சியாட்டிலில் சில மாதங்கள்!

வாசகர் பயண அனுபவம்
சியாட்டிலில் சில மாதங்கள்!
Published on

- ஜெயகாந்தி மகாதேவன்

 

  அமெரிக்காவின், சியாட்டில் நகரில் இருக்கும் எங்கள் மகன் கார்த்திக்குக்கு, இரண்டாவது பெண்குழந்தை பிறந்திருந்தது. குழந்தையைப் பார்க்க வரும்படி அழைத்த கார்த்திக், அதற்கான விமான டிக்கெட்களையும் புக் பண்ணி அனுப்பியிருந்தான். மிக்க மகிழ்ச்சியுடன் முன்னேற்பாடுகள் அனைத்தையும் செய்துமுடித்து, கடந்த மார்ச் மாதம் பயணத்தைத் தொடங்கினோம். எங்களை அழைத்துச் செல்ல, சியாட்டில் ஏர்போட்டிற்கு, கார்த்திக் தனது 3 வயதை எட்ட இருந்த மூத்தமகள் அவிராவுடன் வந்திருந்தான். இரண்டாண்டுகளுக்குப் பிறகு அவர்களைச் சந்தித்தது பெருமகிழ்ச்சியைத் தந்தது. குழந்தை அவிரா, சரளமா ஆங்கிலம் பேசினாள். பேசிக்கொண்டே வீட்டை அடைந்தோம். மருமகள் கவிதா, பொம்மை போலிருந்த, ஐந்துமாத குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டு வரவேற்றாள். சுமார் ஆறு மாதங்கள் அங்கு அவர்களுடன் தங்கப்போகிறோம் என்ற நினைப்பே இனித்தது. அங்கே இருந்தபோதும், மங்கையர்மலருக்கு எனது படைப்புகளை அனுப்புவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தேன். அதில் எனக்குக் கூடுதல் சந்தோசம்.

நாங்கள் சென்ற இரண்டு வாரத்தில், அவிராவின் பிறந்தநாள் வந்தது. கொரானாவின் தாக்கத்தால், முதல் இரண்டு பிறந்தநாளைக் கொண்டாட முடியாமல் போனதால், இந்தமுறை ஹால் பிடித்து, சிறப்பாகக் கொண்டாடினோம். பக்கத்து வீடு, நண்பர்கள் குடும்பங்கள் என சுமார் 25 பேர் வந்திருந்தனர். விழா நேரம் – மாலை ஆறிலிருந்து ஏழரை. இரண்டு அறைகளாய் இருந்த ஹாலில், ஒன்றில் குழந்தைகள் விளையாடவும், மற்றதில் கேக் வெட்டிபின் உணவருந்தவும் என்றிருந்தது.

அங்கெல்லாம் பார்ட்டி என்றால் உருளைக்கிழங்கு ஃபிரை, கோக் போன்ற ஸ்டார்ட்டர், நான்கு வகையில் பீட்சா மற்றும் கேக் இவைதான். நன்றாகப் போய்க் கொண்டிருந்த பார்ட்டியில், 7.20 மணி ஆனதும், ஒரு திடீர் பரபரப்பு. அவரவர் குழந்தைகள் மற்றும் சாமான்களுடன் வெளியே பறந்துகொண்டிருந்தனர். என் மகனோ, மிச்சம் மீதி இருந்ததில் சிலவற்றை, டப்பாக்களில் அடைத்து, நண்பர்களிடம் கொடுத்தும், மற்றவற்றைப் பைகளில் போட்டுக்கொண்டும், ஒரு துரும்புவிடாமல், அறையைக் காலி பண்ணிட்டு, வெளியே வந்தான். அங்கு என்ன நடக்குதுன்னே தெரியாம நானும் வெளியேறினேன். பின்புதான் தெரிந்தது குறிப்பிட்ட நேரத்துக்குமேல் ஒரு நிமிடம் ஆனாலும் அதிகப்படியான தொகை செலுத்தவேண்டியது கட்டாயமென்று. லேசான மழையிலும் குளிரிலும் நின்று, விடைபெறக்கூட நேரமின்றி, வீடு திரும்பினோம்.

அதன்பின், சில வாரங்களில் சியாட்டிலில் இருந்து, வான்குவாருக்கு, நான்குநாள் பயணமாக, அனைவரும் சென்றிருந்தோம். அந்த நேரத்தில்தான், ‘மங்கையர் மலர்’ –‘கல்கி’ குழுமத்தினர் 'ரீல்ஸ்ராணி' போட்டியை அறிவித்தனர். அறிவித்த நான்கு தலைப்புகளிலும் பங்கேற்க எண்ணி, நான்கு வீடியோக்களைப் பதிவு பண்ணி அனுப்பினேன். பின் அவற்றிற்கு 'லைக்'குகளைப் பெறுவதற்கு, அனைத்து நட்புக்களையும், சொந்தங்களையும் தொடர்புகொண்டு, கடினமா உழைத்ததின் பலனா, 'ஊக்கம்' என்ற தலைப்பிற்கான பிரிவில், பரிசினை வென்று 'பாலம் சில்க்ஸ்' வழங்கிய ரூபாய் ஐந்தாயிரம் மதிப்பிற்குப் புடைவைகளைப் பெற்றேன். இதையே இந்தப் பயணத்தின் ஹைலைட் எனக் கருதுகிறேன். (விரிவான வான்குவார் பயண விவரம் ஏற்கனவே ‘மங்கையர் மலர்’ E-magazine, 2nd July, 2022 தேதியிட்ட இதழில் வெளியாகியுள்ளது)

சியாட்டிலில் பணிபுரியும் நம்நாட்டு இளைஞர்களுக்கு, வந்துபோக, சொந்த பந்தம் அருகில் இல்லாததால், நண்பர்களுக்குள் ஒரு குரூப் அமைத்துக்கொள்கின்றனர். இரண்டு மூன்று வாரத்துக்கு ஒருமுறை, ஏதோ ஒரு பீச்சிலோ

பார்க்கிலோ, அனைவரும் ஒன்றுகூடி பேசிச் சிரித்து, மகிழ்கின்றனர். குறிப்பிட்டத் தினத்தில், தத்தம் கார்களில் குடும்பத்துடன், நாற்காலி, பெஞ்ச், பெட்ஷீட் மற்றும் கேக், சமோசா, சிப்ஸ், பிஸ்கட், ஜூஸ் போன்றவைகளுடன் வந்து, ஒன்றாய் அமர்ந்து சாப்பிடுகின்றனர். குழந்தைகள் ஒரு பக்கம் ஒன்றுகூடிக் குதூகலிக்க, நேரம் இனிமையாகச் செல்கிறது. பின், ஆன்லைனில் இரவு உணவையும் வரவழைத்து சாப்பிட்டு, கெட் டுகெதரை முடிக்கின்றனர். அந்த மாதிரியான ஒரு நிகழ்வில், நாங்களும் ஒருமுறை கலந்துகொண்டோம். அப்போ அங்கிருந்த இளைஞர்களில் நால்வர், நம் சென்னையில் அரசு உயர்நிலைப்பள்ளியான சாந்தோம் ஹையர் செகண்டரி ஸ்கூலில், பள்ளி இறுதி ஆண்டுவரை படித்து, பின்பு தொழிற் கல்வியையும் முடித்துவிட்டு, அமெரிக்காவில் குடியேறியவர்கள் எனத் தெரிந்தது. நம்ம சென்னையின் மைந்தர்களான அவர்கள், இன்று டெக்னாலஜியின் ஜெயண்ட்ஸ் எனக் கூறப்படும் மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் கம்பெனிகளில் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கின்றனர் என அறிந்தபோது, மிகவும் பெருமையாக இருந்தது. அவர்கள் நால்வரையும், தனியா நான் படம்பிடித்தபோது, ஒருத்தர், "எதுக்கு ஆன்ட்டி இந்த போட்டோ, எங்களை மட்டும் தனியா எடுக்குறீங்க?" எனக் கேட்டார். நான், "'மங்கையர் மலருக்குக் கட்டுரையுடன் அனுப்ப"' என்றேன். அப்ப அவர் பெரிசா சிரித்துக்கொண்டே, "அனுப்புங்க ஆன்ட்டி. அதைப் பார்த்த பிறகாவது மாமனார் வீடுகளில் எங்க மதிப்பு கூடும்" என்று ஜோக் அடிக்க, அங்கு பெரிய சிரிப்பலை ஒன்று எழுந்தது. அடங்க சிறிது நேரம் ஆனது. அந்த நால்வரின் பெயர்கள்: கார்த்திக் மகாதேவன், சாய் சரவணன் ஜவஹர், மணிகண்டன் ரமேஷ், கார்த்திக் குஞ்சிதபாதம்.

விடுமுறை நாட்களில் பார்க், லேக், பீச் என அவ்வப்போது சென்று வந்த இடங்கள் ஏராளம். அங்குள்ள மக்கள் க்யாக் எனப்படும் சிறிய ரக படகுகளை வீட்டில் இருந்துகொண்டு வந்து நீர்நிலைகளில் சவாரி செய்து மகிழ்கின்றனர். ஏப்ரல் – மே மாதங்களில் துலிப் மலர்களின்சீசன். அப்போது துலிப் கார்டனுக்குச் சென்று வந்தோம். அங்கு பரந்துவிரிந்து, மனதை மயக்கும் பல வண்ணங்களில் மலர்ந்து, கண்களுக்கு விருந்தளித்த மலர்களின் காட்சியை விவரிக்க வார்த்தை இல்லை.

மெய்டென்பேயெர்பே (Meydenbauer Bay) என்னும் பார்க் ஒன்றுக்குச் சென்றோம். பசுமையான இயற்கை அழகு மிகுந்த இடம். அங்குள்ள நீர்நிலையில், வாத்துக்கள் வரிசை கட்டி நீந்திச் செல்வது அழகோ அழகு! அதை ஒட்டியுள்ள பார்க் குழந்தைகளுக்கு மிகப்பிடித்தமான ஒன்று. ஒருமுறை சென்றுவந்தால் மீண்டும் மீண்டும் போகத் தூண்டும் பிரமாதமான இடம்.

உணவகங்களைப் பற்றி சொல்லணும்னா, போகுமிடங்களிலெல்லாம் சைனீஸ், தாய், இத்தாலியன், இந்தியன், மெக்ஸிகன் என அனைத்து நாடுகளின் ரெஸ்டாரண்ட்களும் இருக்கும். அவ்வளவு ஏன்... இந்த

உணவுகளையெல்லாம் வீட்டில் இருந்தபடியே விரல் நுனியில் (online delivery) வரவழைக்கும் வசதியும் உண்டு. இவையெல்லாம் போதாதென்று, எங்கள் வீட்டில் இருந்து அரைமணி நேரம் காரில் சென்று, அங்குள்ள மெட்ராஸ் தோசா கார்னெர் என்னும் ரெஸ்டாரெண்ட்டில், பொங்கல், வடை, மசால் தோசைகளை ஒரு பிடி, பிடித்த அனுபவமும் உண்டு.

இங்குள்ள எங்கள் வீட்டுத் தோட்டத்தில், பராமரிக்க நேரமின்மையால், பூச்செடிகளின் எண்ணிக்கை குறைவு. சென்றமுறை அங்கு சென்றபோது, நான் நட்டுவைத்த ரோஜா செடி இந்த முறை பார்க்கையில், ஐம்பதுக்கும் மேற்பட்ட பூக்களுடன் காட்சி தந்தது மிகப் பெருமையாயிருந்தது எனக்கு.

வீட்டை விட்டு வெளியில் வந்தால் அக்கம் பக்கத்தில் மனிதர்களைப் பார்ப்பது மிக அரிது. அவ்வப்போது, தாங்கள் வளர்க்கும் செல்லப் பிராணியான நாய்களைக் கூட்டிக்கொண்டு, அவை, இயற்கை உபாதைகளைக் கழிக்கவும், அவற்றின் சிறிய நடைப்பயிற்சிக்காகவும், அவர்கள் வெளியில் வருவதுண்டு. நாய் கழிக்கும் மலத்தை க்ளவ்ஸ் போட்ட கையால் அள்ளி, கையோடு கொண்டுவரும் கவரில் போட்டு, அவர்கள் வீட்டில் இருக்கும் குப்பைத்தொட்டியில் கொண்டுபோய் போடுவர். இது அனைவருக்கும் பொதுவான ரூல். நம் அருகில் வரும்போது, ஒரு 'ஹாய்' சொல்லிட்டு, போய்க்கொண்டேஇருப்பார்கள்.

இதற்குள், ஐந்து மாதங்களுக்குமேல், நாட்கள் பறந்து விட்டன. அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று பிரார்த்தனைச் செய்துவிட்டு, சென்னை திரும்ப ஆயத்தமானோம். விமானம் ஏறுவதற்கு முந்தினநாள், கார்த்திக் எங்களை Indus Creations - Performance Arts Theatre குழுவினர் நடத்திய "கடவுள் வருகிறார்" என்ற தமிழ் காமெடி, நாட்டிய - நாடகம் ஒன்றைக் காண அருகில் உள்ள கிர்க்லேண்ட் என்னும் ஊருக்கு அழைத்துச் சென்றான். அந்த நாடகத்தில் இடம்பெற்ற மூன்று குரூப் டான்ஸ்களில், இரண்டில் பங்கு பெற்று, கார்த்திக் நடனம் ஆடியிருந்தான். நாடகமும் நடனமும் அவ்வளவு பிரமாதமா ரசிக்கும்படி இருந்தது. அப்படியொரு நிகழ்ச்சியை ஊர் திரும்புவதற்கு முந்தைய தினம் கண்டுகளித்ததை மறக்க முடியாத அனுபவமாகக் கருதுகிறேன். அந்த நாடகத்தை உருவாக்கி, நடித்து, நவீனத் தொழில்நுட்பத்துடன் மேடையேற்றியதில் பெரும் பங்கு பெற்றவர்கள் தமிழர்கள். அரங்கு நிறைந்த பார்வையாளர்களாய் இருந்தவர்களும் பெரும்பாலும் தமிழர்களே. கடல் கடந்தும், கடந்த பத்தாண்டுகளாக, அந்நிய நாட்டில் நமது கலாசாரத்தை நிலை நாட்டிக்கொண்டிருக்கும் Indus Creations குழுவினரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நிகழ்ச்சிகள் மூலம் கிடைக்கும் பணத்தை இவர்கள் "சீட்ஸ்"(seeds) என்னும் தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கி, குழந்தைகளின் படிப்பிற்கு உதவி வருகிறார்கள் என்பது கூடுதல் தகவல்.

இவ்வாறு ஒவ்வொரு இடத்திற்கும் பார்த்துப் பார்த்து அழைத்துச்சென்று, எங்களைப் பரவசப்படுத்திய மகனை வாழ்த்தி, குழந்தைகளைப் பிரிய மனமின்றி, ஊர் வந்து சேர்ந்தோம்.  இனி, கடந்துசென்ற அனுபவங்களை அசை போட்டபடி, அடுத்தடுத்த நாட்களை நகர்த்த வேண்டியதுதான்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com