ஹை ஹீல்ஸ் ஆபத்து!

ஹை ஹீல்ஸ் ஆபத்து!
Published on
 - சௌமியா சுப்ரமணியன், சென்னை

ஹை ஹீல்ஸ் முதலில் ஆண்களுக்காகத்தான் வடிவமைக்கப்பட்டது. உயரம் குறைவைச் சமன் செய்யும் வேலையை மிடுக்காகச் செய்யும் ஹை ஹீல்ஸை, ஆண்கள் போர் மற்றும் குதிரை சவாரி செய்யும்போது பயன்படுத்தினார்கள். 1700 களில்தான் பெண்கள் ஹை ஹீல்ஸ் அணியத் தொடங்கினார்கள். தற்போது உலகம் முழுவதும் ஹை ஹீல்ஸ் இல்லாத செருப்புக்கடைகளே இல்லை.

ஹீல்ஸ் அணிவது நேரடியாக இடுப்பு, முதுகெலும்பு, முழங்கால்கள் மற்றும் குதிகால் என இடுப்புக்கு கீழே அனைத்துப் பாகங்களையும் பாதிக்கச் செய்கிறது. நீண்ட நேரம் இதை அணிவதால் மூட்டு வலியும் ஏற்படும். இதை அணியும் பெண்களுக்குப் பிளான்டர் பேசிட்டீஸ் (plantar fascicts) எனப்படும் குதிகால் வலி வரவாய்ப்புள்ளது.

முதுகுத்தண்டு பாதிப்பு:

ஹை ஹீல்ஸ் கீழ் முதுகின் இடுப்பு முதுகெலும்பை மாற்றியமைக்கிறது. முதுகின் இயல்பான சி - வளைவு வடிவம் மாறும். இதனால் உடல் சமநிலையை இழந்து எலும்புகளுக்குக் கூடுதல் சுமை தரும். உடல் எடை மொத்தமும் முன்னோக்கி இருக்கும். இதனால் விரைவில் உங்கள் முதுகுத்தண்டு பாதிக்கப்படும்.

உடல் அமைப்பு:

போஸ்சர் (posture) என அழைக்கப்படும் உடலின் அமைப்பு முதலில் மாறும். ஹீல்ஸ் உங்கள் பின்னங்கால்களை மட்டும் உயர்த்துவதால், உங்கள் உடல் அமைப்பே சற்று மாறும். குறிப்பாக, உங்கள் இடுப்புப் பாகம், தூக்கிக்கொண்டு இருப்பதுபோல் தோற்றம் அளிக்கும். இதனால், உங்கள் உடல் சமநிலையை இழக்கும்.

வலிகள் பல:

ஹீல்ஸ் அணிவதால், மூட்டு வலி, குதிங்கால் வலி, பாதவலி எனப் பல வலிகள் உண்டாகும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த வலியைக் கவனிக்கமால் விட்டால் நின்றாலும், உட்கார்ந்தாலும், படுத்தாலும் அந்த வலியின் அவஸ்தை எப்போதும் தொடர்ந்துகொண்டே இருக்கும்.

கணுக்கால் சுளுக்கு:

நீங்கள் ஹீல்ஸ் அணிந்து மேடுபள்ளங்கள் நிறைந்த சாலையில் நடக்கும்போது கணுக்கால்சுளுக்கு எளிதாக ஏற்படும். இது சமயத்தில் முழங்கால் வரையிலும் பாதிப்பை உண்டாக்கும். அது தவிர கணுக்காலிலும் தீவிர பாதிப்பை உண்டாகக்கூடும்.

அவசியம் ஹீல்ஸ் அணிய வேண்டுமா? கவனிக்க...
  • ஆசைக்கு எப்போதாவது, முக்கியச் சந்தர்ப்பங்களில் ஹை ஹீல்ஸ் அணியலாம்.

  • வேலைக்குத் தேவைப்படும்போது மட்டும் அணிந்துவிட்டு மற்ற சமயத்தில் அணிய மாற்றுகாலணிகளை எடுத்துச்செல்லலாம்.

  • ஹீல்ஸ் அணியும்போதும் அவ்வப்போது அதை அகற்றி வைத்து ரிலாக்ஸ் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

  • முடிந்தவரை பாதிப்பு தராமல் இருக்க, இன்ச்வரை உயரம் அதிகம் இருக்கும் காலணிகளை அணியுங்கள்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com