0,00 INR

No products in the cart.

அதிரடி ஆய்வாளர்

சிங்கப்பெண் காவலர்கள்
குற்றம் – வழக்கு – விசாரணை – 2
– பெ.மாடசாமி
(முன்னாள் காவல்துறை உதவி ஆணையாளர்)
ஓவியம் : தமிழ்

சென்னை மாநகராட்சியில் 1973 – 1978ல் நடைபெற்ற, ‘மஸ்டர் ரோல் கேஸ்’ என்ற மாபெரும் ஊழல் வழக்கு இன்றுவரை பேசப்படுகிறது. மாநகராட்சியில் சில துறைகளில் தற்காலிகப் பணியாளர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு, ‘தினமும் சம்பளம்’ என்ற அடிப்படையில் அவர்களின் பெயர்கள், முகவரி, பணி விவரம், பணியாற்றிய நாட்கள் அடங்கிய பதிவேடுதான், ‘மஸ்டர் ரோல்’ என்பதாகும்.

பெ.மாடசாமி  (முன்னாள் காவல்துறை  உதவி ஆணையாளர்)

இதில் வராத நாட்களுக்கும், வேலை செய்யாதவர்களுக்கும் கூலி வழங்கியதாகக் காட்டி, இதனை தணிக்கை செய்யவேண்டிய அதிகாரி முதல் உயர் மட்டம் வரை ஒரு நெட்வொர்க்காக செயல்பட்டுள்ளது தெரியவர, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொண்டதில் ஊழல் தொகையின் மதிப்பு 1.26 கோடியாகும்.
இதில் 1978ல் சிறப்பு நீதிமன்றம் 71 பேருக்கு தண்டனை வழங்கியது. 1990ல் சென்னை உயர்நீதிமன்றம், ‘அனைவரும் நிரபராதி’ என்று மேல் முறையீட்டில் விடுவித்தது. 1994ல் ‘71 பேரும் குற்றவாளிகள்’ என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இவ்வழக்கின் விசாரணையில் சுவாரசியமான சம்பவங்களும் உண்டு.

ஒரே நபர் தனது பத்து விரல் ரேகைகளையும் பதித்து, பத்து நபர்களுக்கான கூலி பெற்றிருந்தது ஆச்சரியமும் அதிர்ச்சியுமாக இருந்தது.

விசாரணையின்போது விசாரணை அதிகாரியை அன்றைய முதல்வர் கருணாநிதி அழைத்து, “கட்சி ஆட்கள், வி.ஐ.பி.க்கள் கைது செய்யப்பட்டதை பேப்பரில் வந்த பிறகுதான் நான் தெரிந்துகொள்வது என்பதில்லாமல், அப்படிப்பட்ட நபர்களைக் கைது செய்யும்போது, உடனுக்குடனே எனக்குச் சொல்லி விடுங்கள்” என்று கூறினார். விசாரணையில் தலையீடு இல்லை என்பது வரவேற்கத்தக்க ஒன்று.

இன்றைக்கு சென்னை மாநகராட்சியில், ‘விஜிலென்ஸ் செல்’ என்றொரு பிரிவு காவல் உதவி ஆணையாளர் தலைமையில் இயங்கி வருகிறது. மாநகராட்சி ஊழியர்களின் செயல்பாடு சம்பந்தமாக, மாநகராட்சி ஆணையரிடம் வருகிற புகார்களை மாநகராட்சி ஆணையரின் உத்தரவுப்படி விசாரணை செய்வார்கள்.

2008ல் மாநகராட்சி விஜிலன்ஸ் செல்லில் இந்திராணி என்ற காவல் ஆய்வாளர் பணியில் இருந்தார். இவர் நடவடிக்கை சற்று வித்தியாசமானது. சரியாக முடிவெடுப்பதோடு, தைரியமாகச் செயலாற்றக்கூடியவர். இவர் வடசென்னையில் பெரவள்ளூரில் உதவி ஆய்வாளராகப் பணியில் இருந்தபோது, அம்மாவும் பெண்ணுமாக இரண்டு பேர் காவல் நிலையம் வந்தனர்.

‘தன்னுடைய அம்மா இரவு தூங்கும்போது அணிந்திருந்த 8 சவரன் நகையை காலையில் எழுந்து பார்த்தபோது காணவில்லை’ என்று அப்பெண் சொல்ல, அவர்களை விசாரணை செய்து புகாரை வாங்கிக்கொண்டு அனுப்பிவிட்டு, அரை மணி நேரத்தில் அவர்கள் வீட்டுக்குச் செல்கிறார்.

நகைக் காணாமல் போனதாகச் சொன்ன வீட்டை பார்வையிட்டார். இரவு உள் அறையில் கல்லூரியில் படிக்கும் பேத்தி தூங்குகிறாள். வராந்தாவில் உள்ள கட்டிலில் பாட்டியும் அவர் அருகே தரையில் மகளும் தூங்குகிறார்கள். கதவை உள்பக்கமாக தாழ்பாள் போட்ட பின்பு யாருமே உள்ளே வர முடியாது.

இரவு பாட்டி தலை வலிக்கிறது என்று சொல்ல, அவருக்குப் பேத்தி சுக்குக் காப்பி போட்டுக் கொடுத்த பின்பு, பாட்டி தூங்கி விடுகிறார். அம்மா இரவு படுக்கும்போது பாட்டி கழுத்தில் செயின் இருந்ததைப் பார்த்துள்ளார். ‘இரவு யாரும் உள்ளே வர முடியாத நிலையில், வராத நிலையில் என்ன நடந்திருக்கலாம்’ என்று யோசித்த ஆய்வாளர் இந்திராணி, பேத்தி ரோஜாவை அழைத்து சுக்குக் காப்பி கொடுத்த டம்ளரை கொடுக்கும்படி கேட்க, அதனைக் கழுவி விட்டதாகக் கூறுகிறார் ரோஜா. ‘பரவாயில்லை. அதனை பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும்’ என்று சொல்லிவிட்டு, “ரோஜா உன் பிரண்டு யாராவது வந்தாங்களா?” என்று கேட்க, “இல்லை” என்று சொன்னவள், “இந்த ஏரியாவில் யாரோ திருடன் இருக்கிறான் மேடம். போன வாரம் கூட என் பிரண்டு வீட்டில் திருடு போய்விட்டது” என்று கூற, “வீடு உள்புறமாகப் பூட்டியிருக்குதே ரோஜா?” என்று கேட்கிறார் இந்திராணி. “ஆமாம் மேடம்… அதுதான் எனக்கும் புரியல” என்று பதில் வருகிறது.

புறப்படும்போது ரோஜாவையும் அவளுடைய அம்மாவையும் அழைத்து, “திருடன் யார் என்று தெரிந்துவிட்டது; 6 மணிக்கு என்னிடம் பேசுங்கள்” என்று கூறி, கைப்பேசி எண்ணையும் கொடுத்துவிட்டு வருகிறார் இந்திராணி.

மாலை 5 மணிக்கு உதவி ஆய்வாளருக்கு ரோஜாவின் அம்மாவிடமிருந்து செல்போன் அழைப்பு. “மேடம் ரோஜாதான் செயினை எடுத்திருக்கிறாள். அவளே சொன்னாள்” என்று சொல்ல, திருடு முடிவுக்கு வந்தது.

ரோஜா ஏன் திருடினாள் என்று விசாரித்தனர். அவளோடு படிக்கும் பையனோடு பழகியதில், அவன் சில படங்களை எடுத்து வைத்து மிரட்டியதால்தான் ரோஜா இதுபோன்று திருடியிருப்பது தெரிந்தது. சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு ரோஜாவின் எதிர்காலத்தை கேள்விக்குறியிலிருந்து, ஆச்சரியக்குறியாக்கியவர்தான் இந்த இந்திராணி.

மாநகராட்சியில் உள்ள தன்னுடைய அலுவலகத்திற்கு மதியம் 1 மணிக்கு உள்ளே நுழைகிறார் இந்திராணி. தான் விசாரணைக்கு வரச் சொல்லியிருந்த கஸ்தூரியும் அவருடன் மற்றொருவரும் வந்திருப்பது தெரிந்தது.

அதிக நேரம் காத்திருந்ததால் அவர்களுக்கு மதிய உணவு வாங்கிக் கொடுக்கிறார். கஸ்தூரியை விசாரணை செய்கிறார். கஸ்தூரிக்கு திருமணமாகி, கணவர் இறந்து விடுகிறார். குழந்தைகள் கிடையாது. அவருடைய பெரியப்பாவை கடைசி காலத்தில் கவனித்துக் கொண்டதால், திருவல்லிக்கேணி பகுதியில் யானைக்குளம் என்ற தெருவில் உள்ள வீட்டை பெரியப்பா கஸ்தூரிக்குக் கொடுக்கிறார். கஷ்டப்படும் அண்ணனை அந்த வீட்டின் ஒரு பகுதியில் தங்கிக்கொள்ள அனுமதிக்கிறார்.

கஸ்தூரியின் அண்ணன், சிலரின் உதவியோடு கஸ்தூரியின் பெயரில் இருந்த வரி கட்டும் உரிமையை தன் மனைவி பெயருக்கு மாற்றிக் கொண்டார். இது தவறு என்றும் அதனை முன்பு போல் தன் பெயருக்கு மாற்றம் செய்து தர வேண்டும் என்பதும்தான் கஸ்தூரியின் புகார்.

கஸ்தூரி சொன்ன விவரங்களையும் அவர் வைத்திருந்த ஆவணங்களையும் முழுமையாகப் பார்வையிட்டார் இந்திராணி. கஸ்தூரியுடன் வந்தவர் சென்னை உயர் நீதிமன்ற சீனியர் வழக்கறிஞர் வெங்கடேசன் என்பதும், கஸ்தூரி அவருடைய குமாஸ்தா என்பதால் அவர் வந்திருந்தார் என்பதும் தெரிந்தது. தான் பெரிய வழக்கறிஞர் என்பதை அவர் பெரிதாக வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.

அவர்களைத் தன் அலுவலகத்தின் இருக்கும்படி சொல்லிவிட்டு, சம்பந்தப்பட்ட வரி செலுத்தப்படும் பிரிவிற்குச் சென்று, அங்கிருந்த ஏ.ஆர்.ஓ.விடம் பெயர் மாற்றம் எப்போது நடந்தது என்பதைத் தெரிந்துகொண்டு, அதுசமயம் இருந்த ஒரு அதிகாரியை போய் பார்த்தார் இந்திராணி. நியாயமான அதிகாரியான அவர், ‘எந்தவித ஆவணமும் ஆதாரமாக இல்லாமல் இதுபோன்ற காரியத்தைத் தான் செய்வதில்லை; செய்யவுமில்லை’ என்று உறுதியாகக் கூறிவிட்டார்.

ய்வாளர் தன்னுடைய விசாரணையை அவருக்கே உரிய அதிரடி பாணியில் ஆரம்பிக்க, ஆவணத்தில் கஸ்தூரியின் பெயரை அவருடைய அண்ணன் மனைவி பெயருக்குத் தவறாக மாற்றியவர் யார் என்பதும் அந்த அதிகாரி தற்சமயம் மாறுதலாகி மற்றொரு மண்டலத்தில் பணியில் இருப்பதும் தெரிய வந்தது. அவரை உடனடியாக விசாரனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தகவல் பறந்தது. அவரோ, மருத்துவ விடுப்பில் இருந்தார்.

ஆய்வாளர் இந்திராணி

காவல் நிலையத்தில் மட்டுமல்ல; மாநகராட்சி விஜிலன்ஸ் பிரிவிலும் ஆய்வாளர் இந்திராணியின் அதிரடி நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஊழியர்கள் மத்தியில் நன்கு தெரியும். அதனால் பிரச்னையில் மாட்டிக்கொள்ள விரும்பாது விடுபட்டால் போதும் என்கிற நிலையில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட, பிரச்னைக்குரிய ஆவணத்தை மீண்டும் கஸ்தூரியின் பெயருக்கே மாற்றம் செய்து, மாலை 6 மணிக்கு அச்சான்றினை கஸ்தூரியிடம் கொண்டு வந்து கொடுத்தனர். ‘ஆறு மாதங்கள் ஆனாலும் நடக்குமா?’ என்ற கேள்விக்குரிய ஒரு செயல், ஆறே மணி நேரத்தில் முடிந்ததைப் பார்த்து கஸ்தூரியும் அவருடன் வந்த வழக்கறிஞரும் நம்ப முடியாமல் திகைத்து நின்றனர்.

இன்றைக்கும் கஸ்தூரி கோயிலுக்குச் செல்லும்போதெல்லாம், நன்றிக்கடனாக கோயில் பிரசாதத்தை ஆய்வாளருக்குக் கொடுத்து, அவரைப் பார்த்துவிட்டுச் செல்கிறார்.
(அடுத்தது…)

(உண்மை சம்பவத்தின் அடிப்படையில்
கற்பனைப் பெயர்களுடன் எழுதப்பட்டது.)

பெ. மாடசாமி
பெ. மாடசாமி நெல்லையில் சிங்கம்பட்டி சொந்த ஊர். 34 ஆண்டுகள் தமிழக காவல் துறைப் பணி. மனைவி பகவதி. “காக்கியின் கதிர் வீச்சு”, காவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள், “வீடு தேடி வரும் ஆபத்து, பெண்கள் பாதுகாப்பு”. ரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்”. “ மாணவச் செல்வங்களே மாற்றி யோசியுங்கள்”... இவை படைப்புகள்.பள்ளி கல்லூரி நாட்களில் தமிழில் மேடைப் பேச்சு அனுபவம். ‘வாழும் வரை தமிழுக்காக வாழ்வது’ இவரது பணி.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

பறக்கும்  பாவைகள்!

0
‘எங்களாலும் பறக்க முடியும்’ -ஜி.எஸ்.எஸ். பகுதி - 7 ரஃபேல் போர் விமானத்தினை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, ‘டஸால்ட் ஏவியேஷன்’ நிறுவனம் தயாரிக்கிறது. ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 3,700 கிலோ மீட்டர் தூரத்திற்குச் செல்லக்...

பாட்டொன்று கேட்டேன்!

இது மங்கையர்மலரின் விவிதபாரதி... பகுதி -10 மங்கையர் மலர் விவித பாரதியில் இன்று நாம் கேட்க விரும்பும் பாடல்... 1964 ஆம் ஆண்டு வந்த தேவர் பிலிம்ஸின் "வேட்டைக்காரன் "படத்தில் கேவி மகாதேவன் இசையில் கவியரசு...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

 பாகம் - 4   -சுசீலா மாணிக்கம்   திருக்குறளின் நான்காம் அதிகாரம் 'அறன் வலியுறுத்தல்' "அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது  பொன்றுங்கால் பொன்றாத் துணை" பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப்...

இனியில்லை கடன்!

1
சென்ற வார தொடர்ச்சி... சிறுகதை: நாமக்கல் எம்.வேலு ஓவியம்: தமிழ் அதற்கப்புறம் ராமசாமியிடம் இருந்து எந்த செய்தியும் இல்லை.  எப்போது பணம் கொடுப்பாய் என்று எப்போவும் போல சோமசுந்தரமும் போன் போட்டு கேட்கவுமில்லை.  ஆபரேசன் நல்லபடியாய் நடந்ததா,...

குரு அருள் திரு அருள்!

பகுதி -2 -நளினி சம்பத்குமார் ஓவியம்; வேதா அனைத்தையும் அருளிடும் குருவின் பார்வை சமஸ்க்ருதத்தில் சுபாஷிதம் அதாவது நல்ல அர்த்தங்கள் பொருந்திய வாக்கியம் ஒன்று உண்டு. குருவின் பார்வை என்பது 1011 பார்வைக்குக் கூட ஈடாகாது, அதற்கும்...