0,00 INR

No products in the cart.

வேலு தாத்தா!

சிறுகதை : மஞ்சுளா சுவாமிநாதன்
ஓவியம்: இளையபாரதி

” ‘Family’ சொல்லு பார்ப்போம்,” என்றார் வேலு தாத்தா தனது ஆறு வயது கொள்ளுப் பேத்தி நேத்ராவைப் பார்த்து. ” F …A …M …I …L …Y,” என்றாள் நேத்ரா. ” வெரிகுட்! கரெக்டா சொல்லிட்டியே,” என்று அவளை உற்சாகப் படுத்தினார்.

“தாத்தாவிற்கு பை சொல்லு, நம்ம கிளம்பலாம்,” என்றாள் நேத்ராவின் தாய் சித்ரா. “கொஞ்சம் இரு, இதோ வந்துடறேன்,” என்று சொல்லி சிட்டாய் பறந்து சென்று தனது இரும்பு பெட்டியிலிருந்து சில பச்சை நிற 20 ரூபாய் நோட்டுக்களை எடுத்து வந்தார் வேலு தாத்தா. தன் குடும்பத்தினர் எப்போது அவரைப் பார்க்க வந்தாலும் ஆசீர்வாத பணம் கொடுத்து அனுப்புவது அவர் வழக்கம். அது சிறு தொகையே எனினும் அதைத் தரும் போது ஏக மகிழ்ச்சியுடன் தருவார்.

அன்று வேலு தாத்தாவின் 98வது பிறந்த நாள். பொதுவாகவே பிறந்த நாள் கொண்டாட்டங்கள் என்றால் அவருக்கு மிகவும் இஷ்டம். பாட்டி இறந்து ஐந்து வருடங்கள் ஆனதால், அவருக்கு அந்தக் குறை தெரியாமல் இருக்க அவரது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடுவார்கள் அவர் குடும்பத்தினர்.

“அப்பா கிட்ட என் மருத்துவ செலவுக்காக கொஞ்சம் பணம் கேட்டேன்… கடனா தரேன், ஒரு வருஷத்துல திரும்ப குடுன்னு சொல்றாரு. நான் ஏதோ பக்கத்துக்கு வீட்டுக் காரன் மாதிரி. ஊர் உலகத்துல ஒவ்வொரு அப்பா என்னவெல்லம் பண்ணறாங்க,” என்று முணுமுணுத்தார் வேலு தாத்தாவின் இளைய மகன் பாஸ்கரன்.

“அலுத்துக்காத பாஸ்கர், அப்பாவை பத்தி தான் உனக்கு தெரியுமே. பின்ன ஏன் இவ்வளோ கோவப் படற? என் கூட தான் இத்தனை வருஷமா இருக்காரு, ஆனா, என்ன நம்ப மாட்டேங்கறாரு. தானே ஆட்டோவுல கிளம்பி போய் தான் பென்ஷன் பணம் எடுத்துட்டு வராரு. பாங்க்குல எத்தனை பைசா வெச்சிருக்காருன்னு கூட எனக்கு தெரியாது. பசங்க மேல அவருக்கு நம்பிக்கையே கிடையாது,” என்று தம்பிக்கு ஆறுதல் கூறினார் வேலு தாத்தாவின் மூத்த மகன் சங்கரன்.

“சங்கரா! அம்மா நகையெல்லாம் எங்கடா இருக்கு? அவங்க இறந்து போய் எத்தனை வருஷம் ஆச்சு, அத கண்ணுல காட்ட மாட்டேங்கறாரு,” என்று கொதித்தாள் வேலு தாத்தாவின் மகள் வள்ளி.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு தனது மகள் சித்ராவின் திருமணத்திற்காக, அம்மா செண்பகத்திடம் ஐந்து சவரன் நகை கேட்டிருந்தாள் வள்ளி. ‘உன் அப்பாகிட்ட கேட்டுட்டு தரேன்’னு அவங்களும் சொல்லி இருந்தாங்க. ஆனால், வேலு தாத்தாவோ “உன் நகையை நீ சாகர வரைக்கும் யாருக்கும் தரக் கூடாது,” என திட்டவட்டமாக மறுத்துவிட்டார். அந்த கோபம் வள்ளிக்கு இன்றளவும் போகவில்லை.

ஆளுக்கு ஒரு பக்கமா வேலு தாத்தா மேல அதிருப்தி இருந்தாலும், வேலு தாத்தா பசையுள்ள ஆசாமி என்று அவர் குடும்பத்துக்கு நல்லாவே தெரியும். அதனால அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதைய தவறாம கொடுத்திடுவாங்க. இது வேலு தாத்தாவிற்கு தெரியாமல் இல்ல, இருந்தும் கண்டுகொள்ள மாட்டார்.

வேலு தாத்தாவும் அவரது மனைவி செண்பகம் அம்மாளும் ஏறத்தாழ 65 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தனர். அவர்களை கணவன்-மனைவி என்று சொல்வதைக் காட்டிலும் நண்பர்கள் என்று தான் சொல்ல வேண்டும். அவர்கள் பல ஆண்டுகள் பெரிய கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தனர். செண்பகம் அம்மாள் தனது மகளும், மருமகள்களும் வேலைக்கு போக மிகவும் உறுதுணையாக இருந்தார்.

பேரன், பேத்திகளைப் பேணி வளர்த்தல் , குடும்ப பொறுப்புகளை சமாளித்தல், என்று அவர்கள் இருவரும் தங்களது முதுமை காலத்திலும் ஓய்வென்பதே மனதளவிலும், உடலளவிலும் இன்றி சுறுசுறுப்பாக இருந்தனர். செண்பகம் பாட்டி தனது கணவரான வேலுசாமியை, குழந்தைகள் போல வேலு தாத்தா என்று தான் அழைப்பார். அதனாலேயே அவருக்கு அந்த பெயர் நிலைத்துப் போயிற்று.

வேலு தாத்தாவிற்கு தனது மனைவியின் மீது கொள்ளை பிரியம். அவருக்கு நகைகளும், புடைவைகளும் நிறைய வாங்கிக் கொடுப்பார். ‘அம்மா சாப்டியா?’ ‘அம்மா உடம்பு எப்படி இருக்கு?’ என்று எப்போதும் மரியாதையாக இருப்பார். அவர்களது இத்தனை ஆண்டு மணவாழ்வில் செண்பகம் அம்மாவுக்கு சொந்தமாக ஒரு வீடு இல்லை என்ற ஒரே குறை தான் “ஏங்க நம்மளும் ஒரு சொந்த வீடு வாங்கலாமே,” என்று செண்பகம் அம்மா அடிக்கடி கேட்பதுண்டு. ஆனால், வேலு தாத்தாவோ “யாராச்சும் வீட்டுல காச மொடக்குவாங்களா? நமக்கு எதுக்கு சொந்த வீடு ?” என்று ஏதாவது சொல்லி மறுத்து விடுவார்.

காலப் போக்கில் அவர்கள் குடும்பம் தனித் தனியாக பிரிந்து போக, வேலு தாத்தாவும் அவரது மனைவியும் மூத்த மகன் சங்கரன் வீட்டில் வசிக்க ஆரம்பித்தனர். வேலு தாத்தா வீடு வாங்காமல் இருப்பதற்கு உண்மைக் காரணம் தெரியாமலேயே செண்பகம் அம்மாவும் போய் சேர்ந்துட்டாங்க.
மனைவியின் மறைவு அவரை வாட்டினாலும், வேலு தாத்தா பெரிதாக அதைக் காட்டிக் கொண்டதில்லை. மாறாக மிகவும் சுயமாக வாழ ஆரம்பித்தார். காலை நடை பயிற்சி, நாளிதழ்கள் வாசித்தல், இறைவழிபாடு, கிரிக்கெட் மேட்ச் என உற்சாகமாக இருந்தார். தனது முதுமையிலும் யாரையும் எதிர்பார்க்காமல் தன் வேலைகளை தானே செய்ய விரும்பினார்.

வேலு தாத்தாவின் பிறந்த நாள் முடிந்த சில மாதங்களிலேயே, அமைதியாக யாருக்கும் எந்த தொந்தரவும் தராமல் தூக்கத்திலேயே அவர் காலமானார். அவரது இறுதி காரியங்கள் முடிந்த பிறகு அவர் கூறியதைப் போல அவரது இரும்பு பெட்டியை திறந்து சங்கரன், வேலு தாத்தா முன்னமே தயார் செய்து வைத்திருந்த உயிலையும் அவர் எழுதியிருந்த கடிதத்தையும் படிக்கலானார்.

ஓவியம்: இளையபாரதி

வேலு சாமி என்கிற நான் என் 17வது வயசுல, என் குடும்ப பாரத்தை சுமக்க, என் அப்பாவுக்கு உதவியா வேலைக்கு போனேன். என் குடும்ப சூழ்நிலை காரணமா என்னால பள்ளிப் படிப்பு தாண்டி படிக்க முடியல. அன்று துவங்கி என்னோட 85ஆம் வயசு வரை உழைச்சேன். ரிடையர்மென்டிற்குப் பிறகும் சோர்வின்றி ஒரு சுய தொழில் துவங்கி, அதை நல்லா நடத்தினேன்.

என் அப்பா எனக்காக ஒரு ரூபாய் கூட சேர்த்து வைக்கவில்லை. ஆனா, இன்னிக்கு என் குடும்பத்துக்கு என் வாழ்நாள்ல நான் சம்பாதிச்சு , சிறுக சிறுக சேமிச்சு வெச்ச பணம் பூராத்தையும் எழுதி வெச்சிருக்கேன். என் குடும்பத்தோட கடைசி வாரிசு நேத்ரா குட்டி வரைக்கும் பிரிச்சு எழுதி வெச்சிருக்கேன். இந்த பணம் சில லட்சங்களே ஆனாலும், அது உங்க வாழ்வில் சேமிப்பை ஊக்குவிக்க இந்த ஏழை கிழவனோட மூலதனம்.
செண்பகத்தோட நகைகளையும் அப்படியே பிரிச்சு எழுதிட்டேன். செண்பகம் ஒரு வீடு கூட நம்ம வாங்க முடியலியேன்னு ஆதங்கப்படுவா. வேணும்னே தான் வாங்கல , நாளைக்கு அதை காரணம் காமிச்சு நீங்க அடிச்சுக்கிறத நான் விரும்பல. இன்னிக்கு நீங்க எல்லாரும் சொந்த வீட்ல இருக்கீங்க, அது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.

நான் வாழ்ந்த விதம் வேறு. ‘நீங்கள் நான் பட்ட கஷ்டங்களை படக்கூடாதுன்னு உங்களுக்கு நல்ல கல்வியை கொடுத்தேன். கடன் இல்லாம, ஊதாரியாக இல்லாம, சிக்கனமாக வாழ, நானே அவ்விதம் வாழ்ந்து காண்பிச்சேன். என்னோட மறைவிற்கு பின்னர் நீங்க பூசலில்லாமல் ஒத்துமையா சேர்ந்து வாழனும்னு ஆசைப் படறேன்.’

வேலு தாத்தாவின் கடிதத்தை படித்தவுடன் அவர் கஞ்சனல்ல, தங்கள் குடும்பத்தை இத்தனை காலமும் தாங்கிக் கொண்டிருந்த மூலத்தண்டு என்று உணர்ந்தனர் அவர் குடும்பத்தினர்.

2 COMMENTS

  1. சொந்த வீடு வாங்காததற்கு வேலு தாத்தா சொல்லும் காரணம் ஒத்துக் கொள்ளும் படியாக இருக்கிறது.

மஞ்சுளா சுவாமிநாதன்http://www.joyousassortment.com
மஞ்சுளா சுவாமிநாதன் அடிப்படையில் ஒரு பத்திரிகையாளர். பெரும்பாலும் ஆங்கில பத்திரிகைகளில் எழுதிய இவர், இப்பொழுது தமிழிலும் சமூகம் சார்ந்த கதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருகிறார். சரித்திரத்தில் முதுகலை பட்டதாரியான இவர் கோயில்கள் பற்றி ஆராய்ச்சி செய்து எழுதுவதில் அதிகம் ஆர்வம் உள்ளவர்.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

டைரி!

1
கதை: தேன்சிட்டு ஓவியம்: தமிழ்   6/8/2000 இன்னிக்கு காலேஜ்ல ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்துச்சு. கீதா, அவளோட பிரண்ட்ஸோட பேய் கிட்ட பேசினேன்னு சொன்னா . "பேயா? ரொம்ப ரீல் விடாதேன்னு," அவளை ஓட்டினேன். ஆனா,  முகத்த சீரியஸா...

ஒரு பக்கக் கதைகள்!

ஓவியம்: பிள்ளை கதை: ச. மணிவண்ணன்  வாடகை ராமமூர்த்தி ஈசி சேரில் படுத்துக் கொண்டு நியூஸ் பேப்பரை பார்த்துக் கொண்டிருந்தார். "சார் வணக்கம்!" என்ற குரல் கேட்டு நிமிர்ந்துப் பார்த்தார். சங்கர் நின்றிருந்தான். மாடி வீட்டில் குடியிருப்பவன். "சொல்லுப்பா...

வேண்டுதல்! 

கதை: வி.கே.லக்ஷ்மிநாராயணன் படங்கள்: சேகர் திடுப்பென்று எதிரில் முட்டிக் கொள்வது போல் கோமளா மாமி வந்து நிற்க, அப்படியே சடன் பிரேக் அடித்தாற் போல் நின்றாள் வைதேகி. அவள் கையில் மார்க்கெட்டில் இருந்து வாங்கிய காய்கறி...

நடிப்பல்ல! 

கதை: மாதவி ஓவியம்: சேகர் கருணை இல்லத்தில் நடிகை மீராவின் கார் நுழைந்ததும் குழந்தைகள் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது. கும்மாளமும் கூச்சலும் இல்லத்திலும் உள்ளத்திலும். கார் முழுக்க குழந்தைகளுக்கான பொம்மைகள், பலூன் மற்றும் விளையாட்டு சாமான்களுடன் ...

பஞ்சு பாலசுப்ரமண்ய ஹரிஹரன்!

சிரிகதை : தனுஜா ஜெயராமன் ஓவியம்: தமிழ் அந்தக் கோடி வீட்டு சுந்தரராமன் ஸ்மியூல் பாடகி கல்யாணியோட "சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்" ன்னு பாவத்தோட பாடி பஞ்சு மாமாவின் வாட்சாபிற்கு அனுப்பி, மாமாவின் வயிற்றெரிச்சலை...