
சிறுகதை- கமலா நாகராஜன்
ஓவியம்: தமிழ்
தூக்கம் கண்ணைச் சுழற்றியது ராகவனுக்கு. ‘தூங்காதே, எழுந்தென்னைப் பார்’ என்று சொன்னாள் அவள்.
கண் விழித்துப் பார்த்தான். அரைகுறையானத் தூக்கம்.
‘அழகென்னும் அங்கயர்க்கண்ணி
நிலவு போன்ற முகத்தைக் காட்டி,
கனவில் வருவது போல் வந்து நின்றாள்.
மார்பு சேரத் தழுவ,
ஆசை கொண்டு எழுந்தான்.’
கல்லூரியில் பி.காம். படிக்கும் ராகவனுக்கு இன்னும் ஒரு வாரத்தில் பரீட்சை தொடங்கவிருக்கிறது.
காலை நான்கு மணியிலிருந்து படித்து படித்து, இப்பொழுது ஒன்பது மணிக்கு உடல் சோர்ந்து கண் இமைகள் திறக்கவே மறுத்தன.
உள்ளே அம்மா அழைக்கும் குரல் கேட்டது. “ராகவா தட்டில் இட்லி வைத்திருக்கிறேன். வந்து சாப்பிடு.”
“இதோ வந்து விட்டேன்மா.”
கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்து நின்றான். அவன் உட்கார்ந்திருந்த ஜன்னல் அருகில் நிழல் தட்டியது. ஜன்னல் விளிம்பில் ஒரு துண்டு மைசூர் பாக்கு. கூடவே ஒரு சிறு துண்டு காகிதம். ஆவலுடன் அவன் அதை எடுத்துத் தன் பாக்கெட்டிற்குள் வைத்துக்கொண்டான்.
உன்னையன்றி எனக்கு யாருளர்?
முல்லைப் பொன்ற முறுவல் காட்டி,
இதை ஏற்றுக் கொள்வாய்.
தஞ்சமென்று உன்னை அடைய காத்திருக்கிறேன்.
உன் பவித்ரா.
கடிதத்தைப் படித்து, புத்தகத்திற்குள் வைத்து மூடிவிட்டான்.
மறுபடியும் அம்மா அழைக்கும் குரல் கேட்டது.
“ஏண்டா பாண்ட் பாக்கெட்டிலெல்லாம் எண்ணையா இருக்கு?” அக்கா மகாதான் கவனித்துக் கேட்டாள்.
“இல்லே வந்து... இட்லி மிளகாய்ப்பொடியை பாண்ட் பாக்கெட்டிலே வைத்துக் கொண்டேன்.”
அசடு வழிந்தது அவன் முகத்தில்.
அவசரமாக மைசூர் பாக்குத் துண்டை வாயில் போட்டுக்கொண்டான்.
மைசூர் பாக்கு தேனினும் இனியதாக இருப்பதாக அவன் உணர்ந்தான். இட்லிகளை ஒரே வாயாக சாப்பிட்டு மறுபடியும் வந்து படிக்க உட்கார்ந்து கொண்டான் ராகவன்.
அந்தக் கடிதத்தை மறுபடியும் படிக்க ஆவல் கொண்டான். மனம் ஒரு நிலையில் இல்லாது தவித்தது.
‘காலையும் மாலையும் எந்த நேரமும் அவள்
நினைவின்றி வேறில்லை, என் செய்வேன் என் மனமே'
நினைத்து நினைத்து உவகை அடைந்தான் ராகவன்.
அவன் தன்பொறுப்பை உணர்ந்தவன்தான். எல்லா நினைவுகளையும் மூட்டைக் கட்டி வைத்துவிட்டு மறுபடியும் படிக்க உட்கார்ந்தான். மீண்டும் அவள் நினைவு.
‘பிள்ளைப் பிராயத்திலேயே அவள் மேல்
மோகம் கொண்டு மயங்கி விட்டேன் என் செய்வென்?’
தாமரைப் பூவிற்கு கை கால் முளைத்தது போன்ற உடலழகு. பிறைச் சந்திரன் போன்ற நெற்றி. முல்லைப் பூக்களைக் கொட்டினது போன்ற வரிசைப் பற்கள். சவுக்குத் தோப்பிற்கு நடுவில் கோணல் மாணல் இல்லாத பாதை போல நேர் வகிடு. கொடி போன்ற உடல். அவள் நினைவிலேயே ஆழ்ந்துபோனான். ஜன்னலில் எட்டிப் பார்த்தான். அவள்தான் போய்க்கொண்டிருந்தாள்.
‘கமலமேவும் திருவெ, நின்மேல்
காதலாகி நின்றேன்,
பித்தனாகிப் போய் கண்களை இறுக மூடிக்கொண்டான். தன்னை அறியாமல் ஒரு தூக்கம் போட்டு, மூன்று மணிக்கு எழுந்து, முகம் கழுவி, படிக்க உட்கார்ந்தான்.
நண்பன் குமரன் வந்து அழைக்கும் குரல் கேட்டது.
தலையை வாரி அவனுடன் வெளியெ செல்லப் புறப்பட்டான் ராகவன்.
வெடுக்கென்று உரசினாற்பொல் தன்னைக் கடந்து யாரோ செல்வதைக் கவனித்து பதற்றத்துடன் சற்றே ஒதுங்கி நின்றான்.
பவித்ரா! ‘தேர் நகர்வதுபோல்’ நடந்து நீண்ட பின்னல் அசைய அங்கொரு வீதி முனையில் நின்றாள்.
திரும்பிப் பார்த்து வேக வேகமாக முன்னால் சென்றாள்.
மதுரையில் திருப்பரங்குன்றம் சன்னதித் தெருவிலேதான் அவன் வீடு. இரண்டு வீடு தள்ளிதான் பவித்ரா வீடு. பவித்ரா இவனைக் கடந்து போவதைக் கவனித்தான் ராகவன். இரண்டு தெரு தள்ளி, ஒரு சிவன் கோயில். அங்கேதான் பவித்ரா செல்வாள். குமரனிடம் பேச்சுக் கொடுத்து, நண்பர்கள் இருவரும் கோயிலுக்குள் சென்றனர் குமரன் எல்லாம் அறிந்தவன்தான்.
தஷிணாமூர்த்தி சன்னிதி அருகில் அவள் நிற்பதைக் கண்டான் ராகவன்.
‘பவி, எனக்காகத்தான் காத்திருக்கிறாயா?
எல்லையற்ற சுவையே, என்னை - நீ
என்றும் வாழ வைப்பாயா?’
அவள் கறுத்த இமைகள் கீழே சரிந்து மறுபடியும் உற்றுப் பார்த்து தன்னைக் கேட்பது போல் இருந்தது ராகவனுக்கு...
‘மெத்த மையல் கொண்டு விட்டேன்
என் செய்வேன் என் கண்ணே?’
ஆரத்தழுவி அணைக்க ஆவல் கொண்ட தன் கைகளை கட்டிப்போட்டு அவள் அருகில் சென்று நின்றான்.
‘சொன்னபடிக்கு நடந்திடுவாயா?
தஞ்சமென்று வந்தேன் - உன்னை
சரணடைந்தேன் இன்றே.
என்றும் என்னை அணைத்திடுவாயா
உன் திருக்கைகளால் என்னை?’
அவள் கேட்பது போல், அவள் சிவந்த உதடுகள் துடிப்பது போல் உணர்ந்தான் ராகவன்.
“நான் வரட்டுமா? நேரமாயிற்று.”
எத்தனை கோடி இடர் வந்து சூழினும் எண்ணத்தில் தெளிவுடன் இருப்பதாக அர்த்த பாவனையுடன் அவள் கையை இறுகப் பற்றி ஆறுதல் கூறி விடையளித்தான் ராகவன்.
நிமிர்ந்த நன்னடை வீதியில் நடந்து செல்லக் கண்டு தன் நினைவிற்கு வந்தான் ராகவன். பொறுப்புணர்ந்தவனாக அன்று இரவு முழுவதும் படிக்க வேண்டும் என்று முடிவெடுத்தான். நாட்கள் நகர்ந்தன. பரீட்சை முடிந்தது. ரிசல்டும் வந்தது. கல்லூரியிலேயே முதலாவது மாணவனாக தேர்ச்சி அடைந்து குடும்பமே மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தது.
ஜன்னல் அருகில் உட்கார்ந்திருந்தான் ராகவன். நிழல் தட்டியது. ஒரு சாக்லெட். ஒரு பேப்பர்த் துண்டு.
‘முடிவில்லா கீர்த்தி பெற்றாய்,
என்னிடம் மாறுதலில்லா
அன்பு கொண்டிருப்பாயா?
உன்னையே விரும்புவேன்
இத்தனை நாட்போல.’
கண்களில் கண்ணீர் மறைத்தது ராகவனுக்கு. கடிதத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்.
‘நின்னை மார்பு சேரத் தழுவி
நிகரில்லாது வாழ்வேன்.’
“ராகவா”
அம்மா அழைக்கும் குரல் கேட்டது. கூடத்தில் எட்டிப் பார்த்தான்.
தஞ்சாவூரிலிருந்து மாமா மகாதேவன்.
“என்னப்பா ராகவா” என்று அவனை கட்டி அணைத்துக்கொண்டார்.
“காலேஜிலேயே முதலாவதாக தேர்ச்சி பெற்றிருக்கிறாயா? இந்தா, சாப்பிடு.” வாயில் சாக்லெட்டைத் திணித்தார்.
ராகவனுக்கு தாய் மாமன் மீது மரியாதை கலந்த பயம் உண்டு. தஞ்சாவூரில் திருக்காட்டுப்பள்ளிதான் மாமா ஊர். நிலம், நீச்சு, முன்கட்டு, பின்கட்டு என்று கிழக்கு வீதியிலிருந்து மேற்கு வீதி வரையிலும் கடல் போல வீடு.
குமரன் வந்தான். கோயிலுக்குச் செல்ல புறப்பட்டனர். தஷிணாமூர்த்தி சன்னிதி அருகே அவன் பார்வை சென்றது. அவளை அங்கே காணவில்லை. ஏமாற்றத்துடன் வீடு திரும்பினான்.
இரவு ஜன்னல் அருகில் படுத்தவனுக்கு தூக்கம் வரவில்லை. வானத்திலே மேகக்கூட்டங்களுக்கு நடுவே சந்திரன் மறையக் கண்டான்.
‘மங்களமாகுமடி’
வருத்தம் இல்லையடி’
என்று உள்மனம் கூறியது. உறக்கம் இமைகளைத் தழுவியது.
காலை ஆறு மணிக்குத்தான் தூக்கம் கலைந்தது. பல் தேய்க்க முற்றத்தில் வந்து நின்றான்.
‘ராகவா, உன் பான்ட் பாக்கெட்டில் இந்த காகிதம் இருந்தது.’ என்று அக்கா கோமதி கொண்டு வந்து கொடுத்தாள். அரைகுறையாக நனைந்த வெள்ளைத்தாளைப் பாக்கெட்டில் வைத்துக்கொண்டான். தாளின் ஓரமாக
‘என் கண்களில் நீ மட்டுமே நிறைந்திருக்கிறாய்.’
உன் ‘பவி’ என்று தெரிந்தது.
மாமா மகாதேவன் குரல் சத்தமாகக் கேட்டது.
(அடுத்த இதழில் முடியும்)