கடவுளின் குழந்தைகள்; தாளமிடும் விரல்கள்!

கடவுளின் குழந்தைகள்; தாளமிடும் விரல்கள்!
Published on
– ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு

னநலம் குன்றிய சிறுவர்களின் இல்லம் தேடிச் சென்று, மிருதங்கம் வாசிப்பதில் அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளித்து வரும் மிருதங்கக் கலைஞர் ரமேஷ் பாபு, மதுரை கோயில் பாப்பாக்குடி சிக்கந்தர் சாவடி பகுதியில் வசித்து வருகிறார். மனநலம் குன்றிய சிறுவர்களுக்கு மிருதங்கம் வாசிக்கக் கற்றுத் தருவதில், தான் மட்டில்லாத மகிழ்ச்சி அடைவதாகச் சொல்கிறார்.

மிருதங்கம் வாசிக்க நீங்கள் யாரிடம் கற்றுக் கொண்டீர்கள்?
மிருதங்கக் கலைஞர் மதுரை முனைவர் கே.தியாகராஜன் அவர்களிடம் குருகுலவாசமாக இருந்து முறையாக மிருதங்கம் வாசிக்கக் கற்றுத் தேர்ச்சி அடைந்தேன். மதுரை சத்குரு சங்கீத வித்யாலயா இசைக் கல்லூரியில் இளங்கலை, முதுகலை இசைப்பயிற்சி படிப்பில் தேர்ச்சி பெற்றேன். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பயின்று, இசையாசிரியர் பட்டயச் சான்றிதழ் பெற்றேன். தற்போது மதுரை தனியார் பள்ளியொன்றில் பதினைந்து ஆண்டுகளாக மிருதங்க ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறேன். மேடை இசைக் கச்சேரிகளில் இருபது ஆண்டுகளாக மிருதங்கம் வாசித்து வருகிறேன். கச்சேரிகளில் முகர்சிங்கும் வாசித்து உள்ளேன்.

மனநலம் குன்றியவர்களுக்கு மிருதங்கம் கற்றுத்தர வேண்டும் என்கிற எண்ணம், உங்களுக்கு எவ்விதம் ஏற்பட்டது? எப்போது பயிற்சிகளைத் தொடங்கினீர்கள்?

ரமேஷ் பாபு
ரமேஷ் பாபு

னவளர்ச்சி குன்றியோர் பள்ளி ஒன்றில், அந்தப் பிள்ளைகளுக்கு மிருதங்கம் கற்றுத்தரும் வாய்ப்பு என்னைத் தேடி வந்தது. நான் அதற்கு ஒப்புக்கொண்டேன். வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் அங்கு போய் வருவேன். ஒரு வருடம் அவர்களில் ஆர்வம் உள்ளவர்களுக்குப் பயிற்சி தந்தேன். சாதாரணமானவர்களுக்குக் கற்றுத் தருவதற்கும், மனவளர்ச்சி குன்றியவர்களுக்குக் கற்றுத் தருவதற்கும் மிகப் பெரிய வித்தியாசங்கள் இருப்பதை அப்போதுதான் முதன்முதலாக உணர்ந்தேன். ஒரு வருடம் மட்டும்தான் அங்கு அவர்களுக்கு மிருதங்கம் கற்றுத் தந்தேன். அதன் பின்னர் நான் அந்தப் பள்ளிக்குச் செல்லவில்லை. அந்தப் பிள்ளைகளின் புதிதான ஆர்வமும் அவர்களின் முகங்களும் என் மனதில் வந்து வந்து போய்க்கொண்டே இருந்தன. அப்போதுதான் இந்த சிந்தனை என் மனதில் உதித்தது. மனநலம் குன்றியவர்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களது வீடுகளுக்கு நாமே நேரில் சென்று, அவர்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மிருதங்கம் கற்றுத் தரலாம் என்று தோன்றியது. மதுரையின் இருபது கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் மனநலம் குன்றிய பிள்ளைகள் இருக்கும் வீடுகளைத் தேடினேன். தேடிச் சென்று வீட்டில் பெரியவர்களிடம் தகவல் சொல்வேன். சில குடும்பங்களில் மறுத்து விடுவார்கள். சில குடும்பங்களில் சரி எனச் சொல்வார்கள். அந்த வீடுகளுக்குச் சென்று பயிற்சி அளிக்கத் தொடங்கினேன். இந்தச் செய்தியானது மனநலம் குன்றிய பிள்ளைகள் உள்ள குடும்பத்தார்களிடையே பரவத் தொடங்கியது. என்னுடைய ரெகுலரான பள்ளி வேலை நேரம் போக, மற்ற நேரங்களில்தான் இதுபோன்ற பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று வருகிறேன், கடந்த பத்து வருடங்களாக.

மனநலம் குன்றியவர்கள் மிருதங்கம் கற்றுக்கொள்ள ஒத்துழைப்பு தருகிறார்களா?
வர்களை ஓரிடத்தில் கொஞ்ச நேரம் தொடர்ந்து உட்கார வைக்க முதலில் ரொம்பவே நாம் சிரமப்பட வேண்டும். மிகவும் சகிப்புத் தன்மையுடன் அவர்களை நாம் அணுக வேண்டும். அதற்கே சில மாதங்கள் ஆகி விடும். அதற்குப் பின்னர்தான் அவர்களுக்கு நாம் மிருதங்கம் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை உருவாக்க முடியும். எப்படியோ அவர்களை உட்கார்த்தி, மிருதங்கத்தின் இரு புறங்களிலும் அவர்களின் கை விரல்களைத் தாளமிட வைப்போம். அப்போது மிதந்து வரும் தாள சப்தம் கேட்டு அவர்களது முகம் மலரும் பாருங்கள்… அத்தனை அழகாக இருக்கும். இரண்டு, மூன்று நிமிடங்களுக்கு அவர்களையே தொடர்ந்து தாளமிட வைப்போம். கடவுளின் குழந்தைகள் அல்லவா? இசைக்கு மயங்காதோர் யாரும் உண்டா என்பதற்கான அர்த்தம் விளங்கும்.

முறைப்படியான இசை விதிகளின்படி அவர்களுக்குக் கற்றுத் தர இயலுமா?
சை விதிகளோ, இசைப் பாடங்களோ அவர்களிடம் எடுபடாது. நாம் தொடர்ந்து பயிற்சி தரத் தர, அவர்களது மனமும் நினைவும் அறிவும் கொஞ்சம் கொஞ்சமாக மேம்படுமே தவிர, சங்கீதப் பாடப் புரிதல்களுக்குள் அவர்களைக் கொண்டு வருவது கடினம். ஆனால், இது அவர்களை மனதளவில் மேம்பட வைக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியும். ஒரு மாணவன் வீட்டுக்கு நான்கு வருடங்களாகச் சென்று வருகிறேன். அவனுக்கு வயது இருபத்தைந்து. நான் வருவதாகப் போன் செய்து அவர்கள் வீட்டுக்குத் தகவல் சொல்வேன். அதை, அவர்கள் அவனுக்குப் புரிகிற மாதிரி, 'மிருதங்க வாத்தியார்' வரப் போவதகாச் சொல்வார்கள். அவ்வளவுதான்… உடனே வேட்டி சட்டை அணிந்து கொண்டு வீட்டு வாசலில் வந்து என் வருகைக்காக நின்று கொண்டிருப்பான். அவனது மனநலம் பொறுத்து, இது ஒரு நல்ல முன்னேற்றம்தானே? 'இதில் என்ன சாதனை? இதில் என்ன மாற்றம்?' எனக் கேட்கலாம். முறைப்படியான தாள லய விதிகளின்படி அவர்களது விரல்கள் இயங்காது என்றாலும், தொடர் பயிற்சிகளின் வாயிலாக மனநலம் குன்றிய அந்தச் சிறுவர்களின் கை விரல்கள் அவரவர் இஷ்டப்படி தாளமிடும். அதிலும் ஒருவிதமான ஓசை எழும். அந்த அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ அவர்களின் மனங்கள் வேறோர் உலகில் மிதக்கும்.

இவர்களிடம் மாதாந்திரக் கட்டணங்கள் ஏதும் வாங்குவது உண்டா?
ண வருவாய்க்காக இதை நான் செய்வதில்லை. என்னுடைய ஆத்ம திருப்திக்காகச் செய்து வருகிறேன். ஒரு பள்ளியில் மிருதங்க ஆசிரியராக மாத ஊதியம் பெற்று வருகிறேன். வாய்ப்பு கிட்டும் நேரங்களில் சில கச்சேரிகளுக்கும் போய் வருகிறேன். எனக்கு அந்த வருவாய்ப் போதும். மேலும், நான் எனது இருப்பிடத்தில் இருந்தபடியே மனநலம் குன்றியவர்களுக்குக் கற்றுத் தருவதில்லை. அவரவர் வீடுகளுக்குச் சென்று நேரில் கற்றுத் தந்து வருகிறேன். ஒரு நபருக்கு வாரம் இரண்டு முறை, ஒரு மணி நேரம். ஒவ்வொருவர் வீடும் வெவ்வேறு பகுதிகளில் இருக்கும். என் வீட்டிற்கும் அவர்களது வீட்டிற்கும் ரொம்ப அதிகமான தொலைவு இருக்கும். நான் வந்து போகும் டூ வீலர் பெட்ரோல் செலவுக்காவது இருக்கட்டும் என்று அவர்களே விரும்பி ஏதேனும் தொகையினைத் தருவார்கள். அதைவிட, மனநலம் குன்றிய அந்தச் சிறுவர்களின் அந்தவொரு நாளின் பூரண சந்தோஷமும் மகிழ்ச்சியுமே எனக்குப் போதும்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com