0,00 INR

No products in the cart.

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்

 பகுதி –1

-சுசீலா மாணிக்கம்

முன்னுரை:

“வானுக்கு செங்கதிர் ஒன்று – புனல்
வண்மைக்குக் காவிரி ஒன்றுண்டு – நல்ல 
மானத்தைக் காத்து வாழ என்றுமிந்த 
வையகத்துக் கொன்று திருக்குறள் “

பாவேந்தர் பாரதிதாசனின் எழுத்துக்கள்…

னித வாழ்வை செம்மையாக்கும் வேதமாகிய தொல் தமிழ் மொழி இலக்கியமாகிய திருக்குறள் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது எனலாம்.

அறநெறிகளைப் பற்றிய உலகின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றானது திருக்குறள் .மனித சமுதாயம் தன் அகவாழ்வில் சுமுகமாக கூடி ஒழுக்கத்துடன் வாழவும், புற வாழ்வில் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் அனைத்து தரப்பினரும் புரிந்துகொள்ளவும் பின்பற்றவும் ஆன எளிய வழிகளைக் கூறும் ஒரே நூல் இந்த உலகப்பொதுமறை.

அன்றாடம் நாம் சந்திக்கும் பல்வேறு நிகழ்வுகள், மனிதர்கள், சமுதாய தொடர்புகள், உறவுகள் போன்றவை திருக்குறளின் குறட்பாக்களில் ஏதோ ஓரிடத்தில் தொடர்பு கொண்டிருப்பதை ஊன்றி கவனிக்கும் போது புரிந்து கொள்ள இயலும்.

நேருக்கு நேர் நின்று பேசினால்தான் உரையாடல் என்று அர்த்தமா? யார் சொன்னது? எழுத்துக்கள் பேசுமே !வாக்கியங்கள் வம்புக்கிழுக்குமே !  படித்து முடித்து கண்மூடி அமர்ந்து விட்டால் கூட அந்த எழுத்துக்கள் மனதினுள் அமர்ந்துகொண்டு நம்மையே குறுகுறுவென பார்க்கும். நம்மிடம் வாதமிடும்- கோபிக்கும்- சந்தோஷிக்கும்- ஆரவாரிக்கும்- நவரசங்கள் காட்டி நம்மை ஆச்சரியப்படுத்தும்…ஆம் தமிழுலகம் நமக்கு தந்துள்ள  கோடிக்கணக்கான இலக்கண இலக்கியங்கள் செய்யும் மாயாஜால  வித்தைகள்தான் இப்படி.அதன்வழி அமரர் கல்கி அவர்களின் “பொன்னியின் செல்வன்” புதினம் படிக்கும்  ஒவ்வொருவருக்குள்ளும் செய்யும் மாயாஜாலம்தான் அப்பப்பா…

அமரர் கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் வாசிக்கும் போதெல்லாம் ஏதோ ஒரு நிகழ்வில் – ஏதோ ஒரு உறவில் – ஏதோ ஒரு கதை மாந்தரில் –  ஏதோ ஒரு உரையாடலில் – திருக்குறள் அடிகள் நினைவில் நிழலாடுவதை அடிக்கடி நான் உணர்வதுண்டு.

நான் சுவைத்த பொன்னியின் செல்வனும் அதனூடே முகிழ்த்த குறட் பாக்களும் அழகுடன் ஜொலிக்கப் போகின்றன. இத்தொடரில். இன்றைய இளைய சமுதாயம் தங்கள் வாழ்வில் ஒருமுறையேனும் திருக்குறளை வாசிக்க வேண்டும். பொன்னியின் செல்வன் புதினத்தை ஒருமுறையேனும் அவசியம் படிக்க வேண்டும். தங்கள் வாழ்வின் தரத்தை மேம்படுத்திக் கொள்ளவேண்டும் . இத்தொடர் மூலம் இளையோர் பயன் பெற்றால் இத்தொடரின் நோக்கம் முழுமை பெறும்…நிறைவுபெறும்…

*********

மரர் கல்கி அவர்கள் பொன்னியின் செல்வன் புதினத்தில் பல இடங்களில் திருக்குறளை எடுத்துக்காட்டி மிக அழகாக விளக்கம் அளித்திருப்பார். இப்படி கதைமாந்தருடனான திருக்குறள் மேற்கோள்கள் இன்றைய வாழ்வியலிலும் நாம் புரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்களை உணரச் செய்திருப்பார்.

ஐந்து பாகங்களிலும் ஆங்காங்கே தமிழ்மறை குறள்களை மிக அழகாக கொண்டாடியிருப்பார் கல்கி அவர்கள். உலகப் பொது மறையை பொன்னியின் செல்வனுக்குள் கொண்டு வந்து  புதினத்தை  அவர் நெய்துள்ள விதம் விலைமதிப்பில்லாத பட்டு வஸ்திரத்தில் பதிக்கப்பட்ட ரத்தினக் கற்களாய் மின்னுகின்றன.

எடுத்துக்காட்டாக ஒரே ஒரு நிகழ்வு.

பன்னிரெண்டாம் பிராயத்தில் போர்க்களம் புகுந்த வீராதி வீரர், வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி, இரட்டை மண்டலத்தார் சொப்பனத்தில் கண்டு அஞ்சும் சிங்கம், தொண்டை மண்டலாதிபதி,  வடதிசை மாதண்ட நாயகர், மூன்று உலகமுடைய சுந்தரசோழ சக்கரவர்த்தியின் திருமகனார் ஆதித்த கரிகால சோழ மகாராஜா …”

இப்படி பல்வேறு சிறப்புக்கள் கொண்ட ஆதித்த கரிகாலன். அவரின் பாட்டனார் மலைநாடு உடையாராகிய திருக்கோவலூர் மலையமான் சொல்வதையும் கேளுங்கள்…

ஓவியம்; பத்மவாசன்

கரிகாலா! நீ வீராதி வீரன். உன்னைப்போன்ற பராக்கிரமசாலி இந்த வீர தமிழகத்தில் கூட அதிகம் பேர் பிறந்ததில்லை. என்னுடைய எண்பது பிராயத்துக்குள் நானும் எத்தனையோ பெரிய பெரிய யுத்த களங்களை பார்த்திருக்கிறேன். ஆனால் எதிரிகளின் கூட்டத்தில் தன்னந்தனியே புகுந்து சென்று உன்னைப்போல் சண்டையிட்ட இன்னொரு வீரனை பார்த்ததில்லை. சேவூர் பெரும் போர் நடந்தபோது உனக்கு பிராயம் 16 கூட ஆகவில்லை . அந்த வயதில் பகைவர் கூட்டத்தில் புகுந்து சென்ற வேகத்தையும், இடசாரி வலசாரியாக உன் வாள் சுழன்ற வேகத்தையும், பகைவர்களின் தலைகள் உருண்டை வேகத்தையும் போல் நான் என்றும் பார்த்ததில்லை.”

விஜயாலய சோழரின் குலத்துக்கும் அவர் அடிகோலிய சோழ சாம்ராஜ் யத்துக்கு பேராபத்து வந்திருக்கிறது. நீயும் உன்னைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் இப்போது ஒரே இடத்தில் தங்கி சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நம்முடைய பலத்தையெல்லாம் திரட்டி வைத்துக் கொள்ளவும் வேண்டும். எப்போது என்ன விதமான அபாயம் வரும் என்று சொல்ல முடியாது.”

தாத்தா! இது என்ன, இப்படி என்னை பயமுறுத்துகிறீர்கள். என் வாள் என் கையில் இருக்கும் வரையில் எனக்கு என்ன பயம்? எப்படிப்பட்ட அபாயம் வந்தால்தான் என்ன? தன்னந்தனியாக  நின்று சமாளிப்பேன். எத்தகைய ஆபாயத்துக்கும் நான் பயப்படுகிறவன் அல்ல…”

 பிள்ளாய்! நீ எப்படிப்பட்ட தைரியசாலி என்று எனக்குச் சொல்ல வேண்டுமா? திருவள்ளுவர் பெருமான் சொல்லி இருப்பதையும் சில சமயம் எண்ணிப் பார்க்கவேண்டும். 

அஞ்சுவது அஞ்சாமை பேதமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில் 

என்று அந்த மகான் சொல்லியிருக்கிறார்.

 போர்க்களத்தில் பகைவர்களுக்கு எதிரெதிரே நின்று போரிடும் போது அச்சம் கூடாது .அப்படி பயப்படுகிறவன் கோழை.அவ்விதம் பயப்படுகிற பிள்ளை என் வம்சத்தில் பிறந்தால் அவனை நானே இந்தக் கிழடாய் போன வலுவிழந்த கையினால் வெட்டிப் போட்டு விடுவேன். ஆனால் மறைவில் நடக்கிற சதிகளுக்கும் சூழ்ச்சிகளுக்கும் கண்ணுக்கு தெரியாத அபாயங்களுக்கும் பயப்பட்டேயாக வேண்டும். பயப்பட்டு அந்தந்த நிலைமைக்குத் தகுந்த முன் ஜாக்கிரதையும் செய்துகொள்ளவேண்டும்.”

இப்படி தன் பேரன் ஆதித்த கரிகாலனுக்கு வரப்போகும் ஆபத்தை உள்ளுணர்வால் அறிந்து கொண்ட பாட்டன் தன்  பேரனிடம் பேசிய சம்பாஷணை தான் மேற்கூறியவை.

இப்படி நானும் பல முறை தெய்வ நூலாம் திருக்குறளை கடக்கும் சமயமெல்லாம் பொன்னியின் செல்வன் நிகழ்வுகளும் – பொன்னியின் செல்வனை ருசிக்கும் நேரமெல்லாம் உத்தரவேதத்தின் அடிகளும் நினைவுக்குள் பரிமளிப்பதை உணர்ந்து எத்தகைய தமிழ் மண்ணில் பிறந்து வாழ்கிறோம் என்ற பெருமை உணர்வில் மூழ்கிப் போவதுண்டு…
(இன்னும் உணர்வோம்…)

3 COMMENTS

 1. என்னதான் அஞ்சாநெஞ்சம் படைத்திருந்தாலும் மறைவில் நடக்கின்ற
  சதிகளுக்கும்,சூழ்ச்சிகளுக்கும்,கண்ணுக்கு
  தெரியாத ஆபத்துகளுக்கும் நிச்சயமாக
  பயப்பட்டே ஆகவேண்டும். ஆதித்தகரிகாலனின் பாட்டனார் மலையமானின் அறிவுரை அற்புதமானது.
  திருக்குறளையும் ,பொன்னியின்
  செல்வனையும் ஒப்பிட்டு கூறியிருப்பது
  மிகவும் அருமை.

 2. திருக்குறளையும் பொன்னியின் செல்வனையும் ஒப்பிட்டு நோக்குவது மிகவும் சிறப்பாக இருந்தது.

சுசீலா மாணிக்கம்
-சுசீலா மாணிக்கம் பாண்டிய நாடு (திருநெல்வேலி) பூர்வீகமாய் கொண்டிருந்தாலும் - சேரநாடு (தர்மபுரி) பிறந்து வளர்ந்து - சோழநாடு (திருச்சி) திருமணம் செய்துகொண்ட தமிழ் பற்று மிக்க எழுத்தாளர். தன் கல்லூரிக் காலத்து முதலே தமிழ்த்தாயின் செல்ல மகளாய் வளர்ந்தவர். திருமணத்திற்குப் பின், குடும்ப பொறுப்புகள் அதிகரிக்க, எழுதுவதை சற்றே மறந்திருந்த இவரை, மங்கையர் மலர் மீண்டும் கண்டெடுத்து ஊக்கப்படுத்தியது. சமுதாய உயர்வு கண்டு மகிழ்ச்சியில் சுழல்வதும், இழிவுகளைக் கண்டு சாட்டையை சுற்றுவதுமாய் நடைபோடுகிறது இவர் பேனா.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

பெரியாழ்வார்!

0
 பகுதி - 10 -ரேவதி பாலு, சென்னை ஸ்ரீ வில்லிப்புத்தூரில் பிறந்த விஷ்ணுசித்தர் என்பவர் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். இவர் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் வேதியர்...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

பாகம் - 8 -சுசீலா மாணிக்கம் ஓவியம்: பத்மவாசன் ஆதி காலத்தில் மொழிகள் கண்டுபிடிக்காத ஒரு சமுதாயத்தில் மனிதன் எப்படி பேசி இருப்பான்? எப்படி தங்களுக்குள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள்? அன்பால் இணைந்து... கண்களால்தான் பேசியிருப்பார்களோ! தங்களின்...

பறக்கும்  பாவைகள்!

பகுதி - 9                              ‘எங்களாலும் பறக்க முடியும்’ -ஜி.எஸ்.எஸ். ‘நியூயார்க் நகரிலிருந்து 2018 ஏப்ரல் 17 அன்று கிளம்பிய ஒரு விமானம் அது.  கிளம்பிய அரை மணி நேரத்தில் அதன் ஜெட் எஞ்சின்கள் செயலற்றுப் போக,...

பறக்கும்  பாவைகள்!

பகுதி - 8 - ஜி.எஸ்.எஸ். “எல்லைகளை உடையுங்கள்!” அமெரிக்காவைச் சேர்ந்த ஜெசிகா காக்ஸ் விமான ஓட்டுனர் உரிமத்தைப் பெற்றபோது உலகமே அவரை வியந்து போற்றியது.  காரணம் அவர் தன் இரு கைகளையும் இழந்தவர்! ஜெசிகா காக்ஸ் செய்துள்ள...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்! 

பாகம் - 5 -சுசீலா மாணிக்கம் ஓவியம்: பத்மவாசன் இல்லறவியல் (இல்+அறம்+இயல்)      அறமும் பொருளும் ஈட்டப்பட்ட மனித வாழ்வு இல்லறத்தில்தான் முழுமையடைகிறது எனலாம். சங்க காலம் தொட்டே நம் தமிழ் மரபு பற்பல இல்லற விழுமியங்களை...