0,00 INR

No products in the cart.

குழப்ப கோமதி!

சங்கடம் தருபவர்களை சமாளிப்பது எப்படி? – 9

– ஜி.எஸ்.எஸ்.
ஓவியம் : சுதர்ஸன்

‘புன்னகை புரிய முகத்தின் ஒருசில தசைகளை இயக்கினால் போதும். ஆனால், கோபத்தை வெளிக்காட்ட பல தசைகளை இயக்க வேண்டியிருக்கும்’ இப்படிக் கூறி சிலரைச் சாந்தப்படுத்த முயன்றால், நீங்கள் தோற்றுப்போவீர்கள். அந்த சிலர் கோமதியுடன் பழகியவர்களாக இருப்பார்கள். அவளுடன் பேசும்போது அவர்கள் முகத்தில் உள்ள அத்தனை தசைகளுமே சுருங்கி விட வாய்ப்பு உண்டு. அப்படி ஒரு திறமை கோமதிக்கு!
‘வாழ்க்கையில் ரொம்ப அடிபட்டவளாக இருக்கும்…’, ‘ஒருவேளை சிறுவயதில் தலையில் பலத்த அடிபட்டு இருக்க வேண்டும்…’ இப்படியெல்லாம் கோமதி குறித்து கருத்து தெரிவிப்பவர்கள் உண்டு. காரணம், அவள் பேசுவது எல்லாமே குழப்பமாக இருக்கும்.

‘ப்ரியா ஆனாலும் மோசம். ஒரு முறைகூட சொன்ன நேரத்திற்கு வருவதில்லை’ என்று கோமதி ஒரு முறை கூறி விட, இது ப்ரியாவின் காதுக்குச் சென்று அவள் வருத்தம் அடைந்தாள். கோமதியிடம் நேரிடையாகவே நீதி கேட்டாள்.

‘நான் உன்னைப் பற்றி அப்படி எதுவும் சொன்னதில்லை. ப்ரியங்காவைத்தான் அப்படிச் சொன்னேன்’ என்ற கோமதியின் பதில் சமாளிப்பு அல்ல; அவளைப் பொறுத்தவரை ப்ரியங்கா என்றுதான் சொல்கிறோம் என்று நினைத்துக்கொண்டு ப்ரியா என்று கூறியிருப்பாள். அதை அவள் உணரவும் மாட்டாள்.

‘நேற்று ஒரு முட்டாள்தனம் பண்ணிட்டேன். என் புருஷனோட டிபன் கேரியரில் சாம்பார், காய்கறி, ரசம், தயிர் எல்லாம் வெச்சிட்டேன்’ என்பாள். அப்படிக் குறிப்பிட்டுவிட்டு, அடுத்த டாபிக்கை நோக்கிச் சென்று விடுவாள்.
இதைக் கேட்பவருக்கு அவள் செய்ததில் என்ன முட்டாள்தனம் என்ற கேள்வி குடைந்துகொண்டே இருக்கும். சாதத்தை வைக்காமல், மீதி ஐட்டங்களை மட்டுமே டிபன் கேரியரில் அவள் வைத்திருக்கிறாள் என்பதை கோமதி கூறாததால் உண்டான அவல நிலை இது.

திராளியைக் குழப்ப வேண்டும் என்று சிறிதும் எண்ணாதவள்தான். ஆனால், முன்னுக்குப் பின் முரணாகக் கூறியோ, கூற வேண்டிய பகுதியைக் கூறாமல் விட்டுவிட்டோ எதிராளியைக் குழப்புவது அவளுடன் பிறந்த குணம்.

கோமதி கூறுவதில் பாதிக்குப் பாதி புரிந்துகொண்டதாக ஒருத்தி கூற, அப்படிப் புரிந்து கொண்டவளின் புத்திசாலித்தனம் வானளாவப் பாராட்டப்பட்டது.

ஒரு கதாசிரியர் ஆவதற்கான சகல தகுதிகளும் அவளுக்கு உண்டு. பல முறை தனது உரையாடலில் ஒரு நிகழ்ச்சியைப் பாதியில் ஆரம்பிப்பாள். ஆனால், ஃப்ளாஷ்பேக் அல்லது முடிவு இரண்டில் ஒன்றை விட்டு விடுவாள். கேட்பவர்களுக்குத் தலை சுற்றும்.

இப்படி இருந்தாலும் அவளை யாரும் வெறுத்து ஒதுக்க மாட்டார்கள். காரணம், அவளிடம் உள்ள ஜோதிடத் திறமை! யார் தன்னுடைய ஜாதகத்தை நீட்டினாலும் அதைச் சற்று நேரம் உற்றுப் பார்த்துவிட்டு அவரைப் பற்றிய கணிப்பை கடகடவென்றுக் கூறுவாள்.

‘மனதில் ஒரு துளியும் வஞ்சகம் இல்லாதவர் நீங்கள். சிலருக்குக் கெடுதல் செய்ய வேண்டும் என்பதில் தீர்மானமாக இருப்பீர்கள். உங்களைப் பிறர் புரிந்துகொள்ள மாட்டார்கள். அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளாதவர்களாக நீங்கள் இருப்பீர்கள். நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். ஏன்தான் இதைச் செய்தோமோ, இப்படி குளறுபடி ஆகிவிட்டதே என்று நீங்கள் அடிக்கடி வருந்துவீர்கள்…’

கேட்பவர்கள் இதில் உள்ள அபத்தங்களைப் பற்றி ஆராய மாட்டார்கள். அவள் கூறுவதில் பெரும் பகுதி அப்படியே தனக்குப் பொருந்தி விடுவதாகக் கருதி, அவளின் ஜோதிடத் திறமையைப் பற்றி தனக்குத் தெரிந்தவர்களிடமும் கூற, ஆளாளுக்கு அவளை ஜாதகத்தோடு அணுக ஆரம்பித்து விட்டார்கள். அவளும் தனக்குத் தோன்றியதை, ‘வழக்கமான தெளிவுடன்’ கூறுவாள்.

தானும் குழப்பிக்கொண்டு, பிறரையும் குழம்ப வைக்கும் கோமதி போன்றவர்களை எப்படிக் கையாள்வது?

அவர் கோணத்திலிருந்து ஒன்றைப் பார்க்க முயற்சி செய்யுங்கள். அப்போது அவர் கூறுவது பெருமளவு விளங்கும். தவிர, ‘அவர் எப்போதுமே குழப்பிக் கொண்டிருப்பார்’ என்ற பிம்பத்தை மனதில் அழுத்தமாகப் பதிவிட வேண்டாம். அப்படிப் பதிந்து விட்டால் அவர் (அரிதாக) தெளிவாகப் பேசும்போதும், அதை நாமே குழப்பிக்கொள்ள வாய்ப்பு உண்டு.

‘மீதிப் பேர் உன் அளவு புத்திசாலின்னு நினைச்சுக்காதே. நீ சாமர்த்தியமா பேசுவது அவர்களுக்குப் புரியாமல் போகலாம். எனவே, ஒரு குழந்தைக்குச் சொல்வது போல தெளிவாகவே மீதிப் பேரிடம் பேசு’ என்பது போல் கூறலாம். அதாவது, கோமதிகளைப் புண்படுத்தாமலேயே ஓரளவாவது மாற்ற இதுபோன்ற வாக்கியங்கள் பயன்படும்.

கோமதி போன்றவர்கள் ஒன்றைக் கூறி, அது உங்களுக்குப் புரியவில்லை என்றால் அவர்கள் கூறியதின் சுருக்கத்தை நீங்கள் கூறி, அது சரிதானா என்று அவரிடமே கேட்டு விடலாம்.

கோமதி போன்றவர்களிடம் உண்மையான அன்பைச் செலுத்துவதுடன், அதை அவர்கள் உணரவும் செய்யுங்கள். அப்போது, தான் பேசுவது உங்களைச் சரியாக அடைய வேண்டும் என்பதற்கு அவர் மேலும் கொஞ்சம் முயற்சி எடுத்துக்கொள்வார்.

முதுமை அடையும்போது ஒருவருக்குக் குழப்பம் வருவது இயல்பு. அதுவும் நினைவாற்றல் தொடர்பான நோய்களால் ஒருவர் பாதிக்கப்பட்டால் அவர் பேசுவதில் தெளிவில்லாமலும் தர்க்கம் இல்லாமலும் போக வாய்ப்பு உண்டு. இது இயல்பானதுதான்.

சில சமயம் உணர்வுகளின் பாதிப்புகள் காரணமாக, தெளிவில்லாமல் பேசக் கூடும். அந்த உணர்வுகளைப் புரிந்துகொண்டு, ‘சிறிது நேரம் கழித்துப் பேசலாமே’ என்று கூறினால், குழப்பமான தகவல் தொடர்பு குறையும்.

(அடுத்த இதழில் நிறைவடையும்)

ஜி.எஸ்.எஸ்.
பொருளாதாரம், வங்கியியல், வணிக நிர்வாகம், பணியாளர் மேலாண்மை ஆகியவற்றில் முதுநிலைக் கல்வி பயின்றவர் ஜி.எஸ்.எஸ். என்று பரவலாக அறியப்படும் ஜி.எஸ். சுப்ரமணியன். இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளையும், அருண் சரண்யா என்ற பெயரில் இருநூறுக்கும் அதிகமான சிறுகதைகளையும் எழுதியவர். வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் மனநலம் தொடர்பான நிகழ்ச்சிகளையும் பல வினாடிவினா நிகழ்ச்சிகளையும்  வழங்கியிருக்கிறார். பல நிறுவன ஊழியர்களுக்கு மனிதவளப் பயிற்சிகளும் ஆங்கில மொழிப் பயிற்சியும் நடத்தி வருகிறார்.

Stay Connected

261,056FansLike
1,932FollowersFollow
11,700SubscribersSubscribe

Other Articles

பெரியாழ்வார்!

0
 பகுதி - 10 -ரேவதி பாலு, சென்னை ஸ்ரீ வில்லிப்புத்தூரில் பிறந்த விஷ்ணுசித்தர் என்பவர் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். இவர் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் வேதியர்...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

பாகம் - 8 -சுசீலா மாணிக்கம் ஓவியம்: பத்மவாசன் ஆதி காலத்தில் மொழிகள் கண்டுபிடிக்காத ஒரு சமுதாயத்தில் மனிதன் எப்படி பேசி இருப்பான்? எப்படி தங்களுக்குள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள்? அன்பால் இணைந்து... கண்களால்தான் பேசியிருப்பார்களோ! தங்களின்...

பறக்கும்  பாவைகள்!

பகுதி - 9                              ‘எங்களாலும் பறக்க முடியும்’ -ஜி.எஸ்.எஸ். ‘நியூயார்க் நகரிலிருந்து 2018 ஏப்ரல் 17 அன்று கிளம்பிய ஒரு விமானம் அது.  கிளம்பிய அரை மணி நேரத்தில் அதன் ஜெட் எஞ்சின்கள் செயலற்றுப் போக,...

பறக்கும்  பாவைகள்!

பகுதி - 8 - ஜி.எஸ்.எஸ். “எல்லைகளை உடையுங்கள்!” அமெரிக்காவைச் சேர்ந்த ஜெசிகா காக்ஸ் விமான ஓட்டுனர் உரிமத்தைப் பெற்றபோது உலகமே அவரை வியந்து போற்றியது.  காரணம் அவர் தன் இரு கைகளையும் இழந்தவர்! ஜெசிகா காக்ஸ் செய்துள்ள...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்! 

பாகம் - 5 -சுசீலா மாணிக்கம் ஓவியம்: பத்மவாசன் இல்லறவியல் (இல்+அறம்+இயல்)      அறமும் பொருளும் ஈட்டப்பட்ட மனித வாழ்வு இல்லறத்தில்தான் முழுமையடைகிறது எனலாம். சங்க காலம் தொட்டே நம் தமிழ் மரபு பற்பல இல்லற விழுமியங்களை...