0,00 INR

No products in the cart.

பாரெங்கும் புத்தாண்டு கொண்டாட்டம்!

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!
 • ஸ்காட்லாந்து மக்கள் புத்தாண்டு தினத்தன்று தங்கள் வீட்டிற்கு விஜயம் செய்யும் முதல் விருந்தினர் யாராக இருந்தாலும் முத்தமிட்டு வரவேற்கிறார்கள். இவர்களிடையே ஒரு விசித்திர பழக்கம் என்னவென்றால், புத்தாண்டு தினத்துக்கு முந்தைய நாள் பிற்பகல் முதல் வீட்டைப் பெருக்கவோ அல்லது வீட்டில் எரிந்து கொண்டிருக்கும் விளக்குகள், கணப்பு அடுப்புகள் ஆகியவற்றை அணைக்கவோ மாட்டார்கள்.
 • நெதர்லாந்து நாட்டு மக்கள் புத்தாண்டு தினத்தன்று விடியற்காலையில் கப்பல்களின் ஹார்ன் சப்தம் கேட்பதை நல்ல சகுனமாகக் கருதுகிறார்கள்.
 • ப்பானியர்கள் புத்தாண்டு தினத்தன்று குளித்து புது உடைகளை அணிந்து, விதவிதமான பலகார உணவு வகைகளைச் சமைத்து, நண்பர்கள், உறவினர்களுடன் கூடி உண்டு மகிழ்கிறார்கள். எவ்வளவு எளியவராயினும் அன்று புத்தாடை அணிந்து, தெருக்களில் சந்தோஷமாய் ஓடி ஆடி விளையாடுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். மாலையில் வண்ண வண்ண காகித விளக்குகளால் வீடுகளை அலங்கரிக்கிறார்கள். புத்தாண்டின் முதல் மூன்று நாட்கள் வியாபாரிகளுக்கு ஓய்வு நாள்.
 • புத்தாண்டை வெகு விமரிசையாகக் கொண்டாடுபவர்கள் கொரிய மக்கள்தான். புத்தாண்டு தினத்தையொட்டி, கொரிய அரசு ஜனவரி முதல் மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கிறது. முதல் தேதி வாழ்த்துக்களைப் பரிமாறியும், இரண்டாவது நாள் தங்களின் முன்னோர்களை வணங்கியும், மூன்றாவது நாள் செமத்தியான விருந்து வைத்தும் கொண்டாடுகிறார்கள்.
 • மெரிக்காவில் பிலடெல்பியாவில் புத்தாண்டு தினத்தைக் கொண்டாடுவதே வினோதமானது. ஆயிரக்கணக்கானவர்கள் விந்தையான கோமாளி உடைகளை உடுத்திக்கொண்டு, புதுவருட நாளன்று நாட்டியமாடிக் கொண்டும், பாடிக் கொண்டும், வினோத வித்தைகளையும் குரங்கு சேட்டைகளையும் செய்து கொண்டு தெருக்களில் ஊர்வலமாக வருகிறார்கள். இதனை மக்கள் திரளாக நின்று வீதியெங்கும் வேடிக்கை பார்க்கிறார்கள்.
 • லாவோஸ் மக்கள் பறவையையும் தண்ணீர்ப் பைகளில் மீனையும் வாங்கி, பறவைகளை வானத்தில் சுதந்திரமாக சிறகடித்துப் பறக்க விட்டும், மீன்களை ஆற்றில் நீந்திச் செல்ல அனுமதித்தும் விடுகிறார்கள். புத்தாண்டின் புதுநாளில் செய்த ஒரு நல்ல காரியம் என்று இதை நினைக்கிறார்கள்.
 • பிரேசில் நாட்டில் அனைத்து இடங்களிலும் வண்ண விளக்குகள் ஜொலிக்க, ரியோடி ஜெனிரோவில் உள்ள பூங்காவில் எல்லோரும் கூடி வாண வேடிக்கையுடன் வெள்ளை ஆடை அணிந்து கொண்டாடி மகிழ்கின்றனர். கெட்ட ஆவிகளைத் துரத்த இந்த வெள்ளை ஆடை அணிவது வழக்கமாக உள்ளது. பல நாடுகளில் டிசம்பர் 31ம் தேதி இரவு 12 மணிக்கு விசில் சத்தம், கிலுகிலுப்பை சத்தம் செய்து மகிழ்கின்றனர்.
 • பூலோக அமைப்பின்படி உலகிலேயே புத்தாண்டை முதலில் வரவேற்பவர்கள் நியூசிலாந்து மக்கள்தான். புத்தாண்டை வரவேற்று, மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.
  – ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி

புத்தாண்டு தகவல்கள்

கிம் இல் சுங்

 • வட கொரியாவில் மட்டும் ஏப்ரல் மாதம் 15ஆம் தேதியன்றுதான் புத்தாண்டு பிறக்கிறது. ஏனெனில், அந்நாட்டின் முதல் அதிபர், ‘கிம் இல் சுங்’ ஏப்ரல் 15 அன்றுதான் பிறந்தாராம். இவர் தற்போதைய அதிபரின் தாத்தா என்பது குறிப்பிடத்தக்கது.
  – ஆர்.பத்மப்ரியா, ஸ்ரீரங்கம்
 • அடிமை விலங்கை உடைத்த ஆபிரகாம் லிங்கன் 1868ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியன்றுதான், அடிமைத் தளையில் இருந்து கருப்பினத்தவர்கள் விடுவிக்கப்படுவதாகப் பிரகடனம் செய்தார்.
  – எஸ்.ராஜம், ஸ்ரீரங்கம்

புத்தாண்டு பொன்மொழிகள்

 • ‘புத்தாண்டு வாழ்த்துக்கள்!’ இது வெறும் சொல் அல்ல; ‘புது நம்பிக்கையின் வெற்றி’ என்று அர்த்தம்.
  – ஜப்பான் பொன்மொழி
 • நம்பிக்கையாளர் புதிய ஆண்டின் வருகையைக் காண நள்ளிரவு வரை காத்திருக்கிறார்; அவநம்பிக்கையாளர் பழைய ஆண்டு முடிந்துவிட்டதா என்பதை உறுதிப்படுத்த நள்ளிரவுக்குக் காத்திருக்கிறார்.

கிரீஸ் பொன்மொழி
புத்தாண்டு என்பது ஒரு புதிய ஆண்டின் பிறப்பு. மற்றவர்களுக்கு அது பழைய ஆண்டின் இறுதிச் சடங்காகும்.
– யாரோ
– தொகுப்பு : ஆர்.பிரசன்னா, திருச்சி

புத்தாண்டு வாழ்த்து


ழைய துக்கங்கள், வலி, கண்ணீர்த் துளிகளை மறைக்க புதிதாய் பிறந்து விட்டது ஒரு அற்புதமான வருடம். அதில் எல்லா நாட்களும் அனைவரும் புன்னகையுடன் தொடர்வோம். முடியும் இந்த வருடம், நம் கவலைகளுக்கு முடிவாய் இருக்கட்டும். மலரும் புத்தாண்டு, நம் மகிழ்ச்சிக்கு ஆரம்பமாய் இருக்கட்டும். போற்றத்தக்க புது வாழ்வு பூக்களாய் பூக்க, போட்டியில்லா சமுதாயம் நேசக்கரம் நீட்ட, பஞ்சமில்லா பெருவாழ்வு நெருங்கி வர பிறக்கட்டும் புதிய ஆண்டு. வருக புத்தாண்டு!
– சுந்தரி காந்தி, பூந்தமல்லி.

காலண்டர் பிறந்த கதை


காலத்தைக் கணக்கிட முதன்முதலில் மனிதன் எப்படி முயற்சி செய்தான் என்பதை அறிந்தால் வியப்பாக இருக்கும். பயிர் தொழில்தான் மனித வாழ்விற்கு இன்றியமையாதது. இதுதான் காலண்டர் தோன்றவும் காரணமாக இருந்துள்ளது. ஒவ்வொர் ஆண்டும் பயிர்த் தொழில் செய்யும் காலத்தையும், பயிர் அறுவடை செய்யும் காலத்தையும் மனிதன் கவனித்து வந்தான். ஒருமுறை அறுவடை ஆகும் காலத்திற்கும், அதே பயிர் மறுமுறை விளைந்து அறுவடை ஆகும் காலத்திற்கும் இடையே உள்ள காலத்தைக் கணக்கிட்டான். காலண்டர் தோன்றுவதற்கு இதுதான் முதல் முயற்சியாக இருந்துள்ளது.

எகிப்தியர்தான் ஆண்டினை சரியாகக் கணக்கிட்டுக் கூறினர். நைல் நதியில் வெள்ளம் வரும் காலம்தான் பயிர் தொழில் செய்வதற்கு ஏற்ற காலம் என்பதை அறிந்திருந்தனர். இந்த வெள்ளம் ஆண்டுக்கு ஒருமுறைதான் ஏற்படும். ஒரு வெள்ளம் ஏற்பட்டு, அடுத்த முறை வெள்ளம் ஏற்படும் காலத்திற்கு இடைப்பட்ட காலம் ஒரு வருடமாகக் கருதப்பட்டது.
இந்தக் கணக்கீடு கூட முற்றிலும் சரியானது என்று கூற இயலவில்லை. நைல் நதியில் வெள்ளம் வரும் ஒவ்வொரு முறையும் சூரிய உதயத்துக்கு முன் ஒரு பிரகாசமான நட்சத்திரம் தோன்றி மறைந்ததைப் பார்த்தனர். அன்றிலிருந்து மறுமுறை அந்த நட்சத்திரம் தோன்றும் வரையிலான நாட்களை எண்ணத் தொடங்கினர். சரியாக 365 நாட்கள் வந்தன.
இதைக் கண்டறிந்த பின் எகிப்தியர்கள் 365 நாளை 12 மாதங்களாகப் பிரித்தனர். ஒவ்வொரு மாதத்திற்கும் 30 நாட்கள் என்றும் கடைசி மாதத்திற்கு 35 நாட்கள் என்றும் பிரித்தனர். இதிலிருந்து காலண்டர் முறைக்கு வித்திட்டவர்கள் எகிப்தியர்கள் என்று கூறலாம். இவர்களது காலண்டர் சந்திரனின் போக்கைக்கொண்டு அமைக்கப்பட்டதால், ‘லூனார் காலண்டர்’ எனப்பட்டது.

இந்தக் காலண்டர் முறையும் சரியாக வராததால், சூரியனின் சுழற்சியை அடிப்படையாக வைத்து காலண்டர் தயாரித்தனர். இது, ‘சோலார் காலண்டர்’ எனப்பட்டது. பூமி, சூரியனை ஒருமுறை சுற்றி வர, 3651/4 நாட்கள் ஆகும். இந்த கால் நாள் முறையால் அதிக குழப்பமடைந்தனர் வானிலை ஆய்வாளர்கள். ரோமப் பேரரசின் சக்கரவர்த்தி ஜுலியஸ் சீசர் ஒரு கட்டளையிட்டார். அதாவது, கி.மு. 46 ஆண்டிற்கு மட்டும் 445 நாட்கள் இருக்கட்டும் என்றும், அதற்குப் பின் வரும் ஆண்டுகள் 365 நாட்கள் கொண்டவைகளாக இருக்கட்டும் என்றும் கட்டளையிட்டார். அது மட்டுமில்லாமல்; ஒவ்வொரு நான்காவது ஆண்டும் 366 நாட்கள் கொண்டிருக்கும் என்றும் அறிவித்தார். இந்த நான்காம் வருடம்தான் லீப் வருடம்.

இந்த முறைகூட சரியாக அமையவில்லை. இதற்கு இறுதி முடிவு கண்டார் 13ம் போப் கிரிகோரி என்பவர். போப் கிரிகோரி 1582ம் ஆண்டிலிருந்து பத்து நாட்களை தள்ளுபடி செய்துவிட்டார். இதற்கு அடுத்தகட்டமாக ஒவ்வொரு 100வது ஆண்டு இறுதியிலும் வருகிற ஆண்டை 400ஆல் வகுக்கப்பட்டால் அன்றி, லீப் ஆண்டாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றார். அதன்படி 1700, 1800, 1900 ஆகிய ஆண்டுகள் லீப் ஆண்டுகள் இல்லை. ஆனால், 2000ம் வருடம் லீப் வருடமாகும். இந்தக் காலண்டர் முறைக்கு, ‘கிரிகோரியன் காலண்டர்’ என்று பெயர். இந்தக் காலண்டர் முறைதான் உலகம் முழுமைக்கும் பொதுவான காலண்டர் முறை என்று ஒப்புக்கொள்ளப்பட்டு, தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது.
– ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி

டைரி!

ங்கையர் மலருக்கும் வாசகீஸ் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்! புத்தாண்டு என்றதும் பலரும் எதிர்பார்ப்பது காலண்டர்களையும் டைரியையும்தான்! அந்தப் பலரில் நானும் ஒருத்தி!
டைரி எழுதும் பழக்கம் உள்ள என் அண்ணனைப் பார்த்துதான் எனக்கும் ஆசை வந்தது. நான் சின்ன வயதிலேயே மனதில் தோன்றும் விஷயங்களை நோட்புக்கில் எழுதுவேன்.

என் அண்ணன் முதன் முதலில் ஒரு டைரி கொடுத்து, ‘இனி இதில் எழுது’ என்றார். (ஒவ்வொரு வருடமும் டிசம்பரில் தவறாமல் கொடுப்பார். இப்போது அவர் இல்லையென்றாலும் என் பழக்கம் மாறவில்லை) அது முதல் இப்போது வரை எழுதுகிறேன். அதிலும் ஒரு நாளுக்கு ஒரு பக்கம் இருக்கும் டைரிதான் பிடிக்கும்.

மற்றவர் டைரியை யாரும் படிக்கக் கூடாது என்பார்கள். ஆனால், என் சின்ன மகன் மட்டும் அதற்கு விதிவிலக்கு! என் டைரியை எடுத்து படித்துவிட்டு, ‘நல்லா எழுதறம்மா’ என்று பாராட்டு வேறு. சில சமயங்களில் திடீர்னு பழையதை படித்து, மனதில் ரீ வைண்ட் பண்ணுவேன். ஆனால், இப்பல்லாம் ஏனோ எனக்கு ஆர்வம் குறைந்து விட்டது. ‘எதற்காக இடத்தை அடைத்துக் கொண்டு இத்தனை டைரிகள்? நமக்குப் பின் தூக்கிப் போடுவதற்கு பதில், நாமே கிழித்துப் போட்டுவிட்டால் என்ன’ என்று கூட தோன்றுவதுண்டு!
ஆனாலும், புத்தாண்டு நெருங்கி விட்டதே. இன்னும் புது டைரி வரலையேனு எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது!
டைரி எழுதும் எல்லோருக்குமே இப்படித்தானா?
– இந்திராணி பொன்னுசாமி, ஈக்காட்டுதாங்கல்.

1 COMMENT

 1. புத்தாண்டு செய்திகள்,கொண்டாடங்கள்,காலண்டர்,டைரி என பல விரிவான நல்ல தகவல்களை தெரிந்துகொகொண்டோம்.நன்றி

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

மூக்குத்தியின் கதை!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!  நாயக்கரின் ஆண்டாள் பக்தி மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரை அனைவரும் அறிவோம். அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மீது கொண்டிருந்த அளவிட முடியாத பக்தி பற்றி அறிவோமா? ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உச்சிவேளை (பிற்பகல்) பூஜை...

ஆதாயம் தேடும் மனிதர்கள்!

5
சிறுகதை - கே. அம்புஜவல்லி, புத்தூர் ஓவியம்: சேகர் சி. ஏ.  படித்து தில்லியில் மத்திய அரசாங்கத்தில் தலைமைப் பதவி வரை வகித்த நடேசன், நாற்பது ஆண்டு கால பணிக்குப் பிறகு ஒய்வு பெறுகிறார். அவர் மனைவி...

மங்கையர் மலர்  F.B. வாசகர்களின் சுதந்திர தின தகவல்கள்!

0
  காந்திஜியின் தபால் தலைகள் அரிதாகப் போற்றப்படுகிறது. பத்து ரூபாய்  மதிப்பிலான தபால் தலைகள் பதினெட்டு  மட்டுமே  தற்போது  உள்ளதாக கூறப்படுகிறது. மகாத்மாவை கௌரவிக்கும் வகையில் இந்தியாவில் 48-க்கும் மேற்பட்ட  தபால் தலைகளும், 200...

அணை கட்டும் பிராணி!

இயற்கை அதிசயம் வியந்தவர்: பத்மினி பட்டாபிராமன் ரோடன்ட் என்னும் (Rodent) பெருச்சாளி இனத்தைச் சேர்ந்த விலங்கு பீவர் (Beaver). பாலூட்டி வகையைச் சேர்ந்தது. குளம், ஏரி, ஆறுகள் போன்ற சுத்தமான நீர்நிலைகளின் அருகே வசிக்கக்கூடியவை. அமெரிக்கன்...

ஆழ்வார்கள்!

0
பகுதி -11 - ரேவதி பாலு ஆண்டாள்! பன்னிரு ஆழ்வார்களில் ஒரே ஒரு பெண் ஆழ்வார் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்தான்.  ஆண்டாள் என்றாலே அவர் அருளிச் செய்த திருப்பாவையும் அது பாடப்பட்ட புனிதமான மார்கழி மாதமும்தான் நம்...