மாமியார் கொழுப்பு

சிறுகதை
மாமியார் கொழுப்பு
Published on

-ஹேமலதா சுகுமாரன்

ஓவியம்: சுதர்ஸன்

ரீட்சை ரிசல்ட்க்குக் காத்திருக்கும் மாணவர் போல லாப் ரிப்போர்ட் எப்போது வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். வந்தது…  என் கணவருக்கு சுகர்  அதிகமாகவும் எனக்கு கொலஸ்ட்ராலும்...

அப்பா ஸ்வீட் பர்ஸன்.  அம்மாவுக்கு கொழுப்பு ஜாஸ்திதான்.... என் பிள்ளை காதருகில் ஜோக் அடித்தாள் மருமகள். காதில் விழாதது போல பாசாங்கு செய்தேன். உண்மையில் ப்ரேமா ரொம்ப நல்ல பெண். எங்களிடம் நிஜமான ப்ரியம் கொண்டவள். பெரும்பாலான என்னுடையத் தோழிகள், அவர்களின் மருமகள்கள் எல்லா வேலைகளையும் அவர்கள் தலைகளில் கட்டிவிடுவதாகவும், வயதான காலத்தில் ஓய்வின்றி உழைப்பதாகவும் புலம்புகிறார்கள். ஆனால், என் மகனுக்கு வாய்த்த தங்கமோ என்னை எதுவும் செய்யும்படி வைத்ததில்லை. குடும்பத்தைக்  கவனிப்பதற்காகவே  வீட்டிலிருந்தபடியே  கன்ஸல்டன்ட் ஆக பணி புரிகிறாள். காலை சுறுசுறுப்பாக  ஏழாவது படிக்கும் பெண்ணிற்கும், நாலாம் வகுப்பு  பையனுக்கும் டிபன் பாக்ஸ் ரெடி பண்ணி பள்ளிக்குத் தயார் செய்துவிடுவாள். என்னுடைய வேலை பேத்திக்கு தலைவாரி  பின்னி, சில சமயம் முரண்டு பிடிக்கும் பேரனுக்கு ஊட்டிவிடுவதுதான்.

கம்ப்யூட்டர் எதிரே நகராமல் அமர்ந்து, எனக்கு கால் இருக்கு, கையிருக்கு என்று சொல்லி, மாமியார் சமைப்பதோடு இல்லாமல் ரூம் சர்வீஸ் செய்துவரும் இந்நாளில், ப்ரேமாவோ ருசியாகச் சமைப்பதோடு எங்களுக்குப் பரிமாறக்கூட வருவாள். நான்தான், "நாங்கள் போட்டுக்கொண்டு சாப்பிடுகிறோம். நீ போய் உன் வேலையைப் பாரு" என்று சொல்லி அனுப்புவேன்.

ரிப்போர்ட்டைப் பார்த்த டாக்டர் முதலில் வெயிட் குறைக்க வேண்டும் என்றார்.  என்னென்ன சாப்பிடலாம், எதெது கூடாது என்று லிஸ்ட் தந்தார். ஒரு நாளில் மொத்தமே அரை ஸ்பூன் நெய்தான் சேர்க்கலாம் என்றதும் எனக்கு அழுகையே வந்து விட்டது. மோர்சாதத்திற்கு மட்டும்தான் நெய் விட்டுக் கொள்ள மாட்டேன். மற்றபடி நெய்யில்லா பண்டம் குப்பையிலே என்ற புதுமொழி என்னுடையது. ப்ரேமாவின் நெய் ரோஸ்ட்டைச் சாப்பிடாத வாழ்வு ஒரு வாழ்வா?

அடுத்த நாளிலிருந்து நான்ஸ்டிக் தவாவில் எண்ணைக்கூட படாத வறண்ட தோசை. கூடவே கொத்தமல்லி விதை தண்ணீர். "கோரியாண்டர் வாட்டர் ஈஸ் பெஸ்ட் ஃபார் கொலஸ்ட்ரால் கண்ட்ரோல்" தண்ணீர் குடித்த மாதிரியே இல்லை. வியாதி வந்தபின் வருந்தி என்ன பயன்.

ப்படியே உண்மையாகவே உப்பு சப்பில்லாமல் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்த போது, ஒருநாள் ப்ரேமா அவசரமாக வெளியே போக, ஒரு தெரு நாய் அவள் மேல் பாய,  தப்பிக்கத் திரும்பியதில், குறுக்காக நிறுத்தி வைத்த ஸ்கூட்டரில் மோதி கீழே விழுந்ததில் கால் எலும்பு முறிவு. நல்லவேளை பெரிய ஃப்ராக்சர் இல்லை. ஆனாலும் குறைந்த பட்சம் மூன்று மாதம் ப்ளாஸ்டர் தேவைப்படும். நடக்க ஆறுமாதமாவது ஆகும் என்று டாக்டர் சொல்லிவிட்டார்.

ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாற்றமாக இருந்தது. வேகவேகமாக வேலை செய்வது விட்டே போயிருந்ததே. விரைவில் நான் ப்ரேமா செய்வதையெல்லாம் செய்தேன். அவள் கூட  "அம்மா கஷ்டப்பட வேண்டாம். வேலைக்கு  ஆள் யாரையாவது ஏற்பாடு செய்யலாம்" என்றாள்.  ஆள் தேடி, கிடைத்து, அவளுக்குக் கூட இருந்து நம் விருப்பதிற்கு ஏற்ப செய்யச் சொல்லிக் கொடுத்துப் பழக்குவதற்குள் ஆறு மாதங்களே ஆகிவிடும், வேண்டாம் என்றேன். கொஞ்சம் கொஞ்சமாக உடம்பில் சுறுசுறுப்பு தொற்றிக்கொண்டது. குழந்தைகளுக்குப் பிடித்ததை ஆசையாகச் செய்தேன். ஓடி ஓடி செய்தேன். என்ன, ஃபேஸ்புக்கிலும், வாட்ஸ் ஆப்பிலும் செலவிட்ட நேரம் கணிசமாகக் குறைந்தது. எத்தனை க்ரூப்பில் நான் மெம்பர். தினம் எத்தனை வீடியோக்கள் பார்த்துக் கொண்டிருந்தேன். எத்தனை ஆர்வமாக கமெண்ட்  குடுத்தேன். இப்பொழுது அதற்கெல்லாம் நேரமில்லை.  ஒரு சில நெருங்கிய தோழிகளுடனான பரிமாற்றம் மட்டுமே இந்த ஆறு மாத காலத்தில்.

ப்ரியா கொஞ்சம் கொஞ்சமாக நடக்க ஆரம்பித்தாள். அப்போதுதான் என்னை  மூன்று மாதத்தில் மறுபடியும் டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று  டாக்டர் கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. ஆறு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டதே  என்று மீண்டும் பரிசோதனை செய்துகொண்டேன். ரிசல்ட் பார்த்து டாக்டருக்கு  ஒரே ஆச்சரியம். என்ன செய்தீர்கள்?  கொலஸ்ட்ரால் அளவு  நன்றாகக் குறைந்து இருக்கிறதே என்றார்.  வீட்டில் நடந்ததைச் சொன்னேன்.

இப்பொழுதெல்லாம் என் தோழிகள் ‘நான் நிறைய வேலை செய்கிறேன்’ என்று மருமகளைப் பற்றிப் புலம்பினால் நான் சொல்வது, "அவள் உங்கள் இதயத்திற்கு நல்லதுதான் செய்கிறாள். ஆகவே உங்கள் உள்ளத்தில் அவளுக்குக் கொஞ்சம்  இடம் கொடுங்கள்.”

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com