
-எம். ஏ. நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி
வாழைப்பழ அப்பம்
தேவையானவை: கனிந்த வாழைப்பழம் - 2, மைதாமாவு, கோதுமைமாவு - தலா அரை கப், அரிசிமாவு - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், வெல்லம் -அரை கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், துண்டுகளாக்கிய முந்திரி - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: வெல்லத்தை ஒரு கப் தண்ணீரில் 10 நிமிடம் கொதிக்கவிட்டு வடிகட்டி வைத்துக் கொள்ளவும். ஆறியதும் அதில் மைதாமாவு, கோதுமைமாவு, அரிசிமாவு, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல், முந்திரி, கடைசியாக வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதில் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து வைத்துக் கொள்ளவும். பிறகு அப்பக்குழியில் எண்ணெய் விட்டு சிறு அப்பங்களாக செய்து எடுக்கவும். அப்பக்குழி இல்லாதவர்கள், கடாயில் எண்ணெய் ஊற்றி ஒவ்வொரு அப்பமாக செய்யலாம்.
வாழைப்பூ துக்கடா
தேவையானவை: நரம்பு நீக்கிய வாழைப்பூ - ஒரு கப், கடலைமாவு - அரை கப், அரிசிமாவு, சோளமாவு, - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிதளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சமையல்சோடா -ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாழைப்பூவை நீளமாக அப்படியே ஒரு அகன்ற பாத்திரத்தில் போடவும். அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கடலைமாவு, அரிசிமாவு, சோளமாவு, பெருங்காயம், உப்பு, சமையல் சோடா, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் எல்லாம் சேர்த்துப் பிசறி, கடைசியாக சிறிது நீர் தெளித்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் வாழைப்பூ கலவையை சேர்த்து உதிர் உதிராக பொரித்தெடுக்கவும். பார்ப்பதற்கு அழகாகவும் சாப்பிட சுவையாகவும் இருக்கும்.
வாழைப்பழ அல்வா
தேவையானவை: கனிந்த வாழைப்பழம் - 2, ரவை - அரை கப், நெய் - கால் கப், சர்க்கரை - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், முந்திரி துண்டுகள் - சிறிது.
செய்முறை: கடாயில் நெய் ஊற்றி ரவையை நன்றாக சிவக்க வறுத்துக் கொள்ளவும். கால் கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து, வறுத்த ரவையில் விட்டுக் கிளறவும். கெட்டியானதும் வாழைப்பழத்தை நன்றாக மசிந்து அதில் சேர்க்கவும். பிறகு சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து ஒட்டாமல் கெட்டியாக வந்ததும் இறக்கவும். நெய்யில் முந்திரியை வறுத்து, அதில் சேர்க்கவும். அசத்தலான சுவையில் இருக்கும் இந்த அல்வா.
வாழைத்தண்டு துவையல்
தேவையானவை: பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு ஒரு கப், உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, புளி - கொட்டைப்பாக்கு அளவு, பெருங் காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் போட்டு வறுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும். மறுபடியும் அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டு, வாழைத் தண்டை ஒரு நிமிடம் வதக்கிக் கொள்ளவும். வறுத்து வைத்துள்ள பருப்புக் கலவையைப் பொடித்து அதில் வாழைத்தண்டு, உப்பு, புளி சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். சுவையான துவையல் ரெடி!
குறிப்பு: தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். வாழைத்தண்டில் தண்ணீர் இருப்பதால் அரைப்பதற்கு நீர் அதிகம் தேவைப்படாது.
வாழைக்காய் கிரேவி
தேவையானவை: பனீர் சைஸில் துண்டுகளாக நறுக்கிய முற்றிய வாழைக்காய் - ஒரு கப், தக்காளி - 3, நறுக்கிய வெங்காயம் - அரை கப், புதினா, மல்லித்தழை - சிறிதளவு, பச்சைமிளகாய் - 2, மிளகாய்த்தூள், கரம்மசாலா தூள் - தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன், எலுமிச்சை சாறு, சர்க்கரை - தலா அரை டீஸ்பூன், தேங்காய்ப்பால் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு, இஞ்சி - சிறிது.
செய்முறை: கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் வாழைக்காயைப் பொரித்து எடுத்துக் கொள்ளவும். தக்காளி, வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய், மல்லித்தழை, புதினா இவற்றை லேசாக வதக்கி அரைத்துக் கொள்ளவும். வாழைக்காயை வறுத்து எடுத்த அதே எண்ணெயில் கடுகு, சீரகம் தாளித்து அரைத்த தக்காளி, வெங்காய விழுதை சேர்க்கவும். சற்று வதங்கியதும், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம்மசாலா தூள், உப்பு, சர்க்கரை எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக வதங்கியதும், வறுத்த வாழைக்காயை சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து கிரேவி பதத்தில் வந்ததும், தேங்காய்ப் பால் சேர்த்து இறக்கவும். கடைசியில் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.