படைப்பாளிகளுடன் வாழ்வது போராட்டமா? கொண்டாட்டமா?

சுவாரசியமில்லாத சுவாரசியம்
படைப்பாளிகளுடன் வாழ்வது போராட்டமா? கொண்டாட்டமா?

பகுதி -2

பெ. மாடசாமி

ரங்கராஜன் – சுஜாதா

ழுத்தின் வாயிலாக பொருளைத் தேட வேண்டும் என்கிற நிர்பந்தம் இல்லாது, இயல்பாகக் கண்டதை, கேட்டதை, பார்த்ததை, படித்ததை, உணர்ந்ததை ரசனையோடு தமிழ் மக்களுக்கு தந்த ஒரு பேனாவிற்கு சொந்தக்காரர் ரங்கராஜன் என்ற சுஜாதா.

சூழ்நிலை எப்படி இருந்தாலும் எழுத்தாளன் ரசிகர் களுக்காக ஒதுக்குகிற நேரத்தைப்போல் பேனாவிற்கு அருகே அமர்ந்திருந்த இல்லத்தரசிக்கு ஒதுக்கிட முடிந்ததா? முடியவில்லையா? என்பதற்கான காரணங்கள் பல. எழுத்தின் மீது கொண்ட முழு ஈடுபாடு, காலம் கடந்த சுயசிந்தனை என்றே சொல்லலாம்.

நண்பனின் மகன் திருமணத்திற்கு வந்த நண்பனைப் பார்த்து,

“டேய் உனக்கு ஒரு பெண் இருக்காளே?”

“ஆமா, இப்பத்தான் படிப்பு முடிஞ்சது, வரன் பாக்கணும்...

“என்ன பாக்கப்போற... என்னோட ரெண்டாவது மகனுக்குக் கொடுத்துரு.

“கல்யாண பொண்ணு போட்டிருக்கிற மாதிரி என்னால வைரமெல்லாம் போட முடியாதே.

“டேய், வைரத்தையா கேட்டேன். பொண்ணத்தானே கேட்டேன்.

முடிந்தது கல்யாண பேச்சு, நடந்து முடிந்தது ரங்கராஜன் - சுஜாதா திருமணம். உலக அரங்கில் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு திருமண நிகழ்வு.

இருவருமே படித்தவர்கள், ஈகோ ஆரம்பமாவதற்கு அதிக வாய்ப்பு. “என் கணவர் எதையும் ஏற்றுக்கொள்ளும் எளிமையான, மென்மையான குணம் படைத்தவர் என்பது மட்டுமின்றி, இருவருமே வாழ்வில் வாக்குவாதத்திற்கு, அனுமதி மறுத்த காரணத்தினால்தான் வாழ்நாள் பயணத்தில் மன அழுத்தமின்றி வாழ முடிந்தது என்று கூறுகிறார் திருமதி. சுஜாதா.

சூழ்நிலை காரணத்தால் தன் மனைவியின் பெயரை புனைப்பெயராக வைத்ததின் மூலம், அவர் ஆணாதிக்கமில்லா ஆண்மகன் என்பதைக் காண முடிகிறது. அதே நேரத்தில் தன் பெயரை வைத்ததில் ரொம்ப சந்தோஷமாக இருந்தது என்று சொல்லும் திருமதி சுஜாதா, ‘அவருடைய அம்மா கண்ணம்மாவின் பெயரை வைத்திருந்தாலும்  வருத்தப்பட்டிருக்க மாட்டேன். அம்மா ரொம்ப முக்கியமில்லையா?’ என்று சொல்கிறபோது அங்கே  மாமியார் மருமகள் காணாமல் போய்விட்டார்கள்.

ரங்கராஜன் என்பதை முழுமையாக மறையச் செய்யும் அளவிற்கு மனைவியின் பெயரில் சிறந்து விளங்கிய ஒரு மாமனிதர் சுஜாதா.

தன் கணவர் வருவார், 10 நிமிடங்கள் நடைப்பயற்சி செய்வார். சாப்பிடுவார். தன்னைச் சுற்றியிருக்கிற புத்தகங்களைப் பார்ப்பார். குறித்து வைப்பார் என்று அவரின் செயல்பாட்டை மேலோட்டமாகச் சொல்கிறவராய் தெரிந்தாலும், அவர் சாதி வேறுபாடு பார்க்க மாட்டார் என்று கணவரின் ஆழ்மனதை அறிந்தவராக இருக்கிறார் திருமதி சுஜாதா.

‘உங்கள் கணவரின் வாழ்க்கையை படம் எடுப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்று கேட்டபோது, ‘அது அவ்வளவு சுவாரசியமாக  இருக்காது. எங்கள் வாழ்க்கையில் காதலே இல்லையே’ என்று யதார்த்தமாகக் கூறுகிறார்.

நேர்முகத் தேர்வுக்கு வந்த இளைஞனிடம் திறமை யிருந்தும் ஆங்கிலத்தில் பேசத் தெரியவில்லை என்றபோது, அதனால் என்ன ஆங்கிலம் கற்றுக் கொள்வான் என ஒரு ஏழை இளைஞனைத் தேர்ந்தெடுத்த தன் கணவரின் செயலையும் அறிந்து பாராட்டுகிற பண்பாளர் திருமதி சுஜாதா.

‘கணவரின் எழுத்துநடை நன்றாகத்தான் இருக்கும். ஆனால், அது இளைஞர்களுக்கானது. அந்த வயதை நான் தாண்டிவிட்டதால் அது என்னை ஈர்க்கவில்லை. நான் பெண் எழுத்தாளர்கள் புத்தகத்தையே விரும்பிப் படிப்பேன்’ என்று வெளிப்படையாகச் சொல்கிற அதே நேரத்தில் படிக்கிற ஆர்வமே கணவரால்தான் ஏற்பட்டது என்றும் அவர் தன்னுடைய புத்தகத்தை படிச்சியா, நன்றாய் இருந்ததா என்று ஒருபோதும் கேட்டதில்லை. தன்னுடைய விருப்பத்திற்கு இடையூராகவோ அவருடைய விருப்பத்தை திணிக்கிறவராகவோ அவர் இருந்ததே இல்லை என்றும் திருமதி சுஜாதா சொல்வது, இன்றைய இளைஞர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாய் வாழ்ந்து காட்டியுள்ளனர் இந்தத் தம்பதி என்பதை நிலைநிறுத்துகிறது.

அந்தக் காலத்து தம்பதியினர் என்பதால் தங்களுக்குள் அதிகமான உரையாடல் இல்லை என்றும் அதிகபட்சம் போனால் நான்கைந்து வரிகள்தான் பேசுவேன் என்றும் சொல்கிறார். பன்முகம் கொண்ட தன் கணவர் தன்னுடைய பிறந்த நாளுக்கு டிக்ஷனரியைப் பரிசாகக் கொடுத்தார் என்பதை நகைச்சுவையாகக் குறிப்பிடுகிறார்.

‘அவர் பிரபலமான எழுத்தாளர். கதைகளில் பெண்களை வர்ணிப்பார். ஆனால், மனைவிக்கு ஒரு புடைவை வாங்கிக் கொடுக்க அவருக்குத் தெரியாது’ என்று வெள்ளந்திரியாய் குறிப்பிடுகிறார்.

‘ஓட்டு போடும் இயந்திரத்தை உங்கள் கணவர் கண்டுபிடித்தது உங்களுக்குப் பெருமை இல்லையா?’ என்று கேட்டபோது, ‘அதைக் கண்டுபிடித்த குழுவிற்கு அவர் தலைவர். அது ஒரு குழுவின் கண்டுபிடிப்பு’ என்று தற்பெருமையின்றி பேசுகிற பதிலில் ரங்கராஜனிடம் காண முடிந்த எளிமையை சுஜாதாவிடமும் காண முடிகிறது.

அவருடைய கணவரின் பள்ளித் தோழனான அப்துல்கலாமை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்ட போது தன்னை அழைத்துச் சென்று அறிமுகம் செய்ய “ஒரு நாள் வீட்டிற்கு வருகிறேன். ரங்கராஜனைப் பற்றி நிறைய பேசணும்” என்று கலாம் அவர்கள் சொன்னது நடவாமல் போய்விட்டதாக திருமதி சுஜாதா சற்று ஏக்கத்துடன் குறிப்பிடுகிறார்.

கணவரோடு சினிமா தளம் சென்றவர், உலக அழகி ஐஸ்வர்யா ராயைப் பார்த்து, “நானும் சின்ன வயதில் உன்னைப் போல் அழகாகத்தான் இருந்தேனம்மா” என்று சொல்ல, “இப்பவும் அழகாகத்தான் இருக்கீங்க ஆண்டி” என அவர் பதில் சொல்லி இருக்கிறார். இதனை தன் கணவரிடம் சொல்ல அவர் சிரித்துக்கொண்டே சென்றார்  என்று திருமதி சுஜாதா சொல்வது இருவரிடமும் இருந்த உள்ளார்ந்த யதார்த்தத்தைக் காட்டுகிறது. கணவரைப் போன்றே நக்கல், நையாண்டி, ரசனை, குசும்பு ஆகிய வற்றையும் காண முடிகிறது.

உங்கள் கணவர் பிரபலமான எழுத்தாளர் என்ற பெருமையில்லையா என்று கேட்டபோது “எழுத்து வேறு, எழுத்தாளர் வேறு, எழுத்து என்பது கற்பனை உலகம். எழுத்தாளன் சாதாரண மனிதன். அவருக்கு எழுதுவது கைவந்த கலை அவ்வளவுதான்” என்று அவர் அளித்த பதிலில் முதிர்ந்த பக்குவத்தைக் காண முடிகிறது.

மனிஷா கொய்ராலாவிடம் அனுமதி பெற்று தன் வீட்டு நாயை நடிக்க வைத்ததோடு, இயக்குனர் சங்கர் கேட்ட மாத்திரத்தில் முன்பின் தெரியாத இளைஞன் சித்தார்த்தை கதாநாயகனாகப் போடுங்கள் என்று சொல்கிற அளவிற்கு ரங்கராஜன் அவரைச் சுதந்திரப் பெண்மணியாக வாழ அனுமதித்துள்ளார்.

“உழைப்பில் நேர்மையாக வாழலாம். உழைக்காததில் அடிமையாகத்தான் வாழ வேண்டும்” என்கிற கணவரின் அறம் பொருந்திய கூற்றை அப்படியே ஏற்றுக் கொண்டவர் திருமதி சுஜாதா.

எதையும் நேர்மறையாக எடுத்துக்கொள்கிற மனப்பக்குவம் கொண்ட ரங்கராஜன், மருத்துவ மனைக்குப் போகும்போது கூட ஒருவருக்கு அவர் கேட்டதை டிக்டேட் செய்துவிட்டுத்தான் சென்றார் என்றும் இதய ஆபரேஷனுக்கு பின்பும் “கவலைப்படாதே நான் உன்னைவிட்டுப் போகமாட்டேன்“ என்று தனக்கு தைரியம் அளித்தார் என்றும் குறிப்பிடுகிறார்.

அவசரச் சிகிச்சைப் பிரிவில் இருக்கும்போது “சாப்பிடச் சொன்னா சாப்பிட மாட்டேன்கிறார் மேடம். கொஞ்சம் சாப்பிடச் சொல்லுங்க” என்று நர்ஸ் வந்து கேட்டுக் கொண்டபோது “சாப்பிடுங்க“ என்று சொல்ல, “சாப்பிடவே பிடிக்கல. I Lost interest in life” என்று அவர் சொன்னதாகச் சொல்லும் வார்த்தையைக் கேட்கிற, வாசிக்கிற ஒவ்வொருவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைப்பது என்னவோ நிஜம்.

“அந்த வார்த்தையால் நான் சாப்பிடவில்லை. வாழ்நாள் முழுவதும் அவர் கூடவே இருந்துவிட்டேன். அதனால் அவர் மறைவுக்குப் பின்பும் அவர் என்னை நள்ளிரவில் அழைப்பது போன்று உணர்ந்தேன். கணவரை இழந்ததாக எனக்குத் தோன்றவில்லை. ஒரு கைக்குழந்தையை இழந்ததாக உணர்கிறேன்“ என்கிறார். அந்த depressionலிருந்து விடுபட எனக்கு இரண்டு ஆண்டுகள் ஆனது என்றும் குறிப்பிடுகிறார்.

ரங்கராஜன் சுஜாதா இருவரும் இளைய தலைமுறை யினருக்கு ஏராளமான நல்ல பண்புகளை விதைத்துள்ளனர் என்பது உண்மையே!

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com