ஆரோக்கியம் அறிவீர்!
தினமும் காலை குளிப்பதற்கு குறைந்தது அரை மணி நேரத்துக்கு முன்,
- இரு நாசித் துவராத்திலும் ஒவ்வொரு சொட்டு நல்லெண்ணெய் விட்டு சற்றே ஆழ்ந்து மூச்சை உள்ளிழுத்தால் சுவாசம் சீர்படும்.
- மூடிய இரு கண் இமை மீதும் ஒரிரு சொட்டு நல்லெண்ணெய் வைத்து தேய்ப்பது கண் பார்வைக்கு நல்லது. கண் எரிச்சலை சீர் செய்யும்.
- இரு காதின் விளிம்பிலும் உள்ளோரங்களிலும் ஓரிரு சொட்டு நல்லெண்ணெய் வைப்பது செவித்திறனை சீர்படுத்தும்.
- தொப்புளை சுற்றி ஓரிரு சொட்டு நல்லெண்ணெய் ஊற்றி தேய்ப்பது வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னையைத் தீர்க்கும்.
- ஆசன வாயில் ஓரிரு சொட்டு விளக்கெண்ணெய் விட்டால் ஆசனவாய் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீரும்.
- கை கால்களில் தேங்காய் எண்ணெய்யை சற்றே சூடு பறக்க தேய்க்க சருமம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீரும்.
– எஸ். ராமதாஸ், சேலம்
…………………………………..
ஆடவாங்க அண்ணாத்தே!
ஒருமுறை சீர்காழி கோவிந்தராஜனின் சொந்த ஊரான சீர்காழியில் கச்சேரி நடந்தது. திரைப்படப் பாடல்களைப் பாடுமாறு ஏராளமான துண்டு காகிதங்கள் மேடையை நோக்கி வந்தன. அவற்றுள் ஒன்றையும் விடாமல் பாடி ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்துக் கொண்டிருந்தார் சீர்காழி கோவிந்தராஜன்.
நள்ளிரவு 1 மணிக்கு மேல் ஆகிவிட்டது. ஒரு ரசிகர் ‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில் வரும் ‘ஆடவாங்க அண்ணாத்தே’ என்ற பாடலைப் பாடும்படி துண்டுச்சீட்டு அனுப்பியிருந்தார்.
அதைப் பார்த்து சிரித்த சீர்காழி “ஆடவாங்க அண்ணாத்தே இல்லே.. நான் பாட வந்த அண்ணாத்தே… நேரமாகிவிட்டதால் சென்னையை நொக்கி ஓடப்போற அண்ணாத்தே…” என பாடியபடியே எழுந்துவிட்டார்.
– ச. லெட்சுமி, செங்கோட்டை
…………………………………..
பெயர் சிறியது, பொருள் பெரியது
திருமணம் – மனிதன் முழுமை பெற நடத்தும் ஆரம்பப்பள்ளி.
ஆத்மா – நாம் எடுத்த முதல் ஜென்ம வடிவம்.
ஜீவாத்மா – உலகில் எடுக்கும் பிறவியின் உருவம்.
உண்மை – நம் கையிலுள்ள செங்கோல்.
பொய்மை – நம்மை போதைக்குள்ளாக்கி துன்பம் கொடுப்பது.
ஜோசியம் – தற்காலிக அறிவிப்பு.
அமைதி – வாழ்க்கையின் ரகசியங்களைத் தெரிந்தவன் கொள்வது.
கோபம் – நாம் கடித்து விழுங்க வேண்டிய விஷயம்.
தெய்வம் – எந்த நிலையிலும் மானிட ஜீவன்களைக் கைவிடாமல் காத்து ரட்சிப்பது.
– எஸ். ஸ்ருதி, சென்னை
…………………………………..
மனதைக் கவரும் பனிக்கட்டி உணவகம்
காஷ்மீரின் முக்கிய இடமான குல்மார்கில், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் உணவகம் ஒன்று, ‘இக்லூ’ எனப்படும் பனியால் கட்டப்படும் வீட்டைப் போல வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த உணவகம் கோலஹோய் ஸ்கை ரிசார்ட்டில் இருக்கிறது.
ஆர்க்டிக் பகுதிகளில் வாழ்கிற எஸ்கிமோக்கள் இவ்வாறான வீடுகளை கட்டி வாழ்வார்கள். வெளியே எவ்வளவு குளிராக இருந்தாலும், இக்லூ வீடுகளில் வெதுவெதுப்பான சீதோஷ்ணம் நிலவும் என்பது தான் சிறப்பம்சம்.
இந்த உணவகத்தில் மேஜைகளும் பனிக்கட்டியால் அமைக்கப் பட்டுள்ளது. அதே சமயம் உணவுகள் சூடாக பரிமாறப்படுகிறது. – 10 டிகிரி வெப்ப நிலையில் அமைக்கப்பட்டு இருக்கும் இந்த பனிக்கட்டி உணவகம், மார்ச் -15 ஆம் தேதி வரை செயல்படும்.
-ஆர். ஜெயலெட்சுமி, திருநெல்வேலி