
மாற்றங்கள் இயல்பானவை. அவற்றை ஏற்றுக்கொள்வது ஒரு கட்டத்தில் கட்டாயம் ஆகிவிடும். பெட்ரோல், டீசல் காரணமாக ஏற்படும் நிதிச்சுமையால் பல நாடுகள் பொருளாதாரத்தில் தள்ளாடிக்கொண்டிருக்கின்றன. (இந்தியாவும் கூட பெட்ரோலுக்காக பெருமளவில் செலவழிக்க வேண்டியிருக்கிறது). அந்த விதத்தில் மின்சாரத்தில் ஓடும் வாகனங்கள் ஒரு வரமாகவே எண்ணப்படுகின்றன. வருங்காலத்தில் எரிபொருள் என்ற கோணத்தில் பெட்ரோலின் பயன்பாடு மிகவும் சுருங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா அரசு 2035லிருந்து பெட்ரோலில் ஓடும் கார்களுக்குத் தடை என்றும் அதற்குப் பிறகு அத்தகைய கார்களை விற்பனை செய்ய முடியாது என்றும் முடிவெடுத்திருக்கிறது. அதற்குப் பிறகு அங்கு மின்வாகனங்கள்தான் ஓடும். 2035 என்பதைப் பல நாடுகள் இந்த விஷயத்தில் இலக்காகக் கொண்டிருக்கின்றன. அதற்குப் பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் விற்பனை முழுவதுமாக தடை செய்யப்படும் என்று ஆஸ்திரேலியாவின் முக்கிய மாநிலங்கள் அறிவித்து விட்டன.
நம் நாட்டில் மின் ஸ்கூட்டரை ஓட்ட பதினைந்து வயது நிரம்பியிருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இதை ஓட்ட ஓட்டுனர் உரிமம் தேவையில்லை. ஓட்டுவதற்கு வசதியானதும் பயன்படுத்த சுலபமானதாகவும் இது இருக்கிறது. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதில்லை. ஒலி மாசும் மிகக் குறைவாகவே இருக்கிறது. இதனால் காற்று மாசடைவது மிகமிகக் குறைவு. காற்று மாசடைதலால் உண்டாகக் கூடிய பலவித நுரையீரல் மற்றும் இதய நோய்கள் தவிர்க்கப்படுகின்றன. மின்சார ஸ்கூட்டரின் எரிபொருள் செலவு கூட போகப் போகக் குறைவுதான்.
எனினும் மின் வாகனங்கள் தடை என்பதெல்லாம் நடைமுறை சாத்தியமல்ல. அவற்றினால் ஏற்படும் நன்மைகள் அதிகமாக உள்ளன. இந்த நிலையில் மின்சார வாகன பேட்டரிகள் வெடிக்காமல் இருக்க என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகளை நாம் செய்து கொள்ளலாம் என்பதில் கவனம் செலுத்துவதுதான் புத்திசாலித்தனம்.
முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். மின்வாகனங்களில் உள்ள பேட்டரிகள் மட்டுமே வெடிக்க வாய்ப்புள்ளது என்று நினைக்கக்கூடாது. லித்தியம் என்ற வேதியல் பொருள் எந்த பேட்டரியில் இருந்தாலும், அது எந்த சாதனத்தில் பயன்படுத்தப்பட்டாலும், அது வெடிக்க வாய்ப்பு உள்ளதுதான். அப்படிப் பார்த்தால் லேப்டாப், செல்போன் ஆகியவற்றில் கூட லித்தியம் அடங்கிய பேட்டரிகள் உள்ளன (அதனால்தான் பெட்ரோல் பங்குகளில் செல்போனை பயன்படுத்தக் கூடாது என்ற அறிவிப்பு).
விலை குறைவாக இருக்கிறது என்று போலியான சார்ஜர்களைப் பயன்படுத்துவதைத் தவிருங்கள். பேட்டரியை சார்ஜ் செய்ய ஒரிஜினலான ப்ராண்ட் பேட்டரி களையே பயன்படுத்துங்கள். தங்கள் நிறுவனத்தின் பெயர் கெடக்கூடாது என்பதாலும் பாதுகாப்பு குறித்த மேலாண்மை அந்த நிறுவனங்களில் அதிகம் இருக்க வாய்ப்பு உண்டு என்பதாலும் அவை தயாரிக்கும் பேட்டரிகள் மேலும் பாதுகாப்பானவையாக இருக்க வாய்ப்பு உண்டு.
பொதுவாக மின்சார ஸ்கூட்டர் பயன்படுத்திய உடனேயே பேட்டரியை சார்ஜ் செய்ய வேண்டாம். சூடு அடங்கியபிறகு அதன் பேட்டரியை சார்ஜ் செய்யுங்கள். சுமார் ஒரு மணி நேர இடைவெளி இருப்பது நல்லது.
பழுதடைந்து இருந்தாலும் உடனே டீலரிடம் காட்டி சரி செய்து கொள்ளுங்கள்.
மிக அதிகமாக வெப்பம் இருக்கும் இடத்திலும் சூரிய ஒளி நேரிடையாகத் தொடர்ந்து படக்கூடிய இடங்களிலும் மின்வாகனங்களை நிறுத்தி வைப்பதை தவிர்த்து விடுங்கள். மின்வாகனங்களை வீட்டில் விட்டுவிட்டு வெளியூர் செல்பவர்கள் இதில் மேலும் கவனம் செலுத்த வேண்டும்.
வேகமாக சார்ஜ் செய்யும் வசதி என்பது சில வகை உண்டு. ஆனால் பேட்டரியில் மிக மிகக் குறைவான சார்ஜ் மட்டுமே இருக்கும் போது அதை வேகமாக சார்ஜ் செய்யும் வசதியை பயன்படுத்தி சார்ஜ் செய்வதை தவிர்த்து விடுவது நல்லது. அப்படிச் செய்வது பேட்டரிக்கு அதிக அழுத்தம் அளித்து அது தீப்பற்றிக் கொள்வதை எளிதாக்குகிறது.
வாகனத்தின் அருகே எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள் இருக்கக்கூடாது.
சார்ஜ் செய்யாதபோது பேட்டரியை மின் இணைப்பிலிருந்து நீக்கி விடுங்கள். அதாவது ப்ளக்கைத் தொடர்பிலிருந்து துண்டித்து விடுங்கள்.