0,00 INR

No products in the cart.

இனி மின் வாகனங்கள்தான்!

– ஜி.எஸ்.எஸ்.

இ-ஸ்கூட்டர் எனப்படும் மின்சாரத்தில் ஓடும் இரு சக்கர வாகனங்கள் இப்போது அதிக அளவில் பேசுபொருள் ஆகியுள்ளன. காலப்போக்கில் பெட்ரோலில் ஓடும் இரு சக்கர வாகனத் தயாரிப்பு கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திக்கொள்ளப்படும் என்கிறது அரசின் நிலைப்பாடு.
வருங்காலத்தில் பெட்ரோல் கிடைப்பது மிக மிகக் குறைந்து, அதன் விலை மிக மிக அதிகமாகும்போது, மின்சாரத்தில் ஓடக்கூடிய ஸ்கூட்டர்கள்தான் இப்போதைய இரு சக்கர வாகனங்களுக்கு ஒரே மாற்றாக இருக்கும். இந்த நடைமுறைத் தேவையைத் தவிரவும், மின்சார ஸ்கூட்டர்களால் வேறு பல நன்மைகளும் உண்டு.

இதை ஓட்ட பதினைந்து வயது நிரம்பியிருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதாவது, இதை ஓட்ட ஓட்டுனர் உரிமம் தேவையில்லை.
ஓட்டுவதற்கு வசதியானதும், பயன்படுத்த சுலபமானதாகவும் இது இருக்கிறது. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதில்லை. ஒலி மாசும் மிகக் குறைவாகவே இருக்கிறது. இதனால் காற்று மாசடைவது மிக மிகக் குறைவு. காற்று மாசடைதலால் வந்து சேரும் பலவித நுரையீரல் மற்றும் இதய நோய்கள் தவிர்க்கப்படுகின்றன. மின்சார ஸ்கூட்டரின் எரிபொருள் செலவு கூடக் குறைவுதான்.

தொடக்கத்தில் அறிமுகமான மின்சார ஸ்கூட்டர்கள் இருவர் செல்ல ஏற்றவை அல்ல. பின்னால் வருபவர்களுக்குப் பிடித்துக்கொள்ள எந்தக் கைப்பிடியும் கிடையாது. நம் நாட்டில் இருவர் (இருவராவது!) பயணம் செல்லக்கூடிய ஸ்கூட்டர்களைத்தான் பெரும்பாலான நடுத்தர மக்கள் விரும்புவார்கள். இதை மனதில் கொண்டு வடிவமைப்பில் மாற்றம் செய்து, இருவர் செல்லும்படியான மின்சார ஸ்கூட்டர்கள் தயாரிக்கப்படுகின்றன.
கியர் உள்ள வண்டிகளை விட, மின்சார ஸ்கூட்டர்களை ஓட்டக் கற்றுக்கொள்வது மிக எளிது. பெருநகரங்களில் வாடகைக்குக் கூட மின்சார ஸ்கூட்டர்கள் கிடைக்கின்றன.

ஆனால், மின்சார ஸ்கூட்டர்களைப் பயன்படுத்துவதில் சில சங்கடங்களும் உண்டு. அதிகப்படியாக சார்ஜ் ஏற்றுவது உட்பட, பேட்டரி தொடர்பான சில சிக்கல்கள் வரலாம். கார் அல்லது மோட்டார் பைக்கின் வேகத்துக்கு இவை செல்லாது. மிகப் பருமனானவர்களுக்கு இவை ஏற்றவை அல்ல.
ஓட்டுனர் உரிமம் தேவையில்லை என்பதால், சாலை விபத்துகள் அதிகமாக வாய்ப்பு உண்டு. மின்சார ஸ்கூட்டர் பேட்டரிகளை பயன்படுத்தாமல் நீண்ட நாட்களுக்கு வைத்திருக்க முடியாது. வண்டியைப் பயன்படுத்துகிறீர்களோ இல்லையோ, அந்த பேட்டரிகளை அவ்வப்போது சார்ஜ் செய்துகொண்டு இருக்க வேண்டும்.

மின்சார ஸ்கூட்டரில் பொருள்களை வைப்பதற்கான பகுதி மிக மிகக் குறைவு. எனவே, கடைக்குப் போய் அதிக அளவில் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு, அவற்றை மின்சார ஸ்கூட்டரில் வைத்துக்கொண்டு வீடு திரும்புவது என்பது கிட்டத்தட்ட இயலாத காரியம்.இந்தியாவின் எல்லா நகரங்களிலும் மின்சார ஸ்கூட்டர் கிடைப்பதில்லை. விலையும் மிகவும் மாறுபடுகிறது. எடுத்துக்காட்டாக, டெல்லியில் ஒரு லட்சத்துக்கு வாங்கக் கூடிய ஒரு மின்சார ஸ்கூட்டரை கேரளாவில் வாங்குவது என்றால் ஒன்றே கால் லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கலாம்.

டிவிஎஸ் நிறுவனம், ‘ஐக்யூப் எலக்ட்ரிக்’ என்ற பெயரில் மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘ஓலா எஸ்1’ என்ற பெயரில் ஓலா நிறுவனம் தனது மின்சார ஸ்கூட்டரை களமிறக்கியுள்ளது. ஆம்பியர் நிறுவனம், ‘ஜீல் எக்ஸ்’ என்ற பெயரிலும், ஹீரோ நிறுவனம், ‘ஹீரோ எலக்ட்ரிக் ஆப்டிமா’ என்ற பெயரிலும் தங்கள் மின்சார ஸ்கூட்டர்களை சந்தைக்குக் கொண்டு வந்துள்ளனர். ஏதர் எனர்ஜி நிறுவனம் தங்களது, ‘ஏதர் 450X’ மின்சார ஸ்கூட்டர்தான் முழுமையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒன்று என்கிறது. பஜாஜ் நிறுவனமும் மின்சார ஸ்கூட்டர் களத்தில் இறங்கியுள்ளது. இவற்றின் அதிகபட்ச வேகம், கிளம்ப எடுத்துக்கொள்ளும் நேரம் போன்றவை மாறுபடுகின்றன.

ஆனால், பெட்ரோல் பங்குக்குப் போனோமா சட்டென்று பெட்ரோல் நிரப்பிக்கொண்டு வந்தோமா என்பது போல் இதில் செயல்பட முடியாது. மின்சாரத்தை சார்ஜ் செய்ய நேரம் ஆகும். சில பெட்ரோல் பங்குகளில்தான் மின்சாரத்தை இப்போதைக்கு சார்ஜ் செய்துகொள்ள முடியும். முழுமையாக சார்ஜ் ஆக சுமார் 6 மணி நேரம் ஆகலாம். எனவே, வீட்டிலேயே இதை சார்ஜ் செய்துகொள்ளும் வகையிலான பெரிய பேட்டரிகள் உருவாக்கப்பட்டு விட்டன.

கோபால் அப்புசாமியுடன் மனைவி ரேகா.

‘எதற்காக, எப்படி மின்சார ஸ்கூட்டரை தேர்வு செய்தீர்கள்?’ என்ற கேள்வியுடன் அணுகியபோது திரு.கோபால் அப்புசாமியும் அவரது மனைவி திருமதி ரேகா கோபாலும் விளக்கமான பதிலை அளித்தார்கள்.
“பெட்ரோலில் இயங்கும் இரு சக்கர வாகனத்தை வாங்கி பதிமூன்று வருடங்கள் ஆகிவிட்டன. மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டபோது, மின்சார ஸ்கூட்டர் வாங்கலாம் என்ற முடிவுக்கு வந்தோம். இதற்கு முக்கியக் காரணம், எரிபொருள் சிக்கனம். பெட்ரோலின் விலை அதிகரித்துக்கொண்டே போகிறது என்பது நம் அனைவருக்குமே தெரியும். மாறாக, மின்சார ஸ்கூட்டருக்குத் தேவைப்படும் மின்சாரத்திற்கான கட்டணம் மிகக் குறைவு. ஒரு கிலோ மீட்டருக்கு வெறும் 0.25 பைசா செலவிலேயே கட்டுப்படுத்திக்கொள்ள முடியும்.

தவிர, நான் இரு சக்கர வாகனத்தில் மிக நீண்ட பயணமெல்லாம் செல்வதில்லை. சிறிய பயணங்களை அதிகமாக மேற்கொள்வதற்கு மின்சார ஸ்கூட்டர் மிகவும் வசதியானது. பெட்ரோல் வண்டி என்றால் இரண்டு மூன்று நாட்களுக்கு அதை இயக்கவில்லை என்றால் கூட, உதைத்து இயக்க வேண்டியிருக்கும். மின்சார ஸ்கூட்டர் என்றால் லேசான இயக்கத்திலேயே அது கிளம்பிவிடும். பராமரிப்புச் செலவும் மிகக் குறைவு.

நான்கு வித பிராண்டுகளை அலசி, நாங்கள் ஒன்றைத் தேர்ந்தெடுத்தோம். ஒரு பிராண்டு ஒரே பேட்டரியில் ஓடக்கூடியது. ஒரு முறை சார்ஜ் செய்தால் ஐம்பது கிலோ மீட்டர் மட்டுமே செல்லும். சார்ஜரைக் கையோடு எடுத்துச் செல்ல முடியாது. மற்றொரு பிராண்டு வண்டியில் பின்புறம் அமர்பவர்களுக்கு ஏற்றதாக இல்லை. அதாவது, காலை வைத்துக்கொள்வதற்கும் முன்புறம் இருப்பவரைப் பிடித்துக் கொள்வதற்கும் சரியான வசதி இல்லை. வண்டி அதிக எடை கொண்டதாக இல்லையென்றால், அது மேலும் வசதி. இப்படிப் பலவற்றையும் யோசித்துப் பார்த்து ஒரு குறிப்பிட்ட பிராண்டு மின்சார ஸ்கூட்டரை வாங்கினேன். இதில் பேட்டரியை கையோடு எடுத்துச் செல்ல முடிகிறது. முழுமையாக சார்ஜ் செய்தால் 70 கிலோ மீட்டர் தொலைவு வரை ஓட்டலாம் என்கிறார்கள். போக வர, 65 கிலோ மீட்டரை விட அதிகமாகும் என்றால் போகுமிடத்தில் சார்ஜ் செய்து கொண்டு விடுகிறோம். முழுமையாக சார்ஜ் செய்துகொள்ள இரண்டு மணி நேரம் ஆகும். மின்சார ஸ்கூட்டர் வாங்கினால், மொத்த செலவையும் கணக்கிட்டுப் பார்த்தால் ஐந்து வருடங்களுக்குப் பிறகு எரிபொருளுக்கான செலவு என்று எதுவுமில்லை எனலாம்” என்றனர்.

இப்படி அதிக நன்மைகள் இருப்பதாலும், வருங்காலத்தில் நமக்கு சாய்ஸ் இருக்காது என்பதாலும் மின்சார ஸ்கூட்டர்களை ஏற்றுக்கொள்வதுதான் புத்திசாலித்தனம் என்றே தோன்றுகிறது.

ஜி.எஸ்.எஸ்.
பொருளாதாரம், வங்கியியல், வணிக நிர்வாகம், பணியாளர் மேலாண்மை ஆகியவற்றில் முதுநிலைக் கல்வி பயின்றவர் ஜி.எஸ்.எஸ். என்று பரவலாக அறியப்படும் ஜி.எஸ். சுப்ரமணியன். இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளையும், அருண் சரண்யா என்ற பெயரில் இருநூறுக்கும் அதிகமான சிறுகதைகளையும் எழுதியவர். வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் மனநலம் தொடர்பான நிகழ்ச்சிகளையும் பல வினாடிவினா நிகழ்ச்சிகளையும்  வழங்கியிருக்கிறார். பல நிறுவன ஊழியர்களுக்கு மனிதவளப் பயிற்சிகளும் ஆங்கில மொழிப் பயிற்சியும் நடத்தி வருகிறார்.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புரட்சி!

0
டாக்டர் லூயி அல்பெர்டோ தலைமையில் ஒரு சாதனை! -ஜி.எஸ்.எஸ். ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த ஒரு டஜன் பேருக்கும் பலவித சோதனைகள் நடத்தப்பட்டன.   விளைவு வியப்பூட்டியது.  மருத்துவர்கள் ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள். உண்மையை அறிந்ததும் நோயாளிகள்...

சேமிப்பு, முதலீடு என்றால் என்ன? முதலீடு செய்யத் தொடங்குவது எப்படி?

சேமிப்பு: உங்களது தேவை போக, தனியாக சேமித்து வைக்கப்பட்ட பணம். இது அப்படியே இருக்கும். இது வளராது. உதாரணமாக, வீட்டில் தனியாக, பணப் பெட்டியிலோ,அஞ்சரைப் பெட்டியிலோ சேமிக்கப்பட்ட பணம். முதலீடு: உங்களது தேவை போக,...

வீட்டுப் பணி – அலுவலகப் பணி பேலன்ஸ் செய்வது எப்படி?

Ten Tips For Successful Work-Life Balance -உஷா ராம்கி அந்தரத்தில் நன்கு இழுத்து இறுக்கமாகக் கட்டியிருக்கும் கயிற்றின் மேல் நடக்கும் சர்க்கஸ் கலைஞர் ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்திற்கு கீழே விழாமல் நல்லபடியாக நடந்து...

ஸ்ரீரங்கம் (அரசு) பெண்கள் மேனிலைப் பள்ளி – மல்லுக்கட்டி நிற்கும் மகளிர்!

 -ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு. முன்பெல்லாம் ரேசன் கடைகளில் மண்ணெண்ணெய் வாங்குவதற்கு இரவு முழுவதும் அந்தக் கடை முன் வரிசையாக உட்கார்ந்து காத்திருப்பார்கள். அது ஒரு காலம். இப்போது அங்கு கூட யாரும் காத்திருப்பது இல்லை. ஆனால்...

இனிதே நடந்தேறிய விக்கி- நயன் திருமணம்!

-ஜெனிபர் டேனியல் ***************************************************************** காதலி நயன்தாராவை கரம் பிடித்தார் விக்னேஷ் சிவன்! சுமார் ஏழு ஆண்டுகாலம் காதலித்து வந்த விக்னேஷ் சிவன்- நயன்தாரா ஜோடிக்கு 09.06.2022 அன்று மகாபலிபுரம் ஷெரட்டன் ரிசார்ட்டில் திருமணம் நடந்தது. துள்ளலில் விக்கி! திருமண தினத்தன்று...