கல்லாதது கடலளவு!

கல்லாதது கடலளவு!
Published on
மினி தொடர் – 4

– நாராயணி சுப்ரமணியன்

எத்தனை மீன் இனங்கள் கடலில் இருக்கின்றன?

ந்த பூமியில் மொத்தம் 28,000 மீன் இனங்கள் உண்டு என்று விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்கள். குருத்தெலும்பு மீன் இனங்களான சுறா, திருக்கை போன்றவை தொடங்கி, எலும்பு கொண்ட மீன் இனங்கள் வரை எல்லாமே இந்தப் பட்டியலில் உண்டு. ஆனால் இவை அனைத்துமே கடல் மீன்கள் அல்ல. நன்னீர் வாழிடங்களில் மட்டுமே வாழக்கூடிய மீன்கள், ஓரளவு உவர்நீரில் வாழக்கூடிய மீன்கள், கடலில் வாழக்கூடிய மீன்கள் என்று வாழிடங்களைப் பொறுத்து மீன்களை வகைப்படுத்துவார்கள்.

கடலில் 20,000 மீன் இனங்கள் உண்டு என்று கூறுகிறது ஒரு ஆராய்ச்சி. இதில் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும், இருபதாயிரம் என்பது மீனின் வகை மட்டுமே. ஒவ்வொரு வகையிலும் லட்சக்கணக்கான எண்ணிக்கையில் மீன்கள் இருக்கலாம்! தவிர, 20,000 என்பது, இப்போது வாழும் மீன் இனங்கள் மட்டுமே. ஆரம்பம் முதல் இப்போது வரை கடலில் வாழ்ந்து அழிந்துவிட்ட மீன்களையும் பட்டியலில் சேர்த்தால் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்.

கடலாமைகள் எப்படி வழி கண்டுபிடிக்கின்றன?

தான் பிறந்த அதே கடற்கரையைத் தேடி வந்து, கருவுற்ற பெண் கடலாமைகள் முட்டையிடுகின்றன என்பது வியப்புக்குரிய ஒரு செய்தி. கடலில் வழி கண்டுபிடிப்பதற்குக் கடலாமைகள் காந்தப்புலங்களை (Magnetic field) பயன்படுத்துகின்றன என்பது முன்பே அறியப்பட்டிருந்தாலும், நிலத்தில் உள்ள குறிப்பிட்ட கடற்கரையைக் கண்டுபிடிக்க அவை என்ன செய்கின்றன என்பது பல ஆண்டுகளாக விஞ்ஞானிகளுக்குப் புரியாத புதிராகவே இருந்தது. சமீபத்தில்தான் அதற்கு விடை கிடைத்துள்ளது. நம்மில் ஒவ்வொருவருக்கும் கைரேகை தனித்துவமானது, இல்லையா? அதைப்போலவே ஒவ்வொரு நிலப்பகுதிக்கும் உள்ள காந்தக் குறியீடுகளும் தனித்துவமானவையாம். அவற்றை நினைவில் வைத்துக்கொள்ளும் ஆமைக்குஞ்சுகள், வளர்ந்து கருவுற்றவுடன் தங்களது காந்தப்புலனை அறியும் சக்தியால் அதே கடற்கரையைத் தேடி வந்து முட்டையிடுகின்றனவாம்.

பாரம்பரியமாக அதே கடற்கரையைத் தேடி வரும் வழக்கம் கடலாமைகளுக்கு உண்டு என்றாலும், கடற்கரைப்பகுதியில் காணப்படும் பிற இடையூறுகள் – பளீரென்ற செயற்கை விளக்குகள், வேட்டையாடிகளின் நடமாட்டம் ஆகியவை முட்டையிடும் சாத்தியத்தைக் குறைக்கின்றன என்கின்றன ஆய்வுகள். ஆகவே கடற்கரையைக் கடலாமைகளுக்கு உகந்ததாகப் பாதுகாப்பது நம் கடமை.

மீன்கள் தூங்குமா?

யிர்வாழும் எல்லா விலங்குகளுக்கும் ஓய்வு அவசியம். அதில் மீன்களும் விதிவிலக்கல்ல. மீன்கள் நிச்சயமாகத் தூங்கும், ஆனால் பல மீன் இனங்களுக்குக் கண் இமைகள் கிடையாது என்பதால் நம்மை போல அவை கண்களை மூடிக்கொண்டு தூங்குவதில்லை. பெரும்பாலும் எதாவது ஒதுக்குப்புறமான இடத்தைத் தேர்ந்தெடுத்து அமைதியாக இவை ஓய்வெடுக்கின்றன.

கிளிமீன்கள் தூங்கும் முறை என்பது சுவாரஸ்யமானது. கிளிமீன்கள் பகலாடிகள் என்பதால், இவை இரவுப்பொழுதில் தூங்குகின்றன. இரவில் வேட்டையாடும் மீன்கள் பெரும்பாலும் மோப்பசக்தியை வைத்தே இரை கண்டுபிடிக்கின்றன என்பதால், கிளிமீன்கள் தங்களது உடலில் இருந்து சுரக்கும் பிசுபிசுப்பான ஒரு திரவத்தால் இவை குமிழ் போன்ற ஒரு அமைப்பை உருவாக்குகின்றன். இந்த "தூங்கு குமிழுக்குள்" கிளி மீன்கள் பத்திரமாகத் தூங்கிவிடுகின்றன. கிளிமீனின் வாடையை இந்தக் குமிழ் தடுத்துவிடும் என்பதால், வேட்டை மீன்களால் தூங்கும் கிளி மீன் உள்ள இடத்தை மோப்பம் பிடிக்க முடியாது!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com