சுற்றுலா டூ ஸ்கேண்டினேவியா! பகுதி – 3

சுற்றுலா டூ ஸ்கேண்டினேவியா!  பகுதி – 3
Published on

அற்புதப் பயணம்; ஆனந்த அனுபவம்!

பயண அனுபவம் : பத்மினி பட்டாபிராமன்

ரண்டாவது பெரிய நகரமான பெர்கன் நகரிலிருந்து, தலைநகர் ஆஸ்லோவுக்குச் செல்ல வேண்டும். வாஸ் என்ற இடம் வரை கோச்சில் சென்று, அங்கிருந்து ஒரு ரயிலில் பயணித்து, ஃப்ளாம்பானா ரயில் நிலையத்தில் இறங்கினோம்.

உலகிலேயே அழகிய ரயில் பயணம் :
லகின் மிக அழகிய ரயில் பாதை ஃப்ளாம்ஸ்பானா (Flåmsbana). நார்வே நாட்டின் அழகிய பள்ளத்தாக்குகள், இயற்கையின் பிரம்மாண்டமான பனி குவிந்த மலைகள், ஆறுகள், ஃப்யார்ட்கள் (fjordமலைகளுக்கு நடுவே குறுகலான நீர்ப்பரப்பு) என மனதைக் கொள்ளையடிக்கும் பயணம்.

ஒரு நொடி கூட இமைக்கவிடாத இயற்கையின் அழகு. ஃப்ளாம்பானா ரயில் நிலையத்தில் கொஞ்ச நேரம் காத்திருந்த பின், வழுக்கிக்கொண்டு வந்து நின்றது ஒரு பச்சை நிற ரயில். ஏறி அமர்ந்த சிறிது நேரத்திலேயே, ரயில் நின்று விட, எங்கள் மேல் நீர் அபிஷேகமாய் விழுந்தது என்று குறிப்பிட்டிருந்தேனல்லவா?

ரயில் நின்ற இடம் ஒரு அதிவேக நீர் வீழ்ச்சியின் மிக அருகே. தண்டவாளத்தை ஒட்டி ஒரு வேலியிட்டு அதற்கப்பால் ஆர்ப்பரிக்கும் ஜொஃபொசன் அருவி (Kjosfossen waterfall).

ரயிலின் உள்ளே இருப்பவர் மேல் தண்ணீர் தெறிப்பது என்றால், நீரின் வேகம் எப்படியிருக்கும்?

"ரயில் இங்கே பத்து நிமிடம் நிற்கும். எல்லோரும் கீழே இறங்கலாம்" என்று குரல் கொடுத்தார் கைடு. இறங்கும்போதே ஆளைத் தள்ளும் காற்று, மேலே சொரியும் நீர்த்திவலைகள் என்று அருவியின் அட்டகாசம்.

இந்த அருவியின் அருகேயும், முன்பாகவும், மேல் பகுதியிலுமாக ரயில் பாதை செல்கிறது. அருவிக் கரையில், காட்டுக்குள்ளிருந்து ஒரு பெண்ணின் ஆவி வந்து தினமும் நடனம் ஆடுவதாக உள்ளூர் மக்களின் நம்பிக்கை.

அது சும்மா என்று நினைத்தோமா, ''அங்கே பாருங்கள்…" என்று யாரோ குரல் கொடுக்க, கண்ணை கசக்கிக்கொண்டு பார்த்தால், தூரத்தில் அருவியின் மேற்புறம் காட்டுக்குள்ளிருந்து வந்து ஒரு பெண் தலை விரித்தபடி நடனமாடுகிறாள்.

பின்னர்தான் தெரிந்தது, உள்ளூர் மக்களின் நம்பிக்கையையே வணிகமாக்கி, டூரிஸ்ட்டுகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கேளிக்கை அது என்று.

ஃபியார்டுக்குள் படகு :
ஃப்ளம் ரயில் பயணம் முடிந்து, ஒரு சின்ன நடையில், ஃபெர்ரி (படகு) நிற்கும் இடம் வந்தோம். பெரிய ஃபெர்ரிகள் காத்திருக்க, உச்சரிக்கக் கடினமான பெயருடன் இருந்த ஒன்றில் ஏறினோம். "இந்த ஃபெர்ரி, ஒரு குறுகிய ஃபியார்டு வழியே செல்லும். சுமார் இரண்டு மணி நேரப் பயணம். குடுவாங்கன் (Gudvangen) என்ற இடத்திற்குச் செல்ல வேண்டும்" என்று அறிவிக்கப்பட்டோம்.

அந்த இரண்டு மணி நேரமும்அந்த இரண்டடுக்கு ஃபெரிக்குள், மேலும் கீழும் சுற்றியும் வந்தபடிமழைத் தூறலிலும், குறுக்கிட்ட அருவிகளின் சாரலிலும் நனைந்தபடிஉச்சியில் பனி மூடிய மலைகளையும், அடிவாரப் பசுமையையும் ரசித்தபடிஇடையிடையே ஃபெர்ரி ரெஸ்டாரண்டில், காஃபியுடன் குக்கீஸ் கொறித்தபடிஅற்புதமான அனுபவம்.

இந்த ஃபியர்ட்களை, 'நார்வேயின் ஆன்மா' என்பது முற்றிலும் உண்மை.

குடுவாங்கனில் இறங்கி மீண்டும் கோச்சில் தலைநகர் ஆஸ்லோவுக்குப் பயணம்.

சுமார் எட்டு மணி நேரம் பயணித்த பின், ஆஸ்லோவில் இரவில் இறங்கும்போதும் மறையாத சூரிய வெளிச்சம். பொதுவாக, ஆர்க்டிக் சர்க்கிளின் வடபகுதியிலும், அண்டார்டிக் சர்க்கிளின் தென் பகுதியிலும், கோடைக் காலங்களில், 'ஹொரைசான்' எனப்படும் வான் விளிம்புக்கு மேல் சூரியன் எப்போதும் இருக்கும் என்பதால், நார்வே சூரியன் மறையாத நாடு எனப்படுகிறது.

ஹோட்டல் தான் அரீனா (Thon Hotel Arena)வில் தங்கிய நாங்கள், முதலில் சென்றது குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடக்குமே அந்த ஸ்டேடியத்துக்கு.
குளிர்காலத்தில் இந்த இடம் முழுவதும் பனி கொட்டியிருக்க, ஒலிம்பிக்ஸ் பனிச்சறுக்கு (ஐஸ் ஸ்கேடிங்) போட்டிகள் நடைபெறும் ஸ்டேடியம் இது. ஜேம்ஸ்பாண்ட் படங்களில் தோன்றும் பனிச்சறுக்கு சேஸிங் காட்சிகள் நினைவுக்கு வந்தன. நாங்கள் பயணித்தது கோடைக்காலம் என்பதால், பனியின்றி சுற்றி கொஞ்சம் பசுமை தெரிந்தது.

தலைநகர் என்றால் பார்லிமெண்ட் ஹவுஸ் இல்லாமலா…? டிபிகல் ஐரோப்பிய பாணியில் கட்டப்பட்ட பிரம்மாண்ட நாடாளுமன்ற வளாகம். உள்ளே செல்ல அனுமதி இல்லை என்பதால், வெளியே நின்று சுற்றிப் பார்த்தபின், ஃபோட்டோ எடுக்க அனுமதிக்கப்பட்டோம். அப்புறம், எங்காவது ஷாப்பிங் போக வேண்டுமேகார்ல் ஜோஹன் ஸ்ட்ரீட்டில், நமக்குப் பிடித்த ஷாப்பிங்.

தெரு முழுக்கக் கடைகள். ஆனால், நடைபாதைக் கடைகள் கிடையாது. சில நார்வேஜியன் சாவனீர்கள், டீ ஷர்ட்கள் வாங்கிய பின் அடுத்த விசிட், நார்வேயின் மிக முக்கியமான டூரிஸ்ட் ஸ்பாட்உலகப் புகழ் பெற்ற ஒரு இடம். அது

விஜெலேன்ட் பார்க் (Vigeland Park)
டிவியில் ட்ராவெல் எக்ஸ்ப்ரெஸ் சேனல் பார்ப்பவரா நீங்கள்? அப்படியென்றால், அடிக்கடி அதில் காட்டப்படும் இந்த பார்க் உங்களுக்குப் பரிச்சயமானதாக இருக்கும். உலகிலேயே ஒரே ஒரு சிற்பக் கலைஞர் செதுக்கிய நூற்றுக்கணக்கான சிற்பங்களைக் கொண்ட திறந்தவெளி மியூசியம் இது.

வெண்கலம், கிரானைட் பாறை, எஃகு இரும்பு இவற்றால் செதுக்கப்பட்ட சிற்பங்கள் இவை. 1869ல் பிறந்த அடால்ஃப் குஸ்டவ் தார்சென் (Adolf Gustav Thorsen) என்ற சிற்பி இந்த சிற்பங்களை தனி ஒருவராக செதுக்கியிருக்கிறார்.

எல்லாமே ஆடை அணியாத மனித உருவங்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஒவ்வொருவரும் பலவித உணர்வுகளோடு செதுக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஒரே பாறையில், அவர் செதுக்கியிருக்கும் 121 சிற்பங்கள் கொண்ட ஒரு மாபெரும் கிரானைட் தூண் மோனோலித் உலகப் புகழ் பெற்றது. அதில் ஆண், பெண், உச்சியில் குழந்தைகள் என்று எல்லா சிற்பங்களும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து மானிடத்தின் பல்வேறு நிலைகளைக் காட்டுபவையாக அமைந்திருப்பவை.

பார்க் நடுவே ஒரு பெரிய நீரூற்று. அதைச் சுற்றிலும் வினோதமான மனித சிற்பங்கள்.

'இப்படியெல்லாம் கூட செதுக்க முடியுமா?' என்று வியக்க வைக்கின்றன. அதுவும் பாறைகளை வளைத்து, ஆர்ச் வடிவத்துக்குள் சிற்பங்கள். அந்த மாபெரும் கலைஞருக்கு மானசீக வணக்கங்கள் சொல்லி வெளியே வந்தோம்.

ஜெய்ப்பூர் ரெஸ்டாரண்ட் :

இப்போதெல்லாம் ஐரோப்பிய நாடுகளின் முக்கிய நகரங்களில் நம் இந்திய, குறிப்பாக வட இந்திய உணவு விடுதிகள் செயல்படுகின்றன. அதில் ஒன்றாக ஆஸ்லோவில் ஒரு ஜெய்ப்பூர் ரெஸ்டாரன்ட்டில் மதிய உணவு. நான்ரொட்டி, தால், பலவித சப்ஜிகள், சாதம், யோகர்ட் என்று பஃபே முறையில் சாப்பிட முடிகிறது. தவறாமல் ஒரு டெசர்ட்டும் வைக்கிறார்கள். உண்ட மயக்கத்திலிருந்து மீளும் முன், ஒரு கடல் சம்பந்தமான மியூசியத்துக்குள் நுழைந்தோம்.

ஃப்ராம் மியூசியம் (Fram Museum)
பொதுவாகவே, ஐரோப்பியர்கள் கடல் பயணத்துக்கு அஞ்சாதவர்கள். கடல் சூழ்ந்த இந்த பூமியில், இன்று நமக்குக் கிடைத்திருக்கும் உலக வரைபடம், தீவுகளைப் பற்றிய செய்திகள் எல்லாமே படகுகளிலும், சிறு கப்பல்களிலும், பாய்மரக் கப்பல்களிலும் கடலில் பயணித்து, இயற்கைச் சீற்றங்களோடு போராடி, உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்த கப்பல் ஆராய்ச்சியாளர்களால்தான்.

'வைகிங்' என்றழைக்கப்படும் அவர்களைப் பற்றிய மியூசியம் இது. இந்த மியூசியம் பற்றியும், உலகின் மிக கௌரவமான நோபல் பரிசு நார்வேயில் வழங்கப்படும் இடம் பற்றியும் இனி பார்ப்போம்.

(தொடர்ந்து பயணிப்போம்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com