
- வி.ரத்தினா, ஹைதராபாத்
சில ஆண்டுகளுக்கு முன், இந்தியாவின் மிக அழகான மலைவாசஸ்தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிற நைனிடாலுக்கு நாங்கள் கோடை விடுமுறையில் சுற்றுலாப் பயணமாகச் சென்றோம். மிகவும் அற்புதமான அனுபவமாக அது அமைந்தது.
உத்ரகண்ட் மாநிலத்தில் உள்ள நைனிடால் கடல் மட்டத்திலிருந்து சுமார் 7000 அடி உயரத்தில், இமய மலையின் சரிவில் அமைந்துள்ள மலைவாசஸ்தலமாகும்.. அழகான அமைதியான ஏரிகள். மூன்று பக்கங்களும் மலைகளால் சூழப்பட்டு, பசுமையான ரம்யமான இயற்கை காட்சிகள், சுத்தமான காற்று, மற்றும் குளிர்ந்த கால நிலை... இவை சுற்றுலாப் பயணிகளை இங்கு கவர்ந்து இழுக்கின்றன.
நாங்கள் டெல்லியிலிருந்து கிளம்பி அன்று மாலை நைனிடால் சென்றடைந்தோம். காரில் 8 மணி நேரப் பயணம். அடுத்த நாள் காலை உணவுக்குப் பின் ரோப்வே கேபிள் காரில் ஸ்நோ பாய்ன்ட் வியூ பார்க்கச் சென்றோம். நைனிடாலின் முழு இயற்கை அழகையும் உயரத் திலிருந்து பார்த்தது அற்புதமாக இருந்தது. குளிரில் நடுங்கியவாறு பனி மூடிய மலைகளைப் பரவசத்துடன் பார்த்து ரசித்தோம். பனிப் பொழிவைப் பார்த்தபோது, ரோஜா படப் பாடலின் ‘புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது’ என்ற வரிகள்தான் என் நினைவுக்கு வந்தது...
நைனா தேவி கோயில்
இது நைனிடால் ஏரியின் வடக்குக் கரையில் அமைந்துள்ளது. நாங்கள் சென்ற சமயம் மழை பெய்து கொண்டிருந்தது. ஆலயத்தினுள் சென்று தேவியை தரிசித்தோம். நைன் என்றால் கண்அதற்கேற்ப கருணை பொங்கும் விழிகளால் அன்னை நம்மைப் பார்த்து ஆசிர்வதிக்கிறாள். அன்னை நைனா தேவியின் ஆசீர்வாதம் பெற தொலைதூர இடங்களிலிருந்து பக்தர்கள் இங்கு வருகிறார்கள் கோயிலுக்கு அருகில் பல கடைகள் உள்ளன.
நைனிடால் ஏரி
நைனிடால் ஏரியில் படகு சவாரி செய்த அற்புதமான அனுபவத்தை நாங்கள் பெற்றோம். இது மிகவும் சுத்தமான மற்றும் மிகவும் அழகான ஏரி. சுற்றிலும் மலைகளால் சூழப்பட்ட ஏரியைச் சுற்றியுள்ள சுற்றுப் புறங்களின் அழகான மற்றும் கண்ணுக்கினியக் காட்சிகளைக் கண்டுகளித்து அனுபவித்தோம்.
ஹனுமான் கர்ஹி கோயில்
கடல் மட்டத்திலிருந்து 6,400 அடி உயரத்தில் அமைந்துள்ளது ஹனுமான் கர்ஹி கோயில். உள் சன்னதியில் ஹனுமான் தனது மார்பைத் திறந்து, ராமர் மற்றும் சீதா தேவியின் உருவங்களைக் காட்டும் ஒரு சிலை உள்ளது. இங்கு மேகங்கள் நம்மைத் தழுவியவாறு செல்வது சிலிர்க்க வைக்கும் அனுபவமாகும். இங்கிருந்து சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை ப் பார்ப்பது கண்கொள்ளாக்காட்சி.
அடுத்து, கடல் மட்டத்திலிருந்து சுமார் 7000 அடி உயரத்தில் அமைந்துள்ள நைனிடால் மிருகக் காட்சி சாலைக்கு நாங்கள் சென்றது திரில்லிங்கான அனுபவம். இங்கு உள்ளே நாம் வெகு தூரம் மேலே ஏறிப்போய் விலங்குகளைப் பார்க்க வேண்டும். பாதை சரியாக இல்லாததால் நடக்க மூடியவில்லை. நான் மிகவும் கஷ்டப்பட்டு ஏறினேன். ஆனால், விலங்குகள் வெளியே வராததால் பார்க்க முடியவில்லை.
பீம்தால், சத்தால், நவுகுசியாதால் ஏரிகள்
இந்த ஏரிகளைப் பார்க்க ஒரு முழு நாள் தேவை. அதிகாலை சீக்கிரமே கிளம்பி ஒன்றன் பின் ஒன்றாக அழகான, மிகவும் சுத்தமான இந்த ஏரிகளை நாங்கள் பார்த்து மகிழ்ந்தோம். ஏரிகளைச் சுற்றிலும் காணப்படும் பசுமையான செடிகளும், பல்வேறு வகையான, மரங்களும் நமக்குப் புத்துணர்வைத் தருகின்றன. ஆனால், அங்கு வீசிய குளிர்காற்று ஸ்வெட்டர் அணிந்தும் என்னை நடுங்க வைத்தது.
கடைசியாக சுற்றுச் சூழல் குகைப் பூங்காவிற்கு சென்றோம். இங்குள்ள இயற்கை குகைகள் மெய் சிலிர்க்க வைக்கின்றன.
அழகும் எழிலும் மிக்க அருமையான நைனிடால் பயணம் எனக்கு மன அமைதியையும் உற்சாகத்தையும் ஒரு சேர தந்தது.