பூக்கள்

அந்த நாள் ஞாபகம் வந்ததே!
  பூக்கள்
Published on

ஆதிரை வேணுகோபால்

னக்கும் பூக்களுக்கும் நெருங்கிய காதல் உண்டு. எங்கள் வீட்டுத் தோட்டத்தில் (வளவனூர்) திரும்பும் திசை எங்கும் ஆரஞ்சு, சிகப்பு, மஞ்சள் போன்ற நிறங்களில் கனகாம்பரமும், மறுபக்கம் ஊதா, வெள்ளை, ரோஸ், வெளிர் ரோஸ், வெள்ளையில் ஊதா வரிகள்  போன்ற  நிறங்களில் எல்லாம் டிசம்பர் பூக்களுமாய் தோட்டமே வண்ணமயமாய் இருக்கும்.

அதுவும் குறிப்பாக மார்கழி மாதத்தில் காலையில் எழுந்து, அந்தப் பூக்களைப் பறித்து, நெருக்கமாகத் தொடுத்து (அம்மாதான் கட்டித் தருவார்கள்) தலை நிறைய எண்ணெய் வைத்து படிய படிய வாரி (ஒரு பிசிரு  முடிகூட வெளியில் தெரியாமல்) இரண்டு பக்கமும் அழகாக ஜடை போட்டு, அதன் குறுக்காக தினம் ஒரு நிறத்தில் டிசம்பர் பூக்களை வைத்துக்கொண்டு சென்றதெல்லாம் ஓர் அழகான கனாக்காலம்… (ப்பா… கொஞ்சம் மூச்சு விட்டுக்கொள்கிறேன்.)

எங்க வளவனூரில், மார்கழியின் அதிகாலைப் பனியில்  சிலர் வீட்டுத் திண்ணைகளில்  பல வண்ண நிறங்களில் டிசம்பர் பூக்களைக் குவித்து வைத்து பத்து பைசா, நாலணா, எட்டணா என்று விலை வைத்து விற்பார்கள். சில நேரங்களில் அந்த நிறம் எனக்கு மிகவும் பிடித்துப்போக, நான் வாங்கி வந்து அம்மாவிடம் கொடுத்து, கட்டி தலையில் வைத்துச் சென்றதைதெல்லாம் இப்போது  நினைத்துப் பார்க்கிறேன்... (கண்ணை மூடினால் அந்தக் காட்சி கண் முன்னே) தலைபின்னி பூச்சூடிப் பார்க்கும் போதுதான் ஒரு முழுமையான அழகு தென்படும் என்று சொல்வார்கள் அல்லவா?! அது உண்மை! சரி, டிசம்பர் மாதத்தில் டிசம்பர் பூக்கள் மற்ற மாதங்களில் என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. இதோ அதற்கும் பதில் சொல்கிறேன்.

முன்பே சொன்னதுபோல் எங்கள் வீட்டில் கனகாம்பரமும் பல வண்ண நிறங்களில்  பூக்கும். கனகாம்பரத்தின் நிறமும் அதன் மெல்லிய தண்டும் பூவைப் பறித்த உடன் அதை வாங்கி, 'பிறந்த குழந்தையின் வழுவழு கன்னத்தை ஒற்றை விரலால் தொடுவதுபோல்', அதற்கு வலிக்காமல் கட்ட வேண்டும் எனத் தோன்றும். சாதாரண ஜடையில் பின்னலிட்டத் தலையில் கெட்டியாகக் கட்டிய கனகாம்பரத்தை வைக்கும்போது  இயற்கையான அழகு நமக்குக் கிடைக்கும். அதற்கு ஈடு இணையே இல்லை. அதிலும் அம்மா மல்லிகையும், கனகாம்பரத்தையும் கலந்து கட்டிதரும் சரம் இருக்கே... அடடா... பத்து மல்லிகை பூக்கள் என்றால் நான்கு பூக்கள் கனகாம்பரம் வெள்ளையும் ஆரஞ்சும் பார்க்கக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அவைகளை தலையில் வைத்து செல்லும்பொழுது ஏதோ உலகத்தில் எல்லாவற்றை யும் சாதித்ததொரு உணர்வு வரும்.

இப்போது, நான் கனகாம்பரத்தை வைத்தால் என் பிள்ளைகள் 80'ஸ் கிராமத்து ஹீரோயின் கணக்கா வச்சிருக்கீங்கன்னு  கலாய்க்கிறாங்க! ஆனால், அதற்கெல்லாம் நான் கவலைப்பட மாட்டேன். இப்பவும் நெருக்கமாக தொடுத்த கனகாம்பரத்தை எங்குப் பார்த்தாலும் சின்ன குழந்தைப் போல் ஓடிச் சென்று வாங்கி, தலையில் வைத்து விட்டுத்தான் மறு வேலை பார்ப்பேன்.

அம்மா மல்லிகை, கனகாம்பரம், மரிக்கொழுந்து, மாசிபத்ரி , கோழிக் கொண்டைப் பூ எல்லாவற்றையும் சேர்த்து ஒரு  கதம்பமாகக் கட்டுவார்கள். (தஞ்சாவூர் கதம்பம் கேள்விப் பட்டிருப்பீர்கள். இது வளவனூர் கதம்பம்) வெள்ளிக்கிழமைகளில் தலைக்குக் குளித்துவிட்டு, அழகாகப் பின்னலிட்டு இந்தக் கதம்பத்தை வைத்து செல்லும்போது, 'வானவில்' கூந்தலில் அமர்ந்திருப்பதைப் போல் இருக்கும். இப்பொழுது 50 பிளஸ் இல் இருப்பதால் கொண்டை போட்டு, அதைச் சுற்றிப் (புடவைக்கு தகுந்தாற் போல்) பூச்சூடிக் கொள்கிறேன். மொத்தத்தில்' ரெட்டை ஜடை வயசிலிருந்து இப்பொழுது வரை என்னை உயிர்ப்புடன் வைத்திருப்பது… என் எழுத்துகள் மற்றும் என் சமையல் போலவே  பூக்களும்...

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com