0,00 INR

No products in the cart.

ஜெர்மனியின் இன்னொரு முகம்!

பயணம் – கிழக்கு ஐரோப்பியா – 7

– பத்மினி பட்டாபிராமன்.

லகப் போரில் தாக்குப்பிடித்த பெர்லின் மற்றும் ட்ரெஸ்டன்
‘ரஷ்யாவும் அமெரிக்காவும் மூக்குடன் மூக்கு நின்று சண்டையிட்ட இடங்கள்’ என்று சென்ற இதழில் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா…? உண்மையில், சண்டையிட ஆயத்தமான இடம்தான் அது.

செக்பாயிண்ட் சார்லி (Checkpoint Charlie)
கிழக்கு மேற்கு பெர்லின் இடையே, கட்டப்பட்டிருந்த பெர்லின் சுவரின் இரண்டு பகுதிகளுக்கும் நடுவே கடக்கும் ஒரு பாயிண்ட் இது. கால்நடையாக அல்லது ஒரு கார் கடக்கும் அளவுதான் இடைவெளி. அமெரிக்கா, பிரிட்டன், ஃபிரான்ஸ் போன்ற நாடுகள் அடங்கிய நேச நாட்டுப் படையினர் பெர்லினின் மேற்குப் பகுதியை ஆக்கிரமிக்க, ரஷ்யா கிழக்கு பகுதியைப் பிடித்தது.
இரண்டு புறமும் கண்காணிப்பதற்காக நிறுவப்பட்ட செக்போஸ்ட்தான் செக்பாயிண்ட் சார்லி.

1961ல் மேற்குப் பகுதியில் அமெரிக்க டாங்கிகள் வந்து நிற்க, தாக்குதலுக்குத் தயாராக கிழக்குப் பகுதியில் ரஷ்ய டாங்கிகள் அணிவகுத்து நின்றன. தாக்குதலை எதிர்கொள்ள மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டன. இன்றும் அதேபோல் சித்தரித்திருக்கிறார்கள். (படத்தில் காணலாம்) இதைத்தான், ‘நோஸ் டு நோஸ்’ என்று குறிப்பிட்டார் கைடு.

ரஷ்யப் பகுதியில் கண்காணிப்பு டவர்கள், தடைகள் ஏற்படுத்தப்பட்டன. சுமார் 28 வருடங்கள் பரபரப்பாக இயங்கிய இந்த செக்போஸ்ட், பெர்லின் சுவர் இடிக்கப்பட்ட பின், இன்று சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாகி விட்டது. அதற்கு முக்கியக் காரணம், பல ஹாலிவுட் திரைப்படங்கள், குறிப்பாக ஜேம்ஸ்பாண்ட் படமான, ‘ஆக்டோபுஸ்ஸி’ திரைப்படத்தில் செக்பாயிண்ட் சார்லியை ரோஜர்மூர் கடந்து செல்வதாக காட்சிகள் வந்ததிலிருந்து இந்த இடம் இன்னும் பிரபலம். மறைந்த அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி 1963ல் இங்கே வந்திருக்கிறார்.
இப்போது அங்கே ஒரு மியூசியம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பெர்லின் பிரிவினை மற்றும் இரண்டாம் உலகப் போர் குறித்த அத்தனை வரலாற்றுச் செய்திகளும் சொல்லப்பட்டுள்ளன.
உணவு விடுதிகளில், ‘செக்பாயின்ட் கறி’ அனைவருக்கும் பிடித்த டிஷ் என்கிறார்கள். அது என்னவோ, உள்ளே சென்று சோதித்துப் பார்க்கத் துணிவில்லை. நம்ம ஊர் பெயரான கறி உலக அந்தஸ்து பெற்று விட்டது.

இரண்டாவது உலகப் போரில் இறந்த வீரர்களுக்கான கல்லறைகள் நகரின் ஒரு பகுதியில் கான்க்ரீட் செவ்வகங்களாகக் காணப்படுகின்றன. ஜெர்மனி வீழ்ந்த பின், அதன் எதிரேதான் ஓர் இடத்தில் பதுங்கு குழியில் ஹிட்லர் தங்கியிருந்தாராம். அந்த இடத்தையும் காட்டுகிறார்கள்.

நாடாளுமன்றம்


ஜெர்மனியின் தலைநகரிலிருக்கும் நாடாளுமன்றக் கட்டடத்தின் பெயர், Reichstag Building. பெர்லினின் இரண்டு பகுதிகளும் இணைந்ததையும், பான் (Bonn) நகரிலிருந்து மீண்டும் பெர்லின் தலைநகர் ஆனதையும் பதிவு செய்யும் வகையில் அதன் உச்சியில் ஒரு கண்ணாடி டோம் (The Reichstag Dome) கட்டப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத்தை வெளியே சுற்றிப் பார்த்தபின்,(உள்ளே செல்ல அனுமதியில்லை) அடுத்த விசிட், ராயல் பேலஸ் அல்லது சிட்டி பேலஸ். 1451ல் கட்டப்பட்டது.1918ம் ஆண்டு வரை, ‘கிங் ஆஃப் ப்ரஷ்யா’ (King of Prussia) என்ற அரசர்கள் மற்றும் அவர்களின் வழித்தோன்றல்கள் வசிக்கும் அரண்மனையாக இருந்திருக்கிறது. அதன் உச்சியிலும் 200 அடி உயர கம்பீரமான ஒரு டோம். சில வருடங்களுக்கு முன் புதுப்பிக்கப்பட்டு, பழைமையின் அழகோடும், புதுமையின் பொலிவோடும் ஸ்ப்ரீ நதிக்கரையில் (Spree River) காட்சி தருகிறது.

ஓபரா ஹவுஸ்


ரோப்பிய நாடுகளில் அவர்களின் கலை வளர்க்கும் இடமாக அனேகமாக ஒரு ஓபரா ஹவுஸ் இருக்கும். சிம்ஃபோனி, கச்சேரிகள், நாடகங்கள் என்று தினமும் ஏதாவது நிகழ்வு நடந்து கொண்டிருக்கும். A Masked Ball, Hänsel and Gretel, The Magic Flute இவையெல்லாம் சில புகழ் பெற்ற ஜெர்மன் நாடக நிகழ்ச்சிகள். வெளியே இருக்கும் போஸ்டர்களும் ஜெர்மன் மொழியில் தான் இருக்கின்றன.

ஓபரா ஹவுஸுக்கு வெளியே சில வேடிக்கையான வாகனங்கள் ஓடிக் கொண்டிருந்தன. நம்ம ஊர் ஆட்டோவையும் ரிக்க்ஷாவையும் இணைத்தாற்போல். மூக்கு நீளமாக ஒரு வாகனம். ஓட்டுபவர் முன்னே அமர, பின்னால் ஒருவர் செல்லலாம். அதில் பயணிக்க ஆசை இருந்தும், நேரம் கிடைக்கவில்லை.

ப்ராண்டன்பர்க் கேட் (Brandenburg Gate)

ஜெர்மனியின் அடையாளச் சின்னமாக இருக்கும் ஒரு முக்கியமான இடம் ப்ராண்டன்பர்க் கேட். 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வரலாற்று நினைவுச் சின்னமாகும் இது. 1806ல், இதன் வழியே நெப்போலியன் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் ட்ரம்பெட் வாத்தியங்கள் முழங்க, ஊர்வலம் சென்றதாக வரலாறு. அதன் நினைவாக தூண்களின் உச்சியில், நடுப்பகுதியில் குதிரை சிலைகள் உள்ளன. அதனால்தானோ என்னவோ, அந்த வளாகம் முழுவதும் இரண்டு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டிகள் சுற்றுலாப் பயணிகளை நிறையக் கட்டணத்தில் ஏற்றிச் செல்லத் தயாராக நிற்கின்றன. சிட்டி பேலஸிலிருந்து இங்கு வரும் வழியில் லிண்டென் மரங்கள் வரிசையாக குடை பிடிக்கும். அழகான பொலிவார்ட் நடைபாதையில் மெல்ல நடக்கும் உள்ளூர் மக்கள்.

பெர்லின் டவர்

 ஒரு சதுக்கம் இல்லாத
ஐரோப்பிய நகரம் ஏது?
பெர்லினிலும் Alexanderplatz
என்ற பெயரில் ஒரு சதுக்கம்
உள்ளது. அதன் ஒரு புறம்
நீண்டு உயர்ந்து, உச்சியில்
உருண்டை அமைப்பு கொண்ட
பெர்லின் டிவி டவர்
ஆன்டெனாவுடன் காட்சிக்குக் கிடைக்கிறது.
368 மீட்டர் உயரம்
கொண்ட இந்த டவர்
ஜெர்மனியிலேயே உயரமான அமைப்பு.

உலக கடிகாரம்
டவர் எதிரே ஜெர்மனியின் மற்றோர் அடையாளமான உலக கடிகாரம் (World Clock) கம்பீரமாக நிற்கிறது. இதில் உலகில் உள்ள 148 நாடுகளின் நேரத்தை ஒரே இடத்தில் நின்று பார்க்க முடிகிறது. 16 டன் எடை கொண்ட இந்த க்ளாக், 1969ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது.

24 தூண் அமைப்புக்கள் (column) கொண்டு, ஒவ்வொன்றும் உலகின் ஒரு டைம் சோன் காட்டும். இதனை 120 பொறியாளர்கள் சேர்ந்து உருவாக்கியிருக்கிறார்கள். அந்தக் கால கடிகாரம் போல் மெக்கானிக்கல் முறையில் இயந்திரங்களால் 24 மணி நேரமும் இயங்குகிறது. போரின் தாக்கமெல்லாம் முடிந்து, அமைதியை வேண்டி சதுக்கத்தின் நடுவே ஒரு நட்பு நீரூற்று (Fountain of friendship) அமைக்கப்பட்டிருக்கிறது.

Germany, Berlin, Alexanderplatz, TV Tower and World Clock

சதுக்கத்தில் ட்ராம்கள் சத்தமின்றி வளைந்தும் வழுக்கியும் சென்ற வண்ணம் உள்ளன. அவை ஊர்ந்து செல்வதைப் பார்ப்பதே அழகு. அருகேயே பெர்லின் ரயில்வே ஸ்டேஷன். மெட்ரோ ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்கள் வந்தும் சில நொடிகள் நின்றும் வேகமெடுத்துச் செல்கின்றன.

ட்ரெஸ்டன் (Dresden) நகரம்
ந்த ரயில்களில் ஒன்றில்தான் நாம் ஜெர்மனியின் புகழ் பெற்ற இன்னொரு நகரமான ட்ரெஸ்டன் செல்லப் போகிறோம். கோச் வந்து நின்றது. அதில் சுமார் மூன்று மணி நேரப் பயணத்தில் ட்ரெஸ்டன் அடைந்தோம். முதலில் கண்ணில் பட்டது ஐரோப்பிய பாணி கட்டடங்கள், சர்ச்கள். ஆனால், அவையெல்லாம் ஏன் கறுப்பாகப் பாசி பிடித்தாற்போல பழைமையான தோற்றத்திலேயே இருக்கின்றன?

இதுவரை பளபளப்பான ஊர்களைப் பார்த்த கண்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கவே, வியந்து போனோம். ஏன்… அப்படி வைத்திருக்கிறார்கள்? அதற்குப் பெரிய வரலாற்றுப் பின்னணி இருக்கிறது!
(தொடர்ந்து பயணிப்போம்)

பத்மினி பட்டாபிராமன்
பத்மினி பட்டாபிராமன் மூத்த எழுத்தாளர். பத்திரிகையாளர். குறுநாவல்களும் சிறுகதைகளும் பிரபல பத்திரிகைகளில் நிறைய எழுதி முதல் பரிசும் பெற்றவர். இவற்றின் தொகுப்பாக இதுவரை ஏழு புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார். மருத்துவம், தோட்டக் கலை, புகைப்படக் கலை பற்றிய தொடர் கட்டுரைகள், கட்டுரைகள் மங்கையர் மலரிலும், கல்கியிலும், தினமணி நாளிதழிலும், வெளிவந்து கொண்டிருக்கின்றன உலக நாடுகளில் சுமார் 80 நாடுகளுக்கு மேல் சென்றிருப்பவர். தன் அனுபவங்களை பயணக் கட்டுரைகளாக, எழுதி வருபவர். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் வருகைப் பேராசிரியராக (VISITING FACULTY) 14 வருடங்களுக்கு மேலாக கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், அனிமேஷன், வெப் டிசைனிங் வகுப்புக்கள் நட்த்திய அனுபவம். சென்னை தொலைக்காட்சியில் அறிவிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர், அகில இந்திய வானொலி எஃப். எம்மில் செய்தி வாசிப்பாளர், பிக்ஸல் மாயா அனிமேஷன் பயிற்சி நிலையத்தின் மந்தவெளிப் பிரிவு இயக்குனர். மாணவர்களுக்கு மல்டிமீடியா, அனிமேஷன் வகுப்புக்கள் எடுத்து வருகிறார். கைவினைப் பொருட்கள் செய்வதிலும் வீணை வாசிப்பதிலும் ஆர்வம் உடையவர். சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வருபவர். “உரத்த சிந்தனை” அமைப்பின் தற்போதைய தலைவர்.

Stay Connected

261,056FansLike
1,932FollowersFollow
11,700SubscribersSubscribe

Other Articles

பெரியாழ்வார்!

0
 பகுதி - 10 -ரேவதி பாலு, சென்னை ஸ்ரீ வில்லிப்புத்தூரில் பிறந்த விஷ்ணுசித்தர் என்பவர் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். இவர் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் வேதியர்...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

பாகம் - 8 -சுசீலா மாணிக்கம் ஓவியம்: பத்மவாசன் ஆதி காலத்தில் மொழிகள் கண்டுபிடிக்காத ஒரு சமுதாயத்தில் மனிதன் எப்படி பேசி இருப்பான்? எப்படி தங்களுக்குள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள்? அன்பால் இணைந்து... கண்களால்தான் பேசியிருப்பார்களோ! தங்களின்...

பறக்கும்  பாவைகள்!

பகுதி - 9                              ‘எங்களாலும் பறக்க முடியும்’ -ஜி.எஸ்.எஸ். ‘நியூயார்க் நகரிலிருந்து 2018 ஏப்ரல் 17 அன்று கிளம்பிய ஒரு விமானம் அது.  கிளம்பிய அரை மணி நேரத்தில் அதன் ஜெட் எஞ்சின்கள் செயலற்றுப் போக,...

பறக்கும்  பாவைகள்!

பகுதி - 8 - ஜி.எஸ்.எஸ். “எல்லைகளை உடையுங்கள்!” அமெரிக்காவைச் சேர்ந்த ஜெசிகா காக்ஸ் விமான ஓட்டுனர் உரிமத்தைப் பெற்றபோது உலகமே அவரை வியந்து போற்றியது.  காரணம் அவர் தன் இரு கைகளையும் இழந்தவர்! ஜெசிகா காக்ஸ் செய்துள்ள...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்! 

பாகம் - 5 -சுசீலா மாணிக்கம் ஓவியம்: பத்மவாசன் இல்லறவியல் (இல்+அறம்+இயல்)      அறமும் பொருளும் ஈட்டப்பட்ட மனித வாழ்வு இல்லறத்தில்தான் முழுமையடைகிறது எனலாம். சங்க காலம் தொட்டே நம் தமிழ் மரபு பற்பல இல்லற விழுமியங்களை...