‘அம்பதுலேயே ஆரம்பிச்சிடுங்க!’

‘அம்பதுலேயே ஆரம்பிச்சிடுங்க!’
Published on
– ஆர். மீனலதா, மும்பை
அம்பது! ஆரம்பம்! என்னது?

"பொழுதே போறதில்லை! போரிங்!" பெண்களை விட அதிகம் சலித்துக் கொள்வது ஆண்கள்தான்.
எப்போது?
அலுவலகத்தில் வேலை செய்யும் வரை பிஸியாக இருந்து, அறுபதாவது வயதில் ஓய்வு பெற்றதும் ஏற்படும் புலம்பல் பொதுவாக எல்லோரிடமும் உண்டு. ஆண்களிடையே சற்றே அதிகம்.

பசங்க பெரியவர்களாகி அவரவர் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு வெவ்வேறு இடங்களுக்குச் செல்ல, மனது காலியான கூடு போல உணரும்.

பெண்கள், வீட்டு வேலைகளைச் செய்து கொண்டும், ஸ்லோகம், பஜனை போன்ற வகுப்புகளில் ஈடுபட்டும் எப்படியாவது பொழுதைப் போக்கி விடுவார்கள்.

60ல் தூக்கமில்லா இரவுகளைத் தவிர்த்து, வாழ்க்கையை சலிப்பில்லாமல் அமைத்துக் கொள்ள என்ன செய்யலாம்?

நல்ல குடும்பத் தலைவராகவும், சிறந்த பணியாளராகவும் இருப்பதைத் தாண்டி, 50 வயது ஆகையிலேயே, பிடித்த சில பொழுதுபோக்கு செயல்களை வாரத்தில் ஒன்றிரண்டு நாட்கள் செய்வது முக்கியம். வாழ்க்கையில் சலிப்பு ஏற்படுவதை இது, பின்னர் தவிர்க்க உதவும்.

என்ன மாதிரியான பொழுதுபோக்குகள்?

புத்தகங்கள்:

புத்தகம் படிப்பது ஒரு சிறந்த பொழுதுபோக்கு. சமூகம், காமிக்ஸ், சுயசரிதை , ஆன்மிகம், அரசியல், புலனாய்வு என பலவகை புத்தகங்கள் உள்ளன. பிடித்தமான புத்தகங்களைப் படிக்கலாம். நேரம் கிடைக்கையில், மொஃபைல் ஸ்க்ரீனைச் சற்றே தள்ளி வைத்து, புத்தகத்திலிருந்து 5-6 பக்கங்கள் படிக்கலாம்.

மேலும், நூலகத்தில் சேர்ந்துகொண்டால், அங்கே வாசிக்க வரும் பல்வேறு நபர்களைச் சந்திக்கலாம். புத்தகங்கள் குறித்த விபரங்களை பகிர்ந்து உரையாட, நண்பர்கள் கிடைப்பார்கள். பல நேரங்களில் புத்தகங்கள் நல்ல நண்பனாகவும் செயலாற்றும்.

இசை:

பிடித்தமான இந்திய, மேற்கத்திய இசை; வாத்தியக் கருவிகள்; தமிழ், ஹிந்தி மற்றும் பிற மொழிப் பாடல்கள் ஆகியவைகளை கண்களை மூடிய வண்ணம் சுமார் 15 நிமிடங்கள் கேட்டு ரசிப்பது மனதிற்கு அமைதியைத் தரும். ரசிப்பதோடு மட்டுமல்லாது, கிடார், கீ போர்டு போன்ற ஏதாவது வகுப்பில் சேர்ந்து பயிற்சி பெறுவது மேலும் உற்சாகமூட்டும்.

வாடகை வாகனங்கள்:

பீச் அல்லது வேறு எங்காவது அரை மணி நேரம் ஜாலியாக செல்ல வேண்டுமா? நடந்தோ அல்லது சொந்த வாகனத்தில் செல்வதைவிட, வாடகைக்கு சைக்கிள், பைக் போன்றவைகளை எடுத்து திறந்தவெளியில் சுற்றுகையில், கன்னங்களை வருடிச் செல்லும் காற்று, சுகமான அனுபவமாக இருக்கும். நம்முடன் சில நண்பர்களையும் கூட்டிச் செல்ல, த்ரில்லிங்தான். தேங்கா – மாங்கா- பட்டாணிச் சுண்டல்; வறுத்த கடலை போன்றவைகளை ருசிக்கலாம். இளநீர் அருந்தலாம்.

இன்டர்நெட்:

கைகளில் எப்போதும் ஒட்டி உறவாடும் மொஃபைல், ஐ பேட், லேப்டாப் இத்யாதி…இத்யாதி மூலம் புதுப்புது விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம்.  Blog ஆரம்பித்து, அறிந்த விஷயங்களைச் சுவாரசியமாக எழுத ஆரம்பிக்கையில், அநேக நண்பர்கள் கிடைப்பார்கள்.

ஆரோக்கியம்:

டல் ஆரோக்கியம் காக்க, யோகா, ரேக்கி, ஜீம்பா போன்ற வகுப்புகளில் சேர்ந்து கற்கலாம். புதுவிதமான செயலைக் கற்றுக் கொள்வது, மனதிற்கு மகிழ்வைத் தரும். நேரடியாகச் செல்ல இயலாத சமயம், ஆன்லைன் வழியாகக் கற்கலாம். பயின்றதை வீட்டில் செய்து பார்ப்பதுவும் அவசியம்.

என்ன Hobby?

ன்ன Hobbyஐச் செய்வதென்று புரிபடவில்லையா? கவலையே வேண்டாம். நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களது Hobbyயில் இணைந்து செயல்படுகையில், வேறு புதிய சுவாரசியமான விஷயம் தெரிய வர, நம்மையறியாமலேயே ஃபோட்டோகிராபி, பெயின்டிங், கார்டனிங் போன்றவைகளில் ஈடுபட வழிவகுக்கும்.

சந்திப்பு:

பிடித்த நபர்கள், ஒத்த நோக்கு கொண்ட சிநேகிதர்கள் ஆகியவர்களை பார்க், பீச், க்ளப் போன்ற இடங்களில் சந்தித்து சிறிது மனம் விட்டுப் பேசுவதும், தெரியாதவற்றை அறிந்து கொள்வதும்கூட Hobby தான். மனதை ரிலாக்ஸ் செய்ய உதவும். பழைய இனிமையான நினனவுகளை அசை போட நல்ல வழி. சமூக சேவைகளில் ஈடுபடவும் வழி வகுக்கும்.

ரிடையர்மென்ட்டிற்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். வயசு இப்போது 50 தானே ஆகிறது என்று இருந்தால், 60ல் Hobbyகளை மேற்கொள்ளத் திண்டாடிப் போகும் நிலைமை ஏற்படும். அம்பதில் இருந்து ஆரம்பமாகும் அஸ்திவாரம், அறுபதிற்குப் பின் ஏற்படும் வெற்றிடத்தைத் தவிர்த்து வாழ்வினை அனுபவித்து நடத்திச் செல்ல உதவும்.
அதற்குப் பிறகு வாழ்க்கை ஆனந்தம்! ஆனந்தம்! ஆனந்தமே!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com