நீல நிற பூ ஜாடி.!

சிறுகதை
நீல நிற பூ ஜாடி.!

ஹேமலதா சுகுமாரன்

 ஓவியம்: தமிழ்

வராத்திரிக்குத்தான் எல்லோரும் பரண் ஏறி கொலுபொம்மை பெட்டிகளை இறக்குவார்கள். ஆனால், அன்று விடுமுறை நாள். காலையிலேயே வாசு பரண் ஏறுவதைப் பார்த்ததும் ‘பக்’ என்று இருந்தது பானுவிற்கு.  ஒற்றுமையான தம்பதிகள்தான்.  இருந்தாலும் சிறிது நாட்களாக ஒரு தகராறு ஓடிக்கொண்டிருக்கிறது. வீட்டில் இருக்கும் வேண்டாத சாமான்களை எல்லாம் தூக்கிப் போடவேண்டும் என்று வாசு சொல்லிக் கொண்டேயிருக்கிறான். பார்த்துப் பார்த்து சேகரித்ததை எல்லாம் விட மனசு வரவில்லை பானுவிற்கு.

இரண்டு வாரம் முன்பு வாசுவின் தீவிரத்தைக் கடை வழியில் பார்த்தாள் பானு.  ஒரு அழகான சின்ன பிரம்புக் கூடையையும், ஒரு நீலநிற  வாஸையும் பார்த்ததும், நின்ற பானு, விலை கேட்க முற்பட்டாள். " ஏற்கனவே வீடு நிறைய வேண்டாத சாமான்கள் கிடக்கு.   முதலில் அதையெல்லாம் தூக்கியெறியும் வழியைப் பார். புதிதாக எதுவும் வாங்க வேண்டாம்", என்று சற்று கடுமையாகவே வாசு கூறினான்.  இதை எதிர்பாராத பானு, "வாசு, இந்த ப்ளூ வாஸ் அழகா  இருக்கே..."  என்று ஜோக் அடிக்க முற்பட்டாள். ஆனால், பதிலே பேசாமல் வாசு விறு விறு என்று நடக்க ஆரம்பிக்கவே வாய்மூடி பின்னாடி சென்றாள்.

மீண்டும் போன வாரம், "இந்த வீகென்ட் மூணு நாள் சேர்ந்தார்போல் விடுமுறை வருகிறது. எங்காவது ட்ரிப் போகலாமா?” என்றதும், "முதலில் அட்டத்தில் இருப்பதையெல்லாம் கிளீன் பண்ணணும். அப்புறம்தான் ட்ரிப்," என்றான். என்னடா இது வேதாளம் இப்படிப் பிடிவாதமாக முருங்கை மரம் ஏறுகிறதே  - சரி விட்டுப் பிடிப்போம்  என்று  சும்மா இருந்துவிட்டாள்.

இப்போது என்னடாவென்றால் வேதாளம் பரண் மேலேயே ஏறிவிட்டது.  "சாப்பிட்டுவிட்டு பண்ணலாமே, புலாவ் பண்ணட்டுமா, பிஸிபேளாவா" என்று  ஒத்திப் போட பார்த்தாள்.  "எதுவானாலும் ஓகே. இல்லை ஆர்டர் பண்ணுவதானாலும் சரி" என்று ஏணிப்படிகளில் இருந்து ஒரு பெட்டியோடு  இறங்கியவாறே சொன்னான்.

பெட்டி முழுக்கப் புத்தகங்கள்.  அக்ஸ் அக்ஸ்  என்று தும்மிக்கொண்டே, "பழைய பேப்பர்காரனை வர சொல்லட்டுமா" என்று வாசு சொன்னதும் பகீரென்றது பானுவிற்கு.

"ஐயோ இதெல்லாம் ரொம்ப ரேர் புக்ஸ். சிலதெல்லாம் அவுட் ஆஃப் பிரிண்ட். கிடைக்கவே கிடைக்காது. "

"இத்தனை வருஷத்தில் எத்தனை முறை இந்தப் புத்தகத்தைப் பிரித்துப் படித்திருப்பாய்?"

"ஆச்சு, இதோ இந்த வருஷம் நான் விஆர்எஸ் வாங்கி விடலாம் என்றுதான் தீர்மானம் பண்ணி விட்டோமே. அப்புறம் பொழுதுபோவதற்குப் படிக்க வேண்டியதுதானே."

"ஏற்கனவே நெடியடிக்கிறது. பழுப்படைந்து தொட்டால் உடையும் போல வேற இருக்கிறது." 

"இதெல்லாம் எங்க அப்பாவோட கலெக்க்ஷன்.  ஒண்ணு பண்றேன். ரொம்ப முக்கியமானதை மட்டும்  ஸ்கேன் பண்ணி வச்சுக்கிறேன். அப்புறமா போட்டுக்கலாம்."

மீண்டும் மேலே ஏறி அடுத்த பெட்டியுடன் இறங்கி வந்தான். திறந்தால்  முழுவதும் கேசட்ஸ்.

"இதெல்லாம் இனிமேல் பயன் இல்லாதது. யாரும் வாங்கிக் கொள்ளக் கூட மாட்டார்கள். கொண்டு போய் குப்பை தொட்டில் போட வேண்டியதுதான்." "ஐயோ நான் தேடி தேடி ஆசை ஆசையா வாங்கின மாலி, எம் எஸ்..."

"இப்பதான் எல்லாமே யூட்யூப்ல இருக்கு .  கேட்கலாமே."

"அப்படி இல்ல… இதுல சிலது கிடைக்கிறதில்ல... இதோ இந்த மகாராஜபுரம் பாட்டு, வேற எங்கேயும் கிடைக்கலை.”

"சரி  ஒர்க் பண்ணாத டேப் ரெக்கார்டர வச்சுண்டு என்னத்த கேக்கறது?"

"என் பிரண்டு சொன்னா... அவ வீட்டுக்கிட்ட ஒரு கடையில பழைய டேப் ரெக்கார்டர் ரிப்பேர் பண்ணித் தராங்களாம். அது ஒரு சான்ஸ் ட்ரை பண்ணிப் பாக்குறேனே. சரியாச்சுன்னா ஓகே. இல்லைன்னா இதெல்லாம் தூக்கி போட்டு விடலாம்."

"உனக்கு ரெண்டு வாரம் டைம். அதுக்குள்ள சரியாச்சுனா சரி. இல்லாட்டி தூக்கிப் போட்டுவிடுவேன்."

அடுத்த பெட்டி- திறந்தால் வண்ண வண்ண எம்பிராய்டரி நூல்கள், டிசைன் புக். க்ரோஷா, நிட்டிங் ஊசி...

"ஹா... இதெல்லாம் இந்தப்  பெட்டியிலா இருக்கு? ரிட்டயர் ஆனதும் எம்பிராய்டரி போடணும்னு நினைச்சுண்டு இருந்தேன்." வாசுவை பேசவே விடவில்லை.

அடுத்ததாக மிகச் சிரமப்பட்டுத் தூக்க முடியாமல்  தூக்கி இறக்கினான். அதில் பித்தளை வெண்கல பாத்திரங்கள்.

"இதெல்லாம் இனிமேல் எதற்கு?"

"இப்ப எல்லாம் இந்த மாதிரி வெண்கல உருளி கிடைக்கிறதில்ல. சுமாரா இருக்கிறதே விலை ஐயாயிரம், ஆறாயிரம்..."

"உபயோகிக்காத பொருள்கள்... கிடைச்சா என்ன, கிடைக்காட்டா என்ன. என்ன  விலையா இருந்தாலும் என்ன."

"நன்னாயிருக்கே... உங்க அம்மா புழங்கின பாத்திரங்கள். அம்மா ஞாபகமா இதுதான் என்கிட்ட இருக்கு...."  வாசுவின் வாயை மூட வைத்த செண்டிமெண்ட் டச்.

"சரி. உங்களுக்கும் டயர்டாக இருக்கும்.  சாப்பிட்டுவிட்டு பாக்கிய பார்க்கலாம்"  என்று ஒரு இடைவெளி விட்டு விட்டாள்.

மீண்டும் மாலை பரண் ஏறும் படலம் தொடர்ந்தது.  அந்த நாளைய இரும்பு பெட்டி.   திருடனால் தூக்கிக்கொண்டு போக முடியாதபடி பெட்டி எடையே பல கிலோ.

ஆழம் தெரியாமல் காலைவிட்டது போல இருந்தது வாசுவிற்கு. இதற்கு மட்டும் பானுவையும் கை கொடுக்கச் சொல்லி மெதுவாக இறக்கித் திறந்து பார்த்தால் விதவிதமான விளக்குகள். அன்ன விளக்கு, ஆனை விளக்கு, பாவை விளக்கு, மயில் விளக்கு... வாசு பார்த்த பார்வையிலேயே அனல் அடித்தது.

"கார்த்திகைக்கு  வீடு முழுக்க அழகா ஏற்றலாம் என்று...."

"எத்தனை முறை ஏற்றி இருக்கிறாய்..? " வாக்கியம் முடிக்கவில்லை. வாசலில் ஆட்டோ சத்தம்.  வாசுவின் சித்திதான். இவர்களிடம் பிரியம் அதிகம். தனியாக இருப்பதால் அடிக்கடி வந்து இவர்களோடு இரண்டு நாட்கள் தங்கிவிட்டுப் போவாள். 

இருவரும், "வாங்கோ, சித்தி"  என்று வாசலுக்குப் போனார்கள். சித்தி கையில் நீல நிற பூ ஜாடி.  "வாசு! வர வழியில இதைப் பார்த்தேன். பானுவுக்குப் பிடிக்கும்னு ஆட்டோவை நிறுத்தி வாங்கிண்டு வந்தேன். எப்படி இருக்கு?" என்றாள்!

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com