
சென்ற இதழ் தொடர்ச்சி...
-கமலா நாகராஜன்
ஓவியம்: தமிழ்
மாமா மகாதேவன் குரல் சத்தமாகக் கேட்டது.
‘இத பாரு செல்லம்மா, நம்ப மைதிலி ஸ்கூல் படிப்பு முடிச்சுட்டா. வீட்டு வேலையிலே கெட்டிக்காரி. பாட்டு பாடினா இன்னிக்கெல்லாம் கேட்டுண்டிருக்கலாம். அழகு சொல்லவே வேண்டாம். அவளைப் பார்த்தால் நிலவைப் பார்ப்பது போல இருக்கும். கண்ணை இமை காப்பது போல அவளைப் பொத்து பொத்து பாதுகாத்து வளர்த்திருக்கேன். நம்ப ராகவனுக்கு மணமுடித்து வைத்தால் நம்ப சொத்து மூணாவது ஆள்கிட்டே போகாம பார்த்துக்கலாம்.
‘என்ன சொல்றே நீ?
இதைக் கெட்ட செல்லம்மாளுக்கு காதிலே தேன் பாய்வது போல இருந்தது. நெஞ்சு நிறைந்து. பதில் பேச முடியாம கண்ணிலே குளம் போல கண்ணீர் நிரம்பியது.
‘கரும்பு தின்னக் கூலியா அண்ணா, தேனினும் இனிய வார்த்தை அல்லவா சொல்லி விட்டாய்.’
உட்கார முடியாமல் எழுந்து நின்று விட்டாள் செல்லம்மாள்.
‘கட்டிக் கொடுக்க இரண்டு பெண்கள் கழுத்தை நீட்ட தயாராக இருக்கிறார்களே?’ பஞ்சாபகேசன் சத்தமாகக் கூறவே, மகாதேவன், ‘அதற்கென்ன கவலை. நம்ப மூத்த பையன் சேது நிலம் நீச்செல்லாம் பார்த்துக் கொண்டு பொறுப்போடு இருக்கான். மூக்கும் முழியுமா இருக்கிற அவனை நம்ப பெரிய பெண் மகாலட்சுமி கழுத்திலே மூன்று முடிச்சு போடு என்று சொல்லிட்டா போச்சு. மறு பேச்சு பேச மாட்டான். இளைய பெண் கோமதிக்கு கடைக்குட்டி கோபாலை கட்டி வைச்சுடலாம். பள்ளிக் கூடத்திலே வாத்தியாரா இருக்கான்.’
மூன்று பேரும் பேசியதைக் மேட்ட ராகவனுக்கு யாரோ சம்மட்டியால் மண்டையைத் தாக்கியது போல் இருந்தது.
மேலும் அவர்கள் பேசிக் கொண்டார்கள். ‘ஒரே பந்தலிலே கல்யாணத்தை வைச்சுக்காம, அடுத்து அடுத்து மூன்று நாள் சேர்ந்தாப் போல பிரமாதமா கல்யாணத்தை நடத்திடலாம். குழந்தைகள் வெளியிலே எங்கேயும் வாக்கப் படாம நம்ப கூடவே இருப்பா.’
‘மகாதேவா, இரு வரேன். வெல்லக்கட்டி கொண்டு வரேன். வாயைத் திற.
ராகவனுக்கு மூச்சே நின்று போனது.
வயது முதிர்ந்து விடினும் மக்கள் மனதை புரிந்து கொள்ளாமல் தாயாதிகளோடு தனியிடத்தேப் பேசி காதலர்களைப் பிரிக்கப் போகும் மாமாவை ஏறெடுத்தும் பாராமல் படுக்கையின் மீது வந்து குப்புறப்படுத்து குமுறி குமுறி அழுதான் ராகவன்.
‘பித்தனைப் பொல் வாழ்வதிலே
பெருமை உண்டோ? கண்ணெ என் பவி
நான் என் செய்வேன்?’
எப்பொழுது கண் திறந்தானோ. அம்மா கோயிலிலிருந்து திரும்பி வந்து விட்டாள் என்று தெரிந்து வாரி சுருட்டிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான்.
மறுபடியும் ஜன்னலில் கடிதத்துண்டு. இருள் சூழும் நேரம். மங்கலாகத் தெரிந்த அந்தக் கடிதத்தை ஆவலுடன் படித்தான்.
பொய்யாய் பழங்கதையாய் கனவாய்
மெல்லப் போனதுவே.’
பவி, பவி, என்று அலறியது அவன் மனம்.
அந்த சிறு துண்டு கடிதத்தை, துடிக்கும் நெஞ்சத்தோடு படித்தான்.
‘வாழ்க வளமுடன்’
பவி’
இரவு மணி பத்தாகி விட்டது. அம்மா சமையல் அறையை மூடி வேலை முடித்து விட்டாள் என்று தெரிந்தது.
‘அம்மா,
‘என்னடா ராகவா, இன்னும் நீ தூங்கவில்லையா?’
‘அம்மா, உன்னிடம் ஒரு முக்கியமான சமாசாரமாய் பேசணும்.’
‘என்னடா வேணும்?
‘எனக்கு இந்தக் கல்யாணம் வேண்டாம் அம்மா. மாமா பெண்ணை நான் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன்.’
நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டியது போல் இருந்தது செல்லம்மாளுக்கு.
‘என்னடா இப்படிச் சொல்லிட்டே?’
அவன் கைகளை இறுகப் பற்றினாள் செல்லம்மாள்.
‘இதை உன் கால்களாக நினைத்துக் கெஞ்சுகிறேன். ராகவா. இந்தக் கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லி விடாதே. உன் அக்காள்களுக்கு இதை விட நல்ல இடம் கிடைக்குமா சொல்லு? நீ வேண்டாம் என்றால் அவர்களுக்கும் மாமா இந்த வரனை முடிக்க மறுத்து விடுவார். தானாக வந்த லட்சுமிதேவியை எட்டி உதைத்தது போல் ஆகும்.’
கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருக்கெடுத்தது செல்லம்மாளுக்கு. மனதை கல்லாக்கிக் கொண்டு படுக்கையில் வந்து வீழ்ந்தான் ராகவன்.
வெளியில் மழை பெய்துக் கொண்டிருந்தது.
‘இன்பமனைத்தையும் இழந்து உழன்று
நின்னோடு மனதோடு வாழ்ந்த வாழ்க்கை
தேய்ந்து மடிந்தது.’
மனம் புண்ணாக எப்பொழுது உறங்கினானோ?
அப்பாவின் குரல் உச்சஸ்தாயியில் தொனிக்கக் கேட்டு எழுந்து உட்கார்ந்தான்.
கல்யாணத்திற்கு வேணும்கிற எல்லா ஏற்பாடுகளும் துரிதகதியில் நடந்து கொண்டிருந்தது. அக்காள் கோமதியும், மகாலட்சுமியும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள்.
கல்யாணம் தஞ்சாவூரில் ஒட்டு மொத்தமாக எல்லோரும் தஞ்சாவூருக்கு பயணமானார்கள். மனதிற்குள் விம்மி விம்மி அழுதான் ராகவன். அவன் அழுவதை யார்தான் கேட்பார்கள். கேட்பவரும் இல்லாமல் அனாதையாகிப் போனான்.
குமரன்தான் அவனை ‘வீணாக மனதைக் குழப்பிக் கொள்ளாதே. நடக்கிறபடி நடக்கட்டும்.’ என்று தைரியப் படுத்தினான்.
ராகவன் மணக்கப் போகிற மாமா பெண் மைதிலி கண்களுக்கு லட்சணமாகத்தான் இருந்தாள். பால் வடியும் முகம். வெள்ளை மனது என்று முகத்திலேயே தெரிந்தது. இவனைக் கண்டவுடன் புன்னகை பூத்து உள்ளே மறைந்து விட்டாள். காலத்தின் விதி. எல்லாவற்றுக்கும் தயாராகி விட்டான் ராகவன்.
மூன்று நாட்கள் விமரிசையாக கல்யாணத்தை நடத்தினார்கள்.
‘பல நினைத்து வருந்தி என்ன பயன்?
பண்டு போனதை எண்ணி என்னாவது?
மைதிலியை ஏற்றுக் கொண்டது அவன் மனம்.
அந்த ஊர் பாங்கிலேயே வேலை கிடைத்து மேல் அதிகாரி ஆனான். சுற்றமும், நட்பும் மெச்சும்படி வாழ்ந்தான். நாட்கள் ஓடி மறைந்தன.
இன்னும் ஒரிரு நாட்களில் தன் சொந்த ஊர் மதுரைக்கே மாற்றலாகி கிளம்பிக் கொண்டிருக்கிறான் ராகவன்.
ஆர்டர் வந்ததிலிருந்தே அவன் மனம் ஒரு நிலையில் இல்லை. மனம் குழம்பியது. அந்த ஊரிலேயேதான் அவள் இருப்பாளா? அவளுக்கு கல்யாணம் ஆகியிருக்குமா? என்னை அவளுக்கு ஞாபகம் இருக்குமா? மனம் புண்ணாகிப் போனான் ராகவன்.
இத்தனை நாட்களும் பித்தனைப் போல் வாழ்ந்தான். அதில் என்ன பெருமை இருக்கிறது?
காரில் பயணம் செய்து கொண்டிருந்தான். ‘பொய்யாய் பழங்கதையாய் கனவாய் மெல்ல போனதுவே’ என்று நினைத்து ஊர் வந்து விட்டதை உணர்ந்தான்.
சூடாகக் காபி குடித்து குளித்து தூய ஆடை அணிந்து அவள் இருப்பிடம் நோக்கி சென்றான். அவள் குளிர்ந்த முகம் அடிக்கடி நினைவிற்கு வந்தது. அந்த வீட்டை அடைந்தான். ஆனால் அங்கு அவள் வீட்டிற்கு பதிலாக மாடி வீடு கட்டப்பட்டிருந்தது. அவளைப் பற்றி விசாரித்தான்.
மதுரையிலிருந்து சுமார் ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் அவனியாபுரம் என்ற ஊரில் மணமாகிச் சென்று விட்டாள் என்பதை அறிந்து பொறுமை இல்லாதவனாக புறப்பட்டு விட்டான் அவளைக் காண.
அந்த ஊரை நெருங்கியதும், பெயரைக் கூறியதுமே அடையாளம் சொல்லி விட்டனர் அங்கிருப்பவர்கள். அந்த ஊரில் உள்ள பள்ளிக்கூடம், மருத்துவமனை, சாலைகள், தெருக்கள் எல்லாவற்றிலும் இவர்கள் பெயரையே காண முடிந்தது. பவித்ரா செல்லதுரை என்று பெயர் போடப்பட்டிருந்தது.
வீட்டில் வேலை செய்பவரிடம் தன் பெயரைக் குறிப்பிட்டு தான் வந்ததை அறிவித்தான். ஐந்து நிமிடத்தில் ஓடோடியும் வந்தாள் பவித்ரா.
‘சீரும் சிறப்புமாய் செல்வமுமாய்
கண்டோர் வியக்கத்தக்கவளாய்
அன்றலர்ந்த ரோஜாப்பூவாய்.’
வந்து நின்றாள் பவித்ரா.
ராகவன் தன் நினைவிற்கு வந்தான்.
‘எப்படி இருக்கிறாய்?’
‘நன்றாக இருக்கிறேன். நீ எப்படி இருக்கிறாய்?’
‘உன் கணவர்?’
‘இதோ அழைத்துக்கொண்டு வருகிறேன்.’
உள்ளே சென்றாள். சுற்றும் முற்றும் பார்த்தான். நீண்ட அகன்ற வீடு. தேக்குமரக் கட்டில்கள், நாற்காலிகள், பெரிய பெரிய சுவாமி படங்கள். சற்று நேரத்தில் ஒரு பெரிய உட்காரும் நாற்காலியில் சுமார் ஐம்பது வயதிருக்கும் ஒருத்தரை உட்கார வைத்து அழைத்துக் கொண்டு வந்தாள் பவித்ரா.
‘வணக்கம்’ என்றார் அவர்.
வணங்கி நின்றான் ராகவன்.
‘திருவாளர் செல்லதுரை. நான் பவித்ரா செல்லதுரை’ என்றாள் அவள். வீடும், ஆளும் அம்புமாய் மகாராணியாக காணப்பட்டாள் அவள்.
‘நிமிர்ந்த நன்னடை
நேர் கொண்ட பார்வை
அவலமின்றி, கவலையின்றி
வாழ்வதைக் கண்டங்கே
மனம் வாழ்த்தி நின்றது.’