0,00 INR

No products in the cart.

அனுமத் பிரபாவம்

– தொகுப்பு : எம்.கோதண்டபாணி
ஓவியம்: சேகர்

வெற்றி(லை) வழிபாடு

 அன்னை சீதா பிராட்டியைத் தேடி அசோக வனத்துக்குச் சென்றான் அனுமன். அங்கே ராவணனால் சிறைபிடிக்கப்பட்டு சிம்சுகா மரத்தடியில் சோகமே உருவாக அமர்ந்திருந்தார் சீதா தேவி. ஸ்ரீராமர் குறித்துக் கூறியும், அவர் கொடுத்தனுப்பிய அடையாளங்களைக் காண்பித்தும் சீதா பிராட்டியாரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானார் அனுமன்.

பொதுவாக, பெரியவர்களை சிறியவர்கள் யாராவது நமஸ்கரித்தால் அப்போது பெரியவர்கள் அட்சதை தூவி அவர்களை ஆசிர்வதிப்பது வழக்கம். அன்னை சீதா தேவியை, அனுமன் நமஸ்கரித்தபோது, அந்த வனத்தில் அட்சதையோ அல்லது எந்தப் பூக்களும் பிராட்டியாருக்குக் கிடைக்கவில்லை.

அப்போது, அருகே கொழு கொம்பு ஒன்றில் படர்ந்திருந்த வெற்றிலைக் கொடியிலிருந்து வெற்றிலைகளைப் பறித்து அனுமன் தலை மீது துவி ஆசிர்வதித்தாள் சீதா தேவி. அந்த வெற்றிலைகளை ஒன்றாகச் சேர்த்து மாலையாகக் கட்டிய அனுமன், அதை அன்னை சீதா பிராட்டியிடம் கொடுத்து தனது கழுத்தில் அணிவிக்கும்படி கேட்டுக் கொண்டான்.

சீதா தேவியும் மகிழ்வுடன் அந்த மாலையை அனுமன் கழுத்தில் போட, அதையே தமக்குக் கிடைத்த வெற்றி மாலையாக ஏற்று சந்தோஷமுடன் ஸ்ரீராமரிடம் திரும்பினான் அனுமன். இதனாலேயே எந்த ஒரு காரியத்திலும் வெற்றியை வேண்டும் பக்தர்கள், அனுமனுக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபாடு மேற்கொள்கின்றனர்.

அனுமனின் இசைத் திறமை!


ரு சமயம் வானுலக இசை மேதைகளான நாரதருக்கும் தும்புருவுக்கும் தங்களில் யார் சிறந்தவர் என்பதில் போட்டி ஏற்பட்டது. இதை அறிந்துகொள்ள இருவரும் கயிலாயம் சென்றனர். வழியில், அனுமன் ஒரு பாறையின் மீது அமர்ந்து, ஸ்ரீராம நாமத்தை ஜபம் செய்து கொண்டிருந்தார். ஜபம் கலைந்த அனுமன், “இசை வல்லுநர்களே, எங்கே கிளம்பி விட்டீர்கள்” என்றார். உடனே இருவரும் தங்களுக்குள்ளான சர்ச்சையைக் கூறினர்.
அதைக்கேட்ட அனுமன், “சரி, நான் உங்கள் இசைக்கருவியை வாசிக்கலாமா?” என்றார்.

நாரதரும் தும்புருவும் ஒப்புக்கொள்ள, அனுமன் இசைக்கத் தொடங்கினார். சற்று நேரத்தில் அண்ட சராசரமும் அப்படியே உறைந்து போனது. அசையும் பொருள்கள் அசையாமல் நின்றன. அகில உலகமே தனது இயக்கத்தை மறந்துபோனது. அனுமன் அமர்ந்திருந்த பாறை உருகி ஓடத் தொடங்கியது. இதைக் கண்டு நாரதரும் தும்புருவும் வெட்கித் தலை குனிந்தனர்.

சற்று நேரத்தில் இசைப்பதை நிறுத்திய அனுமன், இசைக்கருவிகளை அவர் அமர்ந்திருந்த பாறையின் மீது வைத்தார். உடனே உருகிய பாறைக்குழம்பு கெட்டிப்பட்டு அதில் அவ்விருவரின் இசைக்கருவிகளும் எடுக்க முடியாதபடி ஒட்டிக்கொண்டன. அப்போது அனுமன், “இசை ஞானியரே, உங்கள் இசைக்கருவிகள் இப்போது இந்தப் பாறையில் ஒட்டிக் கொண்டு விட்டன. நீங்கள் இருவரும் இப்போது இதில் வாசியுங்கள்! யார் இசைக்கு இந்தப் பாறை உருகுகிறதோ, அவரே சிறந்தவர் என முடிவு செய்து கொள்ளலாம்” என்றார்.

இருவரும் அனுமனின் பாதம் பணிந்து, “சுவாமி, கல்லையும் கரைய வைக்கும் திறமை எங்களுக்கு இல்லை. உங்கள் இசைக்கு முன் நாங்கள் ஒன்றுமில்லை. உங்களது இசை எங்கள் கண்களைத் திறந்து விட்டது” எனக் கூறி, வணங்கி நின்றனர்.

அனுமன் மீண்டும் இசைக்க, உறைந்த பாறை மீண்டும் இளகி, இசைக்கருவிகள் அவர்களுக்குக் கிடைத்தது. அதை இருவரிடமும் கொடுத்த அனுமன், “முனிவர்களே! வித்யா கர்வம் கூடாது! அடக்கமே சிறந்த குணம்! இதை உணர்ந்து இறைவனைப் பாடுங்கள்!” என்று கூறினார்.
கும்பகோணம், ஸ்ரீ ராமஸ்வாமி கோயிலில் ஸ்ரீ அனுமன் வீணையுடன் காட்சி தருகின்றார்.

அர்ஜுனன் ரதம்


ரு சமயம் ராமேஸ்வரம் பகுதியில் சஞ்சரித்தான் அர்ஜுனன். அப்போது அங்குள்ள ஒரு வனப்பகுதியில் அனுமனை அவன் சந்தித்தான். அங்கு வானரங்களின் உதவியுடன் ஸ்ரீராமர் கட்டிய பாலத்தைக் கண்ட அர்ஜுனன், “இந்தப் பாலத்தைக் கட்டுவதற்கு இத்தனை வானரங்கள் தேவையில்லை. நானாக இருந்திருந்தால், நான் ஒருவனே இதை எனது வில் அம்பினால் கட்டி முடித்திருப்பேன்” என்றான்.

அதைக் கேட்ட அனுமன், “உனது அம்புகளால் பாலம் அமைத்திருந்தால் அது என் ஒருவன் எடையையே தாங்கி இருக்காது” என்று விமர்சித்தார். உடனே அர்ஜுனன், “இப்போது நான் எனது வில் அம்பு கொண்டு ஒரு பாலம் கட்டுகிறேன். அதில் நீ ஏறும்போது அது சிதைந்தால், நான் இங்கேயே தீக்குளித்து மடிகிறேன்” என சவால் விட்டான்.

அதேபோல், அர்ஜுனன் தனது வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகளால் ஒரு பாலத்தை அமைத்தான். அதுவரை அனுமன் ஸ்ரீராம நாம ஜபத்தை பாராயணம் செய்து கொண்டிருந்தான். அம்புப் பாலம் கட்டி முடிக்கப்பட்டவுடன் அதில் அனுமன் தனது ஒரு காலை மட்டும்தான் வைத்தான். அடுத்த நொடியே அந்தப் பாலம் நொறுங்கி விழுந்தது. குழப்பமுற்ற அர்ஜுனன், தனது உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெடுத்தான்.

அப்போது அங்கு தோன்றிய ஸ்ரீகிருஷ்ணர், “நடுவர் இல்லாத எந்தப் போட்டியும் நியாயமாகாது. அதனால் இப்போது எனது முன்னால் அர்ஜுனன் அம்புப் பாலம் அமைக்கட்டும். பிறகு சோதிக்கலாம்” என்று கூறினார். இப்போது ஸ்ரீகிருஷ்ணரை வணங்கிய பிறகு அம்புப் பாலம் அமைத்தான் அர்ஜுனன். முன்பு ஸ்ரீராம நாம ஜபத்தை உச்சரித்து பாலத்தை உடைத்த அனுமன், இம்முறை சற்று அசட்டையால் அதைச் செய்யவில்லை. இப்போது அனுமனிடம் அந்தப் பாலத்தின் மீது ஏறி சோதிக்கச் சொன்னார் ஸ்ரீகிருஷ்ணர். அம்புப் பாலத்தின் மீது ஏறிய அனுமன், நடந்தும் குதித்தும் பார்த்தும் அது சற்றும் சேதமடையவில்லை. தமது தோல்வியை ஒப்புக்கொண்ட அனுமன் குருக்ஷேத்ரப் போரின்போது அர்ஜுனனுக்கு உதவுவதாக வாக்களித்தான்.

அதன்படி, போரின்போது அர்ஜுனனின் தேர் கொடியில் தங்கியிருந்து போரின் நிகழ்வுகள் அனைத்தையும் கவனித்தான். போரின் கடைசி நாளில் தேரை விட்டு இறங்கி வரும்படி அர்ஜுனனிடம் கூறினார் ஸ்ரீகிருஷ்ணர். கூடவே அனுமனையும் மனதால் தியானித்து தனது நன்றியைத் தெரிவித்து கொடியிலிருந்து விலகும்படி கேட்டுக்கொண்டார் ஸ்ரீகிருஷ்ணர். அர்ஜுனன் தேரை விட்டு இறங்கிய அடுத்த நொடி, அந்தத் தேர் தீப்பிடித்து எரிந்து வெடித்து நொறுங்கியது.

இதைக் கண்ட அர்ஜுனனுக்கு வியப்பு ஏற்பட்டது. அப்போது ஸ்ரீகிருஷ்ணர் அவனிடம், “அனுமனின் அனுக்கிரகத்தாலேயே இத்தனை பெரிய போர் வீரர்கள், தங்களது சக்தி மிகுந்த பாணங்களால் இந்த ரதத்தைத் தாக்கியபோதும் அது எரிந்து சேதமுறாமல் நிலைத்து நின்றது. அனுமன் இந்த ரதக் கொடியில் இல்லாது போயிருந்தால் இந்த வெற்றி சாத்தியமாகி இருக்காது” என்று உரைத்தார்.

ஜெய் அனுமான்


னுமனின் தீவிர பக்தன் ஒருவனுக்கு, ஆஞ்சனேயரோடு ஒரு நாளாவது சொக்கட்டான் விளையாட வேண்டும் என்பது நீண்ட நாளைய ஆசை. அவன் தினமும் தனது பூஜையை முடித்ததும், அனுமனிடம் இதையே தனது வேண்டுதலாக வைப்பான்.

ஒரு நாள் பக்தனின் ஆசையை நிறைவேற்ற திருவுளம் கொண்ட அனுமன், அவனுக்குக் காட்சி தந்து, அவனோடு சொக்கட்டான் விளையாட இசைந்தார். கூடவே, “நான் விளையாட்டில் உனக்கு விட்டுக்கொடுக்கவே மாட்டேன். அதன் பிறகு நீ தோற்றுவிட்டால் என்னைக் குறை கூறக் கூடாது” என்ற நிபந்தனையையும் வைத்தார்.

அதற்கு ஒப்புக்கொண்ட பக்தனோடு சொக்கட்டான் விளையாடத் தொடங்கினார் அனுமன். ஒவ்வொரு முறை காயை உருட்டும்போதும், ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கூறிவிட்டு, காயை உருட்டினார் அனுமன். ஆனால் அனுமனின் பக்தனோ, ‘ஜெய் அனுமான்’ என்று கூறிவிட்டு ஒவ்வொரு முறையும் காயை உருட்டி விளையாடினான்.

அந்த விளையாட்டில் ஒவ்வொரு முறையும் பக்தனே வெற்றி பெற்றான். ‘சரி… அடுத்த முறை நாமே வெற்றி பெறுவோம்’ என்ற நம்பிக்கையோடு அனுமனும் பலமுறை அவனுடன் விளையாட்டைத் தொடர்ந்தார். ஆனால், ஒவ்வொரு முறையும் பக்தனே வெற்றி பெற்றுக்கொண்டு இருந்தான்.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அனுமன், விளையாட்டில் தான் தோற்றதைப் பற்றி கவலைகொள்ளாமல், ‘ஸ்ரீராம நாமம்’ தோற்று விட்டதே என்று கவலை கொண்டார். அதை ஸ்ரீராமரிடம் முறையீடாகவும் வைத்துத் தொழுதார்.

அப்போது அங்கே தோன்றிய ஸ்ரீராமர், “அஞ்சனை மைந்தனே, கவலை கொள்ளாதே. நீயோ எனது பக்தன். அதனால் எனது சக்தி மட்டும் உனக்குள் இருக்கிறது. ஆனால், உனது பக்தனான அவனிடம் நம் இருவரின் சக்தியும் இணைந்துள்ளது. இதுவே அவனது வெற்றிக் காரணம்” என்று கூறினார்.

அதைக்கேட்டு மனம் நெகிழ்ந்த அனுமன், மிகவும் சந்தோஷத்துடன் அந்த பக்தனுக்கு ஆசி வழங்கிவிட்டுச் சென்றார்.

ஸ்ரீ அனுமன் சாலீஸா


ரு சமயம் முகலாயப் பேரரசர் அக்பர், ஸ்ரீராம பக்தரான துளசிதாசரை தமது அரசவைக்கு அழைத்து, “நீர் பெரிய ராம பக்தர் என்று சொல்லிக் கொள்கின்றீர். தவிர, ஸ்ரீராமரின் பேரால் பல அற்புதங்களைச் செய்கிறீர் என்று பலரும் சொல்கின்றார்கள். இப்போது, இங்கே எனக்காக ஒரு அற்புதத்தை நீங்கள் செய்து காண்பிக்க வேண்டும்” என்று சொன்னார்.

அமைதியாக அதைக் கேட்டுக்கொண்டிருந்த துளசி தாசர், “நான் ஸ்ரீராமனின் பக்தன் மட்டுமே. மாயாஜாலக்காரன் அல்ல” என்று கூறினர். இதைக் கேட்டு மிகவும் கோபப்பட்ட அக்பர், அவரை சிறையில் அடைத்தார். சிறை வாசத்தையும் ஸ்ரீராமனின் சித்தம் என்று எடுத்துக்கொண்ட துளசிதாசர், தினம் ஒரு பாடலாக இயற்றி அனுமனைப் போற்றி வழிபட்டார்.

இதுபோன்று நாற்பது பாடல்களை இயற்றி அவர் வழிபட்டபோது, அன்று திடீரென்று எங்கிருந்தோ வந்த ஒரு பெரிய வானரப் படை அரண்மனையை முற்றுகையிட்டு, துவம்சம் செய்ய ஆரம்பித்தது. படை வீரர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் அந்த வானரப் படையை அவர்களால் சமாளிக்க முடியாமல் திக்கித் திணறிப் போனார்கள்.

அப்போது துளசிதாசரின் பெருமையை உணர்ந்த ஒருசிலர் அக்பரிடம் சென்று, “ஸ்ரீராம பக்தரான துளசிதாசரை நீங்கள் சிறையில் அடைத்துக் கொடுமைப்படுத்துவதால்தான், ஆஞ்சனேயருக்குக் கோபமேற்பட்டு இப்படி நடைபெறுகிறது. துளசிதாசரை நீங்கள் விடுவித்தால் இந்தப் பிரச்னை உடனே சரியாகி விடும்” என்று ஆலோசனை கூறினர்.

அதனையடுத்து, துளசிதாசரிடம் வருத்தம் தெரிவித்த மன்னர் அக்பர், அவரை சிறையிலிருந்து விடுவிக்கவும் செய்தார். அடுத்த கணமே மிகப்பெரிய அளவில் தொல்லை கொடுத்து வந்த வானரப்படைகள் மாயமாய் மறைந்தன.

துளசிதாசர் சிறையில் இருந்தபோது ஆஞ்சனேயரைப் போற்றிப் பாடிய பாடல்கள்தான், ‘ஸ்ரீ அனுமன் சாலிஸா’ என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பாடல்களை தினமும் உண்மையான பக்தியோடு பாராயணம் செய்தால் எப்பேர்ப்பட்ட துன்பமும் காணாமல் போகும்.

2 COMMENTS

எம்.கோதண்டபாணி
கோதண்டபாணி 32 ஆண்டு கால பத்திரிகை பணி. கல்கி குழுமத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக தீபம் இதழின் உதவி ஆசிரியர் பணி. ஆன்மீகக் கட்டுரைகள் எழுதுவது... இந்து சமய பெருமையை எழுதுவது பிடித்தம். Ponniyin Selvan நாவலில் வந்த கோயில்களை தொகுத்து PONNIYIN PAATHAIYIL எனும் தொடர் வெளியாகி தனி புத்தகமாக தயாராகிக் கொண்டிருக்கிறது.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

“நெசவும் கவிதையும் என் இரு கண்கள்” –நெசவுக் கவிஞர் சேலம் சீனிவாசன்

0
- சேலம் சுபா  “நான் நெசவாளர் என்று சொல்லிக்கொள்வதில் பெருமையும் நெசவுக் கவிஞர் என்று அறியப்படுவதில் பெருமிதமும் கொள்கிறேன்...” என்று தலைநிமிர்ந்து சொல்லும் சீனிவாசன் தன்னை வளர்த்து, அடையாளம் தந்த குலத்தொழிலை உலகறியச் செய்யும் முயற்சியில்...

“ரஜினி சார் கூட நடிக்கணும்”

- ராகவ் குமார் ராட்ஷசன் படத்தில் அறிமுகம் ஆகி தனுஷின்  ‘அசுரன்’ படத்தில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த அம்மு அபிராமி ‘பேட்டரி’ படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.  அம்முவை சந்தித்துப் பேசினோம்: எப்படி இருக்கீங்க...

சமூக சேவகியாக அரசியலில் நுழைந்தேன்!

0
களஞ்சியம்! - மஞ்சுளா ரமேஷ் மங்கையர் மலரின் 42 வருட பயணத்தில், எண்ணற்ற கதைகள், கட்டுரைகள் வந்திருந்தாலும்,  அவற்றுள்  சில எப்போது படித்தாலும், காலத்தால் அழியாத அழகிய வரிகளாக  அமைகிறது. அந்த வகையில்  பிப்ரவரி -...

புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புரட்சி!

0
டாக்டர் லூயி அல்பெர்டோ தலைமையில் ஒரு சாதனை! -ஜி.எஸ்.எஸ். ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த ஒரு டஜன் பேருக்கும் பலவித சோதனைகள் நடத்தப்பட்டன.   விளைவு வியப்பூட்டியது.  மருத்துவர்கள் ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள். உண்மையை அறிந்ததும் நோயாளிகள்...

சேமிப்பு, முதலீடு என்றால் என்ன? முதலீடு செய்யத் தொடங்குவது எப்படி?

சேமிப்பு: உங்களது தேவை போக, தனியாக சேமித்து வைக்கப்பட்ட பணம். இது அப்படியே இருக்கும். இது வளராது. உதாரணமாக, வீட்டில் தனியாக, பணப் பெட்டியிலோ,அஞ்சரைப் பெட்டியிலோ சேமிக்கப்பட்ட பணம். முதலீடு: உங்களது தேவை போக,...