
தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறவதற்கு இரண்டு விஷயங்கள் முக்கியம். முதலில், நன்றாகத் தயார் செய்துகொள்வது. இரண்டாவது, நன்றாகத் தேர்வு எழுதுவது.
ராஜ் பாப்னா அவர்கள் 'மைண்ட் பவர் ஸ்டடி டெக்னிக்ஸ்' அதாவது, மனதிற்கு சக்தி அளிக்கும் படிக்கும் யுக்திகள் என்ற ஒரு பிரபலமானப் புத்தகம் எழுதியுள்ளார். அதில் எவ்வாறு படிப்பது, எவ்வாறு நினைவு கூர்வது, எவ்வாறு தேர்வுக்கு தயாராகுவது, எவ்வாறு தேர்வு எழுதுவது என்று பல்வேறு யுக்திகளைப் பகிர்ந்துக்கொள்கிறார்.
அந்தப் புத்தகத்திலிருந்து, எவ்வாறு தேர்வு நன்றாக எழுதுவது என்பதைக் குறித்த பத்து விஷயங்களைப் பார்க்கலாம்.
1. தேர்வுக்கான அட்டவணையை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும்; சில சமயங்கள் தேர்வுகள் மாறி மாறி வைப்பார்கள். தேர்வு என்று ஆரம்பமாகிறது, எந்தத் தேர்வுக்கு இடையே விடுமுறை உள்ளது. எந்தத் தேர்வு உடனுக்குடன் நடைபெறுகிறது என்றெல்லாம், அறிந்துக் கொள்ளும்போது, தேர்வுக்குப் படித்து, தயார் செய்துக்கொள்வது எளிதாகும். நான் படித்தப் பள்ளியில், ஒரு முறை அறிவியல் தேர்வு முதலிலும், பின்னர் கணிதமும் தேர்வு வைத்தார்கள். ஒரு மாணவன் கணிதத் தேர்வு என்று நினைத்து வந்தப் பின்னரே, அன்று அறிவியல் தேர்வு என்று தெரிந்தது. பள்ளிக்கு வந்து, ஒரு மணி நேரத்தில் தன்னால் முயன்ற அளவு படித்து, தேர்வு எழுதினான்.
2. தேர்வுக்கு முதல் நாள் இரவு நன்றாகத் தூங்க வேண்டும். தேர்வுக்கு முதல் நாள் இரவு வெகுநேரம் முழித்து படித்தால், தேர்வின்போது, சோர்வாக உணரலாம். அதன் காரணமாக, மாணவர்களால் சரியான முறையில் தேர்வினை எழுத முடியாது. மேலும், வினாக்களைத் தவறாகப் படிக்க நேரலாம். சோர்வின் காரணமாக, சரியான விடை எழுதுவது கடினமாகலாம்.
3. தேர்வுக்கு முன்பு சரியான அளவில் உணவு சாப்பிட வேண்டும்; தேர்வுக்கு முன்பு உணவு சாப்பிடாவிட்டால், பசி உணர்வுடன் தேர்வு எழுதினால், சரியானப் பங்களிப்பை அளிக்க முடியாது. மேலும், தேர்வு எழுது வதற்கான புத்துணர்ச்சி, துடிப்பு, போதிய சக்தி இல்லாமல், சோர்வுடன் எழுத நேரிடும். அளவுக்கு அதிகமாக உணவு சாப்பிட்டால், தேர்வின் போது, உடல் செரிமானத்தின் காரணமாக, சோர்வு ஏற்படலாம். எனவே, போதிய அளவு மட்டும் உணவு உண்ண வேண்டும். அளவு முறை முக்கியம். மேலும், தேர்வு காலத்தில், வெளியே உணவருந்துவதைத் தவிர்க்க வேண்டும். வெளியே உண்ணும் உணவில், கலப்படம் இருந்தால், வயிற்றுக் கோளாறுகள் ஏற்படலாம்.
4. தேர்வுக்குப் பல பேனாக்கள், பல பென்சில்கள், நுழைவுச் சீட்டு போன்றவற்றைச் சரியாக எடுத்து வைத்திருக்க வேண்டும்; திடீரென்று ஒரு பேனா எழுதாவிட்டால், மற்றொரு பேனாவினைப் பயன்படுத்த முடியும். மேலும், இரண்டு நிற மசிகளில் பேனாக்களை வைத்திருந்து, கேள்விக்கு ஒரு நிறம், பதிலுக்கு ஒரு நிறம் என்று பிரித்து எழுத, எழுத, வினாத்தாளினைத் திருத்துபவருக்கு, படிக்கும்போதே உற்சாகம் பிறக்கும். முடிந்த அளவு மசி பேனாவினைப் பயன்படுத்துவது நலம். அதன் மூலம், எழுதும்போது, அதிக அழுத்தம் கொடுத்து எழுதத் தேவையில்லை. கையெழுத்தும் அழகாக மிளிரும்.
5. தேர்வுக்கு உடை சரியாக அணிந்து, தேர்வுக்கு முன்கூட்டியே சென்று அமைதியாக இருக்க வேண்டும். எளிமையான, பருத்தி ஆடைகள், உடலுக்குக் கச்சிதமாக பொருந்தி, சௌகரியமாக உணர வேண்டும். அப்போது, தேர்வு எழுதுவது எளிதாக இருக்கும். மேலும், முன்கூட்டியே தேர்வு மையத்திற்கு சென்று, தேர்வு ஆரம்பிப்பதற்கு முன்பு, சிறிது நேரம் அமைதியாக இருப்பது நல்லது. தேர்வுக்குச் சென்றவுடன், வினாக்களைப் படிக்கவும், அதற்கான விடைகளை நினைவு கூரவும் இது உதவும்.
6. தேர்வில் எந்த ஒரு கேள்விக்கும் விடை எழுதிய பின்பு, ஒரு சில விநாடிகள் சரியாக எழுதியுள்ளோமா என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும் போது, நாம் செய்துள்ள சிறிய தவறுகள் தெரிய வரும். குறிப்பாக, கணிதத் தேர்வுகளில் இந்தப் பழக்கம், தவறாக கணக்குப் போடுவதைத் தவிர்க்க உதவும். தவறாக எழுதியிருக்கும் பட்சத்தில், உடனே திருத்த வாய்ப்பு கிட்டும். சரியாக எழுதியிருந்தால், தேர்வில் நாம் எவ்வாறு எழுதியுள்ளோம் என்ற சுயமதிப்பீடு செய்வது எளிதாக இருக்கும்.
7. எளிமையான கேள்விகளுக்கு முதலில் பதிலளிக்க வேண்டும்; இது, எளிமையான கேள்விகளுக்கு முதலில் பதிலளிப்பது, தன்னம்பிக்கையைக் கூட்டும். மேலும், நேர விரயத்தைத் தவிர்க்கும். இவ்வாறு எழுதும்போது, கடினமானக் கேள்விகளுக்கு யோசித்து விடை அளிப்பதற்கு நேரம் அதிகமாக கிட்டும். மேலும், விடைத்தாளினைத் திருத்தும் ஆசிரியருக்கும், மாணவரைக் குறித்த நல்ல அபிப்ராயம் மேம்படும்.
8. தேர்வு நேரம் முழுமையையும் பயன்படுத்த வேண்டும்; தேர்வு எளிமையாக இருந்து தேர்வு முடித்தாலும், மிகவும் கடினமாக இருந்து தேர்வு எழுதுவது கடினமாக இருந்தாலும், கடைசி வரை தேர்வு நேரத்தைப் பயன்படுத்த வேண்டும். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற இது உதவும். தெரிந்தவரைக்கும் எழுதுவது, விடைத்தாளினைத் திருத்தும் ஆசிரியருக்கு மாணவன் முயற்சி குறித்த நல்ல அபிப்ராயம் ஏற்பட இது உதவும்.
9. விடைகளை அடையாளக் குறி பட்டியலில் (bulletted list) முடிந்த அளவிற்கு எழுதுங்கள். விடைகளை அங்கங்கு இவ்வாறு அடையாளக் குறி பட்டியலில் எழுதும்போது, விடைகள் புரிந்துக்கொள்வது எளிதாகிறது. மாணவனின் தெளிந்த அறிவு குறித்து, விடைத்தாள் திருத்தும் ஆசிரியர் அறிய முடிகிறது. பின்னர் விடைகளை விரித்து எழுதுவது எளிதாகிறது. தலைப்புகளை வரிசைப் படுத்தி பட்டியலிட்டு, பின்னர், ஒவ்வொரு தலைப்பையும், விவரிக்கும்போது, விடைகளைப் புரிந்துக்கொள்வது எளிதாகிறது. பத்திகளாக எழுத வேண்டி இருந்தால், சிறிய சிறிய பத்திகளாக எழுதுங்கள். விடைகளைத் திருத்தும் ஆசிரியருக்கு விடைகளைத் திருத்துவது எளிதாக இருக்கும்.
10. கையெழுத்து நன்றாக இருந்தால், உங்களது வரைபடங்கள் நன்றாக இருந்தால், விடைத்தாளினைத் திருத்துவது எளிதாக இருக்கும். அடித்து அடித்து எழுதாமல், சீராக எழுதும்போது, மாணவர்கள் மீதான நம்பிக்கை விடைத்தாளினைத் திருத்தும் ஆசிரியருக்குக் கூடுகிறது. போதிய அளவு இடம் விட்டு, எழுத்துகள் ஓரளவிற்கு பெரியதாக, மணி மணியாக இருக்கும்போது, பார்ப்பதற்குக் கண்களுக்கு எளிதாகவும், விடைத்தாள் மிகவும் சுத்தமாகவும் இருக்கும்.
முடிந்தால் இந்தப் புத்தகம் படியுங்கள். மாணவர் களுக்கு மட்டுமல்ல , எல்லோருக்கும் பயன்படும் புத்தகம்.