உழுதவன் கணக்கு!

உழுதவன் கணக்கு!
Published on

– தனுஜா ஜெயராமன்

ஓவியம்: தமிழ்

போனில் பேசிய விஷயங்கள் நினைவில் உறுத்தி கொண்டே இருப்பது லக்ஷ்மிக்கு கலக்கமாக இருந்தது இருந்தாலும் எதையும் வெளியே வெளிகாட்டி கொள்ளாமல்…"என்ன செய்ய போறீங்க"? …என்றாள் கவலையுடன் கணவனை பார்த்து.

"நான் முடிவு பண்ணிட்டேன் லக்ஷ்மி. நிலத்தை முத்து பேரில் கிரையம் பண்ணத்தான் போறேன் ஒரு பய என்னை கேக்க முடியாது..இது என்னோட சுய சம்பாத்தியம்".

"என்னங்க ஆயிரமிருந்தாலும் மதி நம்ம புள்ளை இல்லியா? தவம் இருந்து பெற்ற பிள்ளையாச்சே மனம் வலிக்குதுங்க" ..என அழுதாள் லக்ஷ்மி.

"என்ன செய்ய சொல்ற?…நமக்கு குழந்தையே பொறக்கல" ன்னு நினைச்சிட்டு வேலையை பாரு போ…என்றார். கதிரேசன் ஆடிக்கொண்டிருந்த ஊஞ்சலை சடாரென நிறுத்தி…ஆத்திரத்தில் முகம் சிவந்திருந்தது.

"என்ன தைரியம் உன் பையனுக்கு" என்றார் மனதுக்குள் கருவியபடி…மனசாட்சி இருந்தா இப்படி சொல்வானா உன் மகன்?"

"என்ன இருந்தாலும் அவன் நம்ம மகனாச்சேங்க".. என இழுத்த லக்ஷ்மியை ..
"கையை கழுவிட்டு வரேன் தட்டை எடுத்து வைக்குறீயா"? ..என எழுந்து உள்ளே சென்றார்.

கல்யாணம் ஆகி எழு எட்டு வருஷத்துக்கு பிறகு பிறந்தவன் மதியழகன், வராது வந்த மாமணியாக நினைத்து மொத்த ப்ரியத்தையும் அன்பையும் கொட்டி வளர்த்தனர் லக்ஷ்மியும் கதிரேசனும்.

கதிரேசனின் தகப்பனார் முத்தையா பலவருடங்களுக்கு முன் பிழைப்புக்காக பண்ணையாரிடம் மனைவி பிள்ளைகளோடு கொத்தடிமையாக இருந்து வந்தார்.

அவர் மறைவு காலத்திற்கு பிறகு கொத்தடிமையாக இருந்த அந்த ஊரில் காணி நிலமாவது வாங்கிவிட வேண்டும் என்ற லட்சியத்துடன் கதிரேசன் அல்லும் பகலும் கடுமையாக உழைத்தார். ஒரு ஏக்கர் நிலம் வாங்கி பயிரிட்டு அதில் இயற்கை அன்னை அளித்த கொடையிலேயே பாடுபட்டு மதியழகனை இஞ்சினியரிங் வரை படிக்க வைத்து அழகு பார்த்தார்.

மதியழகன் ஆரம்பத்தில் ஒழுங்காக பாசத்தோடு இருந்தவன்தான். தன் சொந்த அண்ணன் மகளைத்தான் அவனுக்கு திருமணம் செய்திருந்தாள் லக்ஷ்மி. வந்த மகாலட்சுமி வீட்டின் பிள்ளை செல்வத்தை அபகரித்து கொண்டாள். திருமணத்திற்கு பிறகு ஆளே மாறிவிட்டான் மதி. வேலை நிமித்தமாக மாநகரத்திற்கு சென்றவனை, நகர சுகபோக வாழ்க்கையும் மனைவியின் உபதேசங்களும் பழசை மறந்து பெரிதும் சுயநலக்காரனாக மாற்றிவிட்டிருந்தது.

க்ஷ்மி உடல்நிலை முடியாமல் செத்து பிழைத்து வந்தபோது கூட எட்டி பாக்கவில்லை. ஆரம்பத்தில் தொலைபேசியிலாவது பேசிக் கொண்டிருந்தான்…போக போக நாளடைவில் அதுவும் குறைந்து போனது. குழந்தையைக் கூட கண்ணில் காட்டுவதில்லை. பணமும், உறவுமிருந்தும் அனாதையாகி போனார்கள் லக்ஷ்மியும் , கதிரேசனும்.
தூரத்து சொந்தமான முத்துதான் பல வருடமாக விவசாயத்தையும் கவனித்து பெற்ற தாய் தந்தையை போல கதிரேசனையும் லக்ஷ்மியையும் கவனித்து வருகிறான்.

"அப்ப அவனுக்கு என்ன பதில் சொல்றதுங்க" என்று கேட்டாள் லக்ஷ்மி. சாதத்தை போட்டபடி…

"உன் மகனை அவன் இஷ்டம் போல செய்ய சொல்லு".. என தட்டில் கையை கழுவியபடி எழுந்து சென்றார் கதிரேசன்.

மறுநாள் வீட்க்குள் கோபமாக நுழைந்தான் மதியழகன் "வாடா" என வந்தவனை அணைத்து மகிழ்ந்தாள் லக்ஷ்மி.. "சாப்பிடுடா… தட்டை எடுத்துட்டு வரேன்"..என அன்புடன் கேட்டவளை..

"அம்மா!…நான் ஒண்ணும் கொஞ்சி குலாவி விருந்து சாப்பிட உன் வீட்டுக்கு வரல."..உன் புருஷனை பார்த்து "நறுக்" ன்னு நாலு வார்த்தை கேட்க தான் வந்தேன் என வந்ததுமே அமிலத்தை வீசினான் மதியழகன்…

"என்னடா கேக்க போற " என்று கோபமாக செருப்பை கழற்றி வாசலில் விட்ட படியே உள்ளே நுழைந்தார் கதிரேசன்.

"எனக்கு சேரவேண்டிய பணத்தை தானே கேக்கறேன்…எவனோ ஒரு வேலைக்காரனுக்கு தானம் தர இது என்ன பிள்ளையில்லா சொத்தா? "..கேஸ் போட்ருவேன்… ம்மா சொல்லி வை உன் புருஷன்கிட்ட".. என மிரட்டினான்.

"என்னது கேஸ் போடுவியா? லக்ஷ்மி பாத்துக்க உன் அருமை பிள்ளை லட்சணத்தை..என்னவோ பதறினியே…பிள்ளை ..பெத்த வயிறுன்னு"..
"கேஸ் போட்டுக்க போடா …எங்களுக்கு பிள்ளையே கிடையாது…எதுடா ? உனக்கு சேரவேண்டிய பணமா?-..நான் மாடாக உழைச்சு சம்பாதித்த சொந்த சம்பாத்தியம்.. யாருக்கு வேணா எழுதி வைப்பேன்…நீ யார்ரா அதை கேட்க? பெத்தவங்க சொத்தை உரிமை கொண்டாட நினைக்கிற நீ…உன் கடமையை இதுவரை ஒழுங்கா செஞ்சிருக்கியா? கடமையை ஒழுங்காக செய்யாதவன் உரிமையை பத்தி பேச வந்துட்டான்…நிலத்தை வித்து பணம் தராட்டா.. செத்தா கூட கொள்ளி போட மாட்டேன்னு பெத்தவங்களை மிரட்டினவன் தானே நீ.. உழுதவன் கணக்கு பார்த்தா உழக்கு கூட மிஞ்சாது…போடா போ"…என கோபமாக கத்தினார் கதிரேசன்

அந்நேரம் மண்வெட்டியும் கடப்பாறையையும் சுமந்தபடி வேர்த்து வழிய உள்ளே நுழைந்த முத்து மதியழகனை பார்த்து " வாங்கண்ணே" எப்ப வந்தீங்க?…என்றான் முகம் மலரந்தபடி…

"முத்து !…அவரு நம்மள பாக்க வரலை..இவரு பட்டணத்தில கட்டபோற பங்களாக்கு நம்ம நிலத்தை வித்து பணம் தரணுமாம். அதை வாங்கிட்டு போக வந்திருக்காரு சாரு"..என நக்கலாக சொன்னார் கதிரேசன்.

மிரட்சியுடன் விழித்த முத்துவை …"முத்து ..அந்த நிலத்துல எனக்கும் அம்மாவுக்கும் கொஞ்சம் இடத்தை இப்பவே ஒதுக்கிடுப்பா.. சாரு எங்களுக்கு கொள்ளி போட மாட்டாராமாம்… நாங்க செத்தா பெத்த தாயி மாதிரி ஆதரிச்ச இடத்துலயே எங்களை பொதச்சிடுப்பா…சாரை தொந்தரவு செய்ய வேணாம்"..என வாயில் துண்டை பொத்தி அழுதார். அடக்க மாட்டாமல் லக்ஷ்மியும் கதற…

"ஐயா!…என்ன வார்த்தை பேசுறீங்க"..என துண்டை பொத்தியழுதான் முத்து.
"எப்படியோ போய் தொலைங்க"…என வேகமாகவண்டியை கிளப்பிச் சென்றுவிட்டான் மதியழகன்.

"எங்களுக்கு கொழந்தையே பிறக்கலைன்னு நினைச்சிட்டு போறோம் போடா"..என்ற கதிரேசன், "லக்ஷ்மி தண்ணி எடுத்து வை , தலை முழுகணும்" என்று புழக்கடையை நோக்கிப் போனார்.

வண்டியை வேகமாக ஓட்டிய மதியழகனின் மனம் ஒருநிலையில் இல்லை . ஆயிரம் இருந்தாலும் பெற்று வளர்த்து படிக்க வைத்தவர்களிடம் இப்படி கடுமையாக பேசியது மனதை உறுத்தியது. ஆனால் மகாலட்சுமியை நினைத்தால் பயமாக இருந்தது. பணம் பணம் என அலைகிறவளாயிற்றே.

இப்படியாக பலவாறு சிந்தித்து கொண்டே வந்தவன் எதிரே வரும் வண்டியை கவனிக்க தவறினான். ஒரு வினாடிதான் என்ன நடந்தது என்று உணர்வதற்குள் அது நிகழ்ந்து விட்டது. அம்மா என கத்தியவாறு வண்டியிலிருந்து தூக்கி எறியபட்டு மயங்கி கிடந்தான்…

கண்விழித்த போது வலி உயிர்போனது..மதியழகனுக்கு . அம்மா அருகில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள். அப்பா டாக்டரிடம் கையில் காலில் விழுந்து கெஞ்சி கொண்டிருந்தார். முத்துவை காணவில்லை. மெதுவாக "அம்மா " என முனகியவனை…"வலிக்குதா ராசா.."என தலையை தடவினாள் லக்ஷ்மி. எதுவுமே பேசாமல் கண்களில் நீருடன் அவளை நோக்கினான்.

அப்பாவை கூப்பிடுமா" என அம்மாவிடம் கெஞ்சினான்.

"இருப்பா!..உனக்கு ஆபரேஷன் பண்ணியிருக்கு..அப்பா டாக்டரிடம் ஆபரேஷனுக்கான பணம் கட்ட அவகாசம் கேட்டுகிட்டிருக்கார். நிலத்தை உடனே விக்க முடியுமா என்ன?" என அழுதாள்.

"அம்மா நிலத்தை விக்க வேண்டாம்..எனக்கு ஆபிஸில் விபத்து காப்பீடு இருக்கு..அப்பாவை கூப்பிடும்மா" என்றான் வலியுடன்..

உள்ளே வந்த கதிரேசன்..கலங்கி போய் மதியழகனை பார்த்தார். "அப்பா என்னை மன்னிச்சிருங்கப்பா" என கதறினான்.

"மனசை அலட்டிக்காத மதி… தூங்கு" என்று ஆதரவாய் கரங்களை நீவினார்.

"முத்து எங்கேப்பா?"

"உனக்கு ஆபரேஷனுக்கு ஏற்றிய இரத்தத்திற்கு ஈடு செய்ய தன் இரத்தம் கொடுக்க போயிருக்கான் ப்பா"என்றாள் அம்மா.

தியழகனுக்கு வெட்கமாக இருந்தது தன்னை நினைத்து… "அப்பா!… நிலத்தை முத்துவுக்கே கொடுத்திடுங்கப்பா.. அவன் என்னை விட உங்களையும் நிலத்தையும் நல்லா பாத்துப்பான்." கதறியழும் மகனை சமாதானபடுத்த தெரியாமல் கலங்கினர்.

மகன் நீண்ட நாட்களுக்கு பிறகு மறுபடியும் கிடைத்த மகிழ்வில் புதிய விடியல் தென்பட்டது லக்ஷ்மிக்கும் கதிரேசனுக்கும்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com