நம்மைப் போல் ஒருவர் – மிஷேல் ஒபாமா

நம்மைப் போல் ஒருவர் – மிஷேல் ஒபாமா
Published on

மஞ்சுளா சுவாமிநாதன்

ருநாள் எனது வீட்டில் அமர்ந்து கொண்டு 'பிகமிங் மிஷேல் ஒபாமா' என்ற அவரது சுயசரிதையை படித்துக் கொண்டிருந்தேன். வீட்டு வாசலில் மாநகராட்சியிலிருந்து ஒரு இளம் பெண் கொரோனா நோய்த் தொற்றுக் கணக்கு எடுக்க வந்திருந்தாள். அவள் என்னைப் பார்த்து "அக்கா, என்ன புத்தகம் படிக்கறீங்க?" என்றாள்.

நான், "அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிஷேல் ஒபாமாவின் சுயசரிதையை படிக்கிறேன். நீ கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை" என்றேன்.

அவள், நான் அசந்து போகும்படியாக விடையளித்தாள். "அவங்க பெண்கள் கல்விக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் நிறைய தொண்டு செஞ்சிருக்காங்க. நான் புத்தகம் படிச்சதில்லையே தவிர, அவங்களைப் பத்தி வீடியோ யுடியூப்ல பார்த்திருக்கிறேன். மிஷேல் ஒபாமாவோட உரைகள் பெண்களுக்கு நல்ல உத்வேகத்தை கொடுக்குது" என்றாள்.

அமெரிக்காவிலிருந்து பல மைல்கள் தொலைவில் இருக்கும் எங்கள் இருவருக்கும்  "மிஷேல் ஒபாமா" ஒரு அதிபரின் மனைவியாக தெரியவில்லை என்பது  மேற்கூறிய இந்தச் சம்பவத்தின் மூலம் தெளிவாக எனக்குப் புலப்பட்டது.   மாறாக, பொருளாதாரத்தில் மலிந்த ஒரு குடும்பத்தில் பிறந்திருந்தாலும், கறுப்பினத்தைச் சேர்ந்தவர் என்ற சமுதாய கோட்பாடுகளால் சில இன்னல்களை சந்தித்திருந்தாலும், தனது கல்வியால் மிக உயர்ந்த ஒரு அந்தஸ்தை அடைந்திருக்கிறார் என்ற அடிப்படையில் எங்களுள் ஒருவராக ஒரு சாமானிய பெண்ணாகத்தான் அவர் தெரிந்தார்.

என்றும் எளிமை

மிஷேல் தனது பெற்றோர் மற்றும் தனது அண்ணனுடன் ஒரு சிறிய இரண்டே  அறைகள் கொண்ட வீட்டில்  அவர்களது சொந்தக்காரப் பெண்ணின் மாடிபோர்ஷனில்தான் தனது  திருமணம் வரை வசித்து வந்தார். தனியார் பள்ளியில் படிக்காமல், மிகவும் சாதாரண அரசு மானியத்தில் இயங்கக்கூடிய  பள்ளிகளிலேயே படித்தார்.

இருந்தும், சிறு வயதிலிருந்து "யாரைப் பார்த்தும் பயப்படக் கூடாது." " நல்ல கல்வியானது. உன்னை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும்" என்ற நற்பண்புகளை அவரது பெற்றோர் ஊட்டி வளர்த்தனர். அதுவும் குறிப்பாக அவரது தாயார். மிஷேலுக்கு அனைத்து விதங்களிலும் உதவியாக இருந்தார். வெள்ளை மாளிகையிலும் மிஷேலுக்குத் துணையாக வந்தார்.

அமெரிக்காவில் மிகவும் புகழ் பெற்ற கல்லூரிகளான பிரின்ஸ்டன் மற்றும் ஹார்வோர்ட் இல் கல்விக்கடன் பெற்றே சட்டம் பயின்றார் மிஷேல்.

திருமணத்திற்குப் பிறகும் கல்விக்கடன், வீட்டுக் கடன் என்று ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த 'வேலைக்குப் போகும்' தாயாகத்தான் வலம் வந்தார். ஒரு கட்டத்தில், ஒபாமாவின் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தில் மூழ்கி இருந்த சமயம், வீட்டில் சமையல் செய்ய ஒரு நபரை பணியமர்த்த கூட தயங்கினார் மிஷேல் என்று அந்தப்  புத்தகத்தில் படித்தபோது, அவரோடு மனதளவில் மிகவும் நெருங்கிப் போனேன்.

வெள்ளை மாளிகையில்

துவரை அவரது வளர்ச்சி நமக்கு உத்வேகத்தை கொடுத்தது என்றால், வெள்ளை மாளிகையில், அமெரிக்காவின் மிக உயரிய இடத்தை வகிக்கும் பெண்ணாக, "பர்ஸ்ட் லேடி"யாக அவரது செயல்பாடுகள் அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்தியது.

"நாங்கள் அமெரிக்காவின் கருப்பினத்தைச் சேர்ந்த முதல் அதிபர் குடும்பம் என்பதால், எங்களுடைய கடமை மிகவும் பெரியது. நாங்கள் எங்கள் இனத்திற்கே முன்னோடியாக நடந்து கொள்ள வேண்டும். எங்களது ஒரு சிறிய தவறுகூட எங்களை மட்டுமல்லாது எங்கள் இனத்தின் இத்தனை ஆண்டு கால போராட்டத்தை, வளர்ச்சியை பாதிக்கும்" என்று அவர் அந்த சுயசரிதையில் எழுதியிருக்கிறார்.

அவருடைய ஒவ்வொரு செயலும் மேலே கூறிய வாக்கியத்தை உறுதி செய்வது போல தனித்துவமாகவும் பெருமைப்படும் விதமாகவும் இருந்தது.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க அதிபருக்கு, அரசே பணம் கொடுத்து வெள்ளை மாளிகையை அவர்களுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு அழகுபடுத்த அனுமதிப்பர். ஒபாமா தம்பதியினர் அந்தப் பணத்தை செலவு செய்யாமல், தங்களது சொந்த பணத்தை அதற்கு செலவழித்தனர்.

இதன்பிறகு, வெள்ளை மாளிகையில் ஒரு காய்கறி தோட்டத்தை பயிரிட்டனர். மிஷேலுக்கு குழந்தைகள் என்றால் அதீத பிரியம். அதனால், தனது வீடான வெள்ளை மாளிகையை பள்ளி குழந்தைகளுக்காக திறந்தார். காய்கறி தோட்டத்தில் பயிரிடுதல், கிறிஸ்துமஸ் பாட்டி, ஹாலோவின் பார்டி என்று குழந்தைகளுக்காக பிரத்யேகமாக நிறைய நிகழ்ச்சிகளை வெள்ளை மாளிகையில் நடத்தினார்.

அங்கு வேலை செய்யும் பணியாளர்களுடன் நட்புறவு கொண்டு, அவர்களது சீருடையில் மாற்றம் கொண்டு வந்து, அந்த பிரம்மாண்டமான வெள்ளை மாளிகையை  அவர் வசித்த எட்டு ஆண்டு காலமும், அமெரிக்கர்கள் அனைவரையும் அரவணைக்கும் ஓர் இல்லமாக மாற்றினார்.

குழந்தைகளுக்கான பிரத்யேக திட்டங்கள்

மெரிக்காவின் 'பாஸ்ட் புட்' கலாசாரம் பருமனான குழந்தைகளை உருவாக்கத் தொடங்கியது. இந்த ஆபத்தை தன்னுடைய முயற்சியால் மாற்ற முடியும் என்று நம்பினார் அவர்.

இதனால் 'லெட்ஸ் மூவ்' என்ற ஆக்கப்பூர்வமான திட்டத்தை தொடங்கினார். அந்தத் திட்டத்திற்கு தானே முன்மாதிரியாக இருந்து தனது தோட்டத்திலிருந்து காய்கறிகள் உண்ணுவது, உடற்பயிற்சி செய்வது போன்ற காணொளிகளை வெளியிட்டார்.

நிறைய அரசு பள்ளிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அவ்வப்போது ஸ்கிப்பிங் செய்தல், படி ஏறுதல் போன்ற எளிய உடற்பயிற்சியின் மூலமாக "பிட்" ஆக இருக்கலாம் என்ற செய்தியை பரப்பினார்.

முக்கியமாக, அவரே சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவராக இருந்ததால், அமெரிக்கா முழுவதும் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்ந்தார். இதன் தொடர்ச்சியாக வெள்ளை மாளிகையில் இளம் பெண்களுக்கான ஒரு 'வழிகாட்டுதல் திட்டத்தை' (mentorship programme) நிறுவினார். பள்ளிகளிலிருந்து தகுதியுடைய பெண் குழந்தைகளை தேர்ந்தெடுத்து இத்திட்டத்தின் கீழ் பயிற்சி அளித்தார்.

ஒரு தாயாக மிஷேல்

ராக் – மிஷேல் தம்பதியருக்கு மலியா, சாஷா என்று இரண்டு பெண் குழந்தைகள். பராக் ஒபாமா அதிபராக பொறுப்பேற்ற சமயம், இரு குழந்தைகளுமே தொடக்கப்பள்ளி சென்று கொண்டிருந்தனர். இப்படி சிறு குழந்தைகளாக இருக்கும்போது, அவர்களை பத்திரிகைகாரர்கள் மற்றும் புகைப்படக்காரர்களிடமிருந்து காப்பாற்றுவதே மிஷேலின் முக்கிய வேலையாக இருந்தது.

எந்நேரமும் பாதுகாப்பிற்காக காவலர்கள், பள்ளியை சுற்றி காவல், ஒரு ஐஸ்க்ரீம் கடைக்கு கூட நண்பர்களுடன் தனியாக செல்ல முடியாத நிலை என்று சிறு வயதிலேயே இத்தனை கட்டுப்பாடுகளுடன் வளரும் தன் மகள்களுக்கு, இயன்றவரையில் ஒரு சாதராண குழந்தைப் பருவத்தை கொடுக்க மிகவும் முயற்சித்திருக்கிறார் மிஷேல்.

"நான் என் மகள்களின் படுக்கைகளை அவர்களையே சரிபடுத்தச் சொல்லி பழக்கினேன். காரணம், வெள்ளை மாளிகை வாசம் நிரந்தரமல்ல.  அவர்கள் வேலைகளை அவர்களே செய்து பழக வேண்டும்" என்று மிஷேலின் வரிகளைப் படித்தபோது ஒரு தாயாகவும் மிஷேல் என்னை ஈர்த்துவிட்டார்.

ஒரு அதிபரின் மனைவி என்றால் அது சம்பளமில்லா, பெரிய எதிர்பார்ப்புகளுடைய ஒரு பதவி. இந்தப் பதவியில் மிஷேல் ஓர் ஆடம்பரமான இல்லத்தரசியாக இருந்திருக்கலாம். உல்லாச பார்டிகள், வி.ஐ.பி. வீட்டு விருந்துகள், அயல்நாட்டு பயணங்கள் என்று கேளிக்கையில் கழித்திருக்கலாம்.

மாறாக, மிஷேல் தனது செயல்களின் மூலம் தனித்து விளங்கினார். விருந்தாளிகளுக்கு தோட்டத்து காய்கறிகளை பரிசளித்தார். பெண் கல்விக்காக நிதி திரட்டினார், ராணுவ வீரர்களின் மனைவி மற்றும் குழந்தைகளின் நலனுக்காக பல நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தினார்.

பாரக் ஒபாமாவின் தேர்தல் பிரசாரத்தில் அதிக ஈடுபாடுடன் செயல்பட்டார் அவர். மக்கள் மிஷேலை "தி கிளோசர்" என்று அழைத்தனர். அதாவது பிரசாரத்தின்போது மிஷேலின் உரையானது மக்கள்  மனதில் ஒரு முழுமையைக் கொடுத்தது.

ஒபாமா போன்ற ஒரு தலைவருக்கு ஈடு கொடுத்து, அமெரிக்க வல்லரசில் முக்கிய பங்கு வகித்தாலும் பல நற்காரியங்களுக்காக மெனக்கெட்ட மிஷேல், தன் இயல்பிலிருந்து என்றும் மாறாது, எளிமையாக நம்மைப் போல் ஒருவராகவே வாழ்ந்து வருகிறார்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com