும்பத்திற்கு இப்படி செய்துவிட்டேனே, என்ற ஆற்றாமையில் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் வேறு எந்த சிந்தனையும் இன்றி சாப்பிடுவது, தூங்குவது பையனைப் பார்த்துக்கொள்வது என என் பொழுதுகளை கழித்தேன்.

கணவர் ஆறுதல் தந்ததால் ஓரளவு சமாதானம் ஆனேன். அப்போதுதான் இணையதளம் பலருக்கும் அறிமுகமான தருணம்... பேஷன் நகைகளை ஆன்லைன் மூலம் விற்பது குறித்து அறிந்தேன். பத்து வருடங்கள் முன் அத்துறையில் அதிகம் பேர் இல்லை என்பதால் துணிந்து இறங்கினேன். ‘வானதி பேஷன் ஜூவல்லர்ஸ்’ என்று முகநூலில் ஒரு பக்கத்தைத் தொடங்கினேன். அக்கம் பக்கம் சொந்தக்காரர்கள் மட்டும் வாங்குவார்கள் என நினைத்தேன். ஆனால், பல ஊர்களில் இருந்தும் கேட்க ஆரம்பித்தார்கள்.

      டிப்ரசனில் இருந்து வெளியே வர, சோஷியல் மீடியாதான் உதவியது எனலாம். வெளிநாடு வாழ் பெண்கள் விரும்பிக் கேட்டதால் இமிடேஷன் நகை களுடன் புடைவைகளையும் விற்கத் துவங்கினேன்.

      2017ல் முகநூலில் எனக்கு கிடைத்த பாலோயர்ஸ் எண்ணிக்கை இரண்டு லட்சத்திற்கும் மேல். இது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய  வெற்றி. ஏனெனில் முதலீடாக ஒரு ரூபாய் செலவில்லாமல் பிசினஸ் செய்து லாபம் பார்ப்பது எவ்வளவு பெரிய விஷயம். ஆனால் நடந்தது...!”

     நிறுத்தியவர் பெருமூச்சுடன் தொடர்ந்தார்...

     “அப்போது நான் ஏழு மாதம் கர்ப்பிணியாக இருந்தேன். இரவு பகலாக ஆன்லைனில் இருந்த என் பக்கம் ஹேக் ஆகி முடக்கப்பட்டது. அது எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது... அத்தனை ஆயிரம் பின்தொடர்பவர்களை மீண்டும் பெறுவது சாத்தியமே இல்லை எனும் வேதனை... மீண்டும் புதிய பக்கத்தைத் தொடங்குங்கள்... எங்கள் ஆதரவு உங்களுக்கு என்றும் உண்டு என்று நண்பர்களின் மெசேஜ்கள். அதில் புத்துணர்வுடன் மீண்டும் எனது பக்கத்தைத் தொடங்கி, இப்போதும் இயங்கி வருகிறது. ஆனால், அப்போது போட்டி அதிகம் என்பதால் 3000 பாலோயர்ஸ் தாண்டுவதே பெரும்பாடாக உள்ளது.

ஆன்லைன் ஆர்டரின் பேரில் ஒரு விழாவுக்குத் தேவையான அனைத்தையும் அவர்கள் இடத்துக்கு அனுப்புகிறேன். இந்த ஆர்டர்கள் வெளிநாட்டில் இருந்தே அதிகம் வருகின்றன. பாஸ்ட் டெலிவரியில் ஒரே வாரத்தில் பொருள்களை அனுப்பி வைப்போம். நன்றாக சென்று கொண்டிருந்ததில் முடக்கம் வந்தது.”

      நிறுத்தினார் வானதி... எத்தனை முறை வீழ்ந்தாலும் எழுந்து நிற்கும் பீனிக்ஸ் போல நம் கண்களுக்குத் தெரிந்தவர், மீண்டும் முகத்தில் உறுதி பொங்க தொடர்ந்தார்...

 “கொரோனா காலத்தில் நாங்கள் எடுத்த தவறான முடிவு எங்களுக்கு நல்ல பாடத்தைக் கற்றுத் தந்தது. ஆத்தூரில் கடையை மூடிவிட்டு சேலத்திற்கு குடி வந்தோம்  என் ஆன்லைன் பிசினசஸும் கொரியர் இல்லாததால் முடக்கம் ஆனது. ஜுவல்லரி  கடையையும் இங்கு தொடங்க முடியவில்லை... வருமானத்தை அப்படியே முதலீட்டில் போட்டதால் கடன் பிரச்னை வேறு.  அடுத்த நாள் எப்படி என்று புரியாத ஒரு சூழல். அப்போதுதான் நானும் அந்தத் தவறு செய்யத் துணிந்தேன். இந்த உலகத்தில் நான் வாழத் தகுதியற்றவள் எனும் கழிவிரக்கம் தற்கொலை எண்ணத்தைத் தந்தது..

       அன்று இரவும் வழக்கம்போல் முகநூலை நோண்டியவளின் கண்களில் பட்டது அந்த வீடியோ... “இன்று நீ செய்யும் தற்கொலையினால் இந்தக்  கஷ்டத்தை விட அதிகமாக அனுபவிக்க நேரிடும். இன்னும் கொஞ்ச நாள்தான்... இவ்வளவு தூரம் போராடி வந்துவிட்டாய். இதைக் கடந்தால் உனக்கான உயரம் காத்திருக்கு...” நான் அதிகம் பாபாவை நம்புவேன். என் மனம் வெகுவாக காயப்பட்டு தவறான முடிவுடன் இருந்த அந்த நேரத்தில் அந்த வீடியோவை கண்களில் பட வைத்தது பாபாதான் எனும் நம்பிக்கையுடன் அடுத்து ஏதோ ஒன்று காத்திருக்கு என்று தெளிந்தேன்.

       என் தோழி சங்கீதா இட்லி மாவு அரைத்து விற்பனை செய்து வருகிறார். அவர்தான் நீ இட்லிப்பொடி விற்பனை செய்யலாமே? என்ற ஐடியா தந்தார். முதலில் 50 கிராம் 25 ரூபாய்க்குத் தந்தோம். முதல் இரண்டு நாட்கள் யாரும் வாங்கவில்லை. மூன்றாவது நாளில் இருந்து அவரிடம் இட்லிப்பொடி கேட்டு வருபவர்களே அதிகம். எனக்கு நம்பிக்கை வந்தது கருவில் இருந்தே மிளகாத் தூள், மல்லித்தூள் மணத்தை நுகர்ந்து வளர்ந்தவள் நான். அதுவே எனக்கு வாழ்வு தந்தது. என்னால் எத்தனை மசாலாப் பொடிகள் செய்ய முடியும் என்று அலசி 15 மசாலாத் தூள்களில் தொடங்கி இன்று 30 பொடிகளுக்கும் மேல் தயாரிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது எங்கள் நிறுவனம். இதற்கும் பெரும்பாலும் உதவியது உதவிக்கொண்டிருப்பது சோஷியல் மீடியாவின் விளம்பரம்தான். இன்று நூறு கிலோ அளவுக்கு மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம்.

பத்தாவதில் பெயில் ஆனது தொடங்கி, ஒவ்வொரு முறை சறுக்கும்போதும் தற்கொலை எண்ணம் என்னைத் தீண்டாமல் இல்லை. ஆனால், ஒவ்வொரு முறையும் அந்த எண்ணமே மறைந்து, தன்னம்பிக்கை தலைத்தூக்கி நின்றதும் நிகழாமல் இல்லை. ஏதேனும்  ஒரு நொடி நேரத்தில் நான் சோர்ந்து தற்கொலை செய்திருந்தால் இந்த பிஸினஸ் இன்று இருந்திருக்காது. தற்கொலை தவறானது என்று பேசி விழிப்புணர்வு தர நானும் இருந்திருக்க மாட்டேன். போராட்டமில்லாத வெற்றி எங்கும் இல்லை என்பதற்கு சாட்சி நானே” சிரித்தபடி பேசுகிறார் வானதி.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com