0,00 INR

No products in the cart.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!

உலக மனித உரிமை தினம் டிசம்பர் 10

ராஜ்மோகன்

ந்த பூமி எல்லா உயிர்களுக்கும் சமமானது. இதனை உணர்ந்து வழிநடத்த வேண்டிய பொறுப்பு மனித குலத்திற்கு இருக்கிறது. இருப்பினும், மனித குலமானது நிறம், இனம், மொழி என பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை முன்னிறுத்தி சக மனித இனத்தையே துன்புறுத்தி வருகிறது. இதன் விளைவாக உலக அளவில் பல போர்கள் நடந்து ஓய்ந்தன. அனைவரும் சமமாக இருப்பதே அனைவருக்கும் நன்மை என்பதை வலியுறுத்தி, ஐக்கிய நாடுகள் சபை போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டு, உலக அமைதிக்கான முன்னெடுப்புகளைச் செயல்படுத்தியும் வருகிறது. இதன் முக்கிய நோக்கமானது, ஒவ்வொருவரின் தனிமனித உரிமைகளைப் பாதுகாப்பதின் மூலம் மட்டுமே உலகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க முடியும் என்பதாகும். இதன் அடிப்படையிலேயே, ‘சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு’ ஐக்கிய நாடுகளின் வழிகாட்டுதலின்படி 1948ல் தொடங்கப்பட்டது. இதன் முக்கிய செயல்பாடாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 10ஆம் தேதி, ‘சர்வதேச மனித உரிமைகள் தினம்’ என அறிவிக்கப்பட்டு, ஆண்டுதோறும் ஒரு கருத்தை அடிப்படையாகக் கொண்டு உலகெங்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் இவ்வாண்டு, ‘சமத்துவம்’ என்ற கருத்தை வலியுறுத்தி சர்வதேச மனித உரிமைகள் தினத்தை அறிவித்துள்ளது ஐக்கிய நாடுகள் சபை. சமத்துவம் என்ற வார்த்தை மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று. அது உண்மையில் செயல்பாட்டில் இருக்கிறதா? செயல்படுத்தக்கூடியதுதானா? என்ற கேள்விகள் ஒரு விவாதப் பொருளாகவே தொடர்கின்றன. இந்நிலையில் இது குறித்து பல்துறை சார்ந்த பெண்களிடம் பேசியபோது, அவர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துக்கள்.

மனுஷி, கவிஞர்
ட்டத்தின் முன் அனைவரும் சமம் என நாம் நம்ப வைக்கப்படுகிறோம்
. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றும், உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்றும் சொல்லித் தரப்படுகிறது. ‘எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு நாம் எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு’ என்று மேடைகளில் பேசிவிட்டுக் கடந்து விடுகிறோம். ஆனால், யதார்த்த வாழ்வின் மதிப்பீடுகள் அப்படியாக இல்லை. இந்தியச் சமூகத்தில் அரசியல், பொருளாதாரம், சாதி, மதம், பாலினம் மற்றும் பண்பாட்டுச் சமத்துவமின்மை பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. இத்தகைய சூழலில் மானுட சமத்துவம் பற்றிய உரையாடலைத் தொடர்ந்து விவாதிப்பது அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக, பாலினச் சமத்துவத்திற்கான உரையாடலே இங்கு அதிகம் தேவையாக இருக்கிறது. பெண்களுக்கு எதிராக, பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளும் பாலியல் அத்துமீறல்களும் பெண் இனத்திற்கான பாதுகாப்பற்ற சூழலையே நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன. குழந்தைகளை வளர்க்கும் முறையிலேயே இந்தப் பாகுபாடு காட்டப்படுகிறது. நீ பெண் எனும் உணர்வை எல்லா நிலையிலும் அறிவுறுத்தி, மனதின் அடியாழத்தில் பதியவைத்து பெண்ணின் உடலை அவளுக்குச் சுமையாக மாற்றிவிடும் வேலையை இந்தக் குடும்ப அமைப்பும் சமூகமும் தொடர்ந்து செய்து வருகிறது. ஒரு பெண் சாதிக்கும்போது, ‘அவள் இதை எப்படிச் சாதிச்சிருப்பானு தெரியும்’ என்று அவளது திறமையை மட்டம் தட்டும் வேலை ஒருபுறம். ‘ஒரு பெண்ணா அவள் சாதிச்சிருக்கா பாரு’ என்று வானளாவப் புகழும் வேலை மறுபுறம். ஆணின் திறமை இப்படியான சூழலை எதிர்கொள்வதில்லை. அவனது திறமையும் வெற்றியும் அவனளவில் அங்கீகரிக்கப்படுகிறது; கொண்டாடப்படுகிறது. பெண், யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய தேவையில்லாமல், யாருடைய அனுமதிக்கும் காத்திருக்காமல், யாருடைய விமர்சனங்களுக்கும் பயப்படாமல் அவள் செய்ய நினைத்ததைச் செய்வதற்கான சூழல் தான் பாலினச் சமத்துவத்தின் எல்லையாக இருக்க முடியும். ஆண் பெண் பாலினச் சமத்துவம்தான் மானுட சமத்துவத்தின் அடிப்படையாக இருக்கும். பிரபஞ்சத்தின் கீழ் வாழும் அனைத்து உயிர்களையும் சமமாகப் பாவித்தல் என்பதே சமத்துவத்தின் அடிநாதம் என நினைக்கிறேன்.

திலகவதி,
வழக்கறிஞர்

மத்துவம் என்பது சமூக நீதியுடன் இணைத்துப் பார்க்கவேண்டிய ஒரு முக்கியமான நிலை
. யார் எல்லாம் பின்தங்கி இருக்கிறார்களோ, அவர்களுக்கான வாய்ப்புகளை வழங்கி அவர்களை உயர்த்துவதுதான் உண்மையான சமத்துவம். இதை வைத்துப் பார்த்தால் நமது நாட்டில் இன்னும் சமத்துவம் வரவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இங்கு சாதி ரீதியாக, மத ரீதியாக, பாலின ரீதியாக சமத்துவமின்மையை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இங்கு சமத்துவம் என்றால் அது எல்லோருக்கும் பொருந்தும். குழந்தைகள், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் என அனைவருக்கும் சமமாக உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்பதைத்தான் மனித உரிமை சட்டம் பேசுகிறது. யாரும் யாருக்கும் துன்புறுத்தலாக இருக்கக்கூடாது என்பது இதில் முக்கிய அம்சம். ஆனால், இந்த மனித உரிமையின் அடிப்படை பல இடங்களில் மீறப்படுகிறது. இது ஏதோ சமூக தளத்தில் இருந்து மட்டும் வெளிப்படும் விஷயம் இல்லை. குடும்பங்களில் இருந்தும் தொடங்கப்படவேண்டும். மனித உரிமையைப் புரிந்துகொள்ள வேண்டும் எனில், நாம் ஒவ்வொருவரும் மனித உரிமை செயற்பாட்டாளர்களாக இருக்க வேண்டும். நாம் அனைவரும் மனித உரிமையை உணர்ந்து, அது வீட்டில் இருந்தே தொடங்கவேண்டும். அதேநேரம் அதிகாரம் படைத்த இடங்களான காவல்துறை, நீதிமன்றம், அரசியலரங்கம் போன்ற இடங்களில் உள்ளவர்கள் உதவி தேவைப்பட்டு வருபவர்கள் தனக்கு சமமானவர்கள் என்பதை உணர்ந்து செயல்படவேண்டும்.

சாஹித்யா ரகு,
உளவியல் நிபுணர்

வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதை வலிமையாக எடுத்துரைக்கும் நம் நாட்டில் இந்த சமத்துவம் என்பது மிக மிக முக்கியமான விஷயம். இது குழந்தை பிராயத்தில் இருந்தே போதிக்கப்படவேண்டிய மிக முக்கிய விஷயம். இந்த பாகுபாடற்ற நிலை, குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், சிறப்பு கவனம் தேவைப்படுவோர் மற்றும் LGBT வகையினர் அவர்களுக்கு வழங்கப்படவேண்டும். LGBT வகையினர்தான் இந்த மனித உரிமைகள் நிலையில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அவர்களைப் பற்றிப் பேசவே இந்த உலகம் யோசிக்கிறது. இது அவர்கள் பிரச்னை அல்ல. அது அவர்களின் ஹார்மோன் பிரச்னை. அவர்கள் உளவியல் சார்ந்த விஷயங்களை உணர்ந்து யாரையும் ஒதுக்காமல் சமநிலையில் நடத்தப்படவேண்டும். இந்த சமத்துவம், சம உரிமை, மனித உரிமை எதுவாகினும் திணிக்கப்படாமல் இயல்பாக மதிக்கும் நிலைக்கான விழிப்புணர்வு எல்லா தரப்பிலும் ஏற்பட வேண்டும்.

அன்பியல் ஜீவா,
ஆசிரியை

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று வள்ளுவர் சொல்லி இரண்டாயிரம் வருஷம் மேல் ஆகுது. ஆனால், ஆணுக்கு நிகரான இடம் இன்னும் பெண்களுக்குக் கிடைக்கவில்லை. இது, இன்று அல்ல தொன்றுதொட்டே இப்படியொரு உளவியல் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு மறைமுகமாக போதிக்கப்படுகிறது. ‘அதே வள்ளுவர் வாசுகிக்கு சம உரிமையை வழங்கினாரா?’ என்று கேட்டால், இல்லை என்பது போல் தான் ஆய்வாளர்கள் பேசி வருகின்றனர். அதாவது, பெண்கள் இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் பல குறள்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்லும் பாவனையில் இருப்பதை சற்று ஆய்ந்து பார்த்தால் புரியும். நேற்று சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவை பார்த்திருப்பீர்கள். ஹராமிகளின் கண்களில் பட்டாலே ஒரு பெண் விபச்சாரி என்றொரு மத குரு பேசும் அதிர்ச்சிகரமான காணொலி அது. இதுபோல, இசுலாம் மார்க்கத்தை எடுத்துக்கொண்டால், பல இடங்களில் பெண்களுக்கு எதிரான பல கட்டுப்பாடுகளைப் பார்க்கிறோம். கிறித்துவத்தில் கூட ஏவாள் தப்பு செய்ததால்தான் பாவம் நிகழ்ந்தது போன்ற கதைகள் சொல்லப்படுகின்றன. பெண்கள் பிறக்கும்போதே விபச்சாரியாகப் பிறக்கிறார்கள் என்று மனுஸ்மிருதி கீழ்மைப்படுத்துகிறது. இப்படி எல்லா மதங்களும் பெண்களை ஆண்களுக்கு ஒரு படி கீழேதான் வைத்துப் பார்க்கின்றன. இருபாலர்களுக்கு இடையே சமத்துவம் இல்லாத நிலையில் உலக அளவில் சமத்துவம் என்பது ஒரு சம்பிரதாயமாகவே தொடர்கிறது என்பது என் கருத்து. பள்ளியில் பிள்ளைகளுக்கு Good Touch, Bad Touch போதிக்கிறோம். அதையும் பெண் பிள்ளைகளுக்குத்தான் போதிக்கிறோம். சமத்துவம், சமநிலை என்பது எங்கோ கிடைக்கவேண்டிய, யாரோ பெற வேண்டிய விஷயம் அல்ல. அது நம்மிடம் இருந்து, நம் வீட்டில் இருந்தே செயல்படுத்தபட வேண்டும்.

புவியின் தன்மை கெடாமல் இருக்க, அதன் தட்ப வெட்பம் சமநிலையில் இருக்க வேண்டும். அதேபோன்றுதான் உறவுகளும், உயிர்களும். அவற்றின் இணக்கமும் அன்பும் நிலைத்து நிற்கவேண்டுமெனில், உயிர்களிடத்தே சமத்துவம் பெருக வேண்டும். சமத்துவத்தை வார்த்தைகள் அளவில் மட்டும் உதிர்க்காமல், அதனை செயல்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும் என்பதுதான் கூக்குரலாக இருக்கிறது. அது நிகழ வேண்டும் என்பதுதான் நமது அனைவரின் விருப்பமும். சமத்துவம் சாதிப்போம்!

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

“நெசவும் கவிதையும் என் இரு கண்கள்” –நெசவுக் கவிஞர் சேலம் சீனிவாசன்

0
- சேலம் சுபா  “நான் நெசவாளர் என்று சொல்லிக்கொள்வதில் பெருமையும் நெசவுக் கவிஞர் என்று அறியப்படுவதில் பெருமிதமும் கொள்கிறேன்...” என்று தலைநிமிர்ந்து சொல்லும் சீனிவாசன் தன்னை வளர்த்து, அடையாளம் தந்த குலத்தொழிலை உலகறியச் செய்யும் முயற்சியில்...

“ரஜினி சார் கூட நடிக்கணும்”

- ராகவ் குமார் ராட்ஷசன் படத்தில் அறிமுகம் ஆகி தனுஷின்  ‘அசுரன்’ படத்தில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த அம்மு அபிராமி ‘பேட்டரி’ படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.  அம்முவை சந்தித்துப் பேசினோம்: எப்படி இருக்கீங்க...

சமூக சேவகியாக அரசியலில் நுழைந்தேன்!

0
களஞ்சியம்! - மஞ்சுளா ரமேஷ் மங்கையர் மலரின் 42 வருட பயணத்தில், எண்ணற்ற கதைகள், கட்டுரைகள் வந்திருந்தாலும்,  அவற்றுள்  சில எப்போது படித்தாலும், காலத்தால் அழியாத அழகிய வரிகளாக  அமைகிறது. அந்த வகையில்  பிப்ரவரி -...

புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புரட்சி!

0
டாக்டர் லூயி அல்பெர்டோ தலைமையில் ஒரு சாதனை! -ஜி.எஸ்.எஸ். ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த ஒரு டஜன் பேருக்கும் பலவித சோதனைகள் நடத்தப்பட்டன.   விளைவு வியப்பூட்டியது.  மருத்துவர்கள் ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள். உண்மையை அறிந்ததும் நோயாளிகள்...

சேமிப்பு, முதலீடு என்றால் என்ன? முதலீடு செய்யத் தொடங்குவது எப்படி?

சேமிப்பு: உங்களது தேவை போக, தனியாக சேமித்து வைக்கப்பட்ட பணம். இது அப்படியே இருக்கும். இது வளராது. உதாரணமாக, வீட்டில் தனியாக, பணப் பெட்டியிலோ,அஞ்சரைப் பெட்டியிலோ சேமிக்கப்பட்ட பணம். முதலீடு: உங்களது தேவை போக,...