0,00 INR

No products in the cart.

எப்படிப் பிறந்தாள் புதுமைப் பெண்?

அத்தியாயம் – 4

– நிரஞ்சன் பாரதி

தாய்மை என்பது தாய் என்பவளோடு மட்டும் தொடர்புடையதன்று; பிற உயிர்களின் வலியைத் தன் வலியாய் உணரும் உள்ளங்கள் அனைத்தும் தாய்மை கொண்ட உள்ளங்களே.

தேசத்தை வெறும் மண்ணாகப் பார்க்காமல், மண் மாதாவாகப் பார்த்துப் பரவிய பாரம்பரியம் நம்முடையது. பாரதம் என்பது நம்மைப் பொறுத்தவரை ஓர் உயிர்ப்பொருள். அத்தகைய பாரத மணித்திருநாட்டின் மீது பாரதியாருக்குத் தாய்மை உணர்வு வரம்பின்றியிருந்தது. அதனால்தான் அவள் அடிமைத்தளைகளால் அவதிப்படுவதைக் காணச் சகியாமல், விடுதலை வாங்கித் தர அவர் பரபரத்தார். அவருடைய படைப்புகளில் இந்த அத்தியாவசியமான அவசரத்தை நம்மால் நன்கு உணர முடியும்.

பாங்கர்ஸ்ட் அம்மையார

ங்களுக்கும் வாக்குரிமை வேண்டும் என இங்கிலாந்தில் பாங்கர்ஸ்ட் அம்மையார் தலைமையில் பல பெண்கள் போராடிக்கொண்டிருந்த சமயம் அது. உரிமையைப் பெற சிறை செல்லவும், உயிரை விடவும் அவர்கள் சித்தமாயிருந்தனர். இத்தகு பெண்களை இந்தியப் பெண்கள் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும் என பாரதியார், ‘இந்தியா’ இதழில் எழுதினார். இந்தியாவை அடிமைப்படுத்திய இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண்களையே முன்னோடியாகக் கொள்க என்று எழுத எப்பேர்ப்பட்ட நேர்மையும் வீர அறமும் வேண்டும்?!

பாரதியார் அத்தோடு நிற்கவில்லை…
சீன தேசத்துப் பெண்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த பெண்ணீயப் போராளியும் கவிஞருமான சியூ சீன் மீது அவரது கவனம் சென்றது. இந்த வீரப் பெண்மணியைத் தமிழ்நாட்டு மாதர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்று அவர் விரும்பினார். ASIATIC REVIEW பத்திரிகையில் வெளிவந்திருந்த சியூ சீனின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து முக்கியமான பகுதிகளை அவர் தமிழில் மொழிபெயர்த்தார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், சீனாவில் பெண்ணடிமைத்தனம் மிதமிஞ்சி இருந்தது. காலடிகளைக் கயிற்றால் கட்டுதல், கல்வி உரிமை மறுத்தல் உள்ளிட்டவற்றால் பெண்கள் முடக்கப்பட்டனர்.

இச்சூழலில்தான், 1875ஆம் ஆண்டில் சீனாவின் ஷாவ் சிங் பட்டணத்தில் சியூ சீன் பிறந்தார். பதினெட்டாம் வயதில், ‘லாங்’ என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் பிறந்தனர்.

அப்போது சீனாவில் பாக்ஸர் கலகம் ஏற்பட்டு நாட்டுக்குள் அன்னியப் படைகள் புகுந்தன. இதைக் கண்டு வெகுண்டெழுந்த சியூ சீன் நாட்டுக்காகத் தன்னால் போராட முடியவில்லையே என்று மிகவும் வருத்தப்பட்டார். பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அவரைக் கல்லாக்கி, அசைய விடாமல் செய்தன. சில ஆண்டுகள் கழித்து கணவருடன் மனக்கசப்பு ஏற்பட, அவர் விவாகரத்து பெற்றுக்கொண்டார்.

ஆனால், அவருக்குள் இருந்த போர்க்குணம் அவருக்கு விசையாக மாறியது. ஐரோப்பிய நவீனக் கல்வியைக் கற்பிக்கும் ஆசிய நாடுகளில், ஜப்பான் அப்போது முதன்மையானதாக இருந்தது. இதனால் 1904ல் அங்கு சென்று கல்வி கற்ற சியூ சீன், 1905ல் சீனா திரும்பினார். அக்காலகட்டத்தில் மஞ்சுப் படைகள் சீனாவில் கொடுங்கோல் ஆட்சியை நடத்திக் கொண்டிருந்தன. அரசை எதிர்க்கத் துணிந்த சியூ சீன், பல புரட்சிகர அமைப்புகளில் தன்னை இணைந்துக்கொண்டார்.

பிறகு ஷாவ் சிங் நகரத்தில் ஒரு கல்விச்சாலையை நிறுவி, அங்கே மாணாக்கர்களுக்கு ரகசியமாகப் போர்ப் பயிற்சி அளித்தார். ஒரு நாள் மஞ்சுப் படைகள் ஷாவ் சிங் நகரில் திடீரெனப் புகுந்து சியூ சீன் நடத்திய கல்விச்சாலையைச் சுற்றி வளைத்தன. மாணவர்கள் மஞ்சுப் படைகளுடன் போர் செய்தனர். இதில் மஞ்சுப் படையினர் பலர் மாண்டனர். மாணவர்களில் இருவர் உயிர் நீத்தனர். இறுதியில், சியூ சீன் மஞ்சுப் படையினரால் கைது செய்யப்பட்டார். மறுநாள் விசாரணையில் வாக்குமூலம் அளிக்கும்படி அதிகாரிகள் வற்புறுத்தியபோதும், சியூ சீன் ஒன்றும் சொல்லவில்லை. தன் முயற்சிகள் தோல்வியில் முடிந்ததை வெளிப்படுத்தும் விதமாக, ‘மாரி நாள் காற்றும் மழையும் ஒருவரைத் துன்பத்தால் இறக்கச் செய்கின்றனவே’ என்று ஒரு கவிதை எழுதிக் காண்பித்தார். அதைத் தொடர்ந்து அவருக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. தூக்குமேடையில் கூட அவரது முகம் சாந்தமாக ஒளிர்ந்துகொண்டிருந்தது. பலர் முன்னிலையில் அவரது தலை துண்டிக்கப்பட்டது. அந்த ஒரு நொடியில் பல பெண்களின் நெஞ்சங்களில் புரட்சித்தீ பற்றிக்கொண்டது.

சியூ சீன்

சியூ சீனின் தியாக சரித்திரத்தைப் பதிவு செய்த பாரதியார், பெண்கள் முன்னிலையில் சியூ சீன் நிகழ்த்திய ஒரு சொற்பொழிவையும் தமிழில் மொழிபெயர்த்தார்.

‘‘ஸ்திரீகளாகிய நம்மைச் சிறு குழந்தைப் பிராய முதலாகவே பாதங்களைக் கட்டுதல் என்ற வழக்கத்தால் எண்ணுதற்கரிய துன்பங்களுக்காளாக்கி விட்டார்கள். இந்த முறையால் நமது பாதம் வற்றிச் சதையும், எலும்பும் குறுகிச் சிதைந்துபோகின்றன. இதனால் நம்முடல் பலமிழந்து உழைப்பதற்குத் தகுதியற்றதாய் விடுகிறது. எல்லாக் காரியங்களிலும் நாம் ஆண் மக்களைச் சார்ந்து நிற்க நேரிட்டது.

‘‘… இன்று எனது ரத்தம் கொதிப்புற்று நிற்கிறது. உங்களுடைய ரத்தத்தையும் கொதிக்கும்படி செய்ய விரும்புகிறேன். முதலாவது, இனிமேல் எல்லா ஸ்திரீகளும் சூர்ணம் தடவுவதையும் முகப்பூச்சுகள் பூசுவதையும் நிறுத்திவிட வேண்டும். மோஹப்படுத்த வேண்டுமென்று பொய்ப் பூச்சுகள் பூசக் கூடாது. ஒவ்வொரு மனுஷ்ய ஜந்துவுக்கும் கடவுள் கொடுத்த முகமிருக்கிறது. பாதங்களைக் கட்டும் நீச வழக்கத்தை உடனே வேரோடு களைந்து எறிந்து விட வேண்டும்.”

சியூ சீன் வரலாற்றின் மூலம், தமிழகப் பெண்களின் நரம்புகளில் முறுக்கேற்றிய பாரதியார், அம்மாதரசியின் ஒரு பாடலையும் தமிழில் மொழிபெயர்த்தார்.
‘விடுதலைக்கு மகளி ரெல்லோரும்
வேட்கை கொண்டனம்; வெல்லுவமென்றே
திட மனத்தின் மதுக் கிண்ணமீது
சேர்ந்து நாம் பிரதிக்கினை செய்வோம்
உடையவள் சக்தியாண் பெண்ணிரண்டும்
ஒரு நிகர் செய் துரிமை சமைத்தாள்,
இடையிலே பட்ட கீழ் நிலை கண்டீர்
இதற்கு நாமொருப்பட்டிருப்போமோ…?

சீனாவை மட்டும் பார்க்காமல், இந்தியாவுக்கு அருகில் இருக்கும் சிறிய நாடுகளையும் பாரதியார் கூர்ந்து கவனித்து வந்தார். அங்கே பெண்களின் நிலை சிறந்திருப்பதைப் பற்றி நம் நாட்டுப் பெண்கள் அறிய வேண்டும் என, ‘சக்கரவர்த்தினி’யில் கட்டுரை எழுதினார்.

பெளத்த மார்க்கம் பின்பற்றப்பட்ட நாடான பர்மாவில் பெண்களை பலவந்தப்படுத்தி மணம் செய்து வைக்கும் வழக்கம் இல்லை என்பதை அறிந்து அவர் பெருமகிழ்ச்சியடைந்தார்.

கடைக்கோடி கிராமங்களில் கூட பெண்களுக்குக் கல்வி வசதி இருப்பதைக் கேள்வியுற்று அவருக்குப் பெருமிதம் ஏற்பட்டது. மனைவியரின் சொத்தில் கணவருக்கு உரிமை கிடையாது என்ற அந்நாட்டுச் சட்டம் அவருக்கு நம்பிக்கை கொடுத்தது. இவையெல்லாம் நம் நாட்டில் எப்போது மலரும் என்ற ஏக்கம் அவரை உடனே ஆட்கொண்டது. பர்மா நாட்டு பெண்களைப் பற்றி வரலாற்று ஆய்வாளர் டி.வீலர் கூறியிருந்த கருத்தை, தன் கட்டுரையில் பாரதியார் மேற்கோள் காட்டினார்.

‘‘… சந்தோஷ காலங்களிலும் உற்சவாதிகளிலும் அந்த ஸ்திரீகள் வெகு சுயாதீனத்துடன் இருக்கிறார்கள். குடும்பத்தில் அவர்களது நிலை சுதந்திரமானது. தமக்குத் தாமே சம்பாத்தியம் செய்துகொள்கிறார்கள். கணவர் என்போரின் காரியாதிகளை மேற்பார்க்கிறார்கள். ஆண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் பலவந்தமாக விவாகம் செய்து வைக்கும் வழக்கம் அந்நாட்டில் இல்லை. இளைஞர்களும் கன்னியர்களும் காதலிருந்தால் மட்டுமே விவாகம் செய்துகொள்வார்கள்.”
பர்மா மட்டுமல்லாது; தாய்லாந்து, திபெத் ஆகிய நாடுகளிலும் சம உரிமை வழங்கப்பட்டு பெண்கள் மரியாதையோடு நடத்தப்படுகின்றனர் என்பதையும் அவர் எழுதத் தவறவில்லை.

இத்தருணத்தில் பாரதியாரின் ஆன்மிக நிலைப்பாடு பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அவரது ஆன்மிகம் சமய எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. அதனால் அவருக்கு மத நல்லிணக்கம் என்பது இயல்பாக இருந்தது. கடவுளர்களின்பால் அவர் வேறுபாடு கண்டதில்லை. அந்த விதத்தில் அவருக்குப் புத்தர் பெருமான் மீது பெரும் மதிப்பிருந்தது. இந்த உணர்வுதான் அவரை,
‘பூரண ஞானம் பொலிந்த நன்னாடு
புத்தர் பிரான் அருள் பொங்கிய நாடு’
என்று பாட வைத்தது.


பர்மா, திபெத் உள்ளிட்ட நாடுகளில் பெண்கள் உயர்வாக நடத்தப்படுவதற்குப் பெளத்த மார்க்கம் ஒரு முக்கியக் காரணம் என்று பாரதியார் கருதினார். புத்தர் கொடுத்த புத்துணர்ச்சி அவரை இந்து சமயத்தின் புராதனமான அடையாளங்களான வேதங்கள், உபநிடதங்கள் நோக்கி இழுத்துச் சென்றது. அங்கே அவருக்கு ஒரு சிறப்பான தரிசனம் காத்திருந்தது.
(அறிவோம்…)

3 COMMENTS

  1. “புத்தர் பிரானருள் பொங்கிய நாடு” என்பதன் பின்னுள்ள புனிதத்தைத் தாண்டிய புதிய அர்த்தம் புரிந்தது. சிறப்பு!!

  2. பார்வைக் விசாலம் கொண்டிருந்த பாரதி, அயல் தேசத்து பெண்கள் போல நமது நாட்டில் பெண்கள் மதிப்புடன் நடத்தப் பட வேண்டும் என்ற நோக்கில் மூட்டிய தீ..இன்று வெளிச்சமிடுகிறது.
    இறை பேதம் காணாத பெரும் ஞானம் கொண்ட பாரதியின் கவிதைகள் பெண்களுக்கு வழங்கிய ஆசிகளாக நின்று இன்று பெண்கள் மேம்பாட்டினை காண முடிகிறது.
    வாழ்க பாரதி

நிரஞ்சன் பாரதி
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் எள்ளுப்பேரன். புகழ்பெற்ற கர்நாடக இசைக்கலைஞர் ராஜ்குமார் பாரதியின் மகன். கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர், எழுத்தாளர், பேச்சாளர். MYTAMILGURU என்ற இணைய வழி தமிழ்ப்பள்ளியை நண்பர்களுடன் இணைந்து நிறுவி உலகெங்கும் உள்ள மாணாக்கர்களுக்குத் தமிழ் பயிற்றுவித்து வருகிறார். இதுமட்டுமல்லாது "பசுமைக் கவிஞன்" என்ற YOUTUBE CHANNEL ஐயும் நடத்திவருகிறார். படித்தது பொறியியலும் மேலாண்மையும் என்றாலும் பிடித்தது தமிழும் இயற்கையும்தான்.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

பெரியாழ்வார்!

0
 பகுதி - 10 -ரேவதி பாலு, சென்னை ஸ்ரீ வில்லிப்புத்தூரில் பிறந்த விஷ்ணுசித்தர் என்பவர் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். இவர் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் வேதியர்...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

பாகம் - 8 -சுசீலா மாணிக்கம் ஓவியம்: பத்மவாசன் ஆதி காலத்தில் மொழிகள் கண்டுபிடிக்காத ஒரு சமுதாயத்தில் மனிதன் எப்படி பேசி இருப்பான்? எப்படி தங்களுக்குள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள்? அன்பால் இணைந்து... கண்களால்தான் பேசியிருப்பார்களோ! தங்களின்...

பறக்கும்  பாவைகள்!

பகுதி - 9                              ‘எங்களாலும் பறக்க முடியும்’ -ஜி.எஸ்.எஸ். ‘நியூயார்க் நகரிலிருந்து 2018 ஏப்ரல் 17 அன்று கிளம்பிய ஒரு விமானம் அது.  கிளம்பிய அரை மணி நேரத்தில் அதன் ஜெட் எஞ்சின்கள் செயலற்றுப் போக,...

பறக்கும்  பாவைகள்!

பகுதி - 8 - ஜி.எஸ்.எஸ். “எல்லைகளை உடையுங்கள்!” அமெரிக்காவைச் சேர்ந்த ஜெசிகா காக்ஸ் விமான ஓட்டுனர் உரிமத்தைப் பெற்றபோது உலகமே அவரை வியந்து போற்றியது.  காரணம் அவர் தன் இரு கைகளையும் இழந்தவர்! ஜெசிகா காக்ஸ் செய்துள்ள...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்! 

பாகம் - 5 -சுசீலா மாணிக்கம் ஓவியம்: பத்மவாசன் இல்லறவியல் (இல்+அறம்+இயல்)      அறமும் பொருளும் ஈட்டப்பட்ட மனித வாழ்வு இல்லறத்தில்தான் முழுமையடைகிறது எனலாம். சங்க காலம் தொட்டே நம் தமிழ் மரபு பற்பல இல்லற விழுமியங்களை...