ஆஃபர் அமர்க்களம்!

ஆஃபர் அமர்க்களம்!
Published on
– ஜெனிபர் டேனியல்

ன்றைய நவீன யுகத்தில் கம்யூட்டர், செல்போன், டி.வி என எதை வாங்க நினைத்தாலும் ஒரே ஆஃபர் மயம்தான். தங்க நகைகள், சொகுசு கார்களில் ஆரம்பித்து, செருப்பு வரை அனைத்திற்கும் ஆஃபர் விலை குவிந்து கிடக்கிறது.

சாதாரண மளிகைப் பொருட்களை வாங்குவதில் கூட ஆஃபர். இந்த ஆஃபர் விளம்பரங்களைப் பார்த்தவுடனேயே குடும்பத்தலைவிகள் மளிகை் பொருட்களை வாங்க கூட்டமாகக் கிளம்பிவிடுகிறார்கள். இப்படி ஆஃபரில் மளிகை பொருட்களை வாங்குவது நமக்கு லாபகரமாக இருக்குமா? என்று பல அனுபவஸ்தர்களிடம் கேட்டால் அதில் பாதிக்கும் மேற்பட்டோர் கொடுக்கும் பதில்களும், ஆன்லைன் தள கமெண்ட்களும் அதிர்ச்சி அளிப்பவையாகவே உள்ளன!

மாதத்தின் முதல் தேதியானாலும் ஆஃபர், மாதக் கடைசியானாலும் ஆஃபர் என்று தினமும் ஆஃபர் மயமாகவே உள்ளது. ஆஃபர் என்பதே ஒருவிதமான ஏமாற்றும் வேலை தான் என்பது பெரும்பாலான மக்களுக்கு புரிந்தாலும், அவர்களால் அதன் கவர்ச்சியில் மயங்கி சொக்காமல் இருக்க முடியவில்லை.

சாதாரணமாக 100 ரூபாய்க்கு கிடைக்கும் பொருளை 90 ரூபாய்க்குத் தருகிறோம் என்பார்கள்… ஆனால் அந்தப் பொருளை நீங்கள் கிலோ கணக்கில் மட்டும் தான் வாங்க முடியும்.

மேலும் எல்லா பொருட்களுக்கும் இந்த ஆஃபரை தரமாட்டார்கள். ஏதோ சிலபொருட்களுக்கு மட்டுமே தந்து, நம்மை கடைக்குள் உள்ளே இழுத்து, நமக்குத் தேவையில்லாத பொருட்களை எல்லாம் வாங்க மறைமுகமாகத் தூண்டுவார்கள். இதில் ஆன்லைன் தளங்களோ படு தெளிவு…

கடுகு முதல் சமையல் எண்ணெய் வரை, எல்லாத்திலும் 30 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி தருவதாக கண்கவர் டிஜிட்டல் விளம்பரங்களைக் காட்டி நம்மை சுண்டி இழுப்பார்கள்.

ஆனால், அந்த ஷாப்பிங் தளத்திற்குள் சென்ற பிறகுதான் நமக்குத் தெரியும், அவர்கள் ஓவராக தள்ளுபடி கொடுக்கும் விஷயங்கள் எல்லாமே குறிப்பிட்ட சில பிராண்ட், அல்லது அவர்களுடைய சொந்த பிராண்ட்டுகளுக்கானது என்று. ஆஃபரில் தரும் பொருட்கள் பிராண்டட் பொருட்களாக இருக்குமா என்பது சந்தேகம் தான். பெரும்பாலும் அவை பிராண்ட் இல்லாத பொருட்கள், அல்லது சந்தைக்குப் புதிதாக அறிமுகமாகும் பொருட்களாகவே இருக்கும்.

இது மாதிரியான பொருட்களை ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று விளம்பரம் செய்வார்கள். இப்படி தரும் பொருட்கள் சில சமயங்களில் எக்ஸ்பைரி ஆனதாகக்கூட இருக்கும். அதோடு அதன் மீது வேறு லேபிள் ஒட்டுவதற்கும் வாய்ப்புள்ளது. இப்படியாக உஷார் விஷயங்கள் பல இருக்கிறது.

ஆஃபர் என்கிற கவர்ச்சி வலையோடு, கிஃப்ட் கூப்பன், காம்போ பேக்கேஜ் என்கிற இரண்டு விஷயங்கள் மூலமும் நடுத்தரமக்கள் தங்கள் பணத்தை இழக்கிறார்கள் என்பது தனிக்கதை. குறிப்பிட்ட தொகைக்கு மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்கு கிஃப்ட் கூப்பன்கள் தருவதை சில கடைகள் வழக்கமாக வைத்துள்ளன. இந்த கூப்பன்களைப் பெரும்பாலும் அந்தக்கடையில் குறிப்பிட்ட பொருட்களை வாங்குவதற்கு தான் பயன்படுத்த முடியும்.

கிஃப்ட் கூப்பனை வைத்து பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள எலெக்ட்ரிக் ஓவனை வாங்கச் சொல்வார்கள். இந்த ஆயிரம் ரூபாய் கூப்பன் அநாவசியமாகப் போகிறதே என்று நினைத்து, மேலும் சில ஆயிரம் ரூபாய் செலவு செய்து நமக்கு உடனடியாகத் தேவையில்லாத பொருளை வாங்குவோரும் உண்டு!

இன்னும் சில கடைகளில் காம்போ பேக்கேஜ் என உங்களுக்குத் தேவையான பல பொருட்களை ஒரு மூட்டையாகக் கட்டி மொத்தமாக ஒரு ரேட் சொல்லி விற்க்கிறார்கள். இதைப்பார்த்த மாத்திரத்திலேயே அட நல்லா இருக்கே என்று நாம் வாங்கிவிடுவோம்.

ஆனால், வாங்கி வீட்டுக்கு வந்து பார்த்த பிறகு தான் அதில் நமக்குத் தேவையில்லாத பல பொருட்கள் இருப்பது தெரியும். தனியாக அந்தப் பொருளை வாங்கியிருந்தால் வெறும் 100 ரூபாய் தான் செலவாகி இருக்கும், ஆனால் நாமோ 1000 ரூபாய்க்கு மேல் செலவு செய்து அவசியமற்ற பொருட்களைச் சேர்த்திருப்போம்.

இப்போது மளிகை பொருட்களிலும் இந்த காம்போ பேக்கேஜை அறிமுகப்படுத்தி அட்டகாசம் செய்கிறார்கள். 5 லிட்டர் எண்ணெய், 10 கிலோ கோதுமை மாவு, 2 கிலோ சர்க்கரை என்கிற காம்போ பேக்கேஜ் இப்போது படு பிரபலம். இதன் ஒரிஜினல் விலை 1500 ரூபாய், நாங்கள் 1399 ரூபாய்க்குத் தருகிறோம் என சொல்லி கஸ்டமர்களை கூவி, கூவி கூப்பிடுவார்கள்.

ஆனால், இந்த பொருட்கள் பிராண்டட் ஆக இருப்பதற்கான வாய்ப்பு குறைவு. சரி காசு கம்மியாச்சே என அதையும் வாங்கிப்போய் தரத்தில் ஏமாறுபவர்கள் ஏராளம்! அதைவிட பிராண்டட் பொருட்களைத் தனித்தனியாக வாங்கினால் விலை குறைவாக வாங்க முடியும்.

ஆஃபர் விளம்பரங்களில் நாம் சிக்கி சீரழிவதை விட நம்மூரில் இருக்கும் ஓரளவுக்கு பெரிய கடைகளில் மொத்தமாகப் பொருட்களை வாங்கினாலே போதும். நிறைய பணத்தை மிச்சப்படுத்த முடியும் என்பதை பலரும் அறிந்தும் அறியாமல் கடந்து செல்கின்றனர்.

சூப்பர் மார்க்கெட்களில் ஸ்டைலாக ட்ராலியை தள்ளிக்கொண்டு போய்ப் பொருட்கள் வாங்குவதை ஒரு கௌரவமாக நினைக்காமல், ஆன்லைன் ஆஃபர்களை நம்பி பகல் கனவு காணாமல், பக்கத்து தெருவில் இருக்கும் மளிகை கடைக்கு நீங்களே பையைத் தூக்கிக்கொண்டு போய் பொருட்களை வாங்குவதைப் பெருமையாக நினைத்தால், நிச்சயம் பல ஆயிரம் ரூபாயை மிச்சப்படுத்த முடியும். 100 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 1000 ரூபாயை இழப்பது புத்திசாலித்தனமில்லை தோழிகளே!

அன்பு வாசகீஸ்…

ஆஃபரில் பொருட்களை வாங்குவது லாபமா? புத்திசாலித்தனமா? முட்டாள்தனமா? உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களோடு உங்கள் கருத்துகளையும் நச்சுனு நூறு வார்த்தைகளுக்கு மிகாமல் மங்கையர் மலர் முகநூலில் பதிவு செய்யுங்கள்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com