0,00 INR

No products in the cart.

தொழிலுக்கு இல்லை தோல்வி!

– சேலம் சுபா

ல்லடையிலும் நீரை எடுக்க முடியும். அது, பனிக்கட்டியாகும் வரை பொறுத்தால்…” பதினைந்துக்கும் மேற்பட்ட தொழில்களைச் செய்த அனுபவத்தில் உறுதியாகப் பேசுகிறார் சேலம் மாவட்டம், தொப்பூரைச் சேர்ந்த புவனா.

தொப்பூரில் இவரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. தனது தொழில்களாலும் தன்னம்பிக்கையாலும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கி வருகிறார். தற்சமயம் இறங்கியிருக்கும் தனது கோழிப்பண்ணை தொழிலில் தலைநிமிர்ந்து வலம் வருகிறார் இவர். யார் இவர்? தொப்பூர் சென்றோம்… சந்தித்தோம்! ஒரு தொழில் செய்தாலே மூச்சு முட்டிப்போகும் இக்காலத்தில், இத்தனைத் தொழில்களா? எப்படி வந்தது இந்தத் துணிச்சல்? இதோ, புவனாவே சொல்கிறார்…

கணவருடன் புவனா.

“என் சொந்த ஊர் வாழப்பாடி. பெயர் புவனேஸ்வரி. கல்யாணம் பண்ணித் தந்தது தொப்பூர்ல. படிச்சது பி.எஸ்சி., மேத்ஸ். 94ல் திருமணம். கணவர் சுப்ரமணியன். ஒரு பொண்ணு கீர்த்தனா. மகன்கள் இரட்டையர் ஹரி பிரசாத், ஹரி பிரகாஷ். மாமனார், மாமியார், கணவரின் சகோதரர்கள் என கூட்டுக் குடும்பம். முதலில், குடும்பமாக சாப்ட் பொம்மைகள் தயாரித்து சந்தைப்படுத்தினோம். ‘ஹோட்டல் கீர்த்தனா’ எனும் பெயரில் உணவகம், முயல் பண்ணை என்று மாமனாருக்கு உதவியாக இருந்து தொழில்களை நடத்தினோம். ஐந்து வருடத்தில் தனியாக வந்தோம்.

அந்த சமயத்தில் அரசு கேபிளை எடுத்து நடத்தும் வேலைக்காக கணவர் சென்னை சென்றார். குழந்தைகளும் வளர்ந்து பள்ளிக்குச் செல்ல, எனக்கு நேரம் இருந்ததால் புடைவை பிசினஸ் ஆரம்பித்தேன். முதலில் பத்துப் புடைவைகள் எடுத்து வந்தேன். நான் துவங்கிய சமயம் மேல்மருவத்தூர் கோயிலுக்குப் பெண்கள் சிவப்பு புடைவை கட்டிச் செல்ல அதிகம் ஆர்வம் காட்டினர். அதனால் நிறைய சிவப்புப் புடைவைகள் விற்றேன். 115 ரூபாய்க்கு எடுத்து வந்து 150 ரூபாய்க்கு விற்றேன். இதுதான் என் தொழில் பயணத்தின் முதல் புள்ளி. இரண்டாவது தடவை புடைவையுடன் ஜாக்கெட்டுகளை எடுத்து வந்தேன் .

சேலம், ஈரோடு சென்று குறைவான விலையில் தரமான சேலைகளை எடுத்து வந்து நியாயமான லாபம் வைத்து விற்றதால் வீட்டிலேயே புடைவை செக்ஷன், குழந்தைகளுக்கான ரெடிமேடு செக்ஷன் எனக் கடையாக விரிவுபடுத்துமளவுக்கு என் தொழில் முன்னேறியது. என் கணவரும் இங்கேயே வந்து விட்டார். ‘புவனா சில்க் ஹவுஸ்’ என்ற பெயரில் கடையை நடத்தினோம்.

2000லிருந்து 2012 வரை ஜோரான விற்பனை. வீட்டுக்குத் தேவையான அளவுக்கு வருமானம் வந்தது. பிள்ளைகள் வளர வளர கடையை கவனிக்க நேரம் போதவில்லை. அப்புறம் முக்கியமான விஷயம், எங்கள் கடையில் வெறும் துணி வியாபாரம் மட்டுமில்லை; ஒரு பக்கம் ஐஸ்கிரீம் விற்றோம். கவரிங் நகைகள் விற்பனையோடு, மணப்பெண் அலங்கார நகைகளும் வாடகைக்குத் தந்தோம். செம பிசி. உழைப்பும் திட்டமிடலும் நேரமும் நன்றாக இருந்தால் நீங்கள் எந்தத் தொழிலில் இறங்கினாலும் வெற்றியைக் காண முடியும் என்பது புரிந்தது.

எல்லாம் சில வருடங்களே… கடையில் எனக்கு உதவியாக இருந்த என் கணவர் ரியல் எஸ்டேட் பண்ணுவதில் ஆர்வத்துடன் இருந்ததால், கடைக்கு வருவதில் ஆர்வம் இல்லாமல் போயிற்று. மேலும், அக்கம் பக்கம் நகரங்களில் பெரிய பெரிய துணிக்கடைகள் துவங்கியதால், எங்கள் கடைக்கு வருபவர்கள் குறையத் தொடங்கினர்…” நிறுத்தினார் புவனா.

அடடா… கடை இருக்கிறதா? இல்லையா? நம் சந்தேகப் பார்வையை பார்த்துச் சிரித்தவர், தொடர்ந்தார்.

“அதெப்படி, விடுவேனா? வேறு ஒன்றைக் கையில் எடுத்த பின்தான் கடைக்கு மூடுவிழா… கடை இருந்தபோதே சேலைகளுக்கு கல்லு ஒட்டும் பணியைச் செய்தோம். அப்போது அதற்கு நல்ல வரவேற்பு. கடை மூடியதும் முழுக்க ஸ்டோன் ஒட்டுவதில் ஆர்வத்துடன் இறங்கினேன். அப்போது இருபது டேபிள்கள் போட்டு இருபது பேருக்கு வேலை தந்தோம். பதினைத்து பெண்கள் அதில். ஜோராத்தான் போய்ட்டிருந்தது. இதுல பாருங்க… இந்தத் தொழிலுக்கு அவ்வளவா முதலீடு தேவைப்படாது. ஒரு டேபிள் இரண்டு அயர்ன் பாக்ஸ் இருந்தா போதும்; யார் வேண்டுமானாலும் இந்தத் தொழில் துவங்கலாம். என்கிட்டே இருந்தவர்கள் எல்லாம் தனியே போய் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. எங்களை விட ஒரு பைசா கம்மி என்றால், அங்குதானே ஆர்டர் போகும். சரி… அவங்களும் நல்லா இருக்கட்டும்னு இதையும் க்ளோஸ் பண்ணினோம்.

யோசிச்சோம். அதுவரை வந்த லாபத்துல கையில் இருந்த பணத்துல கொஞ்சம் பெருசா பண்ணலாம்னு கார்மெண்ட்ஸ் ஆரம்பித்தோம். 150 பேர் வேலை பார்த்தாங்க. நல்லா போயிட்டிருந்த பிசினஸ்ல வேலை பார்த்த சிலரால ரெண்டு வருஷத்துக்கு முன்ன நஷ்டமாகி, மூடவேண்டியதா போச்சு. அதுல இருந்து எப்படியோ மீண்டு வந்தேன்.

என் மீது நம்பிக்கைக் கொண்டவர்கள் அதிகமிருந்ததால் சீட்டுத் திட்டத்தைத் துவங்கினேன். ஒரு குருப் ஆரம்பித்து, இருபது குரூப்பாக வளர்ந்தது. இரண்டு வருடங்கள் முன்தான் கொரோனாவினால் எங்கும் சென்று பணம் வசூலிக்க முடியாத நிலையில், ‘போதும்’ என சீட்டு சேர்ப்பதையும் நிறுத்தி விட்டேன்…”
இதைக் கேட்ட நமக்கு பேச்சே வரவில்லை. ‘எத்தனை அனுபவங்கள் இவருக்கு? விழுந்து விடாமல் முயன்று வருகிறாரே’ எனும் ஆச்சர்யத்துடன் அவரைப் பார்க்க, அவரோ புன்னகை மாறாமல் தொடர்ந்தார்…

“கொரோனா காலத்துல, யாரும் வெளியே போகாத நேரத்துல அடுத்து என்ன பண்றதுன்னு யோசிச்சேன். விவசாயம் செஞ்சா என்னன்னு தோணுச்சு. உடனே இறங்கிட்டேன். வருஷப் பயிரான மஞ்சளை விதைச்சேன். அப்படியே மாட்டுப் பண்ணையையும் பார்த்துக்கிட்டேன். மகன்கள் படிச்சுட்டு வந்தாங்க. அவங்களும் என்னோட தொழிலுக்கு வரணும்னு ஆசைப்பட்டதால, இதோ இப்ப ஐந்து ஏக்கராவுல கோழிப்பண்ணையை வெக்கலாம்னு முடிவு பண்ணி, வெச்சாச்சு. முதலில் 300 கோழிகள்தான் வாங்கினேன். பெருகி ஏதோ ஒரு அளவுக்கு நல்லா போய்க்கிட்டு இருக்கு. இப்ப இளைய தலைமுறை கையில செல்போன் வசதி இருக்கு. வாட்ஸ்அப் பேஸ்புக்ல எல்லாம் எங்க கோழிப்பண்ணையைப் பார்த்துட்டு வந்து வாங்கிட்டுப் போறாங்க…”

எப்படி இத்தனைத் தொழில்கள் பார்த்தீர்கள்? ஏதாவது முன் அனுபவம்? ஊரார் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள்?

“இதுவரைக்கும் எந்தத் தொழிலிலுமே முன் அனுபவம் கிடையாது. அந்தந்த நேரத்தில் என் மனதில் தோன்றியவற்றை துணிவுடன் கையிலெடுத்தேன் என்பதுதான் உண்மை. நானும் சாதாரண குடும்பத்தை மட்டும் கவனித்து வந்த பெண்தான். கணவர் இல்லாத நேரங்களின் தனிமையை விரட்ட இறங்கிய தொழில்கள் எனக்கு பல திருப்புமுனைகளையும் அனுபவங்களையும் தந்தது. பாடங்களையும் கற்றுக் கொடுத்தது.

நல்ல சேலைகளை செலக்ட் செய்து கட்ட மட்டும் தெரிந்தவள், புடைவைகளை விற்றேன்! பேச மட்டும் தெரிந்ததால் சீட்டு நடத்தினேன்! விவசாய நிலத்தில் இறங்கி, வருடம் ஒரு முறை சாமி மட்டுமே கும்பிடுபவள் இன்று விவசாயம் செய்கிறேன்! ஆனால் ஒன்று… ஒவ்வொரு தொழில் துவங்கும்போதும் தரமானதைத் தேடி, பல ஊர்கள் சென்று அலைந்துதான் வாங்குவேன். அவ்வளவு ஏன்? தினம் தண்ணீர் கேன் போட்டு அதிலும் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் லாபம் பார்த்தேன். இப்படி சின்னச் சின்னதா நிறைய பண்ணினேன்.

எங்கள் ஊர்க்காரர்களே, ‘இவளுக்கு என்ன விவசாயம் பண்ணத் தெரியும்?’னு கேலி பேசினார்கள். ஆம், உண்மைதான். ஆனால், நான் விடுவேனா? மாடுகளுக்குத் தீவனமாகும் அரிய வகை கோ.எஸ்.29 புல் ரகத்தைத் தேடி வாங்கி ரெண்டு ஏக்கரில் பயிரிட்டு, அந்த விதைகளை விற்றேன். இன்னும் விற்கிறேன். என்னைப் பேசியவர்களே, இன்று வியந்து வாங்கிச் செல்கிறார்கள்.

இதுதான் வெற்றி. தங்கள் கையில் இருக்கும் முதலீடுக்கேற்ப தொழில் செய்யும் ஆர்வமுள்ள பெண்களுக்கு ஆலோசனை தேவைப்பட்டால் கண்டிப்பாக என்னால் உதவ முடியும். இதை சேவையாகச் செய்யும் ஆர்வமும் உள்ளது.”

இவர் நாய் வளர்ப்பையும் விட்டு வைக்கவில்லை. பட்டுப்புழு வளர்ப்பு பசுமைக்குடில் விவசாயம் என்று இவரின் உழைப்பு நீள்கிறது. கிராமப்புற வளர்ச்சிக்கு இவரைப் போன்றவர்களின் செயல்கள் பாராட்டுக்குரியவை.

விடை பெறுவதற்கு முன்பாக, “இன்றைய இளம் தொழில்முனைவோருக்கு நீங்கள் சொல்லும் ஆலோசனைகள்?” கேட்டோம்.

“எனக்கு இப்ப வயசு ஐம்பது ஆகுது. என் கணவர் சப்போர்ட் இருந்ததால் என்னால தைரியமா நினைத்த தொழிலை செய்ய முடிந்தது. முதலில் தொழில் செய்ய ஆசைப்படுபவர்களை வரவேற்று, அவர்களுக்கு ஆதரவு தர அவர்களின் குடும்பம் தயாராக இருக்க வேண்டும்.

தொழிலுக்கு வருபவர்கள் பல சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். பயணங்களுக்கு தயாராக இருக்க வேண்டும். தோல்வி வந்தால் துவண்டு போகக்கூடாது. நடப்பது எல்லாம் நன்மைக்கே என்ற உறுதி வேண்டும். என்னையே எடுத்துக்குங்க, இன்னிக்கு பத்து லட்சம் ரூபாய் வந்தால் சந்தோஷப்படவும் மாட்டேன்; நாளைக்குக் கைவிட்டுப் போகப்போகும் பதினைந்து லட்ச ரூபாய்க்காக வருத்தப்படவும் மாட்டேன். தென்னை மரம் நட்டதும் தேங்காய் வந்துருச்சான்னு அண்ணாந்து பாக்கற மாதிரி, தொழில் துவங்கிய உடனே லாபம் வரலையேன்னு நினைக்கக்கூடாது. பொறுமையும் விடாமுயற்சியும் உழைப்புமே ஒவ்வொரு தொழில்முனைவோருக்கும் அவசியம். தண்ணீரை சல்லடையில் கொண்டுபோகும் அளவுக்கு பொறுமை இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும்.

முக்கியமா, நம்ம மனசுல நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக்கிட்டு இறங்கினா, எந்தத் தொழிலும் நல்ல தொழிலே” அழுத்தமாக சொல்லி முடித்தார் புவனா.

சேலம் சுபா
பெயர் சுபா தியாகராஜன். பிறந்த ஊர் சேலம் என்பதால் சேலம் சுபா எனும் பெயரில் முன்னணி பத்திரிக்கைகளில் எழுதி வருகிறார். கதை கவிதை கட்டுரைகள் எழுதினாலும் தன்னம்பிக்கையாளர்களின் நேர்காணல் இவரது சிறப்பு. கல்கி குழும இணையதளம், கல்கி ஆன்லைன்.காம் மற்றும் கல்கியின் வலையொலி, காணொளி வாயிலாகவும் பங்கேற்பதில் பெருமிதம் இவருக்கு.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

புள்ளிக் கோலம் முதல் பொன்னியின் செல்வன் ஓவியம் வரை…

- ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு   புள்ளிக் கோலத்தினை மையமாகக்கொண்டு என்னென்ன செய்யலாம்? “ஏன்... என்னென்னவோ செய்யலாம். புள்ளிக் கோலம் என்பது நம்முடைய அழியாத பாரம்பரியம். பழைமையான கலாசாரம். நான் பிறந்து வளர்ந்தது கோவையில். திருமணம் ஆகி...

இரண்டு ரூபாய் தோசைக் கடை…!!!

-ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு. “நேத்து வடித்து வுட்ட கஞ்சியிலக் கொஞ்சம் எடுத்து வைத்து, மறுநாள் காலையில அதுலக் கொஞ்சம் தண்ணி ஊத்தி சூடு பண்ணித் தருவாங்க எங்க அம்மா. காலம்பர ஆகாரம் எங்களுக்கு அது தான்....

யோகாவில் சாதிக்கும் சந்தியா… 

-  ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு பொறியியல் கல்வியில் கணினியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தும் ஐடி கம்பெனி வேலை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு, தான் சிறுமியாக இருந்த போது ஈர்க்கப்பட்ட யோகாவே தனது வாழ்வு என முடிவு...

உலகின் மிக உயரமான ஸ்ரீ முத்துமலைமுருகன்!

வைகாசி விசாகம் சிறப்பு! -சேலம் சுபா    உலகின் மிக உயரமான முருகன் சிலை எங்குள்ளது எனக் கேட்டால் உடனே மலேசியா பத்துமலை என்று சொல்லியிருந்த நாம், இனி அதை விட உயரமாக அமைக்கப்பட்டுள்ள நம் தமிழ்நாட்டில்...

மாதவிடாய் ஆலோசனை மையம்…  கிராமாலயா திருச்சி…!!! 

MENSTRUAL  CAFE - (தென்னிந்தியாவின் முதல் மாதவிடாய் ஆலோசனை மையம்) -ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு. மாதவிடாய் என்று இயல்பாக போகிற போக்கிலோ, ஏன் வெளிப் படையாகவோச் சொல்வதற்குக் கூட இன்னும் நம் சமூகம் தயாராகவில்லை என்பது...