அல்லிக்கொடி!

அல்லிக்கொடி!
Published on
-சின்னுசாமி சந்திரசேகரன்
ஒவியம்: தமிழ்

அத்தியாயம் – 2

" என்னைப்  பற்றி  நான்கு  வரிகளில்  ஒரு  கவிதை  எழுதி  அனுப்ப  வேண்டும்.  நேரம்  மூன்று  நிமிடம்  மாத்திரம் " இது அவள் அனுப்பிய குறுஞ் செய்தி.

எனது செய்தி அவளுக்கு  இவ்வாறு  போனது,

"  உறவுக்கு  அவள்,

     உணர்வுக்கு   நீ..

     வேலவனுக்கோ  வள்ளி,

     இந்த  அன்பனுக்கோ   அல்லி.. "

பி.கு.  எடுத்துக் கொண்ட  நேரம்,  இரண்டு  நிமிடம்.

பதில்  செய்தி  உடன்  வந்தது.    " பின்னிட்ட  போடா ".

'சார்'  என்று  ஆரம்பித்த  எங்கள்  உறவு,   'போ,  வா'  விற்கு  நகர்ந்து  இப்போது 'போடா,  போடியில்'  போய்க்கொண்டிருந்தது.

அடுத்து  அவளிடமிருந்து  வந்த  செய்தி,

"நாளை  நான்  தனியாக  அம்மா  ஊருக்குப்  போகிறேன்.   மதிய  உணவிற்கு  நீ அங்கு  வரவேண்டும்.  வழி  காணும்  வரைபடம்  அனுப்பியுள்ளேன்,  கண்டிப்பாக எதிர்பார்க்கிறேன்.."

கிராமமும்  அல்லாத,  நகரமும்  அல்லாத  ஒரு  பேருந்து  நிறுத்தத்தில் இறங்கினேன்.   என்னை  எதிர்பார்த்து  பேருந்து  நிறுத்தத்தில் தனியாக அல்லிக்கொடி  நின்று  கொண்டிருந்தாள்.   கிராமத்துக்குப்  பொருந்தாத  டிராக்சூட்  அணிந்து  கொண்டிருந்தாள்.  இதுவரை  புடவையிலும், சுடிதாரிலும் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு  இந்த  உடையில்  பார்க்க வித்தியாசமாகத் தெரிந்தாள்.

எனது  ஆச்சரியப்  பார்வையைப்  புரிந்து  கொண்டு  சொன்னாள்,

"கல்லூரியில்  படிக்கும்போது  பேஸ்கட்பால்  டீமில்  இருந்தேன்.   அந்த டிரஸ்தான்  இது.  நல்லா இருக்கா? "

அவளை  மேலும்  கீழும்  அளப்பது  போல்  பார்த்து  விட்டுச் சொன்னேன்,

" எடுப்பா இருக்கு ".

நக்கலைப்  புரிந்து  கொண்டு  சொன்னாள்,  " இன்னும்  கொலஸ்ட்ரால்  மாத்திரை  சாப்பிட்டுட்டுத்தான்  இருக்கியா? "

இருவரும்  வாய்விட்டுச்  சிரித்துக்கொண்டே  நடந்தோம்.   வீட்டிற்குச் செல்லாமல்  ஒரு  தோட்டத்தின்  கேட்டைத்  திறந்து  சிறிய தென்னந்தோப்புக்குள்  அழைத்துச்  சென்றாள்.   தோப்பு  ஆள்  அரவமற்று இருந்தது.   நிசப்தத்தைக்  கலைத்துக்  கொண்டு  ஆங்காங்கே  பறவைகள்  கூவும் சப்தமும்,  தென்னை  மரத்தில்  தாவிக் கொண்டிருக்கும்  அணில்களின் கீச்சுக்குரல்களும்   மட்டுமே  எதிரொலித்துக்  கொண்டிருந்தன. " இது எங்களின் தோப்பு.  அப்பா இறந்த பிறகு நானும், அம்மாவும்தான் விவசாயம்.  தம்பி ஒரு உதவாக்கரை. இப்போது கூட அவன் வேலை செய்த கம்பெனியில் திருடிவிட்டு உள்ளேதான் இருக்கிறான்.."

உணர்ச்சியற்று  வந்தன  வார்த்தைகள்.   முதன்  முதலாக  அவளின் குடும்பத்தைப்  பற்றிப்  பேசினாள்.  நடந்து  கொண்டே  தோப்பின்  மையத்தில் இருந்த  கிணற்றை  அடைந்தோம்.  கிணற்றை  ஒட்டி  மோட்டார்  ரூம்  இருந்தது.

"கல்லூரியில்  படித்துக் கொண்டிருக்கும்போது  இந்த  மோட்டார்  ரூமில் உட்கார்ந்துதான்  கி.ரா., புதுமைப்பித்தன்,  ஜெயகாந்தன், நா.பா., கரிச்சான்குஞ்சு போன்றவர்களின்  நாவல்களைப்  படிப்பேன்.   இதோ  இந்தக்  கிணற்றுப் படிக்கட்டில்  உட்கார்ந்து  எனக்கு  மிகவும்  பிடித்த  சாண்டில்யனின்  நாவல்களை மணிக்கணக்காகப்  படிப்பேன்.  அம்மா  வந்து  வீட்டிற்குக்  கூட்டிப்  போவாங்க ".  கடந்த  கால  மகிழ்ச்சிக்  கீற்றுகள்  அவளின்  சிறிய  கண்களில்  பளிச்சிட்டது.

"சாண்டில்யனின்  ரசிகையா   நீ ?   கதாநாயகியின்  மார்பையும், மார்புக்கச்சையையும்  பற்றியே  மூன்று  பக்கங்கள்  வர்ணிப்பாரே ?"

அவளைச்  சீண்டினேன்  நான்.

விவாதத்திற்கு  இடம்  கொடுக்காமல்  ஒப்புக்கொண்டாள்.

" அந்த  வர்ணணைகள்  என்னைப்  பற்றியதாக  நினைத்துக்  கொண்டுதான் ரசித்துப்  படிப்பேன்.   ஏன்  நீங்கெல்லாம் விஜய்யும்,  நயனும்  டூயட்  பாடும்போது  விஜய்யின்  இடத்தில்  உங்களை  வைத்துப்  பார்த்து ரசிப்பதில்லையா? "  என்று  என்னை  மடக்கினாள்.

பேசிக்கொண்டே  ஒரு  தென்னை  மரத்தின்  பக்கத்தில்  போடப்பட்டிருந்த இளநீர்  குலையை  நோக்கி  நடந்தாள்.  குலைக்குப்  பக்கத்தில்  இருந்த அரிவாளை  எடுத்து  ஒரு  இளநீரை  சீவிக்  கொடுத்தாள்.  அவள்  லாவகமாகச் சீவும்  அழகைப்  பார்ப்பதைக்  கண்டு  சொன்னாள்.

" நாந்தான்  சொன்னேனே.  எனக்கு  விவசாய  வேலைகள்  எல்லாம்  தெரியும்.  அப்பா  எல்லாவற்றையும்  எனக்கு  கற்றுக்  கொடுத்திருக்கிறார்.   இந்த  இளநீர்க் குலையைக்  கூட  மரத்தில்  ஏறி  நான்தான்  காலையில்  பறித்துப்போட்டேன் உனக்காக ".

ஒரு  காலை  மடக்கி  தென்னையின்  மேலும்,  மற்றொரு  காலை  தரையில் ஊன்றியும்,  தென்னை  மரத்தின்  மேல்  சாய்வாக  நின்றிருந்த  அவள் முகத்தின்  மீது  லேசான  பகல்  வெயில்  படர்ந்திருந்ததது.   தோப்பில் வியாபித்திருந்த  அமைதியைக்  கிழித்துக்  கொண்டு  அவளின்  குரல்  ஒலித்தது,

" என்னை  முத்தமிடு "

அவளின்  தடித்த  உதடுகள்  மெல்ல  விரிந்து  வரிசையான ‌ வெண் பற்களைக் காண்பித்தன.  அவளின்  உள்ளடங்கிய  கண்கள்  ஒரு  வித  மயக்க  நிலையில் இருந்தன.

அவளின்  உதடுகள்  பனியின்  ஈரத்தோடு  என்  உதடுகளில் தடம்  பதிந்தது.  நேரம்  கடக்கும்  உணர்வற்று  இருந்த  எங்களின்  இதழ்களை  ஒரு  கிளியின் கூவல்  பிரித்தது.   வார்த்தைகளற்ற  மெளனத்தை  அவளின்  குரல்  கலைத்தது.

" என்னைத்  தவிர்த்து  ஓடும்  ஆண்களுக்கு  மத்தியில்,  நீ  மட்டும் இன்னும்   ஒட்டிக்  கொண்டிருக்கிறாயே,  ஏன்? "

" எனக்கு   அழகான  பெண்ணை  விட  அறிவான  பெண்ணிடம்தான்  காதல் வரும்"   என்றேன்.

சொல்லி  முடிப்பதற்குள்  மின்னலாய்  வந்து  மார்பில் சாய்ந்தாள்.   மார்பில்  ஒட்டிக் கிடந்த  அவளின்  ஒழுங்கற்ற  தலையைப்  பிடித்து,  மேடு  பள்ளமான நெற்றியில்  என்  இதழ்  பதித்தேன்.  ஒரு  தகப்பனின்  தோளில்  சாய்ந்து  ஆறுதல்  பெறும்  குழந்தையைப்  போல  சுருண்டு  கிடந்தாள்  அவள்.

(முற்றும்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com