மழைக்கால போஸ்ட்கார்ட் கதைகள்:

மழைக்கால போஸ்ட்கார்ட் கதைகள்:
Published on

படங்கள்; பிள்ளை

ழைக்குக்கூட  பள்ளிக்கூடம்  பக்கம் ஒதுங்காத  மங்கனூா்  மகாலிங்கம், இன்றோடு  ஐந்தாவது  நாளாய்  மழை வெள்ள நிவாரண முகாமான  அவனது ஊா்ப்பள்ளியில்  அவன் மகன் படிக்கும் நாலாங் கிளாஸ்  வகுப்பறையில் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு,  நிவாரணம் கேட்டு ஒதுங்கியுள்ளான் அகதியாக...  குடும்பத்தாருடன்! வெள்ளம் வடியுமா?

- நா. புவனாநாகராஜன், செம்பனார்கோவில்.

----------------------------------------------------------

நம்பிக்கை

துரா அப்பார்ட்மெண்ட்ஸ் மைதானத்தில், மழைக்காக கூட்டு பிரார்த்தனை செய்ய எல்லோரும் ஒன்பது மணியிலிருந்தே ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். சரியாக, பத்து மணிக்கு செக்ரட்டரியின் சிறு உரைக்குப்பின், பிரார்த்தனை ஆரம்பிக்கும் சமயம், கூட்டத்தில், சிறு சலசலப்பு. மூன்றாவது மாடியில் சி பிளாக்கில் யாருமே வரலை எனக் கண்டுபிடித்ததே காரணம். செக்யூரிட்டியை அனுப்பினார்கள். அவரும் போய் விட்டு திரும்பி வந்து, வீடுகள் பூட்டியிருப்பதாகக் கூறி விட்டார். “என்னாச்சு...பிரார்த்தனையில் நம்பிக்கை இல்லாமல், தகவல் சொல்லாமல் எங்கேனும் போய் விட்டார்களோ...ச்சே… என்ன மனுஷங்கய்யா...” ஒருவர் அலுத்துக்கொண்டார்.
        செக்ரட்டரி, தன் மொபைலை ஆன் பண்ணி, T4ல் இருக்கும், முருகேசனை அழைத்து, “எங்கிருக்கிறீர்கள்?” வினவினார்.  "ஸாரி... சார்... உங்கள்ட்ட சொல்லாம வந்துட்டோம். பக்கத்துல உள்ள குளத்துல தூர் வாரிக் கிட்டு இருக்கோம். பிரார்த்தனை முடிஞ்சு, மழை பெய்யும்போது, குளம் நிரம்பி, நமக்கு பூமி நீர் லெவல் கூடிரும். லாரி தண்ணீர் வாங்க வேண்டாம் பாருங்க” என்றார்.

     பிரார்த்தனையை ஏற்றுக்கொண்ட வருண பகவானின் கருணையில் இரு தினங்களில் குளம் நிரம்பி, தளும்பியது. இதுதான் நம்பிக்கை என்பதோ...

- என். கோமதி, நெல்லை.

----------------------------------------------------------

வீட்டுப் பத்திரம்

ஶ்ரீதா், ரெயின்கோட் அணிந்தபடியே அவனது தகப்பனார் தங்கியிருந்த  முதியோர் இல்லம் நோக்கி முழங்கால் அளவு தேங்கியுள்ள மழைநீரில் நடந்தவாறு உள்ளே வந்தான்.                                     

மேனேஜா் வரவேற்றார். “வாங்க ஶ்ரீதா், அப்பாவை மழை வெள்ளத்திற்காக பத்திரமா அழைச்சிட்டு போக வந்தீங்களா?” என்றார். “அதெல்லாம் ஒண்ணுமில்ல சார்... அவர்போ்ல இருக்கற வீட்டுப்பத்திரம் மழை வெள்ளத்தில அடிச்சிட்டு போயிடுமோன்னு, அதை வாங்கிட்டு போக வந்தேன்” என்று பதில் வந்தது.

- ச.சிவசங்கரி சரவணன், செம்பனார்கோவில்.

---------------------------------------------------------- 

மழையும், ஒரு தம்ளர் காபியும்.

ன்னல் கம்பிகளுக்கு வெளியே வானுக்கும் மண்ணுக்கும் பாலம் அமைப்பதைப்போல மெல்லிய கம்பிகளாய் சீராக பெய்துகொண்டிருந்த மழையை ரசித்தவாறு துணிகளை மடித்துக்கொண்டிருந்தாள் மல்லிகா. சிறு வயதில் மழையில் நனைவது என்றால் கொள்ளை இஷ்டம் அவளுக்கு. அதற்காக அம்மாவிடம் திட்டு வாங்கி இருக்கிறாள் பலமுறை. மழையை வேடிக்கை பார்த்தபடி அம்மா தரும் காப்பியைத் துளித்துளியாய் ரசித்துத் பருகுவது எத்தனை இன்பம்? 

"இப்பக் கூட நல்ல திக்கான காபியைக் குடித்துக் கொண்டே இந்த மழையை வேடிக்கை பார்த்தா எப்படி இருக்கும்?’’ வாய் முணுமுணுத்தாலும், நிதர்சனம் சுட்டது.  இன்னும் எத்தனை வேலை பாக்கி இருக்கு? சமையலறைத் தொட்டியில் குவிந்து கிடக்கும் பாத்திரங்களைத் துலக்கி, இரவு சமையலுக்குச் சப்பாத்திக்கு மாவு பிசைந்து வைத்து, குருமாவிற்கு காய், வெங்காயம் வெட்டி வைக்க வேண்டும். தூங்கிக்கொண்டிருக்கும் யமுனா,  ஐந்து மணிக்கு எழுந்து வந்து காப்பி போட்டுக் கொடுத்த பின்புதானே குடிக்க முடியும்?

திடீரென காபியின் மணம் மூக்கைத் துளைத்தது. “இந்தா மல்லிகா…  இந்தக் காபியைக் குடிச்சுக்கிட்டே சித்த நேரம் மழையை வேடிக்கை பாரேன் நீ ஆசைப்பட்டபடி...’’ கையில் காப்பி தம்ளருடன் நின்றுகொண்டிருந்த யமுனாவைப் பார்த்ததும் திடுக்கிட்டாள். “என்ன மல்லி அப்படிப் பார்க்குற? உன்னை இந்த வீட்டுல வேலை செய்யற பொண்ணா நான் நினைச்சதேயில்லை. என் வீட்டில ஒருத்தியாத்தான் நினைக்கறேன்.’’ சூடான காப்பி தம்ளரை வாங்குகையில் மனம் குளிர்ந்துபோனது மல்லிகாவுக்கு.

- விஜிரவி, ஈரோடு

----------------------------------------------------------

ஆனந்தம்

சுபா,  தன் கல்லூரி விடுமுறையில் கிராமத்தில் வசிக்கும் பாட்டி வீட்டிற்கு வந்திருந்தாள்.  தினமும் தாத்தாவுடன் தோட்டத்திற்கு நடந்து செல்லும்போது, வழியில் புதிதாக நட்டு  வைத்திருந்த மரக்கன்றுகளைப் பார்த்தபடியே,

“போனதடவை நான் வந்தப்போ நெறைய பெரிய மரங்கள் இருந்துச்சே தாத்தா...?”

 “ஆமாம்மா...ரோடு போட எல்லா மரத்தையும் வெட்டிட்டாங்க. நாந்தா மர நாத்துக்களை வாங்கி நட்டு வச்சிருக்கேன். இரண்டு வருஷத்திலே கொஞ்சம் பெருசா வந்துரும்.”

“சூப்பர் தாத்தா... இந்த வயசுலேயும் பொது சேவை செய்யறீங்களே” என்ற பேத்தியைப் பார்த்துச் சிரித்தார்.

வீடு வந்ததும், லேசாக மழைத்துளி விழ ஆரம்பிக்க, தாத்தா ஓடிப்போய் மரத்தில் கட்டியிருந்த மாட்டை கொட்டகைக்கு அழைத்துச் செல்ல, பாட்டி, வாசலுக்கு குஞ்சுகளோடு வந்த கோழியை கூடையில் அடைக்க, வாசலில் படுத்திருந்த நாய் ஓடிப்போய் சாக்கின் மேல் ஓய்வெடுக்க என எல்லோரும் பரபரப்பாக இருப்பதை ரசித்தாள் சுபா.

இரவு முழுக்க மழை பெய்தது. அதிகாலையிலேயே, தாத்தா தோட்டத்திற்கு சென்றுவிட்டதால் அவரைப் பார்க்க சுபா சென்றபோது, மழையில் மண் சரிந்து கீழே விழுந்திருந்த செடிகளுக்கு, கவைக் குச்சிகளை
முட்டுக் கொடுத்துக்கொண்டிருந்தார் தாத்தா.

 “அருமை தாத்தா...” என்ற பேத்தியைப் பார்த்து, “பாரி முல்லைக்கு தேர் கொடுத்தாரு. நா கவைக் குச்சியைத் தானே தரேன் மா” என்றவரை பெருமையோடு பார்த்தாள் சுபா.

மழை, மண்வாசம், இயற்கை என அமைதியாக வாழ்வது ஆனந்தமே என எண்ணினாள்.

  - பானு பெரியதம்பி, சேலம்.

----------------------------------------------------------

 எமெர்ஜென்சிக்கு ஒரு !

(கதாபாத்திரங்கள்: ராதா – ரமேஷ்)

“என்னங்க! என்னங்க! என்னங்க!”

“கோர்ட்டுல கூப்பிடறமாதிரி, எதுக்கு மூணு வாட்டி என்னங்க...?”

“அது வந்துங்க!”

“வந்து! போயி! விசயத்தைச் சொல்லு! வெளில கொஞ்சம் அர்ஜென்ட் வேலை இருக்கு!”

“நீங்க கோபிக்கக் கூடாது!

“பீடிகை பலமா இருக்கு! தீபாவளிக்குத்தான் நீ கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்தாச்சே! இப்ப மறுபடியும் என்ன?”

“மழை சீசன் சீக்கிரம் ஆரம்பமாகப் போகுது!”

“ஆமா! வருசா வருசம் வரதுதானே! இந்த வருசம் என்ன புதுசா?”

“அதில்லைங்க! நம்ப வீடு!”

“நம்ப வீட்லதான் மழைக்கு வேண்டிய பாதுகாப்பு பண்ணியாச்சே! இந்த வருசம் நோ கவலை!”

“கவலை இல்லீங்க! க்ரெண்ட் ஃப்ளோர் வீடா இருக்கறதால, ஒரு எமர்ஜென்ஸிக்கு டிரெயினிங்க எடுத்துக்கிட்டா...!”

“எமர்ஜென்ஸியா? டிரெயினிங்கா! ஹா! ஹா! ஹா! நல்ல ஜோக். சுத்தி வளைச்சுப் பேசாம சொல்லித் தொலைங்க!”

“சத்தம் போடாதீங்க! BP ஏறப் போகுது!”

“ஏற்கெனவே ஏறித்தான் இருக்கு. இனிமே என்ன? சொல்லப் போறியா... இல்லியா?”

“நீங்க இப்படிக் கத்தறதைக் கேட்டதும் சொல்ல வந்தது மறந்து போன மாதிரி...! சொல்லிடறேன். நீங்க... மழை வரதுக்கு முன்னாடி, போட் ஓட்டக் கத்துக்கிட்டு, ஒரு போட்டைத் துடுப்போடு வாங்கிட்டு வந்தீட்டீங்கன்னா...!

என்னங்க! என்னங்க! என்னங்க!”

மூர்ச்சையானான் ரமேஷ்.

- ஆர். மீனலதா, மும்பை.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com