0,00 INR

No products in the cart.

சம்பளம்

ஜெயஸ்ரீ ராஜ் நினைவு சிறுகதைப் போட்டி  பரிசுக்கதை – 9

கதை : ர.கிருஷ்ணவேணி
ஓவியம் : சேகர்

வெகுநேரம் தூங்கிவிட்டதை உணர்ந்து, பதற்றத்துடன் எழுந்தாள் அமுதா. பரபரவென படுக்கையை மடித்தாள். வாசலை சுத்தம் செய்து சின்னதாகக் கோலம் போட்டாள். அருகே நின்றுகொண்டிருந்த கனகாவிடம், “என்னக்கா, தூங்கி போயிட்டேன். ஒரு குரல் கூப்பிடக் கூடாதா? நேரத்துக்குப் போகலேன்னா, சூப்பர்வைசர் கத்துவாரே?” என்றாள்.

ர.கிருஷ்ணவேணி

நீ வேலைக்குப் போறியோ, இல்லையோன்னு நெனைச்சேன் அமுதா!”

ஏங்க்கா? ஏன் அப்படி சொல்ற?” தயக்கத்துடன் கேட்டாள் அமுதா.

இல்லை கண்ணுநீ டி.வி.யில வந்ததுல இருந்தே, பில்டிங்கில ஒரே பேச்சா இருந்தது. உன்னைய வேலைய விட்டு, எடுத்துடணும்னு சொல்லிக்கிட்டு கிடந்தாங்க. அது உனக்கும் தெரியும்னு நெனைச்சேன். நீ ஏண்டி அங்கெல்லாம் போயி பேசுன? அதுவும், நீ காட்டின ஆளு, ஊர்ல பெரிய ஆளு. அதான் யோசிக்கறாங்க போல…”

கனகாவிடம் மேலும் பேசுவதில் பயனில்லை என்று அமுதாவுக்குப் புரிந்தது.

சரிக்காநேரா போயி என்னன்னு பாக்கறேன். லதாவுக்கு பள்ளிக்கூடம் இல்ல. வீட்டுலதான் இருக்கு. பார்த்துக்க…”

சுருக்கமாகச் சொல்லிவிட்டு, வீட்டினுள் சென்றாள். சமையலுக்கு அதிக நேரம் இல்லை. ஆழாக்கு சாதம் வைத்து, தக்காளி சாதமாகக் கிளறினாள். பெண்ணுக்கு எடுத்து வைத்துவிட்டு, மீதமானதை டப்பாவில் தனக்கு வைத்து மூடினாள். வாங்கி வைத்திருந்த பப்பாளிப் பழத்தை அரிந்து எடுத்து வைத்தாள். குளித்து, உடை மாற்றிக் கொண்டு கிளம்பினாள்.

லதா, நான் வேலைக்குக் கிளம்பறேன். பத்திரமா இருந்துக்க. சாப்பாடு மூடி வச்சிருக்கேன்.” சொல்லிவிட்டு செருப்பை மாட்டிக்கொண்டு கிளம்பினாள்.

காலையிலிருந்து, டீ கூட குடிக்காத தொண்டை, “சூடாகத் தா” என்று கேட்டது. பக்கத்திலிருந்த டீக்கடையில் சென்று டீ வாங்கிக் குடித்தாள். கடையில் இருந்தவர்கள், தன்னைக் காட்டி பேசிக்கொண்டது புரிந்தது. ‘ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு இவ்வளவு தாக்கமா?’ என்று நினைத்துக் கொண்டாள் அமுதா. பணத்தைக் கொடுத்துவிட்டு, கடையை விட்டு நகர்ந்தாள்.

ங்கு ஐநூறு குடும்பங்கள் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பெருக்கும் வேலை. நான்கு அடுக்குகள் கொண்ட கட்டடங்களைப் பெருக்கி சுத்தம் செய்ய வேண்டும். வாரம் இரண்டு முறை துடைக்க வேண்டும். ஆபீஸ் ஹாலை பெருக்கி, தண்ணீர் பிடித்து வைக்க வேண்டும். தோட்டம் பெருக்க வேண்டும். காலையில் ஒன்பது மணிக்குக் கிளம்பினால், திரும்ப நான்கு மணி ஆகிவிடும். பெண் லதாவை தயார்படுத்தி பள்ளிக்கு அனுப்பிவிட்டு கிளம்புவாள். மூன்றாம் வகுப்பு படித்தாலும், பொறுப்பாக இருப்பாள் லதா. அமுதா வருவதற்குள், துணிமணிகளை மடித்து வைத்து, வீடு பெருக்கி, பொறுமையுடன் காத்திருப்பாள். நல்ல பள்ளியில் படித்து, நல்ல மதிப்பெண்கள் பெற்று, நல்ல பெயர் வாங்கியிருந்தாள்.

அமுதாவும், வேலையை நேர்த்தியுடன் செய்வாள். யாருடனும் அநாவசிய பேச்சு, சண்டை என்று எதுவும் கிடையாது. வீடுவேலை முடிந்தால் திரும்பவும் வீடு. லதாவுடன் அவள் உலகம் என்றுதான் இருந்தாள். ஆனால், தவறுக்கு என்றும் துணை போக மாட்டாள். கூட வேலை செய்பவர்களுக்கு என்ன பிரச்னை என்றாலும் துணை நிற்பாள். நேர்மைக்குக் குரல் கொடுப்பாள். நேரமாகி விட்டதை உணர்ந்து, நடையை எட்டி வைத்தாள். நினைவலைகளும் தொடர்ந்தே வந்தன.

விபரம் அறியாத வயதில் வந்த காதல் வினையாகிப் போனது அமுதாவுக்கு. ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, ஸ்கூட்டர் மெக்கானிக் வேலுவைப் பார்த்ததும் பிடித்தது. கூடப் படித்த சிநேகிதிகளும், பார்த்த சினிமாக்களும், ஹார்மோன்களும் அதைக் காதலாக்கி விட்டன. ஆசிரியர்கள், பெற்றோர்கள் சொன்னதெல்லாம் மனதில் நிற்கவே இல்லை. காதலித்த வேலுவை மணப்பதுதான் வாழ்வின் முடிவு என்ற கற்பனையில் இருந்தவளுக்கு, வீட்டை விட்டு ஓடிப்போய், திருமணம் முடித்தபின்தான் பிரச்னைகள் ஆரம்பம் என்ற யதார்த்தம் உரைக்க ஆரம்பித்தது.

பத்தாம் வகுப்புகூட படித்திருக்காத அமுதாவுக்கும், எட்டாம் வகுப்பு படித்திருந்த வேலுவுக்கும் வானவில் வாழ்க்கை காத்திருக்கவில்லை. பொருளாதார நெருக்கடி, காதலை கசக்கியபோது, பெண் குழந்தை பிறந்து, மூன்று வயது ஆகியிருந்தது. உழைத்து, குடும்பத்தை மேலே நிமிர்த்த வேண்டும் என்று வேலு நினைக்கவில்லை. சோம்பேறித்தனம் கூடவே வந்தது. ‘சுகம்’ என நினைத்து, குடியை நாடினான். தடுத்து நல்வழியை காண்பித்த அமுதாவுக்குக் கிடைத்தது அடியும் உதையும் வெறுப்பும்தான். இவனை நம்பி, பெண்ணை வளர்க்க முடியாது என்று புரிந்து வீட்டை விட்டு வெளியேறினாள்.

அங்கும் இங்கும் கிடைத்த வேலை செய்து அல்லாடிக்கொண்டிருந்தவளுக்கு, கனகாதான் வேலை, வீடு எல்லாம் ஏற்பாடு செய்தாள். கனகாவிடம், தன் வாழ்வு பற்றி சொன்னாள் அமுதா.

புருஷன் கூட இல்லைன்னு சொல்லாத. வெளிநாட்டுல வேலை செய்யறாருன்னு சொல்லிவை. இல்லைன்னா, கண்டவன் வந்து கதவைத் தட்டுவான்” என்று கனகா சொல்லிக் கொடுத்ததை, அனைவரிடமும் சொன்னாள்.

வேலுவைப் பற்றின நினைவோ, ஏக்கமோ இல்லாமல் தவ வாழ்க்கைதான் வாழ்ந்தாள். செய்தித் தாளில் வந்த விளம்பரம் அவளைக் கொதிக்க வைத்தது. அவளைப் பிரிந்த வேலு, எப்படியோ சினிமாத் துறையில் நுழைந்திருந்தான். அங்கு வேலை பார்த்து வந்த ராதா என்ற பெண்ணைக் காதலித்து, திருமணம் செய்து, அவளிடமிருந்த நகை, பணத்தை எல்லாம் எடுத்துக் கொண்டிருக்கிறான். திரையுலகில் பிரபலமாயிருந்த பணக்காரப் பெண்ணின் நட்பு கிடைத்ததும், ராதாவை விட்டுவிட்டான். புகாரைப் படித்ததும், சும்மா இருக்க முடியவில்லை.

சட்டமும், காவல் துறையும் வேலுதான் அவள் கணவன் என்பதற்கு ஆதாரம் கேட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள், பிரபலமானவர்கள் என்பதால் தயங்கியது. பிரபல தொலைக்காட்சியின் உதவியை நாடினாள். அவர்கள், வேலுவைப் பிடித்து உட்கார வைத்துவிட்டார்கள்.

நீங்கதானேம்மா வேலுவோட முதல் மனைவி. அவரோட வாழறீங்களா?”

இல்லைங்கஅதுக்காக நான் வரலை. இதுக்கு மேல இன்னொரு பொண்ணு ஏமாந்து போகக் கூடாது. இந்தப் பொறுக்கியோட, முகமூடியை கிழிக்கணும்னுதான் வந்தேன்.”

அந்த நிகழ்ச்சி நான்கு நாள் முன்பு தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அனைவரையும் கேலியாக பேச வைத்தது. புருவம் உயர்த்த வைத்தது.

நினைவலைகளிலிருந்து, மீண்டு, ஃப்ளாட்டுக்குள் நுழைந்தாள். ரெஜிஸ்தாரில், கையெழுத்திட்டாள்.

சூப்பர்வைசர் எங்க இருக்காரு?”

மீட்டிங் நடக்குதில்ல. அங்கதான் போனாரு. என்ன அமுதா, டி.வி.யில வந்து பெரிய ஆளாயிட்டயே!”

செக்யூரிட்டியின் குரலில் இருந்த நக்கல், அமுதாவுக்கு வேகம் தந்தது. மீட்டிங் நடந்த இடத்துக்கே சென்றாள்.

ஆணும், பெண்ணுமாக கிட்டத்தட்ட நூறு பேர் உட்கார்ந்திருந்தார்கள். அமுதாவைப் பார்த்ததும், பலர் முகம் சுளித்தார்கள்.

என்னம்மாஉன்னை வேலையிலிருந்து, எடுத்துட்டமே! சூப்பர்வைசர் சொல்லலையா?” தலைவர் கேட்டார்.

என் வேலையில தப்பு இருந்தா, என்னை நிறுத்துங்க. ஆனா, டி.வி.யில வந்து, என் புருஷனைப் பத்தி பேசினது எப்படிங்க தப்பாகும்?”

ஏம்மாஇங்க எல்லாரும் குடும்பமா வாழறோம். வயசு வந்த பொண்ணு, பிள்ளைங்க இருக்காங்க. நீ காதலிச்சு, வீட்டை விட்டு ஓடி வந்தவ. இப்ப பிரபலமா இருக்கற நடிகரைப் பாத்து என் புருஷன்னு சொல்ற. உன்னைய எப்படி இங்க வச்சுக்கறது? எப்படி நம்பறது?”

மனசாட்சிய விட என்னங்க ஆதாரம் வேணும்? டி.வி.யில கண்ணைப் பார்த்து கேட்டப்ப, அவர் உண்மையத்தான் சொன்னாரு. ‘என் கூட வா’ அப்படின்னாரு. எனக்குப் பிடிக்கலை. அதுனாலே போகலை. அது என் தனிப்பட்ட விஷயம்.

ஆனா, சொன்னீங்களேவயசுப் பசங்க இருக்காங்கன்னு. அது நிஜம்.

படிக்கிற வயசுல இருக்கற பொண்ணுங்க, என்னைப் பாத்தா, ‘இந்த வயசுல காதலிச்சா, கையில துடைப்பத்தோட அலையணும்னு’ புரிஞ்சுப்பாங்க. வீட்டை விட்டு ஓடி வந்துட்டா, எந்த ஆதரவும் கிடைக்காதுன்னு தெரிஞ்சுப்பாங்க. சினிமாவுல வர்ர மாதிரி, கோயில்ல தாலி கட்டிக்கிட்டா, திருமணம் ஆயிடாதுங்கற சட்டம் புரியும். திருமணத்தைப் பதிவு செய்யணும்கற அடிப்படை அறிவு கூட இல்லாத வயசுல முடிவு எடுக்கக் கூடாதுன்னு தெளிவு வரும். என் பொண்ணுக்கே என் வாழ்க்கை ஒரு பாடம்தான்.

இதையெல்லாம் மீறி, புருஷனாய் இருந்தாலும் தப்பு செஞ்சா, தட்டிக்கேட்டு தண்டனை வாங்கித் தரணும்கிற துணிச்சலும் வரும். அது, வயசு வந்த ஆண் பிள்ளைகளுக்கு எச்சரிக்கையாவும் இருக்கும். நான், ‘ஏமாத்தின’வ இல்லை. ‘ஏமாந்தவ.’ ஆனா, இதையெல்லாம் சொல்லி கெஞ்சறதுக்காக நான் வரலை. இங்க பதினெட்டு நாள் வேலை செஞ்சிருக்கேன். அதுக்கு உண்டான சம்பளத்தைக் குடுங்க. போயிக்கிட்டே இருக்கேன்” துணிச்சலுடன் பேசின அமுதாவிடம் இருந்த நேர்மையும், தெளிவும் புரிந்த கூட்டம் மௌனம் காத்தது.

உன்னை வேலையிலிருந்து எடுத்தாதானே இன்னிக்கு பணம் தரணும். போய் வேலையப் பாரு அமுதா. வழக்கம் போல் 1ம் தேதிதான் சம்பளம்” தலைவர் அதட்டலாகப் பேச, அந்த மௌனம் கலைந்தது.

1 COMMENT

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

தலையாயப் பிரச்னை!

சிறுகதை: -தனுஜா ஜெயராமன் ஒவியம்: பிள்ளை கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தான் ரமேஷ். முப்பத்தியெட்டு வயது என்று சொன்னால்தான் தெரியும். கொஞ்சம் இளமையாக இருப்பதாகவே தோன்றியது அவனுக்கு மட்டும்தானா? என்ற சந்தேகம் அவனுக்கே உண்டு. தன் நீண்ட...

அம்மா மசாலா!

இரண்டு சிறுகதைகள். ஓவியம்: சேகர் நீ.த.வெங்கட் ‘’அம்மா… உங்க பையன், மருமகள், பேரன் ரெண்டு நாள் இங்க வரப்போறதா சொன்னேளே… உங்களுக்கு ஏதாவது டவுன்லேருந்து சாமான் வாங்கி வர வேண்டுமா? என்று கேட்கத்தான் வந்தேன்” என்று சொன்ன...

பகல் வேஷம்! 

சிரிப்பு சிறுகதை: -தனுஜா ஜெயராமன் ஓவியம்; பிரபுராம் "நட்டுவான வேடிக்கை சாமியார்"... என்ற ஆதிகாலத்து பழைய  பெயர் பலகை தொங்கிய கேட்டை திறந்து உள்ளே வந்தான் மாணிக்கம். வாசலிலேயே இருபது இருபத்தி ஐந்து பேர் காத்திருக்க... கலைந்த...

இனியில்லை கடன்!

4
சிறுகதை– நாமக்கல் எம்.வேலு ஓவியம்; தமிழ் அழைப்பு மணி சத்தம் கேட்டுப் போய் கவைத் திறந்து பார்த்தால், ராமசாமி வந்து நின்றார். சோமசுந்தரத்திற்கு அதிர்ச்சி.  ‘ என்ன இவன் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று வந்து நிற்கிறான்....

கட்டதுரைக்கு  கட்டம் சரியில்லை…

‘சிரி’ கதை - தனுஜா ஜெயராமன் ஓவியம்: பிரபுராம் அலாரத்தை தலையில் தட்டி நிறுத்தியபடி திடுக்கிட்டு விழித்த சுப்பு... கண்களை தேய்த்துக்கொண்டே சோம்பல் முறித்தார்… எழுந்து சென்று பிரஷை எடுத்தார். பிரஷ் ஸ்டேண்ட் தொபுக்கென விழுந்தது. சத்தம்...