ஜீவன்

ஜெயஸ்ரீராஜ் நினைவுச் சிறுகதைப்போட்டி – 2022
ஜீவன்

பரிசுக்கதை – 1

ஓவியம்: தமிழ்

சிறுகதை: சந்துரு மாணிக்கவாசகம்

சந்துரு மாணிக்கவாசகம்
சந்துரு மாணிக்கவாசகம்

நடுவர் பார்வையில்...

பறவைகளின் மனக்குரலாக மாறுபட்ட சிந்தனையுள்ள கதை! வழக்கமான ஸ்டீரியோ டைப்பிலிருந்து சற்று வித்தியாசப்படுகிறது...

 

ரு காலத்தில் விவசாயம் தழைத்தோங்கியிருந்த அந்தக் கிராமம் இன்று வயல்வெளிகளை இழந்து புறநகர்ப் பகுதியாக மாற்றம் பெற்றிருக்க, அதன் பிரதான சாலையிலேயே அமைந்திருந்தது ரங்கநாதனின் வீடு.

இப்படியொரு பழைய வீட்டை ரங்கநாதன் வாங்குவார் என எவரும் எதிர்பார்க்கவில்லை. ரங்கநாதனும் திட்டமிட்டெல்லாம் இந்த வீட்டை பிடித்துவிடவில்லை. எதேச்சையாக அமைந்ததுதான். பலராலும் அறியப்படாத பழைமையான கோயில் ஒன்றின் அருமை பெருமைகளைப் பற்றி நண்பரொருவர் விலாவாரியாக ரங்கநாதனிடம் சொல்லியிருக்க, அக்கோயிலை காணும் ஆவலில் தேடிச் சென்ற பொழுதுதான், இந்த வீடு அவரது கண்ணில்பட்டது. பழைய காலண்டர் அட்டையில் ஒட்டப்பட்டிருந்த வெள்ளை பேப்பரில் ‘விற்பனைக்கு’ அறிவிப்பைக் கண்டவர்,  தாமதிக்காமல் விசாரித்து, விலை பேசி.. ‘படக்’கென முடித்துவிட்டார்.

 “என்னப்பா இது… அந்த ஏரியாவுல போயி வீட்டை வெலை பேசியிருக்கீங்க? சிட்டிக்குள்ள வீடா இல்ல?” – மனைவி மக்களோடு பெங்களூருவில் செட்டிலாகிவிட்ட மகன் சற்றே வேகப்பட்டான்.

“ஏரியா முக்கியம் இல்லப்பா. வீடு எங்க இருந்தாலும் அதுல ஒரு ஜீவன் இருக்கணும். அதான் முக்கியம். அதுதான் நம்மள நிம்மதியா வாழவைக்கும். நாங்க இருக்கற வரைக்கும் இதுல இருந்துட்டு போறோம். அதுக்கப்பறம் வித்து காசாக்கிட்டு நீயும் சின்னவளும் உங்களுக்கு புடிச்ச எடத்துல மனையோ வீடோ வாங்கிப் போட்டுக்கங்க” – ரங்கநாதனின் பதிலுக்கு அமைதியானான் அவன்.

“ஏங்க, அவன் சொல்றமாதிரி அவ்ளோ தூரத்துல போயா வீடு பார்ப்பீங்க? அவசர ஆத்திரத்துக்குக் கடை கண்ணிக்குப் போகணும்னா கூட எங்கேர்ந்து எங்கங்க வர்றது?” – மனைவி பத்மா.

“நானும் நீயும் எங்கேயும் போகப் போறதில்ல. வாக்கிங் போய்ட்டு வரும்போது ரெண்டு மூணு நாளைக்கி ஒருதடவை காய்கறியை புடிச்சுட்டு வந்து ஃப்ரிட்ஜ்ல போட்டுட்டோம்னா முடிஞ்சுது. மருந்து மாத்திரைக்கும், மளிகை சாமானுக்கும் ரெண்டு மூணு பர்லாங்ல கடை இருக்கு. வேற என்ன வேணும் உனக்கு, சொல்லு. நான் வாங்கியார்றேன்.”

ரங்கநாதனுக்குப் பதில் சொல்லமுடியாதது ஒரு பக்கமும், மரங்களின் அடர்த்தியான நிழலோடு அமைதியும் சூழ்ந்திருந்த அந்த வீட்டை வேண்டாமென சொல்லவும் முடியாத ஈர்ப்புத்தன்மை ஒரு பக்கமுமாகச் சேர்ந்து கொண்டு பத்மாவை மேலும் எதிர்கேள்விகளைக் கேட்காவண்ணம் தடுத்திருந்தது.

இப்படியொரு வீட்டை வாங்கக் காரணம் என்னவென்று கேட்ட அனைவருக்கும் ரங்கநாதன் சொன்ன ஒரே பதில்… ‘மனசுக்கு புடிச்சிருந்துச்சு, வாங்கிட்டேன். அவ்ளோதான்’.

இந்த வீட்டைச் சுற்றி அடர்ந்திருக்கும் அத்தனை நுணா மரங்களும்தான் தன்னை வெகுவாகக் கவர்ந்த முக்கிய விஷயம் என்ற உண்மைக் காரணத்தைச் சொன்னால் எவரும் சிரிக்கமாட்டார்களா? இந்த மரங்களும் இவற்றில் வசிக்கும் பறவைகளும் எனது பள்ளிப்பருவ வாழ்க்கையில் என்னோடு இயைந்திருந்தவை என்றால், ‘ஏன்யா, நீ எடம் வாங்கி வீடு கட்ற எடத்துல உன் இஷ்டத்துக்கு மரம் வச்சுக்கமுடியாதா? இதுக்காகவா இங்க வந்து வீட்டை வாங்குவ?’ எனக் கேவலமாக இளித்தபடி கேட்க மாட்டார்களா? விவரிக்கமுடியாத உணர்வுகளையெல்லாம் எப்படிச் சொல்லியும் புரிய வைக்கமுடியாது என்பதை ரங்கநாதன் உணர்ந்திருந்தார்.

ரம்மியமாகக் காட்சியளித்த அந்த நுணா மரங்களையும், ஐம்பது வருடங்களுக்கு முன் யதார்த்தத்துடன் கட்டப் பட்டிருந்த அந்த வலுவான வீட்டையும் பார்த்த மாத்திரத்தில் ’எத்தனை கோடி கொடுத்தாலும் நகருக்குள் இப்படியொரு வீடு அமையுமா என்ன..?’ என மனதிற்குள் லயித்துக்கொண்டார். அப்படிப் பிடித்துப் போனது ரங்கநாதனுக்கு.

சுற்றிலும் தாராளமாய் விடப்பட்டிருந்த மண் தரை, ‘எந்தச் செடிகளையும் மரங்களையும் வேண்டுமானாலும் நட்டு வைத்துக்கொள்’ என்று இருகரம் நீட்டி அழைத்தது. ஒரு சதுர அடியைக்கூட விட்டுவைக்காமல் சிமெண்ட் பூசிவிடும் நகரத்து வீடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து வியந்துகொண்டார். பெரிய இடமாக இருந்தும், வளைத்து வளைத்து கட்டிவிடாமல், விசாலமான தரைதளத்தோடு, எளிமையாய் மாடியில் ஒரே ஒரு அறை மட்டுமே கட்டப்பட்டிருந்தது.

வீட்டை வாங்கி இரண்டு மாதங்களாகியிருந்தது.

வீட்டின் பின்புறம் அழகாய் ஒரு தோட்டம். அமைதியாய் ஊறிக்கொண்டேயிருக்கும் கிணறு. அவர் எதிர்பார்த்தது போல் எந்தவிதத்திலும் குறையின்றி நிறைவாகவே அமைந்திருந்தது வீடு.

இந்த வீட்டில் ரங்கநாதன் அதிகமாக நேரம் செலவிடும் பகுதியெனில், அது மாடி அறையும் அங்கிருக்கும் பெரிய ஜன்னல் பகுதியும்தான்.  

காலையில் பேப்பர் படிப்பதில் துவங்கி, அனைத்து வேலைகளையும் இந்த ஜன்னலோரத்தில் அமர்ந்தபடியே செய்துகொண்டிருப்பார். தனது பழைய டெஸ்க்டாப் கம்ப்யூட்டரை தூக்கி வந்து ஜன்னலையொட்டிய பகுதியிலேயே வைத்து அதற்கென தனியாக ஸ்விட்ச் போர்டு ஒன்றையும் அமைத்துக்கொண்டிருந்தார்.

பெருத்த உடலும் தேய்ந்துவிட்ட மூட்டுமாய் மாடிக்கு வரமுடியாமல் தவிக்கும் பத்மா, பில்டர் காபியோடு குரல் கொடுக்கும்வேளையில் விறுவிறுவென படியிறங்கிச் சென்று வாங்கிக்கொள்வார். அவளது சர்க்கரை நோயும், ரத்த அழுத்தமும்தான் இரவில் அவர் கீழேயே தங்கிக் கொள்வதற்கான முக்கியக் காரணமாக இருந்தது. கழிவறைக்குச் செல்ல கைபிடித்து எழுந்திருக்க உதவுவது, பிளாஸ்க்கிலிருந்து சுடுதண்ணீர் ஊற்றிக் கொடுப்பது, மரத்துப் போன காலை தேய்த்துவிடுவது என அவளுக்குத் தேவையான உதவிகள் அனைத்தும் ரங்கநாதனின் பொறுப்பிலேயே இருந்தது. இப்படியான விஷயங்கள் ஒருவேளை இல்லாதிருந்திருந்தால், இருபத்திநாலு மணிநேரமும் பேச்சுலர் மனிதராய் மேலேயே இருந்திருப்பாரோ என்னவோ.

வீட்டுக்கு வருகை தரும் நண்பர்கள் சோபாவில் சாய்ந்தமர்ந்து ஆசுவாசப்படுத்திக்கொள்ள எத்தணிக்கும் வேளையில், புன்னகையுடனே ‘வாங்களேன், மாடியில போய் பேசுவோம்’ என்று ஹாலிலிருந்து அவர்களைக் கிளப்பிவிடுவார். பத்மாவிற்குதான் முகம் வாடிப்போகும். ’வந்தவங்களை ரெண்டு நிமிஷம் இங்க உக்காந்து பேச விடறாரா பாரேன்...’ என சலித்துக்கொள்வாள். ரங்கநாதனின் அழைப்பிற்கிணங்கி மாடி நோக்கிச் செல்லும் நண்பர்கள், ஜன்னலை நிறைத்திருக்கும் நுணா இலைகளின் பசுமையிலும், அதன் மென்மையான காற்றிலும், பறவைகளின் கீச்சுகளிலும் லயித்து, சொல்லவந்த சேதி மறந்து நிற்பது வாடிக்கையாகியிருந்தது.   

மரங்களில் எந்நேரமும் நிறைந்திருந்த மைனாக்கள், தவிட்டுக் குருவிகள், குயில்கள், சிட்டுக்குருவிகள், தேன்சிட்டுக்கள், காகங்கள் என அனைத்து பறவைகளின் குரல்களும் அவரது சிறுவயது பிராயத்தை மீட்டுக் கொண்டுவந்தபடியே இருந்தன.

எந்தக் கவலைகளுமின்றி திரிந்த பள்ளிப்பருவத்திலேயே பொறாமை கொண்டிருந்தவருக்கு, இப்பொழுது கேட்கவேண்டுமா என்ன? ’எப்படிப்பட்டதொரு வாழ்க்கையை இவர்களுக்குக் கொடுத்திருக்கிறான் இறைவன்?! நினைத்த இடத்தில் கூடு கட்டிக்கொள்வதும், குழந்தைகளைப் பெற்று உணவூட்டி வளர்த்தெடுப்பதும், கிடைக்கும் உணவுகளை உண்டபடி நினைத்த இடங்களுக்குப் பறந்து செல்வதும், முக்காலம் பற்றிய கவலைகள் ஏதுமில்லாமல், நோய், மருந்து, மாத்திரை என எதைப் பற்றியும் அறிந்திடாமல் பறந்து திரியும் ஜீவன்களாக.. அப்பப்பா.. என்ன ஒரு அற்புதமான வாழ்க்கை..! ஆண்டவா, பறவையாய் எனக்கொரு ஜென்மத்தைக் கொடு’ – அவரது ஜன்னல் வழிப் பார்வை பெரும்பாலும் இவ்வாறாகவே இருந்தது.

படுக்கையிலிருந்து எழுந்தவர், வாயில் பிரஷ்ஷுடன் மாடிக்கு வந்து ஜன்னலருகே நின்றார். காகங்கள் வழக்கம்போலல்லாமல் கூப்பாடு போடுவது போன்ற தொரு உணர்வையளித்தன. எண்ணிக்கையும் அளவுக்கு அதிகமாகவே இருந்தது. ஓரிடத்தில் அமராமல், நிலைகொள்ளாமல் அனைத்து மரங்களையும் சுற்றி சுற்றி பறந்தபடியே கத்திக்கொண்டிருந்தன. இரண்டு மைனாக்களும் இதில் அடக்கம். ஆனால், அவை காகங்கள் போலன்றி குறிப்பிட்ட ஒரு மரத்திற்குள்ளேயே அலறியபடி சுற்றிக்கொண்டிருந்தன. காரணம் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தார் ரங்கநாதன்.

தங்கள் பகுதிக்குள் குரங்குகள் ஏதேனும் வந்துவிட்டாலோ, தனது இனத்தில் ஏதேனும் உயிரிழப்புகள் நிகழ்ந்து விட்டாலோ இவ்வாறான சப்தமிடுதலிலும் கூட்டம் கூடுவதிலும் காகங்கள் ஈடுபடும் என்பதை அறிந்திருந்தார். ஆனால் இங்கு அப்படியெதுவும் நிகழ்ந்ததாகவும் தெரியவில்லை. பிறகு ஏன் இப்படியொரு ஆரவாரம்?

மரங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியே உற்று நோக்க ஆரம்பித்தார். அப்பொழுதுதான் அவரது முகம் மாறியது. ஒரு மரத்தின் மெல்லிய கிளையொன்றை கூர்ந்து கவனிக்கத் தொடங்கியிருந்தார். அங்கு... அப்பொழுது தான் சிறகு விரிக்கத் துவங்கியிருந்த மைனா குஞ்சொன்று அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. கால்கள் தளர்ந்து தரையை நோக்கியிருந்தன.  எங்கே… எதில் தொங்கிக் கொண்டிருக்கிறது இந்த உயிர்?

இன்னும் கூர்ந்து பார்த்ததில் ரங்கநாதனுக்கு இதயத்துடிப்பு அதிகமானது. ஆம்.. நுணா இலைகளின் பசுமையோடு தன்னை ஒளித்துக்கொண்டு ஒன்றியிருந்தது ஒரு பச்சைப் பாம்பு. மைனாவின் தலைப்பகுதியை அந்த பாம்புதான் கவ்வியிருந்தது. தடுமாறினார் அவர். ’என்ன செய்யலாம்? எப்படி காப்பாற்றுவது?’

கீழே ஓடிச் சென்று, வீட்டின் பக்கவாட்டுச் சுவற்றையொட்டிக் கிடந்த நீண்ட மூங்கில் ஒட்டடைக் குச்சியை கையிலெடுத்தார். அவரது ஓட்டத்தைக் கண்ட பத்மா பதறிப் போய் விசாரித்தாள். ‘ஒண்ணுமில்ல, வர்றேன் இரு’ என்றபடியே சடுதியில் மாடி ஜன்னலுக்கு வந்தவர், குச்சியை ஜன்னலுக்கு வெளியே அனுப்பி, அந்த சிறு கிளையை நோக்கி நீட்டினார். ஊஹூம்.. குச்சியின் நீளம் சற்றே குறைவாக இருந்ததுடன், அதன் எடையை அவ்வளவுதூரத்திற்கு தொடர்ந்து நீட்டிப் பிடிப்பதும் அவருக்கு இயலாத காரியமாக இருந்தது. அந்த பாம்போ எதையும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. வால் பகுதியை வலுவாகக் கிளையில் சுருட்டிக் கொண்டபடி மைனாவை மேலே தூக்க முயற்சித்துக் கொண்டேயிருந்தது.

பொறுமையாய் கூடுகட்டி, முட்டையிட்டு அடைகாத்து, நொடிக்கொரு உணவுப் பொருளை அலைந்து திரிந்து கொண்டுவந்து அன்புடன் ஊட்டி வளர்த்த தங்களது வாரிசை கூப்பாட்டின் மூலம் காப்பாற்றிவிடும் முயற்சியில் தாயும் தகப்பனும் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டேயிருந்தனர்.

குச்சியை மாடியிலேயே போட்டுவிட்டு கீழே வந்த ரங்கநாதன், மரத்திற்கடியில் கிடந்த கற்களை பொறுக்கத் துவங்கினார். வாசற்படிக்கட்டில் நின்றுகொண்டிருந்த பத்மாவிடம் விஷயத்தைச் சொல்லியபடியே பாம்பின் சிறு தலையை நோக்கி கற்களை விசிறியடிக்க ஆரம்பித்தார்.

“எதுக்குங்க இந்த வேலை? அந்த பாம்பு எதுவும் உங்க மேல விழுந்து வைக்கறதுக்கா? வாங்க இப்புடி” என்ற பத்மாவின் குரலை பொருட்படுத்தவில்லை.

எறிந்துகொண்டிருந்த கற்கள் ஒவ்வொன்றும் சம்பந்தமில்லா திசை நோக்கியே பறந்துகொண்டிருந்தன. காகங்களும் மைனாக்களும் அந்த மரத்திலிருந்து சிதறி ஓடி அடுத்தடுத்த மரங்களில் அமர்ந்து இன்னும் அதிகமாகக் கதறத் துவங்கியிருந்தன.

ஒரு கல் மட்டும் பாம்பின் உடலில் எங்கோ பட்டிருக்க வேண்டும். சட்டென மைனா குஞ்சை கீழே விட்டது பாம்பு. பத்மா பயந்ததுபோல் பாம்புதான் விழுகிறதோ என்ற பயத்தில் பதறி பின்னோக்கி வந்தார் ரங்கநாதன். கீழே விழுந்த மைனாவைப் பார்த்ததும் வீட்டின் உள்புறம் நின்றுகொண்டிருந்த பத்மாவை நோக்கிக் கத்தினார்.

“பத்மா, சீக்கிரமா கொஞ்சம் தண்ணி கொண்டா”

அவசரமாய் பாட்டிலைத் திறந்து உள்ளங்கையில் தண்ணீரை நிரப்பி தெளித்தார். ஊஹூம். முகத்தில் பெருத்த ஏமாற்றம். எந்தவொரு சிறு அசைவுமின்றி அடங்கிப் போயிருந்தது அந்த மைனா குஞ்சு. பவ்யமாய் கைகளில் எடுத்துப் பார்த்தார். தூரத்திலிருந்த மைனாக்கள் ரங்கநாதனை பார்த்தபடியே அலறின.

“அப்புடியே ஓரமா மண்ணைப் போட்டு மூடிட்டு வாங்க” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள் பத்மா.

மனது என்னவோ போலிருந்தது ரங்கநாதனுக்கு. எப்பொழுதும் டிவியில் செய்திகளைப் பார்த்தபடியே மதிய சாப்பாட்டை முடிக்கும் அவர், இன்று டிவியை தவிர்த்துவிட்டு அமைதியாகவே சாப்பிட்டு முடித்தார்.

வீட்டின் முன்புற வராந்தாவில் கிடக்கும் நீண்ட மரப் பெஞ்ச்சில் படுத்தவர் உறங்கும் எண்ணமின்றி கையையே தலையணையாக்கிக் கொண்டு கண்களை மட்டும் மூடிக்கொண்டார்.

முதுகில் ஏதோவொன்று கொத்துவது போன்ற உணர்வு வர, லேசாய் திரும்பிப் பார்த்தவருக்கு அப்படியொரு ஆச்சர்யம். பின்னால் அமர்ந்திருந்தது, தனது குழந்தையை கண்முன்னே பறிகொடுத்துவிட்டு துடித்தபடியே சுற்றிக்கொண்டிருந்த அதே மைனா.

அதனைப் பார்த்தபடியே எழுந்தமர்ந்தார். அது பயம்கொண்டு எழுந்து பறக்கவில்லை. மாறாக, அவரையே சாந்தமாகப் பார்த்துக்கொண்டிருந்தது. ரங்கநாதனுக்கு மனம் வலித்து உறுத்தியது. அதன் பார்வையின் அர்த்தம் புரியவில்லை. ‘எனது குழந்தையைக் காப்பாற்ற நீ ஒழுங்கானமுறையில் முயற்சிக்கவில்லை’ என்ற பார்வையா? ’எங்களைப் பொறாமை கண்கொண்டு பார்த்தாயே, எங்களுக்கான பிரச்னைகளைப் பார்த்தாயா? உயிர் பிழைப்பதற்கே போராடும் எங்களது அவலநிலை புரிகிறதா’ என்ற அழுத்தமான கேள்வியா?

கண்கலங்கியபடியே அதன் தலையை வருடிக் கொடுத்தார். அடுத்ததாய் ஒரு காகம் வந்த மர்ந்தது. அதனைத் தொடர்ந்து சிட்டுக்குருவி, மீன்கொத்தி என வகைக்கொரு பறவையாய் வந்து அவரை சூழ்ந்து அமர்ந்துகொண்டன.

‘உங்களுக்கெல்லாம் இன்னும் எப்பேர்ப்பட்ட மகிழ்ச்சியும் நிறைவும்தான் தேவைப்படுகிறது? எங்கள் ஒவ்வொரு வரின் வாழ்க்கைப் போராட்டங்கள் தெரியுமா? கிடைத்த வாழ்க்கையை வாழ்ந்துவிட்டுச் செல்ல நாங்கள் படும்பாடு புரிகிறதா உங்களுக்கெல்லாம்? பணம் என்ற ஒன்றைக் கண்டுபிடித்து வைத்துக்கொண்டு உல்லாச வாழ்க்கையை நோக்கி ஓடும் நீங்கள், பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே வாழ்வதற்கான போராட்டத்தை மட்டுமே வைத்திருக்கும் எங்களது வாழ்க்கையைப் பார்த்து பெருமூச்சு விடுவதில் என்ன நியாயம் இருக்கிறது?’ - ஒவ்வொரு பறவையின் பார்வையிலும் எண்ணிலடங்கா கேள்விகள், வார்த்தைகள்.

ரங்கநாதனிடமிருந்து ஏதேனும் வார்த்தைகள் வருமா என்ற எதிர்பார்ப்பில், அமைதியாய் அவரைப் பார்த்த படியே அமர்ந்திருந்தன அனைத்தும். அவரோ தலைகவிழ்ந்தே அமர்ந்திருந்தார்.

மைனா மட்டும் அருகே வந்து குனிந்து அவரது முகத்தைப் பார்த்தது. அதிகப்படியாகவே கண்கலங்கியிருந்தார் அவர். மைனாவின் தலையை மீண்டும் வருடிக்கொடுக்க எத்தணிக்க, அது முகத்தைத் திருப்பிக்கொண்டு வேகமாக விலகி பறந்து சென்றது. வேஷ்டியின் நுனியை எடுத்து கண்களை அழுத்தித் துடைத்தபடியே எழுந்தவர் தடுமாறி விழப் போனார்.

ரங்கநாதனின் கனவு மொத்தமாய் கலைந்துபோனது. படுத்தவர் அப்படியே உறங்கிப் போயிருக்கிறார்.

பொழுதுசாய்ந்து, பறவைகளின் ஒலி அதிகரித்திருந்தது. மெதுவாக எழுந்தமர்ந்தார். பத்மா காபியை கொண்டு வந்து நீட்ட, வாங்கிக்கொண்டு வெளியே வந்தவர், மரங்களையும் பறவைகளையும் பார்வையிட்டார்.

அந்தப் பார்வையில் வழக்கமான பொறாமை இல்லாமலிருந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com