அன்புவட்டம்!

அன்புவட்டம்!
Published on

அன்பு, பண்பு, பாசம் உள்ள மணமகளை எப்படிக் கண்டுபிடிப்பது?
து. சேரன், ஆலங்குளம்

டுமையான தவம்! நீருக்கு அடியிலும் நெருப்புக்கு நடுவிலும் அதுவும் ஒற்றைக் காலில் நின்றபடி அன்புவாசகர் நம்ப, து. சேரன் ஸார் மாதிரியான ஆண்கள் பலர் ஒன்று கூடி, கடவுளை நோக்கித் தவமிருந்தார்களாம். தங்களுக்குப் பணிவான மனைவியைத் தருமாறு மனமுருகி வேண்டுதல் வெச்சாங்களாம்.

கடவுளுக்கு என்ன செய்யறதுன்னே தெரியலை!

""பயப்புள்ளைங்க ஓவரா பண்ணுதுங்களே"ன்னு மனமிரங்கிக் கீழே வந்தாராம்.

"ஓ.கே! உங்க தவத்தை மெச்சினோம். உங்களுக்கு எல்லாம் அடக்கமான மனைவிகள்தானே வேணும்? டோன்ட் வொர்ரி! அவங்க இந்த உலகின் எல்லா மூலைகளிலும் கிடைப்பாங்க… போயிட்டு வாங்கன்னு" சொல்லி அனுப்பி வெச்சுட்டு… கையோட என்ன பண்ணாராம்? உலகத்தை ரவுண்டா, "வட்டவடிவமா" படைச்சுட்டாராம்!

"போய், மூலை முடுக்கெல்லாம் வீணா தேடி அலையுங்கடா"ன்னு 'இடி… இடி'ன்னு சிரிச்சாராம் கடவுள்!

எப்பூடி?

கமிங் டு யுவர் கேள்வி,

அன்பு, பண்பு, பாசம் உள்ள மணமகளை எப்படிக் கண்டுபிடிப்பது?

அறிவு, பொறுப்பு, நேசம் உள்ள தகுதியான மணமகனைத் துணைக்கு அழைச்சுக்கிட்டுப் போங்க… ஈஸியா கண்டுபிடிச்சுடலாம்!

……………………………………

கார், பஸ், ரயில், விமானம், கப்பல் இவற்றில் எதில் பிரயாணம் செய்ய மிகுந்த ஆசை அனுஷா?
– எஸ். கெஜலட்சுமி, லால்குடி

பஸ்:-  ஒகே! ஆனால் மதியான வேளை 'சீட்' சுடும்! அதுமட்டுமில்லாம ஜன்னலோர சீட் கிடைக்கணுமே!

ரயில்:-  டபுள் ஒகே! ஆனா குறட்டை விடாத சகப் பயணிகள், நாற்றமடிக்காத டாய்லெட் அமையணுமே!

ப்ளைட்:- நாட் ஒகே! செக்கிங், வெயிட்டங், கேன்ஸலிங் அவஸ்தைகள்! போரடிக்கும் பயணம்! துட்டும் செலவு!!

கப்பல்:-  நாட் அட் ஆல் ஒகே! போனால் இலங்கைக்குதான் போகணும்… தேவையா மேடம்?

அலசி, துழாவி, ஆராய்ந்து பார்த்தால் கார்தான் 'தி பெஸ்ட்!' அதிலும் ஏதாவது மலையோ, காடோ நோக்கிப் பயணித்தால்… சிலு சிலு காற்றில் ஒருவித கிரிஸ்டல் துல்லியம் இருக்கும். போகும் வழியெல்லாம் அரளியோ, போகன்வில்லாவோ புடைவைக்கு சிவப்பு நிற பார்டர் பிடித்தது போல துணைக்கு வரும். ஏதாவது ஒரு மேக முகட்டு வளைவில் காரை நிறுத்தி தேநீர் சாப்பிடலாம். ஆரஞ்சு ரகளையான சூரியனுடன் செல்ஃபி எடுத்து ஸ்டேடஸில் போடலாம்.

'Orange Suriyan – with apple anusha

'Frooty Combo' – என்று காமென்ட்ஸ் வரக்கூடும்.

ஸோ, 'கார்'தான் சகல சந்தோஷம்! மகிழ் உந்து!

……………………………………

ஒரு தத்துவம் ப்ளீஸ்?
– வாணி வெங்கடேஷ், சென்னை

  • சாப்பிட்டப் பிறகு தட்டு பாரம்!
  • மழை நின்ற பிறகு குடை பாரம்!
  • மேடையில் ஆடி முடித்த பிறகு அலங்காரம் பாரம்!
  • மோகம் தீர்ந்த பிறகு காதல் பாரம்!
  • உதவி கிட்டிய பிறகு நட்பு பாரம்!
  • பயணம் முடிந்த பிறகு செருப்பு பாரம்!
  • பணம் வந்த பிறகு உறவுகள் பாரம்!
  • சிறகு முளைத்த பிறகு பெற்றோர் பாரம்
  • படித்த பிறகு புத்தகம் பாரம்!
  • சங்கடம் தீர்ந்த பிறகு அந்தக் கடவுளே பாரம்!
  • அவசியம் முடிந்த பிறகு எல்லாமே பாரம்!
  • உயிர் போன பிறகு உடம்பே பாரம்!

……………………………………

'கடுமையான உழைப்புக்குப் பிறகு நீங்க செல்ல விரும்பும் இடம்?
– ஜெயந்தி மகாதேவன், பாலவாக்கம்

பூந்தமல்லி அருகே எங்களுக்கு ஒரு சின்ன ஃபார்ம் ஹவுஸ் உள்ளது. எப்பவோ வாங்கிப் போட்டது. 'ஸ்ரீவல்லி' என்று பெயர் வைச்சுருக்கோம். (மாத்தே பங்காரமாயனா… ஸ்ரீவல்லி!?)

தென்னவோலை வேய்ந்த சிறுவீடு, பெரிய விவசாயக் கிணறு, வேப்பமரத்தின் கிளையில் ஊஞ்சல் கட்டியுள்ளோம். அதன்மீது மல்லாக்கப் படுத்துக் கொண்டால், வானம் + நிலா + நான்! அடடா… என்ன ஒரு காற்று.. தாலாட்டும் சுகம்!

வீட்டுக்குப் பின்புறம் கன்னிமார் கோயிலும், சிறு ஓடையும் உள்ளது. ஓடையின் பளிங்கு நீரில் குளித்துவிட்டு, இன்டக்ஷன் ஸ்டவ்வில் காரசாரமாக வெங்காய உப்புமா செய்து சாப்பிட்டால், நோ விஸா… நோ பாஸ்போர்ட்… நேரே சொர்க்க லோகம்தான்!

கிளி, மைனா, குருவிகளுக்கு இரை போட்டுவிட்டு…. ஏதாவது புத்தகம் படிச்சட்டு…

ஸ்டாப்… ஸ்டாப்…! என்னடா நம்ப கை தானாவே நைஸா டூப் எல்லாம் விடுதேன்னு நினைச்சா… ஓ… 'ஏப்ரல் 1ம் தேதி' இதழா?

(அனுஷா, நீ முழுசாவே சந்திரமுகி ஆயிட்டம்மா!)

உங்கக் கேள்விக்குப் பதில்: நிஜத்தைச் சொல்லிடறேன் மேடம்… நோ கப்ஸா! நான் ஓய்வுக்காகச் செல்லும் இடம் என்னுடைய படுக்கை அறை! ஏஸிய தட்டிவிட்டு, கட்டிலில் 'டபார்' என சாய்ந்து விடுவது! யூ லைக் இட்?

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com