0,00 INR

No products in the cart.

வண்டித்தடமும் சட்டத்தின் வழித்தடமும்!

சிங்கப் பெண் காவலர்கள்
குற்றம் – வழக்கு – விசாரணை – 7

 -பெ.மாடசாமி
ஓவியம் : தமிழ்

“சீருடையில் பெண்கள் குழப்பம் அடையக் கூடாது. ஒரு விளக்குக்கு சொந்தமான வீடு கிடையாது. அதை எங்கு வைத்தாலும் அது அதன் ஒளியைப் பரப்புகிறது” – ஸ்ரேஸ்தா தாக்கூர் ஐ.பி.எஸ். என்பவரின் முகநூலில்.

2005ஆம் ஆண்டு காலை சுமார் 8 மணிக்கு கோவை புறநகர் மாவட்டத்தில் உள்ள தளி காவல் நிலையத்தின் நிலைய அதிகாரியான பெண் உதவி ஆய்வாளர் சம்பங்கி தன் இருக்கையில் அமர்ந்து மேல் அதிகாரிகளின் ஆய்வு அறிக்கை புத்தகத்தை (Superior Officer’s Inspection Book), அதிகாரிகள் நிலையத்தைப் பற்றி என்ன எழுதியிருக்கிறார்கள் என்று சுவாரசியமாகப் படித்துக் கொண்டிருந்தார்.

-பெ.மாடசாமி (முன்னாள் காவல்துறை உதவி ஆணையாளர்)

தலையில் அடிப்பட்டு உடுமலைப்பேட்டை மருத்துவமனையில் இருந்த கந்தசாமி மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு ICUவில் இருக்கிறார் என்றும், அது சம்மந்தமாக பதிவு செய்த வழக்கை அவர் பார்வைக்கு வைத்தார் தலைமைக் காவலர் சேது.

ஒருவர் ஐ.சி.யூவில் இருக்கிறார் என்றால் காயம் பலமாகத்தான் இருக்கும் என்பதால் தாமதம் செய்யாது உடனே புறப்பட்டார் சமபங்கி  ஐ.சி.யூவில் இருந்த கந்தசாமியைப் பார்க்க. அவர் மயக்க நிலையில் இருக்கவே உடனடியாக விசாரிக்க இயலவில்லை என்றாலும் காத்திருந்து விசாரனை செய்து முடித்தார். அவர் வேதனையுடன் சிரமப்பட்டு சொன்னதில் அவரை அவருடைய பக்கத்து தோட்டக்காரரான ராஜவேலுவும் அவருடைய 3 மகள்களும் சேர்ந்து மாட்டு வண்டிச் செல்லும் வழித்தட பிரச்னையில் மோட்டார் சைக்கிளில் சென்றவரை மடக்கி பலமாக தாக்கியுள்ளனர் என்று தெரிந்தது.

பொதுவாக காய வழக்குகளில் (Hurt Cases) சம்பந்தப்பட்ட எதிரியை கைது செய்துவிட்டால் காவல் துறையின் மீதான நம்பிக்கையும் மரியாதையும் உயரும். கைது செய்யாவிடில் முன்ஜாமீன் பெற்று காயம் பட்டவர்கள் முன்பாக அவர்கள் மேலும் மனதளவில் காயப்படுகிற வகையில் மார் தட்டிச் செல்வார்கள். உதவி ஆய்வாளரைப் பொறுத்தமட்டில் காயப்பட்டவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியானவர்.

நிலையம் திரும்பிய சம்பங்கி வயதும் அனுபவமும் நிறைந்த தலைமைக் காவலர் சேதுவை அழைத்துக் கொண்டு சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று விசாரணை செய்ததில் சம்பவம் உண்மை என்று தெரிந்தது. ராஜவேலுவை தேடியதில் அவருடைய 3 மகள்கள் மட்டுமே வீட்டில் இருக்க அவர்களை கைது செய்து காரில் ஏற்றியபோது, ஏற மறுத்ததோடு உதவி ஆய்வாளரை துர்பாஷையில் அர்ச்சனை செய்ய ஆரம்பித்தனர் அவர்கள்.

பொறுத்து பொறுத்து பார்த்த உதவி ஆய்வாளர் காவல் சீருடையில் இருப்பவர் என்பதை நிரூபிக்கிற வகையில் மூவரையும் குண்டுகட்டாகத் தூக்கி காரில் ஏற்ற கார் புறப்பட்டது.

நிலையம் வந்து மூவரையும் காரிலிருந்து இறக்கியபோது நிலைய எழுத்தர், “ஐயய்யோ, என்ன காரியம் மேடம் பண்ணிட்டீங்க… இந்த பார்ட்டி மேல கைவச்சிட்டீங்களா? தேன் கூட்டில் கல்லெறிந்த மாதிரிதான் உங்களை உண்டு இல்லையென ஆக்கிடுவாங்க…” என்று சொல்லி நழுவிவிட்டார்.

அதன் பின்புதான் கைது செய்யப்பட்ட பெண்களின் பிரச்னை நீண்ட காலப் பிரச்னை என்றும் விசாரைணக்கு அழைத்தாலே பல வழிகளில் பலவகையில் காவல்துறையினருக்கு தொல்லைகள் கொடுப்பார்கள் என்றும் அதனால் பல அதிகாரிகள் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகத் தெரிந்தது.

சம்பங்கி அதைப்பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளவே இல்லை. அவருடைய கைப்பேசி தொடர்ந்து அழைத்துக்கொண்டே இருந்தும் அதனை எடுக்க விரும்பவில்லை. மூவரையும் ரிமேன்ட் செய்வதற்காக தகுந்த பெண் காவலர்களுடன் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தார்.

நிலையத்திலிருந்தால் தேவையில்லாத சிபாரிசுகள் வரும் என்பதால் சற்று தொலைவிலிருந்த வீட்டிற்கு சாப்பிடச் சென்றார். வீட்டிலிருந்த லேன்ட் லைன் தொலைபேசி அலறியது.

“அம்மா, எங்க இருக்க. உடனடியா டி.வி. போட்டுப் பாரு” என்று உறவினர் ஒருவர் போனில் பேசினார்.

டி.வி.யில் பிளாஷ் நியூஸ் ஓடிக்கொண்டிருந்தது. அதில் தன்னுடைய போட்டோவும் ரிமேன்டுக்கு அனுப்பப்பட்ட பெண்கள் மூவரும் தங்களை சப்-இன்ஸ்பெக்டர் சம்பங்கி “சூ” காலால் எட்டி உதைத்ததில் மயக்கம் வருகிறது என விழும் காட்சியும் மாறி மாறி வந்துகொண்டிருந்தது.

விசாரித்ததில் நீதிமன்றத்தில் ரிமேண்டுக்கு சென்ற இடத்தில் பெண்களின் வழக்கறிஞரை அவர்களுடன் பேச அனுமதித்ததால் அவரின் அறிவுரைப்படி நடந்த “மயக்க டிராமா” என்று தெரிந்தது. டிராமாவின் முடிவு அவர்கள் மூவரும் சிறைக்கு அனுப்பப்படாது, மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்கள்.

“தளி” காவல் நிலைய செய்தி “தனி”ச் செய்தியாகி தமிழகம் மட்டுமல்லாது உலகமே பார்த்துக் கொண்டிருந்தது. ஆய்வாளர், உதவி ஆய்வாளர் சம்பங்கியை  அழைத்து, “பிரச்னை தலைக்கு மேலே போயிடுச்சி. மூவரையும் உடனடியாக ஜாமீனில் விட்டுவிடுங்கள்” என உத்தரவிட்டார்.

யா, மன்னிக்க வேண்டும். அவர்களை யாரும் அடிக்கவில்லை. அவர்களை நான் விடுவித்தால் இனி இக்காவல் நிலையத்தில் நான் மட்டுமல்ல யாரும் பணியாற்ற முடியாது. யாரைக் கைது செய்தாலும் மருத்துவமனையில் போய் படுத்துக் கொள்வார்கள். காவல்துறைக்கு மரியாதை இல்லாமல் போய்விடும். மாஜிஸ்திரேட்டுக்கு  வேண்டுதல் கொடுத்து அழைத்து வந்து, மருத்துவமனனயிலேயே ரிமான்ட் செய்கிறேன்,” என்று தன்னிலையை தைரியமாக சொல்லிவிட்டார்.

அன்றைய தினம், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்று கொண்டிருந்ததால் அவரை சம்பங்கியால் தொடர்பு கொண்டு விவரத்தை எடுத்துச் சொல்ல முடியவில்லை.

வழக்கின் விசாரணையை நானே எடுத்துக்கொள்கிறேன் என ஆய்வாளர் எடுத்துக்கொண்டு பெண்கள் மூவரையும் விடுதலை செய்துவிட்டார்.
ராஜவேலு ஒரு இயக்கத்தை சேர்ந்தவர் என்பதால் சப்-இன்ஸ்பெக்டர் சம்பங்கியை கண்டித்து ஊரின் பல இடங்கள் மட்டுமல்ல காவல் நிலையத்திற்கு எதிரிலும் பேனர்கள் ஒட்டப்பட்டன. கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய முயற்சிகள் தடபுடலாக நடந்தன.

மறுநாள் கோவை புறநகர் மாவட்ட எஸ்.பி.யாக அதிரடி அதிகாரி பொன் மாணிக்கவேல் பொறுப்பேற்ற அரை மணி நேரத்தில்
“மைக் 10 காலிங் தளி சப் இன்ஸ்பெக்டர் சம்பங்கி” (Mke 10 calling Thali S.I.) என்று வான் செய்தியில் அழைப்பு வர, அனைத்து காவல்நிலையம் மட்டுமல்லாது அதிகாரிகளும் கப் சிப் என கவனிக்க ஆரம்பித்தனர்.

சப் –  இன்ஸ்பெக்டர் சம்பங்கி மைக்கில் “எஸ்.ஐ. சம்பங்கி ரிசிவிங் மைக் 10 சார்” என்று பதில் சொல்லவும், “தளியில் போலிஸுக்கு எதிரான போஸ்டர். என்ன  பிரச்சனை?” என்று கேட்க, சப்-இன்ஸ்பெக்டர் நடந்ததை சுறுங்கச் சொல்லி விளங்க வைத்தார்.

அடுத்த நொடி ஜாமீனில் விடுவித்த ஆய்வாளர் மைக்கில் அழைக்கப்பட்டு, “காயப்பட்ட கந்தசாமி ஐசியூவில் இருக்கிறார். வழக்கின் பிரிவை கொலை முயற்சி வழக்காக மாற்றி, அவ்வழக்கில் தலைமறைவு  ஆன ராஜவேலுவை கைது செய்துவிட்டு என்னிடம் பேச வேண்டும். அதனை செய்ய வில்லையானால் காவல்நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டரின் கீழ் ஒரு வாரத்திற்கு பணியாற்ற வேண்டும்,” என்று கூறி மைக்கை வைத்துவிட்டார்.

அவர் மாவட்ட எஸ்.பி.யாக  பொறுப்பேற்ற பின்பு முதல் உரையாடலே இதுதான். மாவட்டம் முழுமைக்கு அதிர்வலை பரவியது. இரவோடு இரவாக ராஜவேலு கைது செய்யப்பட்டார். பெண்களை விடுவித்த அதே பேனா ராஜவேலுவிற்கான ரிமேன்ட் அறிக்கையை எழுதியது.

ஒரு இயக்கத்தில் இருப்பவர், அதனை தன்னுடைய சொந்த பிரச்னைக்கு சாதகமாக பயன்படுத்தி இதுவரை காவல்துறையினரை மனஉளச்சலுக்கு ஆளாக்கிய ராஜவேலுக்கு சிறைக்கதவு திறந்து வழிவிட்டது.

சம்பங்கி காவல் நிலையத்திலிருந்து மாறுதலாகி போன பின்பும் வழக்கின் நடவடிக்கையை கண்காணித்து தன்னுடைய சாட்சியத்தையும் அளித்து, காவல்துறையின் நியாயமான நடவடிக்கைக்கு எதிராக சவால் விட்டவர்கள் சட்டத்திற்கு முன்பு சமம் என்பதை நிறைவேற்றிடும் வகையில் ராஜவேலுவுக்கு 3 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டது.

ப் – இன்ஸ்பெக்டர் சம்பங்கி துணிச்சலான அதிகாரி மட்டுமல்ல, மனதில் பட்ட நியாயத்தை துணிவாக அதிகாரிகளிடம் எடுத்துரைக்க வல்லவர். அந்த  துணிவினால் தான் தளி காவல் நிலையத்தில் பிரச்சனையை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது தெரியாமல், பிரச்சனை வருமோ என்ற பயத்தில் காவல்துறை பணியைச் செய்யாது மனஉளைச்சலுக்கு ஆளான அதிகாரிகள் மத்தியில் பாராட்டுக்குரியவராக மாறினார். இதுபோன்ற அவருடைய பணிகள் சிறக்க மனதார பாராட்டுவோம்.
(அடுத்தது…)

(உண்மை சம்பவத்தின் அடிப்படையில் கற்பனைப் பெயர்களுடன் எழுதப்பட்டது)

 

பெ. மாடசாமி
பெ. மாடசாமி நெல்லையில் சிங்கம்பட்டி சொந்த ஊர். 34 ஆண்டுகள் தமிழக காவல் துறைப் பணி. மனைவி பகவதி. “காக்கியின் கதிர் வீச்சு”, காவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள், “வீடு தேடி வரும் ஆபத்து, பெண்கள் பாதுகாப்பு”. ரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்”. “ மாணவச் செல்வங்களே மாற்றி யோசியுங்கள்”... இவை படைப்புகள்.பள்ளி கல்லூரி நாட்களில் தமிழில் மேடைப் பேச்சு அனுபவம். ‘வாழும் வரை தமிழுக்காக வாழ்வது’ இவரது பணி.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

பாட்டொன்று கேட்டேன்!

இது மங்கையர்மலரின் விவிதபாரதி...  பகுதி - 5  -ஆதிரை வேணுகோபால் மங்கையர்மலர் விவிதபாரதியில் நாம் இன்று கேட்க விரும்பும் பாடல்... 80's காதலர்கள் கொண்டாடிய பாடல்! காதல் சோகப்பாடல்! அனுபவம் மிக்க வார்த்தைகள்,  தாள வாத்தியம் இசை, டி.எம்.எஸ்...

பறக்கும்  பாவைகள் – 2

எங்களாலும் பறக்க முடியும்... -ஜி.எஸ்.எஸ். பயணிகள் அடங்கிய ஒரு விமானத்தை முதலில் ஓட்டிய பெண்மணி ஹெலன் ரிச்சி. அமெரிக்காவிலுள்ள பென்சில்வேனியா மாநிலத்தில் பிறந்தவர் இவர். அவர் தந்தை ஜோசப் ரிச்சி பள்ளிகளில் மேற்பார்வையாளர். பள்ளியில் படிக்கும்போதே தன்னை...

பறக்கும்  பாவைகள்!

 பகுதி -1 எங்களாலும் பறக்க முடியும்!  -ஜி.எஸ்.எஸ் அமெரிக்காவில் உள்ள சான் பிரான்ஸிஸ்கோ மாநிலத்தில் உள்ளது சிலிக்கான் பள்ளத்தாக்கு.  இங்கு மிக அதிக எண்ணிக்கையில் பிரபல மென்பொருள் நிறுவனங்கள் இயங்குகின்றன. அதேபோல் இந்தியாவில் கர்நாடகத் தலைநகரில் அதிக...

பாட்டொன்று கேட்டேன்!

இது மங்கையர்மலரின் விவிதபாரதி...  பகுதி - 4 இந்தப் பாடலைக் கேட்கும்போது அன்றைய சென்னையின் பஸ் பயணம் நம் கண்முன்னே அழகாய் நிழலாடும். இந்தப் பாடலில் ஒரு புதுமையை புகுத்தி இருப்பார். இரண்டு குரல்கள் ஒரே...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு: பத்மினி பட்டாபிராமன்   ஆஸ்கார் விருது பெண் திரைப்பட இயக்குனர்கள்! சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருதை வென்ற முதல் பெண் இயக்குனர் யார் தெரியுமா? அமெரிக்காவைச் சேர்ந்த கேத்ரின் பிகிலோ. (Kathryn Bigelow) என்பவர். உலகம் முழுவதும்...