0,00 INR

No products in the cart.

கண்ணோடு காண்பதெல்லாம்…

ஒரு கதை… ஒரு கட்டுரை!

– விஜி சம்பத்
ஓவியம் : லலிதா 

ரம்பத்தில் வேகமாகப் போய்க்கொண்டிருந்த நகரப் பேருந்து, ஒவ்வொரு நிறுத்தத்தைத் தாண்டும்போதும், இறங்கும் பயணிகளைக் காட்டிலும் மூன்று மடங்கு பயணிகளை ஏற்றி, மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கி மெதுவாக ஊர்ந்துக் கொண்டிருந்தது.

பேருந்தின் உட்புறமாக நின்றிருந்த சீனிவாசனுக்கு உச்சி முதல் பாதம் வரை வேர்வை வழிந்து கொண்டிருந்தது. பேருந்தில் பயணிகளின் அதீத ஆக்கிரமிப்பு காரணமாக காற்று வராதது ஒரு காரணமென்றால், சீனிவாசன் இயற்கையிலேயே ஒரு படபடப்பு பேர்வழி. சின்ன விஷயத்திற்கெல்லாம் பெரிதாகக் கற்பனை செய்து கதை வசனம் எழுதி, கண்முன்னே விஷுவல் காட்சிகளாக்கி நொந்து நூடுல்ஸ் ஆகி விடுவார். இப்போது அவர் கவலை எல்லாம் இதுதான். ‘அடுத்து, தான் இறங்க வேண்டிய ஸ்டாப்பிங் வந்து விடுமே… இத்தனை பேரைத் தாண்டிக் கொண்டு படிக்கருகில் போவதற்குள் டிரைவர் வண்டியை எடுத்து விட்டால் என்ன செய்வது? இல்லை… நாம் இறங்கும் நேரத்தில் வண்டியை எடுத்துவிட்டால்? கீழே விழுந்து அடி ஏதாவது பட்டு விட்டால்…? லேசான அடியாக இருந்தால் பரவாயில்லை; பெரிதாக அடி பட்டுவிட்டால்… ஆஸ்பத்திரிக்கு செலவு செய்யக் கூட கையில் காசில்லை. இந்த மதனால் ஒரு பைசாவுக்குப் பிரயோஜனமுண்டா? காலித்தனமாக ஊர் சுத்தி வரத்தான் லாயக்கு’ என்று தனது மகனுக்கும் அர்ச்சனை செய்துகொண்டே மெதுவாக ஊர்ந்து இறங்குவதற்குத் தோதாகப் படிக்கருகில் வந்து விட்டார். பேருந்து நிறுத்தம் வர இன்னும் கொஞ்சம் தூரம்தான். அதற்குள் நடைபாதையில்…

ஓவியம் : லலிதா

அவர் கண்ட காட்சி…!
நடைபாதையில் குடை பிடித்தபடி நடந்து செல்லும் ஒரு பெண்ணின் காலடியில் தடாலென விழுந்து அழுதுகொண்டே மன்னிப்புக் கோரும் பாவனையில் பேசுவது, நம்ம மகன் மதனைப் போல அல்லவா இருக்கிறது? போல என்ன அவனேதான்…!

அய்யோ இதென்ன விபரீதம்? தலை முதல் கால் வரை அவருடைய உடல் கிடுகிடுக்க, பேருந்தில் இருந்து குதித்து விடலாமா என்றுகூட அவருக்குத் தோன்றியது. பேருந்து, நிறுத்தத்தில் நின்றதும் அவசர அவசரமாக இறங்கி ஓட்டமும் நடையுமாக அந்த இடத்துக்கருகில் போய்ப் பார்த்தால், அங்கு யாரையும் காணோம். ‘ஒரு வேளை நாம் அவனைப் பார்த்தது போல, அவனும் நம்மைப் பார்த்திருப்பானோ…? அதுதான் பயந்து ஓடி விட்டானோ? இருக்கட்டும் இன்னைக்கு அவனுக்காச்சு… நமக்காச்சு’ என்று மனசுக்குள் கறுவியவர், பி.பி. அதிகமானதால் அலுவலகத்துக்குப் போகும் எண்ணத்தைக் கைவிட்டு, ஓர் ஆட்டோவைப் பிடித்து வீட்டுக்கே வந்து விட்டார்.

முகம் ஒரு கோலமாக… கண்ணெல்லாம் கலங்க, ஆட்டோவில் வந்து இறங்கிய கணவரைப் பார்த்ததும் பத்மாவிற்கு நெஞ்சு அடைத்துக் கொண்டது. அவரைத் தாங்கிப் பிடித்து சோஃபாவில் உட்கார வைத்து, ஆசுவாசப்படுத்துவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது அவளுக்கு!
தான் கண்ட காட்சிகளை எல்லாம் ஆதியோடந்தமாக மனைவியிடம் விவரித்தவர்,

“இத்தனை நாள் தண்டச்சோறா, ஒத்தப் பைசாவுக்கு உபயோகமில்லாம ஊரெல்லாம் சுத்திட்டு வந்தாலும் அவனுக்குப் பெத்த கடனுக்காக சோறு போட்டேன். பட்டப் பகல்ல, தெருவுல… ஆயிரம் ஜனங்க பாக்கிறாப்பல ஒரு பொம்பள கால்ல விழுந்து மன்னிப்பு கேக்கறான்னா… ஐயோ! அவன் எத்தனை பெரிய தப்பு பண்ணி இருக்கணும். அவன் மூஞ்சியிலகூட நான் முழிக்க மாட்டேன். பத்மா… நமக்குத் தெரிஞ்சவங்க எத்தன பேர் இந்தக் கண்றாவிக் காட்சியப் பாத்தாங்களோ… எத்தனை பேருக்கு நான் பதில் சொல்லணுமோ தெரியலையே. இனிமேல் அவனுக்கு இந்த வீட்டுல எடமில்லை. இந்த வாசப்படிய அவன் மிதிச்சான்னா இங்க ஒரு கொலையே விழும். ஆமா சொல்லிட்டேன்” ஆக்ரோஷமாக அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே இரண்டு கைகளிலும் பெரிய ஷாப்பிங் பைகளோடு… சிரித்துக்கொண்டே உள்ளே வந்தான் மதன்.

“உள்ளே வராதே… அப்படியே நில்லுடா” என்ற தந்தையின் கர்ஜனையைக் கேட்டு சற்றும் மனம் தளராதவனாக உள்ளே வந்த மதன் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விட்டாள் பத்மா!

“யாருடா அது…? ஏதோ ஒரு பொம்பள கால்ல விழுந்தியாமே? நம்ம குடும்பத்துக்குத் தீராத அவமானத்தைத் தேடிக் குடுத்துட்டியே… எங்களைப் பத்திக் கொஞ்சமாச்சும் நெனச்சுப் பாத்தியா? உங்கப்பா பாத்துட்டு வந்து துடியாத் துடிக்கிறாரு’’ நீளமாகப் புலம்பிக் கொண்டே போனாள் பத்மா! சில வினாடிகள் ஒன்றும் புரியாமல் நின்ற மதன், திடீரெனக் கடகடவென சிரிக்க, அறை வாங்கிய அதிர்ச்சியில் மூளை குழம்பி விட்டதோ எனப் பெற்றவர்கள் திடுக்கிட…

ஒருவழியாகச் சிரித்து முடித்தவன், “ஹய்யோ… ஹய்யோ… சரியாக எதையும் பாக்காம, விசாரிக்காம இவர்தான் வந்து ஏதாவது சொல்றாருன்னா நீங்களும் அதை அப்படியே நம்பிருவீங்களாம்மா?

என்னோட ஃப்ரெண்ட் எடுக்கிற ஒரு குறும்படத்தோட ஷூட்டிங்மா! க்ளைமேக்ஸ்… தத்ரூபமா இருக்கணும்கிறதுக்காக அங்கே ஷூட் பண்ணோம். எல்லாமே வெளிப்புறப் படப்பிடிப்புதான். அப்பா கொஞ்சம் பொறுமையா கவனிச்சிருந்தார்னா. கேமெரா… ஷூட்டிங் வேன் எல்லாமே கண்ணுல பட்டிருக்கும். அவர்தான் எப்பவுமே டென்ஷன் பார்ட்டியாச்சே!

இத்தனை நாள் நான் ஊர் சுத்தப் போகலைம்மா. ஷூட்டிங்க்குதான் போய்க்கிட்டிருந்தேன். இன்னிக்குத்தான் சம்பளமும் கிடைச்சுது. உங்களுக்கெல்லாம் ஸ்வீட்டும், கிஃப்ட்டும் வாங்கிட்டு வந்து உண்மையைச் சொல்லணும்னு நினைச்சேன். படம் புத்தாண்டு யுட்யூப் ரிலீஸ்மா”னு சொன்னவனைக் கிட்டே வந்து கட்டி அணைத்துக்கொண்டார் சீனிவாசன்.
……………………………………………………………………………………………………………..

நிறைந்த மனதுடன்…

கட்டுரை: ரேவதி பாலு, சென்னை.

ணிக நிறுவனம் ஒன்றில் கருத்தரங்கு நடந்து கொண்டிருந்ததாம். அப்போது அந்த நிறுவனத்தின் மேலதிகாரி அதில் கலந்து கொண்டவர்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டாராம்.

“உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த இடம் என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?”

ஒருவர் சொன்னார், ‘‘எண்ணெய் வளமிக்க வளைகுடா நாட்டு நிலங்கள்தான்!” என்று.

மற்றொருவர் சொன்னார், “ஆப்ரிக்காவில் இருக்கும் வைர சுரங்கங்கள்தான்!” என்று.

அப்போது அந்த மேலதிகாரி சொன்னார், “இவை எதுவுமே இல்லை. உண்மையில் இறந்தவர்களின் கல்லறைகள் இருக்கும் நம்முடைய சுடுகாடுகள்தான் உலகிலேயே மிக விலை உயர்ந்த இடங்கள், நிலப்பரப்புகள்” என்று. எல்லோரும் அதிர்ச்சியடைய, அவரே விளக்கினார்.


“ஏனென்றால், அங்கே புதைக்கப்பட்டிருக்கும் கோடிக்கணக்கான மக்கள் தங்களுக்குத் தெரிந்த ஆயிரக்கணக்கான அழகான, சிறப்பான விஷயங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளாமல், வெளி உலகுக்குத் தெரிவிக்காமலேயே உயிரை விட்டு விட்டார்கள். அந்த பொக்கிஷமான விஷயங்கள் அவர்களுடனேயே கல்லறைகளில் புதைக்கப்பட்டு விட்டன.”
இதைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்த டாட் ஹென்றி என்பவர், ‘டை எம்ப்டி’ என்று ஒரு புத்தகமே எழுதியுள்ளார். அதாவது, நாம் இவ்வுலகத்தை விட்டு விடைபெறும்போது வெறுங்கையுடன் விடைபெற வேண்டும். நம் அகத்திலிருக்கும் திறமைகள் அனைத்தையும் புற உலகில் கொட்டித் தீர்த்து விட வேண்டும் என்பதே இப்புத்தகத்தின் சாராம்சம்.

‘உங்களுக்கு எதையாவது செய்ய வேண்டும் என்று மனதில் ஒரு எண்ணம், கருத்து இருந்தால் அதை உடனே செயல்படுத்துங்கள். உங்கள் திறமை வெளிப்படும் விதமாக இருக்கும் எந்த ஒரு செயலையும் செய்யத் தயங்காதீர்கள். சோம்பலும், செயலின்மையும் உங்கள் அறிவையும் திறமைகளையும் வெளிப்பட விடாமல் தடுத்து விடும். அதை வெளிப்படுத்த நீங்கள் முயலாவிட்டால், அதை வெளி உலகத்தினர் அறிந்துகொள்ள இயலாவிட்டால், உங்கள் அருமையான கருத்துகள், திறமைகளாகிய பொக்கிஷங்கள் உங்களுடனே கல்லறைக்குள் புதைந்து விடும். யாருக்கும் உபயோகப்படாது.

வாழ்க்கையில் உங்கள் இலக்கு என்ன? வாழ்க்கையில் ஏதாவது நல்ல குறிக்கோள் இருந்தால் அதை அடையும் வழியை முழுமூச்சுடன் முயன்று பாருங்கள். அதை வெறுமனே விட்டு விடாதீர்கள். அப்போதுதான் அதன் பலன் மற்றவர்களையும் சென்றடைந்து அவர்கள் வாழ்வும் வளம் பெற உதவும்!’

உதாரணத்திற்கு, நீங்கள் மொழிப்புலமை பெற்றிருந்தால், அதாவது ஒரு மொழியில் பாண்டித்தியம் பெற்றிருந்தால் அதை முக்கியமாக, அடுத்தத் தலைமுறையினரோடு பகிர்ந்து கொள்ளுங்கள். அப்போதுதான் அந்த விஷயங்கள் தலைமுறை தலைமுறையாகப் பரவும்.

திரு.மீனாட்சி சுந்தரம் பிள்ளை – திரு.கி.வா.ஜகந்நாதன்

ப்படித்தான், திரு.கி.வா.ஜகந்நாதன் அவர்களும் அவருடைய குரு திரு.மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களும் முனைந்து ஒரு மாணவர் சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கினார்களாம். இதைத் தவிர, அவர்கள் ஒரு நாளும் இவ்வுலகிற்கான சொத்து சுகம் எதுவும் சேர்க்கவில்லையாம். அதேபோல, சங்கீத விற்பன்னர்கள் சங்கீதத்தைக் கற்றுக் கொடுத்து ஒரு சிஷ்ய பரம்பரையே உருவாக்குகிறார்களே… அவர்கள் நிறைவான வாழ்வு வாழ்பவர்கள். அவர்கள் காலத்திற்குப் பின்னும் அவர்களின் சிஷ்யகோடிகள் மேடைகளில் பாடும்போது, இன்னாரின் சிஷ்யர் இவர் என்றுதான் குறிப்பிடப்படுகிறார்கள்.

அன்போடு எல்லா நல்லவைகளையும் பகிர்ந்துகொள்ளக் கற்றுக் கொள்ளுங்கள். எதையும் உங்களோடு சமாதியடைய விட்டு விடாதீர்கள். நம்மிடமுள்ள எல்லா நல்ல விஷயங்களும் எல்லோரையும் சென்று அடைந்து, நம்மால் நம்மைச் சேர்ந்தவர்கள், இந்த சமுதாயம் நன்மை பெற வேண்டும். ஆகவே, வாருங்கள்! நாம் இங்கிருந்து விடைபெறும் நேரம் வரும்போது நம் பொக்கிஷங்கள் அனைத்தையும் இந்த சமுதாயத்திற்கு விட்டு விட்டு, நாம் மகிழ்ச்சியோடு நிறைந்த மனதுடன் விடை பெறுவோம்!

2 COMMENTS

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

தலையாயப் பிரச்னை!

சிறுகதை: -தனுஜா ஜெயராமன் ஒவியம்: பிள்ளை கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தான் ரமேஷ். முப்பத்தியெட்டு வயது என்று சொன்னால்தான் தெரியும். கொஞ்சம் இளமையாக இருப்பதாகவே தோன்றியது அவனுக்கு மட்டும்தானா? என்ற சந்தேகம் அவனுக்கே உண்டு. தன் நீண்ட...

அம்மா மசாலா!

இரண்டு சிறுகதைகள். ஓவியம்: சேகர் நீ.த.வெங்கட் ‘’அம்மா… உங்க பையன், மருமகள், பேரன் ரெண்டு நாள் இங்க வரப்போறதா சொன்னேளே… உங்களுக்கு ஏதாவது டவுன்லேருந்து சாமான் வாங்கி வர வேண்டுமா? என்று கேட்கத்தான் வந்தேன்” என்று சொன்ன...

பகல் வேஷம்! 

சிரிப்பு சிறுகதை: -தனுஜா ஜெயராமன் ஓவியம்; பிரபுராம் "நட்டுவான வேடிக்கை சாமியார்"... என்ற ஆதிகாலத்து பழைய  பெயர் பலகை தொங்கிய கேட்டை திறந்து உள்ளே வந்தான் மாணிக்கம். வாசலிலேயே இருபது இருபத்தி ஐந்து பேர் காத்திருக்க... கலைந்த...

இனியில்லை கடன்!

4
சிறுகதை– நாமக்கல் எம்.வேலு ஓவியம்; தமிழ் அழைப்பு மணி சத்தம் கேட்டுப் போய் கவைத் திறந்து பார்த்தால், ராமசாமி வந்து நின்றார். சோமசுந்தரத்திற்கு அதிர்ச்சி.  ‘ என்ன இவன் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று வந்து நிற்கிறான்....

கட்டதுரைக்கு  கட்டம் சரியில்லை…

‘சிரி’ கதை - தனுஜா ஜெயராமன் ஓவியம்: பிரபுராம் அலாரத்தை தலையில் தட்டி நிறுத்தியபடி திடுக்கிட்டு விழித்த சுப்பு... கண்களை தேய்த்துக்கொண்டே சோம்பல் முறித்தார்… எழுந்து சென்று பிரஷை எடுத்தார். பிரஷ் ஸ்டேண்ட் தொபுக்கென விழுந்தது. சத்தம்...