0,00 INR

No products in the cart.

சஞ்சீவராயர் 

நெடுங்கதை – 1

– லேzy
ஓவியம் : வேதா 

சீதாலஷ்மிக்கு வயது எண்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. அவளுக்கு ஒரே மகன், கோபாலன். அவனுக்கு வயது சுமார் ஐம்பத்து ஏழு இருக்கும். கோபாலனுக்கு ஐந்து வயது இருக்கும்பொழுதே அவன் தந்தை காலமாகிவிட்டார். கோபாலன் ஏனோ கல்யாணம் கச்சேரி என எதுவும் செய்து கொள்ளவில்லை. கொஞ்ச நாளைக்கு சீதாலஷ்மி சொல்லி சொல்லிப் பார்த்து, அலுத்துப்போய் இந்தக் கல்யாணப் பேச்சையே நிறுத்திவிட்டாள்.
சீதாலஷ்மியின் கணவர் மிலிட்டரி டிப்போவில் வேலை பார்த்து வந்ததால், அவளுக்கு இன்னும் அரசு பென்ஷன் வந்துகொண்டிருந்தது. மாம்பலம் காசி விஸ்வநாதர் கோயில் தெருவில் இருந்தது சீதாலஷ்மியின் வீடு. அது அவளுடைய தாய்வழி சொத்து. அந்த தெருவிலேயே அந்த ஒரு வீடுதான் ஓட்டு வீடு.

கடந்த நூறு ஆண்டுகளாக பெரிய மாற்றங்கள் எதுவும் பார்க்காமல் அப்படியே இருந்தது அந்த வீடு. அக்கம் பக்கத்து வீடுகள் எல்லாம், காலப்போக்கில் இடிக்கப்பட்டு அடுக்குமாடி கட்டடங்களாக மாறியிருந்தன.
சீதாலஷ்மியின் வீட்டினுள் சென்று பார்ப்பவர்களை, அந்த வீடு சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பின்நோக்கி இட்டுச் செல்லும். திண்ணை, ரேழி, தாவாரம், அடுப்பங்கரை, பின்புறம் ஒரு சிறு தோட்டம். அதில் அந்தக் காலத்து கிணறு ஒன்று. தோட்டத்தில் சீதாலஷ்மி கொஞ்சம் கீரை, காய்கறி வளர்த்து வந்தாள். ஒரு அவரைக் கொடி, மிளகாய் செடி, கொஞ்சம் பூச்செடிகள் என்று எல்லாம் காடாய் இருந்தன. சாப்பாட்டிற்கு தினம் தோட்டத்திலிருந்து பறிக்கப்பட்ட புளிச்ச கீரை குழம்பும், ஏதாவது காய்கறியும்தான் சமைப்பாள். ரேஷன் அரிசிதான் வாங்குவாள்.

கோபாலன் லேக் வீயு ரோட்டில் ஒரு மார்வாடி நடத்தி வந்த ஒரு அலுவலகத்தில் குமாஸ்தா வேலை பார்த்து வந்தான். சம்பளம் கட்டைதான். ஆனால், அவனுக்கு செலவுகள் கம்மிதான். ஆசைகளும் கம்மி. இரண்டு காட்டன் சட்டைகளும், மூன்று வேஷ்டிகளும்தான் அவன் வைத்திருந்தான். கோபாலனுக்கு நண்பர்கள் என்று யாரும் கிடையாது. வீட்டை விட்டா வேலை, சாயங்காலம் வேலை முடிந்தவுடன் நேரே வீடு.

வீட்டிற்குள் வந்தவுடன் கிணற்றடியில் கை கால் அலம்பிக் கொண்டு, அம்மா கொடுக்கும் சூடான காப்பி ஒன்றை சாப்பிட்டுவிட்டு, அம்மாவும் பிள்ளையும் பக்கத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கோ, சங்கர மடத்துக்கோ, கோதண்டராமர் சுவாமி கோயிலுக்கோ சென்று வருவார்கள். கோவிலில்கூட கோபாலன் தனிமையைத்தான் அதிகம் விரும்புவான். தூண் ஒன்றில் சாய்ந்து அமர்ந்துக் கொண்டு கோபுரத்து புறாக்களையோ, குளத்தில் நீந்தும் வாத்துக்களையோ பார்த்து ரசித்துக் கொண்டிருப்பான்.
சீதாலஷ்மி அப்படியல்ல, கோடி ஆத்து பட்டு மாமியுடன் உட்கார்ந்து ஏதாவது முணுமுணுன்னு கதை பேசிக் கொண்டிருப்பாள். இரவு 7.30 மணிக்கு மேல்தான் இருவரும் வீடு திரும்புவார்கள்.

ஓவியம் : வேதா

ரு நாள் இரவு சாப்பாட்டிற்கு பிறகு இருவரும் சற்று நேரம் காற்றாட வாசல் திண்ணையில் அமர்ந்து கொண்டு தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது சீதாலஷ்மி சொன்னாள், “டேய் கோபாலா, ஒருமுறை இந்த காஞ்சிபுரம் பக்கத்தில இருக்கிற சஞ்சீவராயர் ஆஞ்சனேயர் கோயிலுக்குப் போயிட்டு வரணும்டா. ஒரு நேர்த்திக்கடன் இருக்கு.”

“என்ன அது?” என்று கேட்டான் கோபாலன்.

“அதான், மூணு வருஷத்துக்கு முன்னாடி மழையில கால்ல வெட்டுக்காயம் பட்டுண்டு வந்தியே, எவ்வளவு சிரமப்பட்ட… அப்போ வேண்டின்டது.”

கோபாலனுக்கு அந்த சம்பவம் ஞாபகத்துக்கு வந்தது. நல்ல மழையில் இருட்டில் வந்தபொழுது, தெருவில் கிடந்த தகர ஷீட்டு ஒன்றில் கால் பலமாக மோதி பாளமாக வெட்டுக் காயம் ஏற்பட்டது. அன்றைக்கு டாக்டரிடம் காண்பிக்காமல், ஏதோ துணியை வைத்து அழுத்தி ஒரு கட்டு போட்டுக்கொண்டான். அது இரண்டு நாளைக்கெல்லாம் பயங்கரமாக சீழ் வைத்து கால் வீங்கிப்போய், எழுந்து நடக்கக்கூட முடியாமல் படுத்துவிட்டான். அவன் வலியால் பட்டப்பாட்டை பார்த்த சீதாலஷ்மி, பதறிவிட்டாள். நேரே கோதண்டராமர் கோயிலில் உள்ள ஆஞ்சனேயர் சன்னிதிக்குச் சென்று, “ஆஞ்சனேயா, ராம தூதா… என் பிள்ளையை குணப்படுத்துப்பா, சஞ்சீவராயர் கோயிலுக்கு வந்து உனக்கு நேர்த்திக்கடன் செய்கிறேன்” என்று வேண்டிக்கொண்டாள்.

கோபாலன் அந்த கால் வலியிலும் டாக்டரிடம் வர மறுத்துவிட்டாள். சீதாலஷ்மி பாவம். கோடி ஆத்து பட்டுவுடன் சேர்ந்து, பட்டுவுக்கு தெரிந்த டாக்டர் ஒருவரை வீட்டிற்கே வரவழைத்து ஒரு வாரம் வைத்தியம் பார்த்தாள்.

“ஏம்மா, வேண்டினதுதான் வேண்டின்ட, பக்கத்துல இருக்கே நம்ம ராம ஆஞ்சனேயர் கோயிலுக்கு வரேன்னு வேண்டிக்கக் கூடாதா? அது என்ன காஞ்சிபுரம் தாண்டி ஒரு கோயில்…?”

“அசடு, சஞ்சீவராயர் கோயில் 500, 700 வருஷத்துக் கோயில்டா. ரொம்ப சக்தி வாய்ந்த ஹனுமான்.”

“கோயிலுக்குப் பின்னாடி பெரிய ஏரியிருக்குமே, அந்தக் கோயிலாமா?”

“ஆமாம்டா, அந்த ஏரியே பத்து ஏக்கருக்கு மேல இருக்கும். நீ கூட சின்ன வயசில அங்க வந்திருக்க.”

“ஏம்மா, அந்த ஊருக்கு இங்கிருந்து நேர போக பஸ்ஸோ, ரயிலோ இல்லையேமா. எப்படி போறது?”

“ஏண்டா, பஸ்ஸில, ரயில்லே வர்ற வயசாடா எனக்கு. நீ நம்ம சங்கரனை கேளு. அவன் வந்தா, அவன் வண்டியிலேயே போயிட்டு வந்துடலாம்.”

“ஆட்டோலயா? காஞ்சிபுரத்துக்கா… என்னம்மா விளையாடற?”

“ஏண்டா, போன வருஷம் திருவள்ளுர் தாண்டியிருக்கிற அந்த ஈஸ்வரன் கோயிலுக்கு அவன் வண்டியிலதானே போயிட்டு வந்தோம். அது மாதிரிதான் இதுவும். நான் சொல்றேன்… நீ அவனைக் கேட்டுப்பாரு” என்றாள்.

ங்கரன் ஒரு எழை ஆட்டோ டிரைவர். வயது சுமார் இருபத்தியேழு இருக்கும். ரொம்ப நல்லவன். கோபாலனை போலவே அவனுக்கும் எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. அவன் இருந்தது சைதாப்பேட்டையில். அவன் அப்பா, அம்மா இருவருக்குமே தள்ளாத வயசு. அவனுக்கு ஒரு மூத்த அக்கா. அவளுக்குக் கல்யாணம் ஆன வருஷமே கணவன் துன்புறுத்தல் தாளாமல் வீட்டிற்கு வந்துவிட்டாள். ஏதோ தம்பிக்கு பாரமாக இருந்துவிடக் கூடாது என்று பக்கத்துல இருக்கின்ற சில பணக்காரர் வீடுகளில் வீட்டு வேலை செய்து வந்தாள். எல்லோருக்கும் சங்கரன்தான் காவல், ஆறுதல். வீட்டில் இருக்கும்பொழுது சங்கரன் யார் மனதையும் புண்படுத்தாமல் கலகலவென பேசிக் கொண்டிருப்பான்.

முதலில் வாடகை ஆட்டோதான் ஓட்டிக் கொண்டிருந்தான். கோபாலன் பேச்சைக் கேட்டு வங்கியிலும், போஸ்ட் ஆபீஸிலும் பணம் சேர்த்து சேர்த்து இன்று சொந்தமாகவே தனக்கு புது ஆட்டோ வாங்கிவிட்டான்.
சங்கரனுக்கு கோபாலன்தான் குரு, வழிகாட்டி எல்லாமே. எங்கு சென்றாலும் கோபாலனை பற்றி மிகப் பெருமையாகப் பேசுவான். சீதாலஷ்மியையும் வாயார, ‘அம்மா’ என்று அழைத்துக்கொண்டேதான் வீட்டிற்குள் நுழைவான். அது சீதாலஷ்மிக்கும் ரொம்பப் பிடிக்கும்.

தினந்தோறும் காலை கோபாலனுடைய வீட்டு வாசலில்தான் வண்டியை நிறுத்துவான் சங்கரன். முதலில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு நடந்தே சென்று சுவாமி தரிசனம் செய்து நெற்றியில் பட்டையாக விபூதி பூசிக்கொண்டு வருவான்.

நேரே சீதாலஷ்மி வீட்டிற்குள், “அம்மா” என்று அழைத்துக்கொண்டே வருவான். கோபாலனுக்குத் தரும்பொழுதே சீதாலஷ்மி சங்கரனுக்கும் காப்பி, டிபன் கொடுப்பாள்.

கோபாலனை வலுக்கட்டாயமாக நடக்க விடாமல், பக்கத்தில் இருக்கும் லேக்வியூ ரோட்டிற்கு ஆட்டோவில் அழைத்துச் சென்று, அவனை அலுவலகத்தில் இறக்கிவிட்டு, சீதாலஷ்மிக்கு ஏதாவது கடைக்குப் போகும் வேலை இருந்தால் அதையும் கவனித்துவிட்டுத்தான், தன்னுடைய சவாரிகளை கவனிப்பான். அதேபோல, சில நாட்கள் மதியம் சவாரி எதுவும் இல்லை என்றால், நேரே கோபாலன் வீட்டுத் திண்ணைக்கு வந்துவிடுவான்.
தான் கையில் வீட்டிலிருந்து எடுத்து வந்த மதிய உணவை சாப்பிட்டுக்கொண்டே சீதாலஷ்மியிடம் சற்று நேரம் பேசிவிட்டு திண்ணையிலேயே படுத்து ஒரு தூக்கம் போடுவான். சங்கரனை ஆட்டோ ஸ்டாண்டு பக்கம் பார்க்கவே முடியாது. ஒன்று அவன் வண்டி கோபாலன் வீட்டு வாசலில் நிற்கும். இல்லையென்றால் சவாரிக்கு ஓடிக் கொண்டிருக்கும்.
(தொடரும்)

1 COMMENT

  1. ஆரம்பமே அமர்க்களம்.கதையின் நகர்வு நம்மை அந்த இடத்துக்கே அழைத்துச் செல்கிறது.நூறுவருடத்துக்கு முந்தைய வீடு ,கோவில் ,குளம் என நாமும் சீதா லக்ஷ்மியுடன் பயணிக்கிறோம்.அடுத்த பதிவுக்காய் காத்திருக்கிறேன்.வாழ்த்துக்கள்…

லேZY
‘லேzy’ என்ற புனைப்பெயரில் தனக்கே உரிய, இயல்பான பாணியில், கதை – கட்டுரைகளை எழுதி வருகிறார் ஹரி. தினசரி தான் சந்திக்கும், பழகும் மனிதர்களையே தன் கதைகளுக்கான கதாபாத்திரங்களாக மையப்படுத்தி எழுதுவது இவர் சிறப்பு. அதனாலேயே, அக்கதாபாத்திரங்களின் வயதையொத்த வாசகருக்கு, ஏதோ ஒரு வகையில் அந்த கதாபாத்திரத்துடன் ஒன்றிப்போகும் அனுபவம் கிடைக்கிறது.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

பெரியாழ்வார்!

0
 பகுதி - 10 -ரேவதி பாலு, சென்னை ஸ்ரீ வில்லிப்புத்தூரில் பிறந்த விஷ்ணுசித்தர் என்பவர் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். இவர் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் வேதியர்...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

பாகம் - 8 -சுசீலா மாணிக்கம் ஓவியம்: பத்மவாசன் ஆதி காலத்தில் மொழிகள் கண்டுபிடிக்காத ஒரு சமுதாயத்தில் மனிதன் எப்படி பேசி இருப்பான்? எப்படி தங்களுக்குள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள்? அன்பால் இணைந்து... கண்களால்தான் பேசியிருப்பார்களோ! தங்களின்...

பறக்கும்  பாவைகள்!

பகுதி - 9                              ‘எங்களாலும் பறக்க முடியும்’ -ஜி.எஸ்.எஸ். ‘நியூயார்க் நகரிலிருந்து 2018 ஏப்ரல் 17 அன்று கிளம்பிய ஒரு விமானம் அது.  கிளம்பிய அரை மணி நேரத்தில் அதன் ஜெட் எஞ்சின்கள் செயலற்றுப் போக,...

பறக்கும்  பாவைகள்!

பகுதி - 8 - ஜி.எஸ்.எஸ். “எல்லைகளை உடையுங்கள்!” அமெரிக்காவைச் சேர்ந்த ஜெசிகா காக்ஸ் விமான ஓட்டுனர் உரிமத்தைப் பெற்றபோது உலகமே அவரை வியந்து போற்றியது.  காரணம் அவர் தன் இரு கைகளையும் இழந்தவர்! ஜெசிகா காக்ஸ் செய்துள்ள...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்! 

பாகம் - 5 -சுசீலா மாணிக்கம் ஓவியம்: பத்மவாசன் இல்லறவியல் (இல்+அறம்+இயல்)      அறமும் பொருளும் ஈட்டப்பட்ட மனித வாழ்வு இல்லறத்தில்தான் முழுமையடைகிறது எனலாம். சங்க காலம் தொட்டே நம் தமிழ் மரபு பற்பல இல்லற விழுமியங்களை...