
ஓவியம்; பிள்ளை
சரசு காலையிலேயே தனது அர்ச்சனையை தொடங்க ஆரம்பித்திருந்தாள். "ஏங்க! அந்த பணம் வருமா வராதா? எனக்கு ரெண்டுல ஒன்னு தெரிஞ்சாகணும் இன்னைக்கு. இதுக்கு மேல எனக்கு பொறுமை கிடையாது. அவ்ளோ தான் சொல்லிட்டேன்" என தனது குண்டு கண்களால் கணவனை மிரட்டினாள்.
"அவனை இன்னைக்கு நாலு வார்த்தையாவது நறுக்குன்னு கேட்டே ஆகணும்" ..என கோபமாக புறப்பட்டான் முருகேசன்.
"நல்லா கேளுங்க , போன தீபாவளிக்கு போட்டது. சீட்டு முடிஞ்சி ஒரு வருஷம் ஆகுது, இந்த தீபாவளியே வரப்போகுது. இன்னமும் பணத்தை தரலைன்னா என்ன அர்த்தம். சரியான ஏமாத்து பயலா இருப்பாரு போல உங்க ப்ரண்ட்" என ஒத்து ஊதினாள் .
சரசுவும் தான் எவ்வளவு நாள் சும்மாயிருப்பாள். சீட்டு பணத்தில் தீபாவளிக்கு மோதிரம் வாங்கி போட்டுக் கொள்ள திட்டமிட்டிருந்தாள். அதில் கல்லை தூக்கி போட்ட ஆத்திரம் அவளுக்கு.
முருகேசனின் நண்பன் தான் சுரேஷ். அவனிடம் தீபாவளி சீட்டு கட்டினால் அடுத்த தீபாவளிக்கு பணத்தை இருமடங்காக்கி தருவதாக சொல்லி ஊர் பூராவும் வசூலித்திருந்தான். மொத்த ஊர் முழுவதும் அவனிடம் சீட்டை கட்டியிருந்தது. இப்போது தினமும் அவன் வீட்டுக்கும், கடைக்குமாய் நடையாய் நடக்கிறார்கள். ஹூகும் பணம் வரும் திசை தெரியவில்லை. தீபாவளி முடிந்து ஒரு வருடமாகியும் யாருக்கும் பணம் வந்தபாடில்லை.
முருகேசன் வேகமாக வண்டியை கிளப்பி சுரேஷின் கடையை அடைந்தான், முருகேசனை பார்த்ததும் சங்கடமாக தலையை குனிந்து கொண்ட சுரேஷ்!..."மச்சி இந்த மாசம் எப்படியாவது கொடுத்துடறேன்டா"...என கெஞ்சினான்.
"நீ மாசமாசம் இதையே தானேடா சொல்ற?"
"கொஞ்சம் பொறுத்துக்கடா!...குடுத்த எடத்திலிருந்து பணம் வர்லை. இந்த மாசம் எப்படியாச்சும் தந்திடுறேன்"...என கெஞ்சினான்.
நண்பனாச்சே என மனதில் எட்டி பார்த்த துளி ஈரத்தையும் துடைத்து எறிந்தாள் சரசு. மனதுக்குள் வந்து மிரட்டிப் போனாள். "இதோ பார்றா..ஏதோ ப்ரண்டாச்சேன்னு பாக்குறேன். நீ இந்த மாசமும் தரலைன்னா அடுத்த மாசம் நான் போலீஸ்ல புகார் தந்துருவேன்"...என சுரேஷை மிரட்டி விட்டு கிளம்பினான்..
எதிரில் பால்ய நண்பன் சரவணன் வந்து கொண்டிருந்தான்.
"வெயில்ல எங்கடா இவ்வளவு தூரம்? " என்றான் சரவணன்
"அந்த சுரேஷை பார்த்துட்ட வரேன். ப்ராடு பயடா அவன்"...என கருவினான்.
ஏன்? என்ன பிரச்னை?
."நண்பனாச்சேன்னு சுரேஷ் கிட்ட சீட்டு கட்டினேன்டா. மாசம் ஆயிரம்ன்னு 12 மாசம் கட்டினா அடுத்த தீபாவளிக்கு இருபத்தி நாலாயிரம் ரூபா சொளையா தரேன்னான்..சீட்டு முடிஞ்சு ஒரு வருஷம் ஆகுது . அடுத்த தீபாவளியே வரப் போகுதுடா நையா பைசா வரலை . சரசு வேற என்னை பிடுங்கி தின்கிறா. அதான் அந்த சுரேஷை பார்த்து நாலு வார்த்தை "நறுக்" ன்னு கேட்டுட்டு போகலாம்னு வந்தேன் "...என கோபமாக கத்தினான்..
"பத்து ரூபா வட்டின்னாலும் உனக்கு இவ்வளவு பணம் தரமுடியாதே..நீ ஏன்டா இதையெல்லாம் நம்பி அவன்கிட்ட சீட்டு கட்டினே"...
" சீட்டு சேருவதற்கு முன் வெண்ணெயா பேசினான்டா...அதான் நம்பிட்டேன்"
"அவன் பேசினா உனக்கெங்க போச்சு அறிவு. அவ்வளவு பணத்தை எப்படி அவனால பெருக்க முடியும்னு கொஞ்சமாச்சும் யோசிச்சியா?"
" ப்ரண்டாச்சேன்னு... " வார்த்தைகளை இழுத்து... தயக்கத்துடன் தலை குனிந்து கொண்டான் முருகேசன்.
" ஆசை காட்டின அவன் குற்றவாளின்னா பேராசை பட்ட நீயும் குற்றவாளி தானேடா!...இப்ப யோசித்து என்ன ப்ரயோசனம். இனிமேலாவது அதிக வட்டிக்கோ, உழைக்காம வருகிற பணத்துக்கோ ஆசைப்படாதே"... என்ற சரவணனின் வார்த்தையில் சவுக்கடி பட்டவனாக நிமிர்ந்தான் முருகேசன்.
************************************
அந்த வீட்டின் புழக்கடைப் பக்கம் துணி துவைக்கும் கல் மீது சாய்ந்தபடி சிமெண்ட் தரையில் கால்களை நீட்டி அமர்ந்திருந்தாள் பணிப்பெண் அம்சா. அவள் கையில் இருந்த புதுப் புடவையை திருப்பித் திருப்பி பார்த்துக் கொண்டிருந்தாள். முகத்தில் அதிருப்தி. சற்று முன்தான் அந்த வீட்டின் எஜமான் ராம் அந்த புடவையை தீபாவளிக்குன்னு சொல்லி அவள் கையில் கொடுத்துச் சென்றிருந்தான். "எஜமானி அம்மா இப்படி சுமாரா ஒரு புடவையை நமக்கு வாங்கமாட்டாங்களே..." ன்னு அவள் மனம் புலம்பியது.
அந்த சமயம், எஜமானி வித்யா அந்தப் பக்கம் வந்தாள். அம்சா கையிலிருந்த புடவையைப் பார்த்து விட்டு, "அச்சச்சோ, இது நம்ம மாமியாருக்கு வாங்கினதாச்சே... இது எப்படி.."ன்னு யோசிச்சிக்கிட்டே வீட்டினுள் சென்றாள்.
அங்கே ராம் ஜவுளி பார்சலை பிரித்து, அதற்குள் இருந்த கவர்களை தனித்தனியா எடுத்து வைத்துக் கொண்டிருந்தான். வித்யாதான் பார்சலுக்குள் இருந்த ஒவ்வொரு கவரிலும் அதற்குரியவரின் பெயரை சின்னதா எழுதி வைத்திருந்தாள். அவளுக்குப் புரிந்துவிட்டது, 'அம்மா' ன்னு எழுதி இருந்த கவரை அம்சாவுக்கும் 'அம்சா'ன்னு
இருந்ததை அம்மாவுக்கும் ராம் தவறுதலாக கொடுத்துவிட்டான் என்பது.
"பரவாயில்ல, இந்த வருடம் மாமியாருக்கு நல்ல புடவை அணிந்துகொள்ளும் வாய்ப்பு அமைந்திருக்கு. அம்சாவுக்கு கூடக் கொஞ்சம் பணத்தைக் கொடுத்து சமாதானப்படுத்திக்
கொள்ளலாம். ஏதாவது பேசி சின்ன விஷயத்தை பெரிது படுத்த வேண்டாம்" என எண்ணியபடி பீரோவை நோக்கி நடந்தாள் வித்யா.
-ஜெயகாந்தி மகாதேவன், பாலவாக்கம்.