வாடகைத் தாய் - விக்னேஷ்-நயன்தாரா செய்தது சரியா?

வாடகைத் தாய் - விக்னேஷ்-நயன்தாரா செய்தது சரியா?
Published on

- ஜி.எஸ்.எஸ்.

ங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துவிட்டதாக நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் அறிவித்தார்.  அவரும் அவர் மனைவியுமாக ஆளுக்கு ஒரு குழந்தையின் பாதத்திற்கு முத்தம் கொடுக்கும் புகைப்படமும் வெளியிடப்பட்டது.  மகிழ்ச்சியோடு அவர்களின் ரசிகர் களுக்குத் திகைப்பும் ஏற்பட்டது.  நான்கு  மாதங்களுக்கு முன்புதானே இவர்களுக்குத் திருமணம் நடந்தது!  சமீபத்தில் கூட இந்திப் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்துகொண்டிருக்கிறாரே. அவர் கர்ப்பம் அடைந்தது எந்த விதத்திலும் புலப்படவில்லையே… 

வாடகைத் தாய் முறையில் அவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்ற செய்தி பரவ, எல்லா வற்றிலும் தன் கருத்தைப் பதிய வைக்கும் நடிகை கஸ்தூரிதான் முதன்முதலாக 'வாடகைத் தாய் தொடர்பான சட்டங்கள் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே கடுமையாகி விட்டன.  அப்படியிருக்க இந்த விஷயம் விவாதிக்கப்படும்' என்று கூற, பரபரப்பு அதிகமானது. 

வாடகைத் தாய் ​மூலம் குழந்தைகள் பெற்றிருக்கும் விக்னேஷ் - நயன் செய்தது சட்டமீறலா?

வாடகைத் தாய் குறித்து சட்டம் என்ன சொல்கிறது?

சட்டத்தின் பார்வையில்...

       சென்னை வடபழனி பகுதியில் வசிக்கும் வழக்கறிஞர் ராமநாதனிடம் இதன் சட்டப் பார்வையைப் பற்றி கேட்டோம்.

  'திருமணமாகி குறைந்தபட்சம் மூன்று வருடங்களாவது ஆகி இருந்தால்தான் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற முடியும்.  அதுமட்டுமல்ல, குழந்தை வேண்டும் பெண்ணால் மருத்துவக் கோணத்தில் குழந்தை பெற முடியாத நிலை உருவாகும்போதுதான் இந்த நடை முறையை மேற்கொள்ள முடியும்.  வணிக நோக்கத்தில் யாரும் வாடகைத் தாய் ஆக முடியாது.  அது தடை செய்யப்பட்டிருக்கிறது.  அப்படிப் பார்த்தால் ‘வாடகை’த் தாய் என்ற பயன்பாடே தவறானதுதான்.  என்றாலும் பழக்கத்தின் காரணமாக அப்படிச் சொல்கிறோம்.  வாடகைத் தாய் என்பவர் திருமணமானவர், விதவை அல்லது விவாகரத்தானவராக, குறிப்பாக 25 முதல் 35 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்' என்றார்.

       வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதை சரகஸி (surrogacy) என்பார்கள்.  அதாவது, மனைவியின் கருப்பையிலுள்ள சிக்கலால் கருத்தரிக்க முடியாமல் போகும்போதும், அந்தக் கரு ஆரோக்கியமாக வளர முடியாமலும் போகும்போதும் அளிக்கப்படும் சாய்ஸ்களில் இது ஒன்று. 

       கணவனின் விந்துவும், மனைவியின் முட்டையும்
பரிசோதனைச்சாலையில் உரிய சூழலில் இணைக்கப் பட்டு, கருமுட்டை உருவாகும்.  அந்தக் கரு ஆரோக்கியமான வேறொரு பெண்மணியின் கருப்பையில் செலுத்தப்பட்டு அங்கு வளரும்.  பிரசவமானவுடன் ‘வாடகைத் தாய்’ (அதாவது தன் கருப்பையை வாடகையாக அளிக்கும் பெண்) அந்தக் குழந்தையை தம்பதியிடம் கொடுத்து விடுவார். 

       வாடகைத் தாய் முறையில் பலவித பிரச்னைகளும் அநீதிகளும் முளைவிட்டன.  வெளிநாட்டினர் இந்திய வாடகைத் தாய்களை அதிகமாக நாட ஆரம்பித்தனர்.  காரணம், அமெரிக்காவில் இப்படி ஒரு குழந்தையைப் பெற ஆகும் செலவில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே இந்தியாவில் ஆகும்.  இதில் இடைத்தரகர்கள் வேறு எக்கச்சக்கமாக முளைத்தனர்.  ஏழ்மையின் காரணமாக வாடகைத் தாயாக இருக்க சம்மதிக்கும் பெண்ணுக்குக் குறைவான தொகையைக் கொடுத்துவிட்டு, இந்த இடைத்தரகர்கள் பெரும் பணத்தைச் சுருட்டிக் கொண்டனர்.  வறுமை காரணமாக சில பெண்கள் அடிக்கடி வாடகைத் தாயாக மாறி தங்கள் ஆரோக்கியத்தைத் தொலைத்தனர். எனவே, இது தொடர்பான சட்டம் சமீபத்தில் கடுமையாக்கப்பட்டு விட்டது.

       திருமணம் ஆகாதவர்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது.  கணவன் அல்லது மனைவியைப் பிரிந்து வாழ்பவர்கள், தன்பாலின உறவு கொண்டவர்கள், திருமணம் ஆகாமலேயே சேர்ந்து வாழும் ஜோடி ஆகியோர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது.

முன்பெல்லாம் வாடகைத் தாய்க்கு இவ்வளவு தொகையை அளிக்க வேண்டும் என்று எழுத்துப் பூர்வமான ஒப்பந்தங்கள் போடப்பட்டன.  இனி அதெல்லாம் சட்ட மீறல்.  பணத்துக்காக வாடகைத் தாயாக இருப்பதை சட்டம் அனுமதிக்காது.  கருத்தரிக்கும் காலத்தில் ஏற்படும் மருத்துவச் செலவு மற்றும் பிரசவ செலவு ஆகியவற்றை மட்டும் வாடகைத் தாய் பெற்றுக்கொள்ளலாம்.  வாடகைத் தாய்க்குப் பணம் கொடுத்தாலோ அல்லது இதற்காக விளம்பரம் செய்தாலோ பத்து வருடம் சிறைவாசமும், 10 லட்ச ​ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

       வெளிநாட்டினர் இந்தியாவிலுள்ள வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவது முழுவதுமாகத் தடை செய்யப் பட்டுள்ளது.   புதிய சட்டத்தின்படி இந்தியாவில் இந்தியத் தம்பதிகள் மட்டுமே வாடகைத் தாய் முறையை (மேற்கூறிய நிபந்தனைகளுக்கு உட்பட்டு) மேற் கொள்ளலாம்.

வாடகைத்தாய் கருத்தரிப்பு – மருத்துவம் சொல்வது என்ன?

மருத்துவரின் பார்வையில்...

       குழந்தையின்மை சிறப்பு மருத்துவர் டாக்டர் உஷா ரஜினிகாந்தன் வாடகைத் தாய் முறை தொடர்பான மருத்துவர் கோணத்தை விவரித்தார்.

'வாடகைத் தாய் முறையில் குழந்தை தேவை என்று வரும் தம்பதிகளிடம் சிலவற்றை உறுதி செய்து கொள்வோம்.  அவர்களுக்குத் திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகி இருக்க வேண்டும்.  கணவர், மனைவி ஒவ்வொருவருக்கும் வயது 25லிருந்து 50 வயதுக்குள்ளாக இருக்க வேண்டும்.  வாடகைத் தாயாக இருக்க சம்மதிப்பவரை அந்தத் தம்பதிதான் முன்னிறுத்த வேண்டும்.  ஏனென்றால் அந்த வாடகைத் தாய் அவர்களது உறவினராக இருக்க வேண்டும்.  அவரது வயது 25லிருந்து 30க்குள் இருப்பது நல்லது.

       இந்த வழிமுறையைச் செய்யும் மருத்துவர் கைனகாலஜி மருத்துவத்தை மூன்று வருடம் படித்துவிட்டு பிறகு ஃபெர்டிலிடி தொடர்பான ஃபெலோஷிப்பை படித்து முடித்திருக்க வேண்டும்.   இதைத் தொடர்ந்து ​மூன்று வருடங்கள் ஃபெர்டிலிடி கிளினிக் ஒன்றில் பணியாற்றி இருக்க வேண்டும்.

       வாடகைத் தாய் முறையில் குழந்தை வேண்டுமென்று ஒரு தம்பதி கேட்டால் வேறு சிலவற்றையும் உறுதி செய்து கொள்வோம்.  பிரசவத்துக்குப் பயந்தெல்லாம் இந்த முறையைத் தேர்ந்தெடுத்து விடமுடியாது.  குழந்தை வேண்டும் பெண்ணின் கருப்பை நீக்கப்பட்டிருக்க வேண்டும்.  அல்லது கருப்பை இல்லாமலேயே அவள் பிறந்திருக்க வேண்டும்.  அல்லது அவளது கருப்பையில் பெரும் குறைபாடு இருக்கவேண்டும்.  பலமுறை கருச்சிதைவு ஏற்பட்டிருக்க வேண்டும்.  கருத்தரித்தால் உயிருக்கு ஆபத்து என்ற நிலை இருக்க வேண்டும்.  இவற்றில் ஏதாவது ஒன்றாவது இருந்தால்தான் வாடகைத் தாய் முறையில் அவள் குழந்தை பெற மருத்துவர் சம்மதிப்பார்’.

       ஆக, வாடகைத் தாய் மூலம் குழந்தைகளைப் பெற்றிருந்தால் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி சட்டத்தை மீறி இருப்பதாகத்தான் தோன்றுகிறது.  ஆனால் அவர்கள் மட்டும் சட்டத்தைப் பற்றி யோசித்திருக்க மாட்டார்களா என்ன?  ஒருவேளை அந்த வாடகைத்தாய் வெளிநாட்டில் வசிப்பவரா?  அப்படியானால் எந்த அளவுக்கு நமது சட்டங்கள் அவரைக் கட்டுப்படுத்தும்?  அல்லது குழந்தைகளைத் தத்தெடுத்ததாக இப்போது கூறப் போகிறார்களா?  ஒரு குழந்தையைத் தத்தெடுப்பது தமிழ்த் திரைப்படங்களில் காட்டுவது போல எளிதானதல்ல.  அனாதை இல்லத்துக்குச் சென்று பல குழந்தைகளைப் பார்த்து ஒரு குழந்தையைத் தேர்ந்தெடுப்பது என்பதெல்லாம் நடைமுறை மற்றும் சட்டப்படி சாத்தியமல்ல.  இதற்கென உள்ள அங்கீகாரம் பெற்ற ஏஜென்சிகள் மூலம்தான் குழந்தையைத் தத்தெடுக்க முடியும்.  அதுவும் ஒரு நீண்டகால காத்திருப்புதான்.  திருமணமானவுடனேயே தத்து எடுத்துக்கொள்ள முடியாது. 

       விக்னேஷ் நயன்தாரா தம்பதியரின் குழந்தைப் பிறப்பு அவர்களது அந்தரங்க விஷயம்தான்.  அதில் தலையிடுவதோ கருத்து  கூறுவதோ வேண்டாத வேலை, அநாகரிகம். தவிர, இது உணர்வுபூர்வமான விஷயம்.  வாடகைத் தாய் ​மூலம் குழந்தை பெறுபவர்க​ள் ஏற்கனவே மனதளவில் காயப்பட்டிருக்க வாய்ப்பு அதிகம்.  அப்படியிருக்க இது பேசுபொருள் ஆகலாமா என்ற கேள்வியிலும் ஒரு நியாயம் உண்டுதான். 

       ஆனால், பிரபலமானவர்கள் என்றால் அவர்களின் அந்தரங்கங்களை அறிந்து கொள்ள மக்கள் ஆசைப் படுகிறார்கள். தங்களைப் பற்றிய சங்கடம் இல்லாத தகவல்கள் என்றால் அவற்றைப் பகிர்ந்துகொள்ள நட்சத்திரங்களும் ஆர்வமாக இருக்கிறார்கள்.  எனினும் இந்த இரட்டைக் குழந்தைகள் விஷயத்தில் சட்டம் மீறப் பட்டிருந்தால் அது பொது விஷயமாகி விடுகிறது. அதற்கான விளைவுகளை அவர்கள் சந்திக்க வேண்டியது அவசியமாகிவிடுகிறது. இது குறித்த எச்சரிக்கை களையும், தகவல்களையும் பொதுமக்களும் தெரிந்து கொள்வது தேவையாக உள்ளது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com