0,00 INR

No products in the cart.

மிதிவண்டி!

சிறுவர் சிறுகதை : மஞ்சுளா சுவாமிநாதன்
ஓவியம்: லலிதா

“அடுத்ததாக பேசப்போவது செல்வி. கவிதா, ஏழாம் வகுப்பு,” என்று ஒலிப்பெருக்கியில் ஒலித்தது. கவிதா, மேடைமீதேறி தனது சக மாணவர்களைப் பார்த்தாள், “மதிப்பிற்குரிய ஆசிரியர் பெருமக்களுக்கும், எனது அன்பு நண்பர்களுக்கும் எனது முதற்கண் வணக்கம்,” என்று துவங்கினாள்… அவளுக்கு தயார் செய்திருந்த உரை மறந்து போனது…

அவையில் கூடியிருந்த அனைவரையும் பார்த்து மலங்க மலங்க விழித்தாள்… தொண்டையில் ஏதோ வந்தடைப்பதைப் போல உணர்ந்தாள் … அருகிலிருந்த அவளது ஆசிரியை ” நன்றி, வணக்கம்னு சொல்லி கீழ இறங்கு கவிதா,” என்று கூறினார். ஒருமுறைக்கு இருமுறை ஆசிரியை கூறிய பிறகு தனது சுயத்திற்கு வந்த கவிதா, ” நன்றி, வணக்கம்,” என்று கூறி சட்டென்று மேடையை விட்டு இறங்கினாள்.

வீட்டிற்கு சென்ற கவிதா வெகுநேரம் அழுதுக் கொண்டிருந்தாள். அவளது தந்தை சந்திரு அவளருகே வந்தமர்ந்தார். “ஏன் கவிதா முகம் வாட்டமா இருக்கு, ஏன் அழற?,” என்று அன்பாக விசாரித்தார். “அப்பா, நான் எதுக்குமே லாயக்கு இல்ல, எனக்கு ஒன்னுமே சரியா வராது, நாளைக்கு பள்ளிக்கு போகமாட்டேன்,” என சொல்லி விம்மினாள் கவிதா.

“உன் அக்கா மேகலா நடந்ததை சொன்னா, ஒரு பேச்சுப் போட்டியில மறந்து போனா என்ன? அதுக்காக இப்படியா அழறது? அடுத்த போட்டியில இன்னும் நல்லா பண்ணு,” என்று கூறி அவளை ஒருகையால் அணைத்தவாறு தேற்றினார் அப்பா.

“மேகலாக்கு என்ன, அவ முதல்பரிசு வாங்கிட்டா, அவ சொல்லுவா, எனக்கு எவ்வளோ அவமானமா இருந்தது தெரியுமா? எல்லாரும் என்ன பார்த்து சிரிச்சாங்க,” என்றாள் கவிதா.

“சரி, நீ மட்டும்தானா மறந்துபோன? இல்ல வேறயாராச்சும் உன்ன போல மறந்து போனாங்களா?” என்று வினவினார் அப்பா. ” நிறைய பேர் மறந்துபோய்ட்டாங்கப்பா, அதுவும் அந்த விக்கிரமுக்கு ஒன்னுமே சொல்ல முடியல, அப்படியே நின்னுட்டு இருந்தான்,” என்று சற்று தேறியவாறு பதிலளித்தாள் கவிதா.

“நான் கூட என்னோட முதல் பேச்சுப் போட்டியில உன்ன மாதிரிதான், எல்லாம் மறந்துபோச்சு, ஆனா, அப்பா விடல, நிறைய பேச்சு போட்டிகள்ல கலந்துக்கிட்டேன், பெருசா ஜெயிச்சதில்ல, இருந்தாலும் கலந்துக்கிட்டேன். நீயும் ஜெயிக்காட்டி பரவாயில்ல. ஆனா, கண்டிப்பா கலந்துக்கோ,” என்றார். கவிதா தனது அப்பாவை இருக்க அணைத்தவாறு “சரிப்பா,” என்றாள்.

ந்திரசேகர், சித்ரா தம்பதியருக்கு இரண்டு மகள்கள், மூத்தவள் மேகலா, 9ஆம் வகுப்பு படிக்கிறாள். வெகு கெட்டிக்காரி. படிப்பிலும் சரி, விளையாட்டிலும் சரி மிகவும் சுட்டி. எந்த ஒரு காரியத்தை எடுத்தாலும் வெற்றி பெற்றே தீரவேண்டும் எனக் குறிக்கோள் கொண்டவள். அவளது அம்மா சித்ராதான் அவளுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தாள். அம்மா சித்ரா, வெறும் சித்ரா அல்ல, முனைவர் சித்ரா, ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிகிறாள். பல லட்சியங்களைக் கொண்ட சித்ராவை பாரதி கண்ட புதுமைப் பெண் என்று கூட சொல்லலாம்.

சரி, நமது கதையின் கதாநாயகி கவிதாவிற்கு வருவோம். அவளும் கெட்டிக்காரி தான்… ஆனால், தாழ்வு மனப்பான்மை கொண்டவள். எந்த ஒரு காரியத்தை எடுத்தாலும் தோல்வி பயம் அதிகமுள்ள காரணத்தால் உடனே கைவிட்டுவிடுவாள். தன்னம்பிக்கையும் மிகவும் குறைவு. இந்த காரணங்களில்தானோ என்னவோ சந்திரு அப்பா கவிதாவிடம் அதிகம் அன்புடனும், அக்கறையுடனும் நடந்துக் கொள்வார். கவிதாவிற்கு அதிகம் நண்பர்கள்கூட கிடையாது, அவளது உற்ற தோழனும் சரி, ஆசானும் சரி, அவளது அப்பாதான்.

படிப்பிலும், விளையாட்டிலும் சுமாராக இருந்தாலும், புத்தகங்கள் படிப்பதில் நிறைய ஆர்வம் காட்டுவாள் கவிதா. அவளது கற்பனைக் கதைகளின் நாயகியாக வாழ்ந்தாள் கவிதா, இதனை நன்கு அறிந்த அவளது அப்பா அவளை ஊக்கப்படுத்தினார். கோகுலம், அம்புலி மாமா, டிங்கள்(Tinkle), யங் வேர்ல்டு (Young World) போன்ற குழந்தைகளுக்கான புத்தகங்கள், பத்திரிகைகள் வாங்கிக் கொடுத்தார்.

ஒரு சில சமயம் சித்ரா கவிதாவின் எதிர்காலத்தை நினைத்து மிகவும் கவலைக் கொள்வாள். ஆனால், சந்திரு அப்பா மட்டும் கவிதாவின் மேல் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார்.

மிதிவண்டி ஓட்டத்தெரியாத கவிதா பள்ளிக்கு வேனில்தான் செல்வாள். இதற்குமுன் இருமுறை மிதிவண்டி ஓட்ட அப்பா கற்றுக் கொடுத்தும் தடுமாறிய கவிதா, மனதளவில் சோர்வுற்று கற்றுக் கொள்வதை நிறுத்தினாள். இம்முறை, அவளே மனமுவந்து அவளது அப்பாவிடம், “ப்ளீஸ் பா, எப்படியாவது கத்துக்கொடுங்க, என்னோட சின்ன பசங்க எல்லாம் ஓட்டறாங்க, எனக்கும் ஆசையா இருக்கு,” என்றாள். விடாமல் மூன்று மாதங்கள் பயின்று, ஒரு வழியாக மிதிவண்டி ஓட்டக் கற்றுக் கொண்டாள் கவிதா.

அவ்வப்போது அக்கம் பக்கத்தினர் கேலி செய்தால், உடனே வேறு தெருவிற்கு அழைத்துச் சென்று கற்றுக் கொடுத்தார் அப்பா. “நீங்க எத்தனை நாள்தான் அவ பின்னாடி ஓடுவீங்க,” என்று மேகலாவும் … “அவளுக்கு வரலைனா விடுங்க சந்திரு,” என்று சித்ராவும் கூறும்போதெல்லாம், மனம் தளரவில்லை சந்திரசேகர்.

“மிதிவண்டி ஓட்டுவது என்பது ஒரு வாழ்க்கைப் பாடம், சமையல், நீச்சல் போன்று அனைவரும் கற்கவேண்டிய ஒரு விஷயம். சிறிது காலதாமதம் ஆனால் பரவால, கவிதா கண்டிப்பா கத்துப்பா,” என்று பதிலளித்தார் சந்திரு.

கவிதாவின் 12ஆம் பிறந்த நாளன்று புதிய மிதிவண்டி வாங்கிக்கொடுத்து அவளை ஊக்கப்படுத்தினார். அன்று முதல் கவிதாவும், மேகலாவும் சேர்ந்து மிதிவண்டியில் பள்ளிக்குச் செல்ல துவங்கினர்.

ருநாள், “வீட்டுக்கு யார் முதல்ல போறாங்கன்னு போட்டி வெச்சுக்கலாமா மேகலா?” என்று போட்டிக்கு இழுத்தாள் கவிதா. “சரி! ஆனா, தோத்தா அழக்கூடாது,” என்றபடி மேகலாவும் போட்டிக்கு தயாரானாள். மேகலாவை எப்படியாவது ஜெயித்தாக வேண்டும் என்ற நோக்கத்தோடு, அதிவேகமாக சென்ற கவிதா கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தாள்.

விபத்தின் அதிர்வில் மிதிவண்டி நெளிந்து போனது, கவிதாவிற்கும் நல்ல காயம். ” போச்சு போ! புது மிதிவண்டி, இப்படி உடைச்சுட்டியே, அப்பா திட்டப்போறாரு,” என்றாள் மேகலா. துக்கம் தொண்டையை அடைத்தது கவிதாவிற்கு. இருவரும் மெல்ல மிதிவண்டிகளைத் தள்ளியவாறு, அருகிலிருந்த கடைக்குச் சென்றனர்.

அந்த கடைக்காரரின் அலைபேசியிலிருந்து அப்பாவை அழைத்தாள் கவிதா. “அப்பா, நான் கவிதா பேசறேன்,” என்று கவலை தொனித்த குரலில் மெதுவாக சொன்னாள் கவிதா.

“ஏம்மா கவிதா என்னாச்சு? எங்கேயிருந்து பேசற?” என்று அப்பா நிதானமாக கேட்டார். நடந்ததை சொல்லி முடித்த கவிதா ஓ! என்று அழுதாள். “அழாதே கவிதா, உனக்கு ரொம்ப அடி பட்டுடிச்சா? மிதிவண்டி உடைஞ்சா பரவாயில்ல அப்பா சரி பண்ணறேன், நீதான் எனக்கு முக்கியம்,” என்றார் அப்பா ஆறுதலாக. அப்பாவின் குரலில் வெளிப்பட்ட அந்த அன்பும், அக்கறையும் கவிதாவை வெகுவாகத் தேற்றியது.

ஓரிரு நாட்களில் காயங்கள் ஆரிய நிலையில், மீண்டும் பள்ளிக்குப் புறப்பட்டாள் கவிதா. அரசு பேருந்தில் சென்று விடலாம் என்று எண்ணியபடி வீட்டு வாசலிற்கு வந்த கவிதாவிற்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது.

அப்பா மிதிவண்டியுடன் அங்கு நின்றுக் கொண்டிருந்தார். “அப்பா, நான் பஸ்ல போறேன்,” என்றாள் கவிதா. “மிதிவண்டி பழுது பார்த்துட்டேன், இதுலயே போ!” என்றார் அப்பா.

“இல்ல பா, நான் மறுபடியும் கீழே விழுந்துட்டேனா?” என்று தயங்கினாள் கவிதா. “கீழே விழுந்தா எழுந்துக்கலாம், ஆனால், நீ இப்போ பயந்தா அப்புறம் உன்னால மிதிவண்டியே ஓட்ட முடியாமல் போய்விடும், தைரியமா போ கவிதா,” என்று அப்பா நம்பிக்கை அளித்தார். கவிதா அன்று மிதிவண்டியில் பள்ளிக்குச் சென்றாள்.

அதன்பிறகு, மிதிவண்டியிலிருந்து மட்டுமல்ல, வாழ்க்கையில் எப்போது விழுந்தாலும், எழுந்து, துணிச்சலுடன் மீண்டும் போராடினாள் கவிதா. எந்த நிலையிலும் அவளது அப்பா அவளுக்கு கற்றுத்தந்த வாழ்க்கைப் பாடத்தை மறக்காமல் தனது இடர்களை சந்தித்தாள், வெற்றிகள் பல பெற்றாள்.

4 COMMENTS

  1. உண்மை தான். கீழேவிழுந்தா ல் எழுந்துவிடலாம். மனது விழுந்தால் எழுவது கடினம். நல்ல அப்பா. நல்ல அறிவுரை.

  2. வளரும் பெண் குழந்தைகளுக்கான அருமையான, நேர்மறை எண்ணங்களை ஊக்குவிக்கும் கதை.
    ஆசிரியருக்கு பாராட்டுக்கள்.

  3. விழுவது எழுவதற்கு என்பதை அழகிய எளிய நடையில் ஆசிரியர் விளக்கியது அருமை.

மஞ்சுளா சுவாமிநாதன்http://www.joyousassortment.com
மஞ்சுளா சுவாமிநாதன் அடிப்படையில் ஒரு பத்திரிகையாளர். பெரும்பாலும் ஆங்கில பத்திரிகைகளில் எழுதிய இவர், இப்பொழுது தமிழிலும் சமூகம் சார்ந்த கதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருகிறார். சரித்திரத்தில் முதுகலை பட்டதாரியான இவர் கோயில்கள் பற்றி ஆராய்ச்சி செய்து எழுதுவதில் அதிகம் ஆர்வம் உள்ளவர்.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

வேண்டுதல்! 

கதை: வி.கே.லக்ஷ்மிநாராயணன் படங்கள்: சேகர் திடுப்பென்று எதிரில் முட்டிக் கொள்வது போல் கோமளா மாமி வந்து நிற்க, அப்படியே சடன் பிரேக் அடித்தாற் போல் நின்றாள் வைதேகி. அவள் கையில் மார்க்கெட்டில் இருந்து வாங்கிய காய்கறி...

நடிப்பல்ல! 

கதை: மாதவி ஓவியம்: சேகர் கருணை இல்லத்தில் நடிகை மீராவின் கார் நுழைந்ததும் குழந்தைகள் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது. கும்மாளமும் கூச்சலும் இல்லத்திலும் உள்ளத்திலும். கார் முழுக்க குழந்தைகளுக்கான பொம்மைகள், பலூன் மற்றும் விளையாட்டு சாமான்களுடன் ...

பஞ்சு பாலசுப்ரமண்ய ஹரிஹரன்!

சிரிகதை : தனுஜா ஜெயராமன் ஓவியம்: தமிழ் அந்தக் கோடி வீட்டு சுந்தரராமன் ஸ்மியூல் பாடகி கல்யாணியோட "சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்" ன்னு பாவத்தோட பாடி பஞ்சு மாமாவின் வாட்சாபிற்கு அனுப்பி, மாமாவின் வயிற்றெரிச்சலை...

ஒரு பக்கக் கதைகள்!

3
ஓவியம்; தமிழ் துரோகம்! -புதுவை சுபா அதிகாலை 4.00 மணிக்கே அந்த நடுத்தர உணவகம் ஆயத்தமானது. “இன்னும் கொஞ்ச நேரத்துல வாடிக்கையாளர்கள் ‘டீ’க்கு வந்து நிப்பாங்க. இட்லி ஊத்தி எடுக்கணும். சட்னி சாம்பார் தயார் செய்யணும். வேலை...

மனத்துக்   கண்    மாசிலன்     ஆதல்…….

1
சிறுகதை - சாந்தி நாதன் ஓவியம்: லலிதா   மதிய உணவிற்குப் பின் சிறிது உறங்கி எழுந்த ராமநாதன் அறையை விட்டு வெளியே வரவும் , "உள்ளே வரலாமா?" என்று குரல் கொடுத்தவாறே அவர் நண்பர் சடகோபன்...